கோகோலின் பெயரால்

கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்

இரண்டு வங்கச் சிறுகதைகளைச் சமீபமாகப் படித்தேன், ஒன்று Samaresh Basu எழுதியது, மற்றொன்று Sirshendu Mukhopadhyay சிறுகதை, இரண்டிலும் அதன் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயர் கோகோல்

இது போலவே ஜும்பா லஹரியின் The Namesake நாவலின் கதாநாயகன் பெயரும் கோகோல், நாவலில் கோகோல் ரஷ்யாவின் அடையாயச்சின்னம் போலவே சித்தரிக்கபடுகிறார்.

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், கார்க்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் கவனிக்கபட்ட அளவிற்குத் தமிழ் சூழலில் கோகோல் கவனிக்கபடவில்லை,

தஸ்தாயெவ்ஸ்கிக்கு நிகரான எழுத்தாளர் நிக்கோலாய் கோகோல், அவரது தாராஸ் புல்பா மிக முக்கியமான நாவல், மேல்கோட்டு என்ற கோகோலின் சிறுகதையைத் தஸ்தாயெவ்ஸ்கி கொண்டாடுகிறார், குற்றமும் தண்டனை நாவலில் கோகோலின் பெயர் குறிப்பிடப்படுகிறது,

The Nose” என்றொரு சிறுகதையைக் கோகோல் எழுதியிருக்கிறார், அற்புதமான கதையிது, இக்கதையில் பீட்டர்ஸ்பெர்க் நகரில் வசிக்கும் நாவிதர் இவான் ஒரு நாள் தனது காலை உணவின் போது ரொட்டித்துண்டுகளுடன் ஒரு துண்டிக்கப்பட்ட மூக்கு ஒன்று கிடப்பதை காண்கிறான், இது எப்படி வந்தது என்று யோசிக்கிறான், அந்த மூக்கு அவனுக்கு அடையாளம் தெரிகிறது, அது அவனது வாடிக்கையாளரான மேஜர் கோவல்யோவின் மூக்கு,

இதை என்ன செய்வது எனப்புரியாமல் ரகசியமாக ஆற்றில் தூக்கி எறியச் செல்லும் போது காவல்துறையினரிடம் பிடிபடுகிறான், இன்னொரு பக்கம் தனது மூக்கை காணவில்லை என்று மேஜர் தேடுகிறார்

தேவாலயத்தில் போய் முறையிட்டு வேண்டுகிறார், பத்திரிக்கை அலுவலகத்திற்குப் போய் மூக்கு தொலைந்து போய்விட்டது கண்டுபிடித்துத் தாருங்கள் என விளம்பரம் கொடுக்க முயற்சிக்கிறார், மூக்கு குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறார்,

இதற்கிடையில் நாவிதரிடம் பிடிபட்ட மூக்கு அவருக்குத் திரும்பக் கிடைக்கிறது, ஆனால் அதைப் பொருத்திக் கொள்ளமுடியவில்லை, இதற்குக் காரணம் தான் விரும்புகிற பெண்ணின் தாய் தன்னைச் சபித்துவிட்டதாக நினைக்கிறார், அவளைத் திட்டிக் கடிதம் அனுப்புகிறார், அவளோ இதைக் காதல் ஏற்பு கடிதமாகப் புரிந்துகொள்கிறாள், முடிவில் மறுநாள் காலை மூக்கு மறுபடி ஒன்று சேர்கிறது,

இக்கதையில் மூக்கு உருவகமாக அடையாளப்படுத்தபடுகிறது, பகடி வகை எழுத்தில் கோகோலின் இக்கதை முதன்மையானது.

Diary of a Madman கதையில் இரண்டு நாய்கள் காதலிப்பதாகவும் அதற்கு இடையில் கடிதப்போக்குவரத்து நடைபெறுவதாகவும் ஒரு கதாபாத்திரம் நினைத்துக் கொள்கிறான்,

இந்த நாய்கள் சாலையில் சந்தித்துப் பேசிக் கொள்கின்றன,  காதல்கடிதத்தை இன்னொரு நாய் கொண்டு போய் தருகிறது. மனச்சிதைவுற்ற ஒருவன் தன்னை ஸ்பெயின் மன்னரின் வாரிசாக நினைத்துக் கொள்வதே கதையின் மையம், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் அவன் முடிசூட்டப் போவதாகவே கற்பனை செய்கிறான், அதிகாரத்தை கேலி செய்யவே இக்கதை எழுதப்பட்டது

Viy or King of the Gnomes, என்ற இவரது கதை இடிந்து போன தேவாலயம் ஒன்றில் ஒரு இரவு சூனியக்காரியை சந்திப்பதைப் பற்றியது, திகிலூட்டும் கதைகளில் முக்கியமானது

கோகோல் கஸாக்கிய இனத்தைச் சேர்ந்தவர், அவர் ரஷ்யாவை விட்டு வெளியேறி 12 ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்தார், உக்ரேனிய வாழ்க்கையை, கஸாக்குகளின் வீரமரபுகளை முதன்மைபடுத்திய இயல்புவாத கதைகளை எழுதியவர் கோகோல்,

ரஷ்ய சிறுகதையுலகில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தவர் கோகோல் , இவரது கதைகள் தான் முதன்முதலாக மாயத்தன்மையும் நாட்டார்மரபின் கதை சொல்லும் முறையும் கொண்டிருந்தன, இவர் வழியாகவே ஐரோப்பிய உலகிற்கு ரஷ்ய இலக்கியங்கள் அறிமுகமாகத் துவங்கின

வரலாற்றின் மறைக்கபட்ட உண்மைகளைத் தனது படைப்புகளின் வழியே கோகோல் அடையாளப்படுத்தினார், வரலாற்றின் மீதான ஈடுபாடு காரணமாகச் சரித்திரம் பயின்று பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்,

கவிஞர் புஷ்கினோடு நெருங்கிப் பழகியவர், நாடகத்தில் பிரதானமாகக் கவனம் கொண்ட இவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நாடகம் மூலம் ரஷ்யாவில் மிகவும் புகழடைந்தார்

ஒரினச்சேர்க்கையில் விருப்பம் கொண்ட கோகோல் Count Joseph Vielhorskiy என்ற 23 வயது இளைஞனை தீவிரமாகக் காதலித்தார், அது பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது

தொடர்ந்த வயிற்றுஉபாதைகளுடன் போராடிய கோகோல் நாளடைவில் இந்த வலி தன்னை எழுதவிடாமல் தடுப்பதாகப் புலம்பினார், செக்ஸ் பற்றி எழுதுவது போல அத்தனை தீவிரமாக, வசீகரமாக உணவைப் பற்றித் தொடர்ந்து எழுதியவர் கோகோல், அவரது படைப்புகளில் விதவிதமான உணவுகளும் சாப்பிடும் முறைகளும் விளக்கபடுகின்றன என்கிறார் விமர்சகர் டேனிலேவ்ஸ்கி,

சாப்பிடுவதில் மட்டுமின்றிச் சமைப்பதிலும் கோகோலுக்கு ஆர்வம் அதிகம், இத்தாலியில் வசித்த போது மக்ரோனி சமைக்கக் கற்றுக் கொண்டு நண்பர்களுக்கு விருந்தளித்திருக்கிறார், அவரே பாலில் இருந்து வெண்ணெய் எடுப்பார், ரொட்டிகளை சுடுவார், ஆட்டுபாலைக் கொதிக்க வைத்து அத்தோடு ரம் கலந்து குடிப்பது அவருக்குப் பிடித்தமானது

உணவகத்திற்குச் சென்றால் பக்கத்து மேஜையில் யாராவது வித்தியாசமாக எதையாவது சாப்பிடுகிறார்கள் என்றால் உடனே ஆசையாக ஆர்டர் செய்து சாப்பிடுவார்,

சாப்பிட்டு முடித்துக் கை கழுவிய பிறகு திடீரென மனதில் ஆசை உருவாகி மறுமுறை சாப்பிடுவதும் உண்டு, கோகோலின் இந்தச் சாப்பாட்டு ருசி ஊர் அறிந்த ஒன்று.

தொடர்ந்த உடல்நலக்கோளாறு காரணமாக மத ஈடுபாடு கொண்ட கோகோல் புனிதபயணங்களை மேற்கொள்ளத்துவங்கினார், புனிதர்களைத் தேடிப் போய்ப் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தார்

தன் படைப்புகளில் தான் உருவாக்கிய தவறான கதாபாத்திரங்கள், முதன்மைபடுத்திய சில எண்ணங்கள் தன்னைப் படுகுழிக்குள் தள்ளிவிடும் என்று நம்பத் துவங்கிய கோகோல் இதிலிருந்து மீட்சி அடைவதற்காகத் தான் எழுதிய காகிதங்களைத் தீவைத்து எரித்தார் ,

பின்னாளில் தனது வயிற்றுஉபாதைகள் காரணமாகப் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்த கோகோல் வெறும் தண்ணீரும் ஒரு சொட்டு ஒயினும் மட்டுமே ஒரு நாளின் உணவாகக் கொண்டார், இதனால் உடல் நலிந்துவடைந்து ஜில்லிட்டுப் போனது, இதற்காகச் சுடுதண்ணீரை காலில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள், ஆனால் உடல் சீரடையவில்லை. உடல்நலிவுடன் மனச்சிதைவும் ஒன்று சேர அதிலிருந்து மீளமுடியாமல் தனது 42வது வயதில் இறந்து போனார்

இறந்த அவரது உடலை உணவு மேஜையின் மீது கிடத்தினார்கள், அது ஒரு சடங்கு, உணவு வழியாக உடல் வளர்த்த மனிதன் இனி எதையும் சாப்பிட முடியாமல் உலகை விட்டு நீங்கிவிட்டான் என்பதன் அடையாளம்,

கோகோலின் தாராஸ் புல்பா (Taras Bulba) நாவல், யூல் பிரைனர் நடித்துத் திரைப்படமாகவும் வெளியாகி உள்ளது. கோகோலின் சிறுகதைகளில் பல திரைப்படமாக வெளியாகி உள்ளன,

பால்சாக்கினை தனது இலக்கிய ஆசானாக கூறும் கோகோல் அவரது கதைகளின் பாதிப்பில் இருந்தே தனது கதைகளை உருவாக்கியதாக கூறுகிறார்.

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: