அகிரா குரோசேவாவின் சுயசரிதை அவரது திரைப்பட வாழ்வின் துவக்கத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. ஆனால் “லாங் டேக்’“ குரோசாவாவின் எழுத்துக்கள், எழுத்தாளர் இனோயே ஹிசாஷி மற்றும் இயக்குநர் யமடா யோஜி ஆகியோருடனான அவரது உரையாடல்கள், மற்றும் அவரது மகள் குரோசாவா கசுகோவின் கட்டுரைகள் கொண்டதாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் செவன் சாமுராய் திரைக்கதை உருவாக்கத்தினைப் பற்றி விவரிக்கும் போது டால்ஸ்டாயைக் குறிப்பிடுகிறார்

“செவன் சாமுராய் திரைக்கதையின் மையப்பகுதியாக டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும் (War and Peace ) நாவல் விளங்குகிறது. அதனை நான் எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கேயில்லை. நாவலின் மிகச்சிறிய விவரங்கள் வரை எனக்கு நினைவில் உள்ளன; அந்தப் புத்தகத்திலிருந்து பலவிதமான விஷயங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். அது இப்படத்தின் திரைக்கதையை உருவாக்க பெரிதும் உதவியது. அது போலவே Aleksander Fadeyev யின் ‘தி ரவுட்’ (The Rout) நாவலின் தாக்கமும் உள்ளது.“

கனவுகள் குறித்து தஸ்தயெவ்ஸ்கி ஒரு சுவாரஸ்யமான கருத்தைக் கொண்டிருந்தார். மனிதர்களின் இதயத்தின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் எண்ணங்களே கனவுகள் என்றும், நாம் உறங்கும்போது அவை நிஜங்களாக மாறி வெளிப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்; இது மிகவும் மர்மமான ஒரு செயல்முறை என்பது அவரது நம்பிக்கை . கனவுகள் ஒரு அற்புதமான, அழுத்தமான வெளிப்பாட்டு ஊடகமாக அமைகின்றன கனவின் உருவாக்கம் எப்படி நடைபெறுகிறது என்ற புதிர்மையை நினைத்து தஸ்தயெவ்ஸ்கி வியப்படைகிறார். என்றும் குரோசேவா குறிப்பிடுகிறார்
செவன் சாமுராய் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத் தான் எப்படிப் படமாக்கினேன் என்பதையும் அகிரா குரோசேவா நினைவு கூறுகிறார்.

“கொள்ளையர்கள் கிராமத்தைத் தாக்கும் கிளைமாக்ஸ் காட்சியை, கடும் குளிர்காலத்தில், கொட்டும் மழையில், சுமார் ஒரு வார காலத்திற்குள் படமாக்கினோம். காலை முதல் இரவு வரை நான் நனைந்தபடியே இருந்ததாக நினைவு.
அக்காலத்தில், கினுட்டாவில் (Kinuta) உள்ள டோஹோ (Tōhō) ஸ்டுடியோவின் முன்புறம் நெல் வயல்கள் இருந்தன; இப்போது அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அப்போதுதான் ஒரு பெரிய பனிப்புயல் வீசி அதிகப் பனி பொழிந்திருந்தது, அதனால் நிலம் மிகுந்த சேறும் சகதியுமாக இருந்தது.
ஒரு குறிப்பிட்ட காட்சியைப் படமாக்க நாங்கள் தயாராக இருந்தோம், ஆனால் வயல்கள் முழுவதும் நனைந்து போயிருந்தன, அதோடு கடும் குளிரும் நிலவியது. திரையில் பார்க்கும்போது அது தெரியாது, ஆனால் அவ்வப்போது பனிக்கட்டியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. அந்தச் சூழலில், தொஷிரே மிஃபுனே கிட்டத்தட்ட நிர்வாணமாகவே இருந்தார். நடிகர்களுக்கு இடைவேளை கிடைக்கும்போதெல்லாம், அவர்கள் உடலைச் சூடுபடுத்திக்கொள்ள வெந்நீர் நிரம்பிய குளியல் தொட்டியைத் தேடி ஓடுவார்கள்.
நான் ரெயின்கோட் அணிந்திருந்தாலும் முற்றிலும் நனைந்து போயிருந்தேன் என்பது நினைவிருக்கிறது. எனக்குக் கடுமையான குளிர் காய்ச்சல் வராமல் போனது ஆச்சரியம்.
கினுட்டாவின் அந்தப் பகுதியில் உள்ள சேறு ஒரு பெரிய சவாலாக இருந்தது. நீண்ட ரப்பர் பூட்ஸை அணிந்துகொண்டு, முழங்கால் அளவுள்ள சேற்றில் இறங்கி நடந்தால், அசைய முடியாத நிலை ஏற்படும். ஒரு சண்டைக் காட்சியில், குதிரைகள் என்னை நோக்கி வேகமாக ஓடிவரும்போது நான் அங்கே நின்றுகொண்டிருப்பேன். அவற்றின் வேகத்தைக் கணித்து, அவை என்னை மிதித்து நசுக்குவதற்கு முன்பாகவே விரைவாக “கட்” (cut) சொல்லிவிட்டு அங்கிருந்து அகல வேண்டும்.
அந்தக் குரல் கேட்டதும் லைட்டிங் மற்றும் ப்ராப்ஸ் (props) குழுவினர் ஓடி வருவார்கள்; அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் என்னைப் பூட்ஸிலிருந்து வெளியே இழுக்க வேண்டியிருப்பார்கள். புதை சேறு காலில் படிந்து. என் கால் விரல் நகங்கள் அனைத்தும் கருப்பாக மாறி உதிர்ந்துவிட்டன.
ஆனால் விசித்திரமாக, அது கடும் வலியை ஏற்படுத்தவில்லை. படப்பிடிப்பு திட்டமிட்ட காலக்கெடுவை விட மிகவும் தாமதமானது, அதனால் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் எங்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டது.
ஒருவேளை கிளைமாக்ஸ் சண்டையை முன்னதாகவே படமாக்கியிருந்தால், போதுமான காட்சிகள் கிடைத்துவிட்டதாகக் கூறி ஸ்டுடியோ நிர்வாகம் படப்பிடிப்பை நிறுத்தியிருக்க வாய்ப்பிருந்தது. அதனால், கடைசி வரை அந்தக் காட்சியைப் படமாக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன்.
ஸ்டுடியோவினர் அதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளைத் தொகுத்துக் காட்டுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியைத் தவிர்த்துவிட்டு, எஞ்சியதைத் தொகுத்து அவர்களிடம் காட்டினேன். அதில் மிஃபுனே “அவர்கள் வந்துவிட்டார்கள்! அவர்கள் வந்துவிட்டார்கள்!” என்று சப்தமிடுவார், கொள்ளையர்கள் அவரை நோக்கி வேகமாக ஓடி வருவார்கள்; சரியாக அந்த இடத்திலேயே அக் காட்சி முடிந்துவிடும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஒரு காட்சியைக்கூட நான் படமாக்கவில்லை என்று அவர்களிடம் சொன்னதும், தயாரிப்பு நிறுவனம் யோசித்தார்கள்; அத்துடன், அந்தக் கதையை முழுமையாக முடிக்க உங்களுக்கு எவ்வளவு காட்சிகள் தேவையோ அவ்வளவையும் படமாக்கிக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்.
கடைசிக் காட்சியில் ஷிமுரா டகாஷி கண்ணீர் விட்டு அழும் ஒரு தருணம் உண்டு; அதை நாங்கள் படமாக்கத் தொடங்கியபோது, மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியது. அது பெரும் சிக்கலை உருவாக்கியது என்றாலும், நாங்கள் அதைச் சமாளித்து, இறுதியாக ஒரு வாரத்தில் படப்பிடிப்பை முடித்தோம்.
செவன் சாமுராய் படப்பிடிப்பைத் தொடங்கியதிலிருந்து முடிக்கச் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனது. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அத்தகைய பிரம்மாண்டமான ஒரு படைப்பை அந்தக் குறுகிய காலத்திற்குள் எங்களால் படமாக்க முடிந்தது ஒரு அதிசயம் என்றே தோன்றுகிறது.
அக்காலத்தில் பணவசதி இல்லாததாலா அல்லது எங்களுக்கு விவரம் தெரியாததாலா எதனால் அப்படிச் செய்தோம் என்று சொல்வது கடினம். ஸ்டுடியோவின் அருகில் ஒரு குன்று இருந்தது; அதன் அடிவாரத்தில் ஒரு கிராமத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். உண்மையில், அந்த இடம் முழுவதையும் நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதன் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தினோம்;
மற்ற பகுதிகளில் கோதுமையும் சில காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன. அந்த நிலத்தை பாழாக விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்தது. யுத்தகால மனநிலை அப்போது எங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்—அதாவது, மிகவும் மதிப்புமிக்க விவசாயப் பயிர்களுக்கு எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்ற உணர்வது. “
••