விலாஸ் சரங்

விலாஸ் சரங் (Vilas Sarang) மராத்தியின் முக்கிய எழுத்தாளர், கவிஞர். ஆங்கிலப்பேராசிரியரான இவரது சிறுகதைகள் உலக அளவில் பேசப்படுகின்றன, The Women in Cages என்ற இவரது சிறுகதை தொகுப்பு மிக முக்கியமானது, 26 சிறுகதைகள் இத் தொகுப்பில் உள்ளன.

இதில் “An Interview with M Chakko” என்றொரு சிறுகதையுள்ளது, இச்சிறுகதை மிகவும் முக்கியமானது, சாக்கோ என்ற நபர் கப்பல் பயணத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு தீவினைச் சென்றடைகிறான், அந்தத் தீவில் பெண்களுக்குப் பாதி உடல் மட்டுமே இருக்கிறது, கீழ்பகுதி மட்டுமே கொண்ட பெண் “Ka” women எனவும் மேற்பகுதி மட்டும் கொண்ட பெண்“Lin” class எனவும் அழைக்கபடுகிறாள்,

ஏதாவது ஒரு பகுதி கொண்ட பெண் மட்டுமே ஒருவனுக்கு ஒருவனுக்குத் துணையாகக் கிடைப்பாள், பாலுறவு ஆசையில் கீழ்பகுதி உள்ள பெண்ணைப் பெறுகிறான் அவன், ஆனால் பாலின்பம் மட்டுமே போதுமானதாகயில்லை, ஆகவே மேல்பகுதி பெண் வேண்டும் என மாற்றிக் கொள்கிறான், ஒருமுறை மட்டுமே இந்த மாற்றம் அனுமதிக்கபடும், அதிலும் அவன் திருப்தி கொள்ளவில்லை. பெண் என்பவள் பாலியல் துணை மட்டும் தானா என்பதை அதிர்ச்சியூட்டும் வகையில் அற்புதமாக எழுதியிருக்கிறார் விலாஸ் சரங்.

The Odour of Immortality கதையில் ஒரு வேசை ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதற்காகத் தாந்திரீகம் வழியாக உடல் முழுவதும் யோனி உருவாக்கி கொள்கிறாள். சாபத்தில் உடல் முழுவதும் யோனி கொண்ட இந்திரன் கதையின் மறுஉருவாக்கம் போல இக்கதை அமைந்திருக்கிறது ,

இன்னொரு கதையில் ஒருவன் விழித்து எழுதும் போது மிகப்பெரிய ஆண்உறுப்பாக உருமாறிவிடுகிறான், அவனை லிங்கம் என வழிபடத்துவங்குகிறார்கள், காப்காவின் கிரிகர் சாம்ஸா இந்தியாவில் எப்படி உருமாற்றம் அடைகிறான் என இக்கதையில் அறிந்து கொள்ளமுடிகிறது

இது போலவே இன்னொரு கதையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குக் கொண்டுவரப்படும் சிலைகள் உயிர்பெற்று ஒடுகின்றன.

காப்கா, போர்ஹே இருவரும் இணைந்து எழுதுவது போன்ற எழுத்து முறை கொண்ட இவரது கதைகள் இந்திய சிறுகதைகளின் போக்கில் தனித்துவமானவை.

சரங்கின் சாக்கோ கதையை வாசித்த போது அர்த்தநாரீ எனப்படும் சிவ சக்தியின் வடிவத்தினைக் கிடைவெட்டாகத் துண்டித்து எழுதியிருப்பது போல உணர முடிந்தது.

பொதுவாகச் சரங்கின் எழுத்துகளில் இந்திய புராணீகத்தின் தாக்கம் அதிகமிருக்கிறது, இந்திய தொன்மங்களில் காணப்படும் பாலுணர்வின் வெளிப்பாடுகளை அவர் தனது கதைகளில் மீள் உருவாக்கம் செய்கிறார்.

சரங் ஆங்கிலம் மராத்தி இரண்டிலும் சரளமாக எழுதக்கூடியவர், இத்தொகுப்பில் ஆண் பெண் உறவு பற்றிய கதைகளைத் தனியே Libido Zones என வகைப்படுத்திப் பிரித்திருக்கிறார்.மும்பையின் தினசரி வாழ்க்கையை மீமாயத் தளத்தில் கதையாக உருமாற்றும் வித்தை கொண்டவை இவரது கதைகள்.

புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் புதிய கண்ணோட்டத்தில் இவர் The Dhamma Man என எழுதியிருக்கிறார் இவரது எழுத்தில் விருப்பம் கொண்ட  நோபல் பரிசு  பெற்ற எழுத்தாளர் சாமுவேல் பெக்கட் சரங்கின் கதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கு அமெரிகக பதிப்பகங்களில் சிபாரிசு செய்திருக்கிறார். அறிவியல் புனைகதைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்ட விலாஸ் சரங்  டினோசர்களை வைத்து கலிவரின் யாத்திரை போல The Dinosaur Ship என்ற நாவலை எழுதியிருக்கிறார்

இவரது கதைகள் பிரெஞ்சு ,ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழில் இதுவரை இவரது கதை எதுவும் வெளியானதாக நான் அறியவில்லை. ஆனால் அவசியம் மொழிபெயர்க்க வேண்டிய முக்கியமான சிறுகதை தொகுப்பு இது என்பேன்.

***

0Shares
0