ஸ்டான்லி கிராமர் இயக்கிய Guess Who’s Coming to Dinner 1967ல் வெளியான திரைப்படம். 58 ஆண்டுகளைக் கடந்த போதும் இன்றைக்கும் இது பொருத்தமான படமே.

1967 வரை, அமெரிக்காவின் பதினேழு மாகாணங்களில் கறுப்பின இளைஞனை வெள்ளைக்காரப் பெண் திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமாகவே கருதப்பட்டது , அந்தச் சூழலில் தான் இக்கதை நடக்கிறது.
டாக்டர் ஜான் பிரெண்டிஸ் என்ற கறுப்பின இளைஞனைக் காதலிக்கும் வெள்ளைக்காரப் பெண் ஜோயி அவனைத் தனது பெற்றோர்களைச் சந்திக்க அழைத்துச் செல்வதில் படம் துவங்குகிறது. அவர்கள் விமான நிலையத்திலிருந்து உற்சாகமாக வீடு திரும்புகிறார்கள்.

ஹவாய் தீவிற்கு விடுமுறைக்குச் சென்ற போது அங்கே டாக்டர் ஜானை சந்திக்கும் ஜோயி அவனைக் காதலிக்கத் துவங்குகிறாள். பத்து நாட்களில் அந்தக் காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்துவிடுகிறது. ஜோயியின் தந்தை மாட் நாளிதழ் ஒன்றின் ஆசிரியர். அம்மா கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறாள். வசதியான குடும்பம்.
ஜோயியின் பெற்றோர் அவர்கள் காதலை எதிர்பார்க்கவில்லை. தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஜோயி தான் டாக்டர் ஜானைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கிறாள். இதனை ஏற்க முடியாத தந்தை அவளுடன் கோபித்துக் கொள்கிறார்
ஜோயியின் தாயும் தந்தையும் மகளின் பிடிவாதம் குறித்து அறிந்தவர்கள் ஆகவே அவர்கள் டாக்டர் ஜானிடம் வெளிப்படையாகத் தங்களால் அந்த திருமணத்தை ஏற்க முடியாது என்று அறிவிக்கிறார்கள்.
டாக்டர் ஜானிற்கு 37 வயது ஜோயியின் வயதோ 23. ஜானின் தந்தை தபால்காரராக இருந்தவர். ஏழை. இத்தனை வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டி மகளின் திருமணத்தை ஏற்க மறுக்கிறார் ஜோயி தந்தை.
இதற்கிடையில் டாக்டர் ஜான் தனது தந்தை தாயை ஜோயின் வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள வரவழைக்கிறான். ஜான் தனது தந்தையிடம் காதலை மறைக்கிறான். போனில் அதைப்பற்றிப் பேசும் காட்சி அபாரமானது. அவர்கள் விமானத்தில் புறப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது கண்களிலே தங்கள் மனநிலையை வெளிப்படுத்திவிடுகிறார்கள். குறிப்பாக ஜானின் அம்மா சிறப்பான கதாபாத்திரம். அவர் தன் மனதை வெளிப்படுத்தும் இடமே முக்கிய முடிவை எடுக்க வைக்கிறது.
ஜோயி அழகான இளம் பெண். அவள் தனது காதலில் உறுதியாக இருக்கிறாள். இப்படி ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் நாளை உன் பிள்ளைகள் என்ன ஆவார்கள். அவர்களுக்குச் சமூக மதிப்பு கிடைக்காதே என தந்தை மிரட்டுகிறார். அதற்கு ஜோயி உறுதியான பதிலைத் தருகிறாள்.
ஜோயியின் பெற்றோர்களிடம் ஜான் அமைதியாக, பண்பாக நடந்து கொள்கிறான். கறுப்பின இளைஞனாக அவன் சந்தித்து வந்த கடினமான பாதையைப் பற்றி விவரிக்கிறான். மருத்துவத்தில் அவன் பெற்றுள்ள பட்டம். அவனது சேவை மனப்பான்மை, ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவக் குழுக்களில் பணியாற்றுகிறான் என்பதையெல்லாம் ஜோயியின் தந்தை அறிந்து கொள்கிறார். ஆனாலும் திருமணத்திற்கு சம்மதிக்க முடியவில்லை..
ஜோயின் பெற்றோர் போலவே டாக்டர் ஜானின் பெற்றோரும் மகனின் காதலை ஏற்கவில்லை. அவர்கள் வெள்ளைக்காரப் பெண் வேண்டாம் என்கிறார்கள். அந்த திருமணம் நிலைக்காது எனப்பயப்படுகிறார்கள்.
ஜோயியின் வீட்டுப் பணிப்பெண் டில்லி கறுப்பினத்தைச் சார்ந்தவள். ஆனால் அவள் டாக்டர் ஜானை ஏற்க மறுக்கிறாள். ஜோயியை விட்டு விலகிப் போய்விடும் படி மிரட்டுகிறாள். அவளின் இந்த வெளிப்பாட்டை டாக்டர் ஜான் நன்றாகப் புரிந்து கொள்கிறார். அதனால் தான் அவளிடம் கோபம் கொள்வதில்லை.

இரண்டு பெற்றோர்களும் பேசிக் கொள்ளும் காட்சி அற்புதமானது. குறிப்பாக டாக்டர் ஜானின் அம்மாவும் ஜோயியின் அம்மாவும் காதலைப் புரிந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது தங்கள் கடமை என உணர்கிறார்கள். ஆனால் இருவரின் தந்தையும் காதலை ஏற்பதில்லை. சமூகக் கட்டுபாடு, பண்பாடு. எதிர்காலம் குறித்த அச்சம் எனத் தயங்குகிறார்கள்.
ஜோயியின் தந்தையோடு கோல்ஃப் விளையாடும் நண்பரான மான்சிக்னர் அபூர்வமான கதாபாத்திரம். அவர் செய்தியை கேள்விபட்டவுடனே அந்தக் காதலை அங்கீகரிக்கிறார். ஜோயியின் தந்தைக்குச் சமூக மாற்றத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
ஜானும் அவரது தந்தையும் பேசிக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் உண்மையான விவாதம் நடக்கிறது. அவர்கள் தங்கள் தலைமுறை வேறுபாடுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். தந்தையிடம் ஜான் மன்னிப்பு கேட்கும் போது நாமும் கலங்கிவிடுகிறோம்.

புரிந்து கொள்ளாத பெற்றோர்களை ஜோயியும் ஜானும் எப்படிச் சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டுகிறார்கள்.
ஸ்பென்சர் டிரேசி ஜோயியின் தந்தை மாட்டாக நடித்திருக்கிறார். டாக்டர் ஜானாகச் சிட்னி போய்ட்டியர் நடித்துள்ளார். இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு வீட்டில் நடக்கும் இரவு விருந்திற்குள் நடக்கும் மோதல்கள். உணர்ச்சிப்பெருக்கில் நடைபெறும் நிகழ்வுகள். காரசாரமான விவாதங்கள், கண்ணீர் சிந்தும் நிமிஷங்கள் என ஒரு தேசம் சந்தித்த சமூக நிகழ்வுகளின் மறுவடிவமாக படம் மாறியிருக்கிறது. அதுவே இப்படத்தை இன்றும் புதுமை மாறாமல் வைத்திருக்கிறது.