படிப்பதற்காகவே வாழ்பவர்

ஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி,

இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டதோடு அடுத்த சில வாரங்களில் அது பற்றி விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்

அப்போது தான் அவரது பெயரை முதன்முறையாகக் கேள்விபட்டேன், அன்று துவங்கி இன்று நிமித்தம் நாவல் வரையான எனது அத்தனை நூல்களையும் வாங்கிப் படித்திருக்கிறார், கடிதம் மூலம் புத்தகம் குறித்த அவரது விமர்சனத்தை மிக நேர்மையாக எழுதி அனுப்பி வந்திருக்கிறார்,

ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அவரைச் சந்திக்க வேண்டும் என நினைப்பேன், ஏதோவொரு காரணம் சந்திக்க முடியாமல் போய்விடும்,

நேற்று மாலை நானும் மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் இருவருமாக அவரைக் காண்பதற்குச் சென்றிருந்தோம், லிங்கம் முதுமையில் அவரது மகன் வீடான ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவருகிறார், லிங்கத்தின் நண்பரும் வழக்கறிஞருமான ரமேஷ் உடன் வந்திருந்தார்,

ரமேஷ் ஆங்கில இலக்கியம் கற்றவர், தேர்ந்த படிப்பாளி, தனது வீட்டிற்கு ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க் என்று பெயரிட்டிருக்கிறார், ஆங்கில இலக்கியத்தின் புகழ்பெற்ற கேன்டர்பரி கதைகளை ரமேஷ் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்,

எஸ்எஸ்ஆர் லிங்கத்தின் மகன் வீடு மிகச்சிறியது, நான்கு பேர் அமர்ந்து பேசக்கூடிய சிறிய அறை, முதுமையின் தளர்ச்சி முகத்தில் தென்பட்ட போதும் லிங்கம் உற்சாகத்துடன் என்னை வரவேற்று பேசத்துவங்கினார்,

உயிர்மையில் வெளியான உங்களின் ஆண்மழை சிறுகதை அபாரம் என்று துவங்கி சமீபத்தைய எனது புத்தகங்கள், யாமம், துயில் என்று கடகடவென பேசிக் கொண்டே போனார், பேச்சு விரிந்து தி.ஜானகிராமன், வண்ணதாசன், தி.க.சி, சுந்தர ராமசாமி, கோணங்கி என வளர்ந்து கொண்டே போனது, இதற்குள் அவரது மகன், மருமகன், நண்பர்கள் எனப் பலரும் வந்துசேர்ந்துவிட்டார்கள்,

இரண்டுமணி நேரம் ஆண்களும் பெண்களுமாக இருபது பேர் தீவிர இலக்கியம், பயண அனுபவங்கள், சமூகப்பிரச்சனைகள், என பேசிக் கொண்டிருந்தோம், இப்படி ஒரு அபூர்வமான குடும்பத்தை நான் கண்டதேயில்லை.

புதுமைபித்தனின் சிறுகதைகள் துவங்கி இன்று வெளியான ஒநாய்குலச்சின்னம் வரை லிங்கம் வாசித்திருக்கிறார்,சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தீவிரமாக வாசித்திருக்கிறார், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, உயிரெழுத்து என எல்லா இதழ்களையும் வாசித்துவிடுகிறார், படித்து ரசித்த எழுத்தாளர்களுக்கு உடனே கடிதம் எழுதி தனது பாராட்டினைத் தெரிவிப்பது அவரது வழக்கம்

இவ்வளவு புத்தகம் படித்தபோதும் தனக்கு எழுத வேண்டும் என்ற ஆசை வரவில்லை, நான் என்றும் வாசகனே என்று அடக்கமாகச் சொல்லிக் கொள்கிறார், இவர் எழுதிய சில விமர்சனக்கடிதங்கள்  பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன,

முதுமையிலும் அவருக்கு நல்ல நினைவாற்றல், தாமரையில் எந்த இதழில் செகாவ் கதை வெளியானது எனத் துல்லியமாக நினைவுகூறுகிறார், ஞானரதம் இதழ்களை அழகாக பைண்ட் பண்ணி வைத்திருக்கிறார்,  முழுநேரப்படிப்பாளியாக வாழ்ந்து வரும் அவருக்கு புத்தகங்களைப் படிப்பதும் பேசுவதும் தான் வாழ்க்கை, அதைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போது கண்கள் ஒளிர்கின்றன, பேச்சில் சந்தோஷம் பீறிடுகிறது,

படிச்ச புத்தகங்கள் பற்றி பேச ஆள்துணை கிடைப்பதில்லை, இன்னைக்கு  காலேஜ் வாத்தியர்கள் கூட புத்தகம் படிக்கிறதில்லை,  இளைஞர்கள் புத்தகம் படிப்பதை வேஸ்ட் என நினைக்கிறார்கள், அதை நினைச்சா வருத்தமாக இருக்கு என்று சொல்லும்போது அவரது குரலில் வேதனை பீறிடுகிறது

வத்திராயிருப்பு அருகில் உள்ள கூமாபட்டியில் ஒரு பலசரக்குகடை வைத்து வாழத்துவங்கிய லிங்கம் , ஒய்வு நேரங்களில் புத்தகம் படிக்கத்துவங்கி பின்பு படிப்பற்காகவே வாழுபவராக மாறியிருக்கிறார்,

இன்று வரை தான் இருபத்தியேழாயிரத்து முந்நூற்று இருபத்திரெண்டு (27322) புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று தான் படித்த புத்தகங்களைப் பற்றி நினைவு கூறுகிறார்,

இப்படி ஒரு வாசகரை என் வாழ்நாளில் நான் சந்தித்தேயில்லை,

மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக் கூடப் படித்ததில்லை என்று பெருமை பேசும் மனிதர்களுக்கு இடையில் விருப்பமான புத்தகங்களை வாங்க போதுமான பணம் இல்லை, இருக்கிற வாழ்நாளில் இன்னமும் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவும் படித்துமுடித்துவிட வேண்டும் என்று கண்கள் நிறைய ஆசையுடன் பேசும் லிங்கம் போன்றவர்களைக் காண்பது அபூர்வம்.

ஐந்தும் பத்துமாக தான் மிச்சம் பிடித்துச் சேமித்த பணத்தில் வாங்கி சேகரித்த பத்தாயிரம் புத்தகங்களைக் கொண்டு அவரே சிறிய நூலகம் ஒன்றை வைத்திருக்கிறார், வீட்டிற்கு இலக்கிய இல்லம் எனப் பெயரிட்டிருக்கிறார்

தான் படித்து ரசித்த புத்தகங்களை  நண்பர்கள், தெரிந்தவர், தெரியாதவர் என யார் கேட்டாலும் படிக்கத் தந்துவிடும் அரிய குணம் இவரிடமிருக்கிறது,  படித்த ஒவ்வொரு புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலும் அதைப்பற்றி ஒரு குறிப்பை எழுதி வைத்திருக்கிறார், எந்தப்புத்தகம் வாங்கினாலும் அழகான அட்டை போட்டு அல்லது பைண்டிங் செய்து அதன் முகப்பில் அதைப்பற்றிய சிறிய குறிப்பை எழுதிவிடுகிறார்

நா. பார்த்தசாரதி எனது நண்பர், தோழர் ஜீவா என்னுடன் பழகியிருக்கிறார், சி.சு. செல்லப்பா எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் என்னைத் தேடி வந்து பார்த்து தங்கிவிட்டுத்தான் போவார், ஜெயகாந்தனும் எனது இனிய நண்பர், வீடு தேடி வருவார், இப்படி தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பலருடன் பழகியிருக்கிறேன்,

பொழுது போக்குவதற்காக நான் படிப்பதில்லை, இதுவரை ஒரு ஜனரஞ்சக புத்தகம் கூட நான் படித்ததில்லை, படிக்க மாட்டேன், தீவிரமான இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் மட்டுமே வாசிக்கப் பிடிக்கும், பாரதி எனக்கு விருப்பமான ஆளுமை, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக படித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் எஸ்.எஸ்.ஆர் லிங்கம்,

இவ்வளவு தேர்ந்த படிப்பாளியான லிங்கம் பற்றி அவரது மூத்தமகன்  கோபத்துடன் பேசினார்,

படிச்சி என்ன சார் பிரயோசனம், இவர் ஒரு உதவாக்கரையான தந்தை, எங்களைக் கவனிக்கவேயில்லை, முறையாக படிக்க வைக்கவில்லை, புத்தகமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட கொடுமைக்காரர், இவருக்கு எதற்கு குடும்பம் என்று ஆவேசமாக கூறினார்

நான் எவ்வளவோ சமாதானம் சொன்ன போதும் அவரது ஆற்றாமை குறையவில்லை, அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எஸ்எஸ்ஆர் லிங்கம் தணிவான குரலில் சொன்னார்

இப்படி தினம் தினம் அவமானப்பட்டு தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன், பொஸ்தகம் படிக்கிறது தப்பா, நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி படிச்சிருக்கேன், இவங்களையும் பொஸ்தகம் படிக்க வச்சிருக்கேன், எல்லாருக்கும் சுதந்திரம் கொடுத்து விருப்பபடி வளர்க்க ஆசைப்பட்டேன், அது இவங்களுக்குப் புரியலை, நல்ல அப்பாவா நடந்துக்கிடலைனு திட்டுறாங்க,

எனக்கு ஏழு பிள்ளைகள், பெரிய குடும்பம், என்னாலே முடிஞ்சதை தான் சம்பாதிச்சேன், இவங்க யாரும் என்னைப்  புரிஞ்சிகிடலை, ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துற மாதிரி சொல்லிகாட்டிக்கிட்டே இருக்காங்க,

இன்னும் இருக்கப் போறது ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ அதுவரைக்கு  ஏச்சுபேச்சை தாங்கி கிட வேண்டியது தான், இந்த அவமானப் பேச்சை கேட்டுக்கேட்டு மனது ரணமா ஆகியிருக்கு, புத்தகம் படிச்சி எனக்கு நானே ஆறுதல் தேடிகிடுவேன், இப்போ பேரன் பேத்திகள் தலையெடுத்து வந்து புத்தகம் வாங்கி கொடுத்து படிக்கச் சொல்றாங்க, படிச்சிகிட்டு இருக்கிறதாலே தான் உயிர்வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்றார்

வீட்டிலும் உலகத்திலும் எந்த அங்கீகாரமும் இல்லாமல் ஒரு பெரும்படிப்பாளி புறக்கணிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,

அவர் உருவாக்கிய படிப்பு ரசனை வீட்டில் அவரது பிள்ளைகள் பேரன்கள் என அத்தனை பேரிடமும் காணப்படுகிறது, ஆனால் லிங்கம் , பெரிதாக  சம்பாதிக்கவில்லை, குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்ற கோபம் பிள்ளைகளிடம் காணப்படுகிறது

அவரது பேரன் சங்கர்  தனது வீட்டிற்கு அழைத்துப் போய்  தனது சிறிய நூலகத்தை காட்டினார், தரமான புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கி படித்திருக்கிறார்

எஸ்எஸ்ஆர் லிங்கம் தனக்கான புத்தக வாரிசுகளை சரியாகவே உருவாக்கியிருக்கிறார், ஆனால் பொருளாதார ரீதியாக அவர் வெற்றிகரமான மனிதராகயில்லை, குடும்பத்திற்காக சொத்து சேர்த்து வைக்கவில்லை, அவரிடமிருப்பது அத்தனையும் உயர்வான இலக்கியங்கள், அதன் அருமை உலகிற்குத் தெரியவேயில்லை

எஸ்எஸ்ஆர் லிங்கத்தின் மகனிடம் உங்கள் அப்பா ஆயிரத்தில் ஒருவர், இப்படியான மனிதர் இருப்பது அபூர்வம் என்று எவ்வளவோ விளக்கம் தந்தேன், ஆனால் அவர் மனசமாதானம் அடையவில்லை

இவரைப் போல புத்தகமே உலகம் என்று இருப்பவருக்கு எதற்குக் குடும்பம், பிள்ளைகள், அவர் எங்களை முறையாக வளர்க்கவில்லை, ஆனால் நாங்கள் அவரை முதுமையில் பொறுப்பாகவே கவனித்து வருகிறோம், இப்போதும் இலக்கிய கூட்டங்களுக்குப் போக வேண்டும், எழுத்தாளர்களைச் சந்திக்க  வேண்டும் என ஆசைபடுகிறார், அவரைத் தனியே அனுமதிக்க முடியாது என்பதால் கட்டுபடுத்தி வைத்திருக்கிறோம், அதைப்புரிந்து கொள்ளாமல் எங்கள் மீது கோபம் கொள்கிறார், நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் என்றார்

அதைக்கேட்ட எஸ்எஸ்ஆர் லிங்கம் வருத்தமான குரலில் , இருக்கிற காலத்தில் நான் நேசிக்கிற எழுத்தாளர்களைச் சந்திக்க முடிந்தால் அது பெரிய பேறு தானே, இதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் எனக் கேட்டார்,

என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அமைதியாக இருந்தேன்

வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை, புத்தகம் படிக்கிற மனிதனை உதாவக்கரையாகவே நினைக்கிறது

குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப்போக முடிகிற இவர்களால் படிப்பை நேசிப்பவனை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, இடத்தை அடைத்துக் கொண்டு ஏன் இந்தப் புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய் என சண்டையிடாத குடும்பமேயில்லை,

உடைந்து போன நாற்காலிகள், பழைய பாய்தலையணைகள்,  நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே.

ஆனால் வீடு அனுமதிக்கும் போது மட்டுமே படிப்பேன் என்று எந்த தீவிரவாசகனும் ஒய்ந்துவிடுவதுமில்லை, முடிவில்லாத இந்த மனப்போராட்டம் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது,

எஸ்எஸ்ஆர் லிங்கம் போன்றவர்களை நம் சமூகம் அங்கீகரிக்க வேண்டும், உரிய மரியாதை செய்ய வேண்டும், அதை விட்டு, தேடிப் பெற்ற அவரது இலக்கிய அறிவும் அனுபவமும் ஏளனம் செய்யப்படுவது மிகவும் கொடுமையான வேதனை,

எஸ்எஸ்ஆர் லிங்கத்தை தேடிப்போய் பார்த்து அவருக்கான உதவிகளை நாமாக முன்வந்து செய்ய வேண்டும்,

இப்போது அவரது ஒரே ஆசை, மிதமீருக்கும் நாட்கள் வரை தான் விரும்பிய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்பது, ஆனால் அவரிடம் போதுமான பண வசதியில்லை,

உலகின் அவமானங்களை ஒரு படிப்பாளியால் தாங்கிக் கொள்ளமுடியும், ஆனால் சொந்தவீடும் உறவும் அவரைத் தொடர்ந்து அவமதிப்பதை தாளவே முடியாது,

எஸ்.எஸ்.ஆர்.லிங்கம் போன்ற அபூர்வமான வாசகரைக் கொண்டாட வேண்டியது நம் அனைவரின் கடமை.

விருப்பமான நண்பர்கள் அவருக்குப் புத்தகம் வாங்க உதவி செய்ய முடிந்தால் அது மிகப்பெரிய சேவையாக அமையும், அவரது முகவரியை இணைத்திருக்கிறேன்,

முடிந்தால் சிறந்த இலக்கியப் புத்தகங்களை வாங்கி அனுப்பி வையுங்கள், அல்லது அவரைத் தொடர்பு கொண்டு அவர் விரும்புகிற புத்தகங்களை வாங்கி பரிசளியுங்கள், ஒருவேளை ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போனால் அவரைச் சந்தியுங்கள்,

அதுவே நாம்  இலக்கியத்தை நேசிப்பதன் உண்மையான அடையாளம்

•••

எஸ் எஸ் ஆர் லிங்கம்

19 இலக்கியஇல்லம், செட்டியக்குடி இல்லம்

கடலைக்காரர் 2 ஆம் சந்து

பிள்ளையார் கோவில் எதிரில்

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம்

தொடர்பு எண் 9894651211

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: