நதிமுகம் தேடி

நைல் உலகின் மிக நீளமான ஆறு தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக்கடலில் கலக்கின்றது. எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடைகின்றன

நைல்  நதி வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டாகப்  பிரியக்கூடியது. வடகிழக்கு ஆப்ரிக்காவில் இது தொடங்குகிறது. இரண்டில் வெள்ளை நைல் தான் மிக நீளமானது. இந்த நதி ருவாண்டா, புரூண்டி, டான்சானியா, உகாண்டா, தெற்கு சூடான் வழியாகப் பாய்கிறது. எத்தியோபியாவில் தொடங்கிச் சூடான், எகிப்து வழியாக நீல நைல் நதி பாய்ந்து செல்கிறது. இரண்டும் சூடான் தலைநகர் கார்ட்டூம் அருகே ஒன்றாகச் சேர்ந்து ஒரே நதியாகச் சூடானுக்குள் நுழைகின்றது. அங்கிருந்து பின்னர் எகிப்து வழியாகக் கடலில் கலக்கிறது

விக்டோரியா ஏரியில் இருந்து, ரைபான் அருவி மூலமாக வெளியேறிச் செல்லும் வெள்ளை நைல் நீண்ட பயணத்தின் பின்பு ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிறது. இந்த நதியே விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது

இது போல ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேறி பாயும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது. நீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியுள்ள இருக்கும் தனா ஏரி ஆகும்.

**

நைல் நதி உருவானதற்கு ஒரு கதையிருக்கிறது.

கிரேக்கக் கடவுள்களிலேயே ஜீயஸ் மிகவும் சக்தி வாய்ந்தவர் அவரால் நினைத்த உருவத்தை எடுக்க முடியும். அவர் பொய்யே சொல்லாதவர். அவரது மனைவி  ஹீரா.

ஒரு முறை பூமியில் ஜீயெஸ் பேரழகுமிக்க லோ என்ற இளம் பெண்ணைக் கண்டார். அவளது அழகில் மயங்கினார், தன் மனைவியின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கப் பூமி முழுவதையும் கரு மேகங்களால் சூழச் செய்து அவளுடன் ஆனந்தமாக இருந்தார். ஆனால் விஷயம் ஹீராவிற்குத் தெரிந்து விட்டது. அவள் பூமியை நோக்கிப் பறந்து வந்தாள்.

இதை அறிந்த ஜீயெஸ் லோவை ஒரு பசுவாக உருமாற்றினார், ஹீரா வந்து பார்த்தபோது ஜீயெஸின் அருகே பசுமாடு மட்டுமே நின்றிருந்தது. அதைத் தனக்குப் பரிசாக வேண்டும் என ஹீரா கேட்டாள். உண்மையைச் சொல்லமுடியாமல் ஜீயெஸ் பசுவை அவளுக்குப் பரிசாக அளித்தார். பசுவாக உருமாறிய லோவை ஹீரா பாதாள உலகில் மறைத்து வைத்து காவலும் போட்டாள்.

லோ வைக் காப்பாற்ற எண்ணிய ஜீயெஸ், தன் மகன் அப்பல்லோவை அழைத்து ஒரு பாடல் பாடுமாறு கூறினார். அவன் பாட்டில் மயங்கி காவலாளி தூங்கிவிடவே லோ தப்பியோடினாள்.

இதை அறிந்த ஹீரா விஷப் பூச்சி ஒன்றை உருவாக்கி அந்தப் பசுமாட்டைக் கடிக்குமாறு ஏவினாள். அந்தப் பூச்சியிடம் தப்பி லோ எகிப்தில் தஞ்சமடைந்தாள். பாலைவனத்தில் தாகத்தில் தவித்த லோவிற்காக மழைமேகங்கள் பொழியத்துவங்கின. கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ஆறு உருவானது. அதுவே நைல் நதி என்கிறது கிரேக்க புராணம்.

••

பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ரிச்சர்ட் பட்டனும் ஜான் ஹேனிங் ஸ்பெக்கும் இணைந்து நைல் நதியின் மூலத்தைத் தேடி கண்டறிய முயன்றார். அவர்களின் சாகசப்பயணத்தையே Mountains of the Moon படம் விவரிக்கிறது. டேவிட் லீன் படங்களைப் போல நிலக்காட்சிகளை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். காட்டிற்குள்ளாகப் பர்டன் மேற்கொள்ளும் பயணம் சிலிர்ப்பூட்டுகிறது. இப்படத்தை இயக்கியிருப்பவர் Bob Rafelson.

••

பிரிட்டீஷ் ராணுவ அதிகாரியும் நிலவியல் ஆய்வாளரும் மொழிபெயர்ப்பாளருமான ரிச்சர்ட் பர்டன் சாகசங்களே வாழ்க்கையாகக் கொண்டவர். இவரே காமசூத்ராவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். இது மட்டுமின்றி ஆயிரத்தோரு அற்புத இரவுகளையும் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். 29 மொழிகள் தெரிந்த பர்டன் ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் இலக்கில்லாமல் சுறறித் திரிந்தவர். போகும் இடத்தில் எல்லாம் அழகான இளம்பெண்களை மயக்கி காதலித்தவர். பெரும்குடிகாரர். போகி. இஸ்லாமியராக மாறுவேஷம் புனைந்து கொண்டு மெக்காவிற்குச் சென்று வந்தவர். அதைப்பற்றித் தனி நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். இங்கிலாந்தின் மேல்தட்டுக் குடும்பம் ஒன்றில் பிறந்த பர்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறியப்படாத நிலத்தைத் தேடி கண்டறிவது பெரும்சாகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஆப்ரிக்காவில் சுற்றி அலைந்து அனுபவம் கொண்டவர் என்பதால் பர்டன் இந்த நதிமூலம் தேடும் பணியை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கு ஸ்பைக் மீது பெரிய நம்பிக்கையில்லை.

இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் வேதம் படிக்க வேண்டும் என்று பண்டிதர் ஒருவரை நியமித்துக் கொண்டார் பர்டன். தானும் பிரமாணன் போல உடையணிந்து கொண்டு வேதம் படித்தார். குரங்குகளின் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக நிறையக் குரங்களை வளர்த்தார் என்றும் சொல்கிறார்கள்.

லண்டனிலிருந்த ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டி புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதி உதவியும் ஆதரவும் அளித்து வந்தது. ஆகவே அவர்களின் உதவியோடு பர்டனும் ஸ்பெக்கும் நைல் நதியின் ஊற்றுக்கண்ணைத் தேடி புறப்பட்டார்கள்

இந்தப் பயணத்தின் முன்பாகப் பர்டன் இசபெல் என்ற இளம்பெண்ணைக் காதலிக்கத் துவங்கினார். அவளது குடும்பம் மிக வசதியானது. அவர்கள் முரடனாக இருந்த பர்டனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அத்துடன் அவர் கத்தோலிக்கர் இல்லை என்பதால் நிச்சயம் திருமணம் செய்து தர முடியாது என மறுத்தார்கள்.

1857 ஜுனில் பர்டனும் ஸ்பெக்கும் நைல் நதியின் ஊற்றுக்கண்ணைத் தேடி புறப்பட்டார்கள். ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இப்பயணம் துவங்கியது. பயண வழியில் அவர்களுக்குத் துணையாக ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் சுமைதூக்கும் பணியாளர்களாக நியமிக்கபட்டார்கள். அவர்கள் மிகப்பெரிய சுமையைத் தூக்கியபடியே பர்டனை பின்தொடர்ந்தார்கள்.

பயணத்தின் நடுவில் ஸ்பெக் வேட்டையாச் சென்ற போது பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர் அவரைத் தாக்க ஆரம்பித்தார்கள். அந்தத் தாக்குதலில் பர்டனின் தாடையில் அம்பு பாய்ந்து வாயை கிழித்துது. பழங்குடி மக்களிடம் பிடிபட்ட ஸ்பெக்கின் இரண்டு தொடைகளிலும் ஈட்டி சொருகப்பட்டது. உயிர் தப்பி வருவதே பெரும் போராட்டமாகயிருந்தது. காயமடைந்த இருவரும் ஒய்வு வேண்டி பயணத்தை ஒத்தி வைத்தார்கள். இங்கிலாந்து திரும்பிய பர்டன் சிகிட்சை மேற்கொண்டு நலமடைந்தார். ஆனாலும் முகத்தில் பெரிய தழும்பு உருவாகியிருந்தது.

நைல் நதி எங்கிருந்து உருவாகிறது என்பதை அறிந்து கொள்வது எளிதாகயில்லை. கென்ய பழங்குடி மக்கள் அது ஒரு ஏரியிலிருந்து உருவாகி வருகிறது என நம்பினார்கள். அந்த ஏரியை கண்டறிவதற்காகப் பழங்குடி மக்களில் இருந்தே ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டார்கள். இதற்கிடையில் ஆருடம் சொல்லும் பழங்குடி மனிதன் ஒருவனை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார் பர்டன். அவனும் பயணத்தில் துணைக்கு வருகிறான். அவன் கடவுளுடன் பேசக்கூடியவன் என்கிறார்கள். அவன் பயணத்துவக்கத்திலே இப்பயணம் மோசமான விளைவுகளைக் கொண்டுவரும் என எச்சரிக்கிறான். அவனை ஸ்பைக்கிற்குப் பிடிக்கவில்லை.

கடினமான பயணத்தின் முடிவில் அவர்கள் ஏரி எங்கேயிருக்கிறது என அறிந்து கொள்கிறார்கள். ஆனால் உடல்நலமற்று போன பர்டனால் உடன் வரமுடியவில்லை. ஸ்பைக் மட்டுமே ஆட்களை அழைத்துக் கொண்டு செல்கிறான். ஏரியை கண்டறிகிறான். அந்த ஏரிக்கு விக்டோரியா ஏரி எனப் பெயர் சூட்டுகிறான். முழுமையாக ஆய்வு செய்ய ஸ்பைக்கிடம் உபகரணங்களில்லை. ஆகவே சந்தேகத்துடன் அது தான் நைல் நதியின் மூலமா என உறுதியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறான். அவர்களின் பயணம் தொடர்கிறது. இந்த முறை ஏரியை கடந்து பயணிக்கிறார்கள். ஆல்பர்ட் ஏரியை காணுகிறார்கள். அது தான் நைலின் மூலமாக என உறுதியாக அவர்களால் கூற முடியவில்லை

இங்கிலாந்து திரும்பும் ஸ்பெக் தானே நைல் நதியின் மூலத்தைக் கண்டுபிடித்தவன் என்று உரிமை கொண்டாடுகிறான். ராயல் சொசைட்டி அதை ஏற்றுக் கொள்கிறது. நாடு திரும்பும் பர்டன் இதை ஏற்க மறுத்து வழக்குத் தொடுக்கிறார். இதன் காரணமாக இருவரும் ஒன்றாகச் சபையின் முன்பு வந்து அவரவர் சாட்சியத்தை நிரூபிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது

பர்டனை தான் ஏமாற்றியது தவறு என உணர்ந்த ஸ்பெக் முடிவில் தற்கொலை செய்து இறந்து போகிறான். கண்டுபிடிப்பின் முழுவிவரத்தை பர்டன் சமர்ப்பணம் செய்கிறார். நைல் நதி தனா ஏரியில் உருவாகிறது என பின்னாளில் கண்டறிகிறார்கள்.

பெரும் சாகசப்பயணத்தினை காணுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் எதற்காக இந்தப் பயணம் என்ற கேள்வி எழவே செய்கிறது. ஒட்டுமொத்த உலகையும் பிரிட்டீஷ் காலனியாக்கிவிட வேண்டும் என்ற பேராசையே இது போன்ற பயணங்களுக்கான முதற்காரணம். பழங்குடி மக்களை அடிமையாகளாகப் பயன்படுத்திப் பர்டனும் ஸ்பெக்கும் செய்யும் பயணம் அவர்கள் மீதான அருவருப்பையே ஏற்படுத்துகிறது.

சாகசப்பயணத்தால் பேரும் புகழும் அடைந்தவர்கள் பிரிட்டீஷ்காரர்கள். ஆனால் அவர்களுக்காகப் போராடி செத்துமடிந்தவர்கள் பழங்குடி மக்கள். எந்தக் கண்டுபிடிப்பிலும் உடனிருந்த சாமானியர்களுக்கு ஒரு அங்கீகாரமும் கிடையாது என்பதே இன்றும் தொடரும் கொடுமை.

பர்டனுக்கு நைல் நதியின் மூலத்தைத் தேடுவதை விடவும் அறியப்படாத நிலத்தை. மனிதர்களை, வாழ்க்கையை அறிந்து கொள்வதிலே அதிக ஈடுபாடு இருக்கிறது. அவர் எந்த இடத்திற்குப் போனாலும் அதற்குள் கச்சிதமாகப் பொருந்திப் போய்விடுகிறார். குறைந்தபட்சம் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறார். இதற்கு மாறாக ஸ்பெக் கறாரான பிரிட்டீஷ்காரன். அவன் கறுப்பின மனிதர்களை விலங்குகளைப் போலவே நடத்துகிறான். ஆனாலும் அவனுக்காக பழங்குடி மக்கள் உயிர்விடுகிறார்கள்.

படத்தில் பர்டனின் மனைவி இசபெல் கதாபாத்திரத்தை அற்புதமாக உருவாக்கிறார்கள். தேடித்தேடி பர்டனை காதலிப்பதும், ஆசையாகத் திருமணம் செய்து கொள்வதும். பிரிவினை நினைத்து வருந்துவதும் தன் கணவனுக்கு உரிய உரிமையை ஸ்பெக் பறித்துக் கொண்டதை நினைத்துக் கோபம் கொள்வதும் என இசபெல் சிறப்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக ராயல் சொசைட்டி வாசலில் அவள் ஸ்பெக்குடன் உரையாடும் காட்சி அபாரம்.

படத்தின் ஒளிப்பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது. விரிந்த நிலக்காட்சியைப் பேரழகுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ப்ளுரே பிரிண்டில் இது போன்ற படங்களை காணுவது பரவசரமூட்டுகிறது.

நதிமுகம் தேடிய இப்பயணம் வரலாற்று உண்மையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. காலனிய அதிகாரத்தின் வன்முறையைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. பேரும் புகழும் அடைவதற்காக நண்பர்களுக்குள் உருவாகும் சண்டையை. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வணிக முயற்சிகளை அப்பட்டமாகச் சித்தரிக்கிறது. அதற்காகவே இப்படத்தைப் பாராட்ட வேண்டியுள்ளது.

••

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: