காந்தி

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் மாங்கா காமிக்ஸ் ஒன்று 2011ல் வெளிவந்துள்ளது,

இதனை உருவாக்கியவர் Kazuki Ebine. இவர் தோக்கியோவில் வசிக்கும் இளம் ஒவியர், இந்த நூலின் விலை ரூ 400.

பதின்வயதினர் காந்தியை அறிந்து கொள்வதற்கு உதவியாக இப்படக்கதை மகாத்மா வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை அழகாக விவரிக்கிறது,

ஜப்பானில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை புரிந்துள்ளது இந்த நூல்

இந்தப் புத்தகத்தை எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் சிலருக்குப் பரிசாக வாங்கித் தந்தேன், ஆச்சரியம். அவர்கள் இதை வாசித்த பிறகு காந்தியின் நூல்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், காந்தி குறித்து ஆர்வமாகப் பேசுகிறார்கள்

வரலாற்று ஆளுமைகளை அறிமுகம் செய்வதற்குப் படக்கதைகள் சிறந்த வழி, நாம் இன்னமும் படக்கதைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை,

காமிக்ஸ் புத்தகங்கள்  நேரடியாகத் தமிழில் எழுதப்படுவதில்லை, அதற்கெனத் தனிப்பதிப்பகங்கள் எதுவும் தமிழில் இல்லை. ஆனால் காமிக்ஸ் படிக்க நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியர், ரூசோ, கார்ல் மார்க்ஸ், நீட்சே, தெரிதா, என ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கிய ஆளுமைகள் குறித்துச் சித்திரப்புத்தகங்கள் வெளியாகி உள்ளன, அவற்றை நாம் முறையான அனுமதியுடன் தமிழ் படுத்தி வெளியிட்டால் இளம்வாசகர்களுக்கு உதவிகரமாக இருக்கும்

காந்தியை அறிமுகம் செய்யும் இந்த மாங்கா தமிழுக்கு அவசியமான ஒன்று.

0Shares
0