ஆல்பெர் காம்யுவின் அந்நியன் நாவல் (L’Étranger ) இதுவரை 75க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் திரைப்பட வடிவத்தை விஸ்காண்டி இயக்கியிருக்கிறார். 1967ல் வெளியான The Stranger திரைப்படத்தில் மார்சலோ மாஸ்ட்ரோயானி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். நாவலின் அடர்த்தியில்லாத மேலோட்டமாக உருவாக்கபட்ட படம். பெரிய வெற்றியைப் பெறவில்லை.

சென்ற ஆண்டு இதே நாவலின் புதிய திரைவடிவம் வெளியாகியுள்ளது. THE STRANGER என்ற இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்சுவா ஓசோன். கறுப்பு வெள்ளையில் இதனைப் படமாக்கியிருப்பது சிறப்பு. நாவலின் முக்கிய நிகழ்வுகள் திரையில் மிகவும் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.
ஒரு நாவலை வாசிக்கும் போது அதன் கதாநாயகன் குறித்து நமக்குள் ஒரு மனபிம்பம் உருவாவது வழக்கம். அதே பிம்பத்தைத் திரையில் உருவாக்க முடியாது. பல நேரங்களில் திரைப்பிம்பத்தோடு நமது மனப்பிம்பம் பொருந்திக் கொள்ளாது. இப்படத்தில் வரும் மெர்சோ நமது மனப்பிம்பம் போல உருவாக்கப்படவில்லை. அதே நேரம் இப்படியும் இருக்கலாமே என நினைக்கவும் வைக்கிறது.. நாவலை சமகாலத்தின் கதையாக உணரச் செய்திருப்பதே இதன் வெற்றி.

மெர்சோ அல்ஜியர்ஸில் வசிக்கும் ஒரு பிரெஞ்சு இளைஞன். 1938ன் கோடை காலத்தில் கதை நிகழுகிறது, ஒரு நாள் தனது தாயின் மரணச்செய்தியை தந்தியின் வழியாக அறிந்து கொள்கிறான். நாவல் அதிலிருந்தே துவங்குகிறது. MOTHER died today. Or, maybe, yesterday; I can’t be sure என்ற நாவலின் துவக்க வரிகள் அவனது அக்கறையற்ற மனநிலையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.
திரைப்படத்தில் தனது தாயின் மரணச்செய்தியை கேள்விப்படும் மெர்சோவின் மனநிலையை விளக்கும் காட்சி அழகானது. அக்காட்சியில் மெர்சோ புகைபிடித்தபடி இருக்கிறான். எதையும் அறிந்து கொள்ள விருப்பமில்லாதவன் போலத் தந்தியைப் படிக்கிறான். அதிர்ச்சியின்றி மரணச்செய்தியை எதிர்கொள்கிறான்.
மனதிற்குள் துயர செய்தியை எதிர்ப்பார்த்திருந்தவன் நடந்து கொள்வது போலவே செயல்படுகிறான். தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளப் புறப்படுகிறான். அவனிடம் துக்கத்தை அடையாளப்படுத்தும் கறுப்பு ஆடைகள் இல்லை. அதனை இரவல் பெறுகிறான். பயணம் செய்து தாயின் உடல் வைக்கபட்டிருந்த முதியோர் காப்பகத்திற்குச் செல்கிறான்.
அவனது அம்மா அல்ஜியர்ஸிலிருந்து சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள மாரெங்கோவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் வாழ்ந்து வந்தாள். அம்மாவின் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்கிறான். வழக்கமான சாப்பிடும் உணவகத்தில் மதிய உணவு உண்ணுகிறான், பின்பு மாரெங்கோ நோக்கி பேருந்தில் பயணம் செய்கிறான்.
அம்மாவின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள அவன் விடுப்பு கேட்கும் காட்சியில் உயரதிகாரி சந்தேகம் அடைகிறார். இதில் எனது தவறு எதுவுமில்லை. தாயின் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பதில் தருகிறான். இந்தப் பதில் அவன் கட்டாயத்தின் பொருட்டுப் பயணம் செய்கிறான் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வெக்கை மற்றும் சீரற்ற சாலையின் காரணமாகப் பேருந்துப் பயணத்தில் உறங்கிவிடுகிறான்.
இறுதிச் சடங்குகள் நடைபெறும் போதுதான் மரணத்தின் நிஜம் தனக்குப் புரியும்; சொல்லப்போனால், அதுவே அந்த மரணத்திற்கு ஒரு ‘அதிகாரப்பூர்வ முத்திரையை’ இடுவது போல அமையும் என மெர்சோ நினைக்கிறான்.
அவனது அம்மாவின் உடல் வைக்கபட்டிருந்த முதியோர் இல்லம், கிராமத்திலிருந்து ஒரு மைல் தள்ளியிருக்கிறது. அங்கே நடந்தே செல்கிறான், அங்குள்ள காப்பாளர் அவனது அம்மாவிற்குச் சொத்து எதுவுமில்லை. அவனை மட்டுமே சார்ந்து வாழ்ந்தவர் என்பதை நினைவுபடுத்துகிறார். அத்தோடு அம்மாவிற்கு முறையான கவனிப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் நிலையில் நீ நடந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதனை மெர்சோ ஏற்றுக் கொள்கிறான்.
உன் அம்மாவின் உடலை நாங்கள் புதிதாக அமைத்துள்ள சிறிய பிணவறைக்கு மாற்றியுள்ளேன்— ஒருவரின் மரணத்தால் இல்லத்தில் உள்ள மற்ற முதியவர்கள் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்தேன்; உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இங்கே யாரேனும் இறக்கும்போதெல்லாம், மற்ற முதியவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மிகுந்த பதற்றத்துடனே காணப்படுவார்கள் என்று சொல்கிறார்.
நாவல் மெர்சோவின் அன்னையைப் பற்றியதாக மட்டுமில்லை. அவரைப் போலக் கைவிடப்பட்ட, அக்கறையற்ற பிள்ளைகளைக் கொண்ட பலரது தந்தை தாயின் நிலையைச் சுட்டிக்காட்டவும் செய்கிறது. முதியோர் இல்ல காப்பாளர் சுட்டிக்காட்டும் தவற்றை மெர்சோ ஏற்றுக் கொள்கிறான். அதற்கு விளக்கம் தர முற்படவில்லை. ஆகவே அவனுக்குள் குற்றவுணர்வு மறைந்திருக்கிறது.

இரவு நேரம் இறந்த உடலின் முன்பாக விழித்திருப்பவனுக்கு உடனிருக்கும் முதியவர் தனக்கு வயது அறுபத்து நான்கு என்றும், பாரிஸைச் சேர்ந்தவர் என்றும் பத்து வருடங்களுக்கு முன்பு யாராவது தன்னிடம், அவர் மரேங்கோவில் உள்ள ஒரு இல்லத்தில் வாயிற்காப்பாளராகத் தன் வாழ்நாளைக் கழிப்பார் என்று சொல்லியிருந்தால், அவர் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டேன் என்றும் சொல்கிறார்.
இந்தச் செய்தி மெர்சோவிற்கு அவனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மறைமுகமாக ஏற்படுத்தியிருக்கவும் கூடும். ஆனால் அவன் அதைக் காட்டிக் கொள்வதில்லை. புகைக்கிறான். அந்த முதியவருடன் நட்பாக நடந்து கொள்கிறான். .
ஒருவர் இறந்துவிட்டார் என்ற உண்மையை மனம் ஏற்றுக்கொண்டு பழகிக்கொள்வதற்குள், எல்லாமும் அவசர அவசரமாக நடந்து முடிந்துவிடுகிறது என்று முதியவர் சொல்கிறார். அது தான் மெர்சோவின் குழப்பத்திற்கான காரணம்
உடல் வைக்கபட்டிருந்த வெள்ளைச் சுவர்களிலிருந்து பிரதிபலித்த கடும் வெளிச்சம் மெர்சோவின் கண்களை உறுத்துகிறது; ஆகவே அந்த விளக்குகளில் ஒன்றை அணைக்க முடியுமா என்று கேட்கிறான்.
“அதற்கெல்லாம் வழியே இல்லை,” என்று முதியவர் பதிலளிக்கிறார்.
இதன் மாறுபட்ட காட்சியாகவே கடற்கரையில் ஒளிரும் கோடைச்சூரியனும் அதைத் தொடர்ந்த கொலையும் நடந்தேறுகிறது
தாயின் உடல் வைக்கபட்டிருந்த அறையில் துணைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண் பூத்தையல் மேற்கொள்கிறாள். சாவின் முன்னால் அவளது இயல்பு வாழ்க்கை மாறிவிடவில்லை. முதியோர் காப்பகத்தில் இறப்பு என்பது இயல்பான நிகழ்வு.
மெர்சோவால் அழ முடியவில்லை. அல்லது அதனை அவன் விரும்பவில்லை. துயரை எப்படி ஏற்றுக் கொள்வது, பகிர்வது என்பதில் குழப்பமடைகிறான். வழக்கமான மரணச்சடங்குகளின் உணர்ச்சிப் பெருக்கை அவன் விரும்பவில்லை. மாறாக அவன் நிதானமாக, எதையோ முடிவு செய்வதனாக நடந்து கொள்கிறான்.
தாயின் மரணம் ஏற்படுத்திய வெறுமையே அவனைப் புறஉலகின் கேளிக்கைகளை நோக்கித் தள்ளுகிறது. எதிர்பாராமல் தனது பழைய காதலியான மேரியைச் சந்திக்கிறான், இருவரும் மீண்டும் காதலர்களாகிறார்கள்.

கடற்கரையில் நடைபெறும் நிகழ்வுகள். அரேபியனை அவன் கொல்லும் தற்செயலின் பின்னுள்ள மனத்தடுமாற்றம். விசாரணையின் போது அவன் மீது எழும் சந்தேகம் என மெர்சோ கிரேக்க நாடகங்களில் வரும் கதாபாத்திரத்தை போலவே சித்தரிக்கபட்டிருக்கிறான்.
ஒரு கோடையின் உக்கிரமான வெயில் அவனைத் தடுமாறச் செய்கிறது. எதிர்பாராமல் கடற்கரையில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, ஜெமிலா என்ற அரபுப் பெண்ணுடன் ரேமண்ட்டிற்கு இருந்த கள்ள உறவின் காரணமாகவே கொலை நிகழ்கிறது.
நிஜத்தில் புறச்சூழல் மெர்சோவை விழுங்கிவிடுகிறது. அதிலிருந்து மீளுவது எளிதாகயில்லை. தனது குற்றம் குறித்த குழப்பம் அல்லது தற்செயலின் பின்னுள்ள புதிர் குறித்து மெர்சோ கடைசியில் யோசிக்கிறான்.
மரணத்திற்காகக் காத்திருப்பது என்ற புள்ளியில் அவன் முதியோர் காப்பகத்தில் இருந்த அம்மாவின் மனநிலையைப் புரிந்து கொள்கிறான். ஒரே புள்ளியில் இருவரும் இணைகிறார்கள்.
மெர்சோவின் செயல் கொலைகுற்றமாகக் கருதப்படவில்லை. மாறாகக் கண்டிக்கப்பட வேண்டிய பண்பாட்டு மீறலாக, அக்கறையின்மையின் அடையாளமாக, துக்க மனநிலையின் தடுமாற்றமாகவே காலனிய ஆட்சியால் கருதப்படுகிறது. விசாரணையும் அதை நோக்கியே நகர்கிறது.
விஸ்காண்டி 1969ல் எடுத்த திரைப்படத்தில் சிறைக்கூடமும் விசாரணையும் மிக மேலோட்டமான காட்சிகளாக உருவாக்கபட்டிருக்கும். ஆனால் . பிரான்சுவா ஓசோன் சிறைக்கூடத்தையும் அங்கே மெர்சோ சந்திக்கும் பிரச்சனைகளையும் மிகத் தீவிரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவன் ஒரு அரேபியனைக் கொன்றதை எப்படிச் சக கைதிகள் எதிர்கொள்கிறார்கள் என்பதில் அழுத்தம் தருகிறார்.
நாவலில் மெர்சோவால் தன்னிலையாக விவரிக்கபடும் சில நிகழ்வுகளை மாறுபட்ட காட்சிகளாக மாற்றியிருக்கிறார் ஃபிரான்சுவா ஓசோன்.
மெர்சோவாக நடித்துள்ள பெஞ்சமின் வோய்சின் நல்ல தேர்வு. சிறப்பாக நடித்திருக்கிறார். நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. காம்யுவின் நாவலில் இவ்வளவு அழுத்தமாக அல்ஜீரியா வெளிப்படவில்லை. பிரான்சுவா ஓசோன் அதனைத் திட்டமிட்டு முன்னிலைப்படுத்தியிருக்கிறார். அதுவே அவரது அரசியல் நிலைப்பாடாகவும் வெளிப்படுகிறது
••