அறிவிப்பு


கோவையில் நடைபெற்ற விழாவில் எனக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது, நிகழ்வினை கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், கோவையில் நிறைய இளம்வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது, அன்றைய விழாவில் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்கள் கம்பனும் கண்ணதாசனும் என்று ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார், கம்பனின் பெருமைகளை அவர் எடுத்துச் சொல்லும் விதம் பரவசம் தருவதாக இருந்தது, வீடு வந்த இரண்டுநாட்களாக நானும் கம்பனில் தான் முழ்கியிருக்கிறேன்

••

விகடனில் வெளியாகி வரும் எனது கேள்விபதில் பகுதிக்குப் பலரும் எனக்கு நேரடியாக மின்னஞசல் வழியாக  கேள்விகள் அனுப்பியபடியே இருக்கிறார்கள்,

நண்பர்களே, கேள்விகளை விகடனுக்கு அனுப்பி வையுங்கள், அவர்கள் அதிலிருந்து தேர்வு செய்து எனக்கு அனுப்பி வைப்பார்கள், அது தான் நடைமுறை,

••

திருவண்ணாமலையில் உள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரிக்கு அங்குள்ள ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றிற்காகச் சென்றிருந்தேன்,

கடந்த நான்கு ஆண்டுகளாகவே பள்ளி கல்லூரிகளுக்கு சென்று ஆசிரியர்களுடன் மற்றும் மாணவர்களுடன் கதைசொல்லுதல் குறித்தும் இலக்கிய அறிமுகம் குறித்தும் நிறைய பேசியும் விவாதித்தும் பயிலரங்குகள் நடத்தியும் வருகிறேன்,

கல்விநிலையங்கள் திறந்த மனதோடு இலக்கியம் மற்றும் அறிவுதுறைசார்ந்த விவாதங்களுக்கு களம் அமைத்து தந்தால் மட்டுமே புத்தக வாசிப்பினை மேம்படுத்த முடியும்,

அந்த வகையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரி ஒரு முன்னோடி நிறுவனமாக உள்ளது, தொடர்ச்சியாக இவர்கள் கலை இலக்கியம் மற்றும் சமூகமேம்பாடு சார்ந்து செயல்பட்டு வரும் பல்துறை ஆளுமைகளை அழைத்து தங்கள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறார்கள,

அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் பொறியியல் கல்லூரியின் சேர்மன் கருணா, அவர் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர், அதன் காரணமாக இந்தப் பொறியியல் கல்லூரி வளாகம் அறிவுத்தேடலின் சாளரமாக விளங்குகிறது, அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள், இந்த முயற்சிகளுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்து வரும் நண்பர்  எழுத்தாளர் பவா,செல்லதுரை மற்றும் ஷைலஜாவிற்கும் அன்பும் பாராட்டுகளும் உரியது,

தமிழ்நாட்டில் நடைபெறும் அத்தனை புதிய கலைஇலக்கிய முயற்சிகளுக்கும் களமாக விளங்கிவரும் நகரம் திருவண்ணாமலை, அதைத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் என்றே சொல்வேன்,

கதை. கவிதை, சினிமா. ஒவியம். இசை. நாடகம். சூழலியல், குறும்படம், மாற்றுக்கல்வி என்று அங்கு தொடர்ச்சியாக கருத்தரங்குகள். விவாத அரங்குகள். திரையிடல் மற்றும் புத்தக வெளியீடுகள் நடைபெற்று வருகின்றன, இந்த முயற்சிகளுக்கு முக்கியக் காரணம் எழுத்தாளர் பவா. செல்லதுரையின் இடைவிடாத அக்கறையும் ஈடுபாடுமே,

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் அறிவேன், தமிழ்நாட்டில் அவரை அறியாத எழுத்தாளர்களே கிடையாது என்பதே உண்மை, பவாவின் தொடர்ந்த செயல்பாடு தமிழ்நாட்டில் கலைஇலக்கியம் சார்ந்த முன்னோடிச் சாதனை என்றே சொல்வேன்,

••

361 டிகிரி என்ற புதிய சிற்றிதழ் ஒன்றினை வாசித்தேன், கவிஞர் நரனும் கவிஞர் நிலாரசிகனும் இணைந்து கொண்டுவந்திருக்கிறார்கள், தேர்ந்த வடிவமைப்பும் சிறந்த கவிதைகளும் கொண்ட காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது, இதில் வெளியாகி உள்ள தேவதச்சனின் கவிதைகள் ஆகச்சிறந்தவை,  52 பக்கங்கள் கொண்ட முதலிதழ் வழியாக பல இளம் படைப்பாளிகளை அறிந்து கொள்ள முடிகிறது, சிற்றிதழ் மரபின் புதிய புனைவுதளமாக வெளிவந்துள்ள 361 டிகிரிக்கு என் பாராட்டுகள்

படைப்புகள்/கருத்துகள் அனுப்ப வேண்டிய  முகவரி: 361degreelittlemagazine@gmail.com

••

0Shares
0