நெஞ்சில் இட்ட கோலம்

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை,

என்றும் அது கலைவதில்லை,

எண்ணங்களும் மறைவதில்லை

என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் என் நினைவில் கொப்பளிக்கிறது,

பாலுமகேந்திரா என்ற மகத்தான கலைஞனைப் பற்றியே கடந்த ஒருவாரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், முந்திய நாளின் இரவில் யாத்ரா படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்கள் கலங்கிவிட்டது, என்னவொரு அற்புதமான ஒளிப்பதிவு, படமாக்கம், இசை, மலையாளத்தில் வெளியான அப்படம் இன்றளவும் புத்துணர்வுடனே இருக்கிறது.

பாலுமகேந்திரா அவர்களுடன் பழகிய நினைவுகள் பொக்கிஷமானவை,

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் மதியம் பாலுமகேந்திரா அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது

ராம், உங்கள் வீட்டிற்கு நான் வரட்டுமா

ஏதாவது வேலையா சார், நீங்கள் சிரமப்பட வேண்டாம் நானே வருகிறேன் என்றேன்

இல்லை ராம், உங்க வொய்ப் கிட்ட போனை குடுங்க என்றார்

என் மனைவியிடம் போனைக் கொடுத்தேன்

அம்மா, உங்க வீட்டுக்கு வந்தா நல்ல காபி குடுப்பீங்க, இன்னைக்கு எனக்கு ஒரு நல்ல காபி கிடைக்குமா எனக்கேட்டார்

அவசியம் வாருங்கள் என்று எனது மனைவி அழைத்தவுடன் நாலு மணிக்கு வர்றேன் ராம், சும்மா, காபி குடிக்க மட்டும் தான் என்றார்,

அது போலவே நாலு மணிக்கு எனது வீட்டிற்கு வந்திருந்தார், பிள்ளைகளின் நலம் விசாரித்துவிட்டு காபியை ருசித்துக் குடித்தார்,

தலைமுறைகள் படத்தில் தொப்பியில்லாத பாலுமகேந்திராவை பார்க்கும் போது தனது தந்தையைப் போலவே இருப்பதாக எனது மனைவி திரைஅரங்கிலே கண்கலங்கினார், அந்த நிகழ்வை அவரிடம் சொன்னபோது நீயும் என் மகள் தானேம்மா என்று என் மனைவியை வாழ்த்தினார்,

எனது வரவேற்பு அறையில் மாட்டப்பட்டிருந்த குடும்பப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தார், எனது பையனுடன் அவனது கல்லூரி படிப்பு பற்றி அக்கறையுடன் கேட்டார், பிறகு  சந்தோஷமாகக் கிளம்பினார்,

எனது பையன் அவரிடம் போட்டோ எடுத்துக் கொள்ளக் கேட்ட போது அவராகச் சொன்னார்,

நாம் எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வோம், உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் தானே.

அவரோடு நிறையப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்,

விடைபெறும் போது படிகளில் இறங்கிவர உதவியாக அவரது கைகளைப் பிடித்துக் கொண்டேன், அவர் சொன்னார்

இன்று வரை  எழுத்தாளர்கள் தான் மனதளவிலும் என்னைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், நன்றி

அதைக்கேட்டபோது எனக்கு மனம் நெகிழ்ந்து போனது, எத்தனை அற்புதமான மனிதர் எனக் கார் வரை அவர் கூடவே நடந்து போனேன், பாலுமகேந்திரா அவர்களின் சிரிப்பு அலாதியானது, அவரது பேச்சு, நடை, பழகும்விதம் ஒவ்வொன்றும் தனித்துவமானது, மிகவும் ரசனையான மனிதர், காரில் ஏறும்போது என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சந்தோஷமாகயிருக்கிறேன் ராம் என்றார்,

அன்றிரவு வீட்டில் அவரைப்பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், பாலுமகேந்திரா அவர்களை நான் முதன்முதலாக 1992ம் ஆண்டுச் சென்னை திநகரில் நடைபெற்ற ஒரு இலக்கியக்கூட்டத்தில் சந்தித்தேன், அப்போது தான் எனது சிறுகதைகள் தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் வெளிவரத் துவங்கியிருந்தன,

கணையாழியில் வெளியாகி இருந்த எனது சிறுகதை ஒன்றை அவர் வாசித்து இருப்பதாகச் சொல்லி அக்கதை குறித்து நிறையப் பாராட்டினார்,

அன்று அவர் ஒரு நட்சத்திர இயக்குனர், அழியாதகோலங்களும் மூடுபனியும், மூன்றாம் பிறையும் பார்த்துவியந்த அந்த இயக்குனருடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதே மனதிற்குச் சந்தோஷம் தருவதாக இருந்தது,

அன்றிலிருந்து அவரது இறுதி தருணங்கள் வரை ஒரு மாணவனைப் போல அவரைப் பின்தொடர்ந்திருக்கிறேன், அவரோடு ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறேன், பலமுறை அவருடன் இணைந்து உலகின் சிறந்த திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன், அவரது திரைப்படங்கள் குறித்த விமர்சன அரங்குகளில் பேசியிருக்கிறேன், நிறைய நல்லபுத்தகங்களையும் நல்ல சினிமாவையும் பற்றி அவர் வழியாக அறிமுகம் கொண்டிருக்கிறேன், அவரது இலக்கிய ஈடுபாடு வியக்கத்தக்கது

அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எனக்காக ஒரு திரைக்கதை ஒன்றை எழுதி தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்,

இது குறித்து விவாதிப்பதற்காகத் தினமும் காலை அவரது அலுவலகம் செல்வேன், மதியம் வரை அவரோடு உரையாடிக் கொண்டிருப்பேன்,  சினிமா, இலக்கியம், சென்னை நகர வாழ்க்கை, இசை என நிறைய உரையாடுவதற்கு நேர்ந்தது,

பாலுமகேந்திரா யாரையும் கடிந்து பேசி நான் கண்டதேயில்லை, கோபம் வரும் நேரங்களில் அவர் அமைதியாகிவிடுவார், சில வேளைகளில் நான், அவர் சொன்ன நேரத்தில் சந்திக்க வரவில்லை என்பதால் இனிநாம் சேர்ந்து பணியாற்ற வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்,

ஆனால் அடுத்த இரண்டுநாட்களிலே மறுபடியும் அவரிடமிருந்து போன் வரும்,

ராம், நாம் இன்றைக்குச் சந்திக்கலாம் தானே,

இப்படி ஒரு மனதை நான் யாரிடமும் கண்டதேயில்லை

சென்னையில் நான் நடத்திய ஏழு நாள் உலகசினிமா சொற்பொழிவுகளையும் வந்திருந்து கேட்டுவிட்டு எனக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினார், அந்த நிகழ்ச்சிக்கு தினமும் ஆயிரம் பேர் வந்திருந்தார்கள், ஆனால் நிகழ்வை பாராட்டி கடிதம் எழுதிய ஒரே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் மட்டுமே. அந்த மனது தான் அவரை மகத்தான மனிதராக உயரத்தில் வைக்கிறது

இப்படி அவருடன் பழகிய பசுமையான நினைவுகள் நிறைய இருக்கின்றன, அவர் எழுதிய ஒவ்வொரு கடிதமாக எடுத்து படிக்கும் போது மனது துக்கத்தில் அமிழ்ந்து போகிறது

***

அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன், நாம் ஒரு போதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகுதொலைவில் இருப்பதை உணர்ந்த போதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது,

ஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம், இப்படம் அப்படியான ஒரு மாயக்கம்பளம் போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது, கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத வயதிற்குள், அடையமுடியாத உணர்ச்சிகளுக்குள் மீண்டும் நம்மைக் கொண்டு செல்வதேயாகும்,

அந்த வகையில் பாலுமகேந்திரா அவர்களின் அழியாத கோலங்கள் உயர்வான கலைப்படைப்பாகும், தமிழ்சினிமாவில் இப்படம் ஒரு தனிமுயற்சி, மிகுந்த கவித்துவ நேர்த்தியுடன் பதின்வயதினரின் உலகம் படமாக்கப்பட்டிருக்கிறது

பள்ளிவயதின் நினைவுகளுக்குள் பிரவேசித்த பிறகு நமக்கு ஊரும் வயதும், இருப்பும் மறைந்து போய்விடுகின்றன, நாம் காண்பதெல்லாம் பதின்வயதின் ரகசியங்கள்,சந்தோஷங்கள்,வருத்தங்கள், அவமானங்களே,

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை,

என்றும் அது கலைவதில்லை,

எண்ணங்களும் மறைவதில்லை

என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் நினைவின் குடுவையைத் திறந்துவிடுகிறது, விடலைப் பருவமென்பது ஒரு ராட்சசம், அதை ஒடுக்கி அன்றாட வாழ்க்கை, வேலை, குடும்பம் என்று பல மூடிகள் கொண்ட குடுவைக்குள் அடைத்து வைத்திருக்கிறோம், எப்போதோ சில தருணங்களில் அந்தப் பூதம் விழித்துக் கொண்டுவிடுகிறது, அதனோடு பேசுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை, ஆனால் நமது மௌனத்தின் பின்புள்ள வலியை அது புரிந்தேயிருக்கிறது, அதன் கண்கள் நம்மைப் பரிகசிக்கின்றன, நமது இயலாமையை, சாதிக்கமுடியாமல் போன கனவுகளை அதன் சிரிப்பு காட்டிக் கொடுக்கிறது

பதின்வயது ஒரு நீருற்றைப் போலச் சதா கொந்தளிக்ககூடியது, வீடு தான் உலகமென்றிருந்த மனது கலைந்துபோய் வீடுபிடிக்காமல் ஆகிவிடுவதுடன், வெளிஉலகம் பளிச்செனக் கழுவித்துடைத்து புதிய தோற்றத்தில் மின்னுவதாகவும் தோன்ற ஆரம்பிபிக்கிறது. தன் உடல் குறித்தும், பெண் உடல் குறித்தும் வியப்பும் மூர்க்கமும் ஒன்று கூடுகின்றன, முட்டையை உடைத்து வெளிவந்த பாம்புக்குட்டியின் வசீகரமாக மனதில் தோன்றும் காமவுணர்வுகள் சீற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன

பருந்து இரையைக் கவ்வி கொண்டு செல்வது போலப் பதின்வயதில் காமம் நம் உடலை கவ்விக் கொண்டு செல்கிறது. நம் உடல் பறக்கிறது என்ற ஆனந்தம் கொண்ட போதும் நம்மை இழக்கப் போகிறோம் என்ற உள்ளார்ந்த உணர்வும் பீறிடுகிறது. பறத்தலின் ஏதோவொரு புள்ளியில் பருந்து தன் இரையை நழுவவிடுகிறது. ஒரு வேளை அதற்காகத் தான் கவ்வி வந்ததோ என்றும் தோன்றுகிறது.

பருந்தின் காலில் இருந்து நழுவும் நிமிசம் அற்புதமானது. எந்தப் பிடிப்பும் இல்லாமல் வானில் எடையற்று விழும் அற்புதமது. ஆனால் அந்த வீழ்ச்சி சில நிமிசங்களில் பயமாகிவிடுகிறது. விடுபடல்ஆகிவிடுகிறது. போதாமை ஆகிவிடுகிறது.

பருந்து மறுமுறை எப்போது தூக்கிச் செல்லப்போகிறது என்பதைக் கண்டு கொள்வதற்காகவே அதன் கண்ணில் நாம் பட வேண்டும் என்ற இச்சை உண்டாகிறது. ஆனால் அடிவானம் வரை சிதறிக்கிடக்கும் மேகங்களுக்குள் பருந்து எங்கே மறைந்து கொண்டது என்று தெரியவில்லை. மனது தன்னை இரையாக்கி கொள்வதன் முன்பே ஒப்பு கொடுக்கவே ஆவலாக இருக்கிறது. காமம் வலியது. யானையின் பாதங்களைப் போல அதன் ஒவ்வொரு காலடியும் அதிர்கிறது.

அப்படிக் கடந்து வந்த விடலைப்பருவத்தைப் பற்றி இன்று நினைக்கையில் பனிமூட்டத்தினுள் தென்படும் மலையைப் போல அந்த நாட்கள் சாந்தமாக, வசீகரமாக, தன் உக்கிரத்தை மறைத்துக் கொண்டு எளிய நிகழ்வு போலக் காட்சிதருகிறது

காதலிப்பதை விடவும் அதைப்பற்றிக் கற்பனை செய்வது தான் விடலைப்பருவத்தில் சுகமானது, எப்போதும் காதலைப்பற்றி நினைத்தபடியே காதல்பீடித்த கண்களுடன் நிலை கொள்ளாமல் அலைந்த நாட்களை இப் படம் மிக இயல்பாக, உண்மையாக, கவித்துவ நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது

பாலுமகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார், அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது

பூவண்ணம் போல நெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்

பி,சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி, இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை,

இப்பாடலை எப்போது கேட்டாலும் மனம் கரைந்து போய்விடுகிறது, பாடும் முறையும் இசையும், அதன் ஊடாக நம் மனது கொள்ளும கடந்த கால ஏக்கமும் ஒன்று சேர பாடலைக் கேட்டு முடியும் போது நான் உணர்ச்சி பெருக்கில் ஆழ்ந்துவிடுகிறேன்

பூ வண்ணம் போல நெஞ்சம் பாடல் படமாக்கபட்டுள்ள விதம் எவ்வளவு அற்புதமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பாடலை நிசப்தமாக்கிவிட்டு வெறும்காட்சிகளை மட்டும் திரையில் பாருங்கள், நான் அப்படி அந்தப் பாடலை பலமுறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ கவிதை,

சிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை, அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள், பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார், அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம், மறக்கமுடியாத ஒரு வாசனை, ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப் போல அவர்களும் இயற்கையின் ஒருபகுதியே என்பது போல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள், பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது,

நாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார், அந்தச் சிரிப்பு வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது, ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது, அடிக்கடி தன் மூக்கை தடவி கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டுச் செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலை கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பது போல அவனோடு இணையாக நடப்பதும் எனக் காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது,

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

அவளைக் கல்லினுள்ளிருந்து

உயிர்ப்பிப்பது என்று பொருள்

அடிமுதல் முடிவரை காதலால் நீவி

சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்

கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்

என்று மலையாள கவிஞர் சச்சிதானந்தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுவார்,

அதைத் தான் பாலுமகேந்திரா இப்பாடலில் காட்சியாகக் காட்டுகிறார்,

ஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசியபடியோ நடந்து செல்லுவதும், ஷோபா சொல்வதை மௌனமாகப் பிரதாப் கேட்டுக் கொண்டிருப்பதும் மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன

இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை

என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது, தமிழ்சினிமாவில் மிகச் சிறப்பாகப் படமாக்கபட்ட காதல்பாடல் இதுவே என்பேன்

அழியாத கோலங்கள் என்ற தலைப்பே படத்தின் கதையின் மையப்படிமாக உள்ளது, நினைவு தான் படத்தின் ஆதாரப்புள்ளி, விடலைப்பருவத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பாகவே படம் விரிகிறது, இந்து டீச்சரின் வருகையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் விடலைப்பையன்களின் அன்றாட வாழ்வை திசைமாற்றம் செய்கின்றது, காற்றில் பறக்கும் நீர்குமிழ் போலிருந்த அவர்கள் வாழ்வு ஒரு மரணத்துடன் இயல்புலகிற்குத் திரும்பிவிடுகிறது, இறுதிக்காட்சியில் நண்பனை பறிகொடுத்த பிறகு அவர்கள் அதே மரத்தடியில் தனியே சந்திப்பது மனதை உலுக்கிவிடுகிறது

அழியாத கோலங்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மிக முக்கியமானபடம், காரணம் இப்படம் போல அசலாகப் பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்த்தேயில்லை, அதுவும் வசனங்கள் அதிகமில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டி பார்ப்பது போலப் படம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு,

தனது பதின்வயது நினைவுகளைத் தான் படமாக்கியிருக்கிறேன் என்று பாலுமகேந்திரா அவர்கள் குறிப்பிட்ட போதும் இது யாவரின் விடலைப்பருவமும் ஒன்று சேர்ந்தது தானே

பச்சை பசேலென விரியும் இயற்கையும் அதனுள் ஒடும் ஆற்றின் ஓடையும் அருகாமையில் கடந்து செல்லும் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே ஒடும் மூவரின் நீண்ட ஓட்டத்துடன் படம் துவங்குகிறது

ரகு தன் கனத்த உடலுடன் தாவிக் குதிக்கும் போது, தண்ணீர் அதிர்கிறது, ஆற்றின் கால்வாயும், அருகாமை மரங்களும் மண்பாதைகளும் அந்த மூன்று பையன்களின் சேட்டைகளை நிசப்தமாக வேடிக்கை பார்த்தடிபயே இருக்கின்றன, சில காட்சிக் கோணங்களில் இயற்கை அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நாம் உணர்கிறோம், அவர்கள், நீர்விளையாட்டில் ஒருவர் மீது மற்றவர் நீரை அள்ளி தெறிக்கிறார்கள், அந்த நீர்வீச்சு பார்வையாளனின் முகத்திலும் பட்டுக் கூச்சம் ஏற்படுத்துகிறது

நாம் திரையில் எவ்வளவு முறை ரயிலை பார்த்தாலும் அது தரும் சந்தோஷம் மாறுவதேயில்லை, இப்படத்தில் கடந்து செல்லும் ரயில் மட்டும் தான் புறஉலகின் தலையீடு, அது அவர்களின் இயல்புலகை மாற்றுவதில்லை, மாறாகத் தொலைவில் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கடந்து போகிறது, அவர்கள் தன்னைக் கடந்து செல்லும் நவீன காலத்தினை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்

ஆனால் அந்த ரயிலைப் போலவே புறஉலகில் இருந்து அந்தக் கிராமத்திற்குள் நுழையும் இந்து டீச்சர் அவர்களின் இயல்புலகை மாற்றிவிடுகிறாள், இந்து டீச்சரின் பெயரை மூவரும் சொல்லிப்பார்க்கும் காட்சி ஒன்றிருக்கிறது, அந்தப் பெயரை ஒரு இனிப்பு மிட்டாயை ருசிப்பது போல மூவரும் ருசிக்கிறார்கள், விடலைப்பருவத்தில் பெண்பெயர்கள் அப்படியான ருசியைக் கொண்டிருந்தது உண்மை தானே,

அப்போது ஒரு கூட்ஸ் ரயில் கடந்து போகிறது, அதை மூச்சு இரைக்க எண்ணுகிறான் ரகு, அது முடிவடைவதேயில்லை, கடந்து செல்லும் ரயில் பெட்டிகளை எண்ணாத சிறுவர்கள் எவர் இருக்கிறார்கள் அவர்களால் எதிர்கொள்ள முடியாத ஒரு கூட்ஸ் ரயிலை போலப் பிரதாப் என்ற கதாபாத்திரம் அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்க இருக்கிறான் என்பதையே அது உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது

மூவரில் ரகு எப்போதும் மாங்காய் தின்று கொண்டேயிருக்கிறான், அவன் உடைத்து தரும் மாங்காயை மற்றவர்கள் தின்கிறார்கள், அவன் தனக்கென ஒரு தனிருசி வேண்டுபவனாக இருக்கிறான், ரகு ஒருவன் தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான், அதனால் தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும் போது பெண் உடல் பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான், தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கி காணமுடியாமல் தயங்கி தயங்கி பின்னால் நடந்து வருகிறான், பிறகு விலகி ஒடிவிடுகிறான், அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கி கொள்கிறான்

அதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது, சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும் போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து எனத் தெரியாமல் நண்பன் சொல்லிய மஞசள் தாவனி பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான், அது தான் அவன் மன இயல்பு

பதின்வயதின் சிக்கல்கள் என்று சமூகம் மறைத்தும் ஒளித்தும் வைத்த நிகழ்வுகளை இப்படம் நேரடியாக விவாதிக்கிறது, உடலுறவு குறித்த ஏக்கம், புகைபிடித்தல், செக்ஸ் புத்தகங்களை வாசித்தல், அத்தை பெண்ணோடு காதல் கொள்வது, டீச்சரை காதலிப்பது, நண்பர்களுக்குள் ஏற்படும் கோபம், ஊர் சுற்றுதல், சலிப்பில்லாத விளையாட்டுதனம் என்று பருவ வயதில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் சரிதவறு என்று குற்றம்சாட்டாமல் நிஜமாகப் பதிவு செய்துள்ளது அழியாத கோலங்கள்,

டீச்சர் ஊருக்கு வந்து சேரும் வரை சிறுவர்களின் உலகம் வெறும் விளையாட்டுதனமாகவே உள்ளது, அவர்கள் ஊரில் இரண்டே தியேட்டர் உள்ளதற்காக அலுத்துக் கொள்கிறார்கள், பொழுது போக்குவது எப்படி என்று தெரியாமல் சுற்றுகிறார்கள், தபால் ஊழியரின் சைக்கிளை எடுத்து சைக்கிள் ஒட்ட கற்று கொள்கிறார்கள், ஆட்டக்காரியின் முன்னால் அமர்ந்து அவள் உடலை வியப்போடு வேடிக்கை பார்க்கிறார்கள், அவளுக்கும் தபால் ஊழியருக்கான ரகசிய காதலை ஒளிந்திருந்து பார்க்கிறார்கள், அந்தக் காட்சியில் இடிந்த மண்டபத்தில் ஆட்டக்காரியின் உடைகள் களையப்படுவதும் அவர்கள் காம மயக்கத்தில் ஒன்றுகலப்பதும் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் காட்டப்படுகிறது, காட்சியில் விரசம் துளியுமில்லை, ஆனால் பார்வையாளனின் மனம் காமத்தூண்டுதலில் உக்கிரம் கொண்டுவிடுகிறது, அது தான் பதின்வயதில் ஏற்பட்ட உணர்ச்சிநிலை, அதை அப்படியே பார்வையாளனுக்குள் ஏற்படுத்தியிருப்பதைக் கலையின் வெற்றி என்று தான் சொல்வேன்

ஆட்டக்காரியின் வீட்டிற்குப் போய்த் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காட்சியில் அவர்கள் அவளைக் கடித்துத் தின்றுவிடுவது போலப் பார்க்கிறார்கள், அவளுக்கும் அந்தப் பார்வையின் அர்த்தம் புரிகிறது, பிராயத்தின் காமம் வடிகால் அற்றது என்பதை மௌனமாகவே அவர்களுக்குப் புரிய வைக்கிறாள், அவள் கையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததையே பெரிய இன்பமாகக் கருதிய அவர்கள் ஆணுறைகளைப் பலூனாக்கி ஊதி விளையாடியபடியே ஒடுகிறார்கள்,

இந்து டீச்சர் ஒரு வானவில்லை போல அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறாள், அவளது தோற்றமும் குரலும் அவர்களை மயக்கிவிடுகிறது,

என் பேர் இந்துமதி வீட்ல இந்துனு கூப்பிடுவாங்க உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா”

என்று சொல்லும் போது ஷோபா மெல்லிய படபடப்பை மறைத்துக் கொணடு காட்டும் வெட்கம் எவ்வளவு அற்புதமானது,

இந்துடீச்சராக ஷோபா வாழ்ந்திருக்கிறார், அவர் இந்தப் படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்திருப்பது அவரது ஈடுபாட்டின் சாட்சி, தன்னைத் தேடி திடீரெனப் பிரதாப் வீட்டின் முன்பாக வந்து நிற்கும் காட்சியில் ஷோபா காட்டும் வியப்பும், ஆற்றக்கரைக்குக் குளிக்கக் கிளம்பிய பிரதாப் ஷோபாவை தூக்கி சுற்றும் போது அடையும் சந்தோஷம் கலந்த வெட்கமும் இதன் முறையில் திரையில் யாரும் காட்டி அறியாத உணர்ச்சிகள்,

ஷோபாவை போலவே படத்தில் பிரதாப்பையும் மிகவும் பிடித்திருக்கிறது, அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அவருக்குப் பாலுமகேந்திராவே குரல் கொடுத்திருக்கிறார். பிரதாப்பிற்கு மிகக் குறைவான வசனங்கள், ஆனால் காதலுற்றவனின் கண்கள் அவருக்கு இருக்கின்றன, ஏதோ நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டவரை போல அவர் படம் முழுவதும் நடந்து கொள்கிறார், இவர்களைப் போலவே பட்டாபியின் அத்தை பெண், அவள் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்கும் காட்சியில் காலை ஆட்டிக் கொண்டே பட்டாபி கேட்கும் கேள்விக்குப் பதில் தரும் போது அவள் கண்கள் அவனை ஆழமாக ஊடுருவுகின்றன, அவளும் விடலைப்பருவத்தில் தானிருக்கிறாள், ஆனால் அந்தப் பையன்களைப் போலத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை, அவளுக்கும் உடலின் புதிர்மை குழப்பமாகவே இருக்கிறது, லேசான தலை திருப்பல், மௌனமாகப் பார்ப்பது என்று தனது உடல்மொழியாலே அவள் பேசுகிறாள், நல்ல சினிமா என்பது சின்னஞசிறு உணர்ச்சிகளைக் கூடக் கவனமாகப் பதிவு செய்யக்கூடியது என்பதற்கு இவளது கதாபாத்திரம் ஒரு உதாரணம்

ஆசிரியர்களைக் கேலி செய்வது அல்லது படிக்காத மாணவனை அவமானப்படுத்துதல், மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பயன்படுத்துவது எனத் தமிழ்படங்களில் பள்ளியின் வகுப்பறை காட்சிகள் பெரும்பாலும் படுகேவலமான நகைச்சுவையோடு சித்தரிக்கபட்டுள்ளன, ஆனால் பாலுமகேந்திரா காட்டும் வகுப்பறை முற்றிலும் மாறுபட்டது, மாணவர்களின் இயல்பான குறும்புகள், ஆசிரியரின் மென்மையான அணுகுமுறை, ரகுவின் சேட்டையைக் கண்டிக்கும் டீச்சரின் பாங்கு என முற்றிலும் மாறுபட்ட பள்ளி அனுபவத்தைத் தருகிறது அழியாத கோலங்கள்

மூன்று சிறுவர்களும் மூன்று வேறுபட்ட அகவேட்கையுடன் இருக்கிறார்கள், பட்டாபி இதில் சற்று துணிந்த சிறுவனாக இருக்கிறான், அவன் இரவில் அத்தை பெண்ணைத் தொடுவதற்குச் செல்வதும், செக்ஸ் புத்தகத்தை ரகசியமாகக் கொண்டுவருவதும் என அவன் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தைரியமாக முயற்சிக்கிறான்,

மற்றவன் டீச்சரை மனதிற்குள்ளாகக் காதலிப்பதோடு அவள் வீடு தேடி போய் உதவி செய்கிறான், டீச்சரை பிரதாப் காதலிப்பதை அறிந்து பொறாமை கொள்கிறான், அவனுக்குள் மட்டும் காதல் உருவாகிறது, , அவனது நடை, மற்றும் பேச்சு, செயல்களில் தான் வளர்ந்தவன் என்ற தோரணை அழகாக வெளிப்படுகிறது

ரகுவோ மற்றவர்கள் செய்வதில் தானும் இணைந்து கொள்ள நினைக்கிறான், பயம் அவனைத் தடுக்கிறது, ஆனால் ஆசை உந்தி தள்ளுகிறது, அந்தத் தடுமாற்றத்தின் உச்சமே அவனது எதிர்பாராத சாவு,

பதின்வயதின் அகச்சிக்கல்கள் ஒருவனின் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது, பொதுத் தளங்களில் இவை விவாதிக்கப் படாமலே ஒளித்து வைக்கபடுவதும், விடலைப்பருவத்தினரை புரிந்து கொள்ளாமல் பெற்றோர் ஒடுக்க முற்படுவதும் சமூகத்தின் நோய்கூறுகள் என்றே சொல்வேன் ,

இப்படம் அது போன்ற மனத்தடைகளை உடைத்தெறித்துக் காதலையும் காமத்தையும் மரணத்தையும் முதன்முதலாக உணரும் பருவ வயதின் தவிப்பை அசலாகப் பதிவு செய்திருக்கிறது,

இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஒரு புதிய பாதையை நமக்கு அடையாளம் காட்டுகிறது, அதாவது கதை ஒரு புள்ளியில் இருந்து மேலோஙகி வளர்ந்து செல்ல வேண்டியதில்லை, தனித்தனி நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஒரு கோலம் உருவாவது போலவே திரைக்கதை அமைப்பு உருவாக்கபட்டிருக்கிறது, ஒரு எழுத்தாளனாக இதன் தனித்தன்மை மிகவும் ஆச்சரியமூட்டுகிறது,

அது போலவே இசையும் மௌனமும் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு இப்படமே ஒரு முன்னுதாரணம்

சினிமா என்பது காட்சிகளின் மொழியில் எழுதப்படும் நீள்கவிதை என்றே பாலுமகேந்திரா கருதுகிறார், ஆகவே அவர் காட்சி கோணங்களைத் தீர்மானிக்கும் விதமும் இயற்கையான வெளிச்சத்தைப் படமாக்கும் விதமும் ஒப்பற்ற உன்னதமாக இருக்கிறது

பாலுமகேந்திரா போன்ற அரிய கலைஞர்களால் மட்டுமே இது போன்ற படத்தைத் துணிச்சலாக எடுக்க முடியும், அவ்வகையில் அழியாத கோலங்கள் தமிழ் சினிமாவிற்குப் பாலு மகேந்திரா தந்த கொடை என்றே சொல்வேன்

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: