அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம்.
அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி ஊஞ்சலாடியிருக்கலாமல்லவா. அந்த ஒரு அறை முழுக்க திமிங்கலம் மட்டுமேயிருந்தது. கோபால்ராவ் அதன் எலும்புகளில் தனது உள்ளங்கையை உரசினான். உப்பும் பாசியும் கலந்ததொரு சொரப்பு. விரிந்த தாடை அசையாத போதும் கடல் அலைவீசி உள் செல்வதும், செவுளின் துவாரங்களில் நீர் பீச்சுவது போல புலப்பட்டது. இப்போது திமிங்கலம் திரும்பவும் கடலை நோக்கி;ப் புறப்பட்டுவிட்டால் தான் அதன் வாலைப் பற்றிக் கொண்டு கூடவே கருமையின் அடியாழத்தில் குமிழ்விடும் சிப்பிகளின் முகத்துவாரத்திற்கு போய் ஒடுங்கி கொள்ளலாம்.

திமிங்கலம் இந்தக் கட்டிடம் விட்டு வெளியேறும் போது மாடிப்படிகள் அதிர்வுறும். வாசலில் மரமேஜையில் கைகளை ஊன்றி அமர்ந்திருக்கும் பெண் திடுக்கிட்டு கத்தக்கூடும். சுவரில் மாட்டப்பட்ட கடிகாரங்கள் உதிர்ந்து சிதறவும், உக்கிரப் பெருவழுதியின் யுத்தகேடயங்கள், நர்த்தன மூர்த்திகளின் பிரதிமைகள் புரளவும், கண்ணாடி உறையிலுள் அடங்கிய முத்துமாலைகளில் சில தாடையில் சிக்கி ஒளிரவும், மரக்கதவுகள், பார்வையாளர் இருக்கைகள் மிதிபடவும் அறையை விட்டு நீந்தி திமிங்கலம் வெளியேறிபோகும் போது சாலையில் செல்லும் வாகனங்கள், சைக்கிள்காரர்கள், ஒன்றிரண்டு மாட்டு வண்டிகள் யாவும் புரியாமையில் உறைந்துவிடக்கூடும். யோசிக்க யோசிக்க இவையாவும் ஸ்டுவெர்ட் சினோராவின் படத்தில் வரும் காட்சிகள் போல முடிவற்று நீள்வதாக இருந்தது.
தாழ்ந்த வெயில் அசைந்த இந்த நாளில் அவன் காலையிலே மியூசியத்தின் இரண்டாம் தளத்திற்கு வந்திருந்தான். படிக்கட்டுகளில் யாரும் வராத நிசப்தம் மேலேறிக் கொண்டிருந்தது. குளுமையான காற்றும் மனதில் படியும் வெயிலும், சிரிப்புமாக சாவதற்கு இனிமையான நாள் இது என அவனாகவே சொல்லிக் கொண்டான். ம்யூசியத்தின் உள்ளே வளரும் மரங்கள் கூட காலத்தின் தொலைவிற்குச் சென்று விடுகின்றன. கோபாலராவ் பழுத்த இலையொன்று ஜன்னல் வழியே திமிங்கலத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டான். வெளிச்சம் தத்திக் கொண்டிந்த மாடியின் செங்கல் சுவரில் இருந்த அணில் ஒன்று வேகமாக ஓடி வால் சுழற்றி திமிங்கலத்தின் வயிற்று எலும்புகளில் தாவித் தாவி ெசன் ற து. கோபால ராவ் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அணில் விலா எலும்பின் சாரத்தில் தனது வாலைப் புரட்டியபடி தலை கீழாக நடனமாடுவது போல குதூகல மடைந்தது. திமிங்கலத்திடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வருவது போல் காற்று சுழன்றது. அணில் திமிங்கலத்திடமிருந்து தாவி இரும்புக் கம்பிகளில் நடந்து உயரத்தில் தாவி மரஉத்திரங்களில் ஏறி நின்று திமிங்கலத்தைக் கண்டது. உடலை புரண்டு படுப்பதுபோல் காற்றில் எலும்புகள் அசைந்தன. ஒரு பாய்ச்சலில் அணில் திரும்பவும் உத்திரதுளையினுள் பதுங்கி மறைந்தது. கோபாலராவ் மற்ற நாட்களை விடவும் இன்று மிக அதிக சந்தோஷம் கொண்டான்.
மூன்று மாடியுள்ள அந்த ம்யூசியத்தின் படிகளில் மேலேறி நடக்கத் துவங்கினான். அவனுக்கு நாற்பது வயதே முடிந்திருந்தது. கறுப்பு கரை வேஷ்டியும் லாங்மி ல் சட்டையும் அணிந்திருந்தான். அவனது சட்டை பையில் நேற்று மிஞ்சிப்போன ஒரு வெற்றிலை மட்டும் காய்ந்து போயிருந்தது. தலையை கோரையாக விட்டிருந்தான். படியேறும் போது பழுப்புநிற சுவரில் வெயில் புரளும்போது நிற ஜாலம் துள்ளுவதை கண்டான். மிக மெதுவாக மூன்றாவது தளத்தை விட்டு மேலேறி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வந்தான். கருப்பேறி, உலர்ந்த அந்த தளத்தில் ம்யூசியத்தின் சிதைந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. மார்பு கவசங்கள், தலையறுந்த பிரதிமைகள், நிறம் வெளிறிய ஓர் ஆல் இலை கிருஷ்ண சித்திரம் நகரம் தொலைவு வரை விரிந்து கிடந்தது. நீர் தொட்டி எஞ்ஜினையும் அதற்கு ஏறிச் செல்லும் இரும்பு படிக்கட்டுகளையும் கோபாலராவ் பார்த்தான். காற்று ஆளை வளைத்து வீழ்த்திவிடுவது போல வேகம் கொண்டிருந்தது. வெயில் ஏறுவதால் நகரின் தொலைவு பச்சை நிறம் மாறி மஞ்சள் திட்டில் தெரிந்தது. குப்பையில் கிளறி ஒரு தலைக் கவசமும் துருவேறிய ஒரு எக்காளத்தையும் குனிந்து எடுத்தான். அதை கையில் ஏந்திக் கொண்டு நடக்கும்போது சுய எள்ளல் பீறிட்டது. நீர் தொட்டியிருக்கும் இரும்பு படிகளில் ஏறி தொட்டியின் ஒற்றைச் சுவரில் நின்று பார்த்தபோது நகரம் இரைச்சலற்று பேரமைதியில் இருந்தது. குனிந்து நீர்த் தொட்டியினுள் கண்டான். பாதி மஞ்சள் வெயிலும், தப்பியலையும் ஒற்றை கொக்கு ஒன்றும் நீரினுள் கடந்தன. பின்பு கோபாலராவ் மிக மெதுவாக அந்தக் காட்சிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சுவரைவிட்டு மெதுவாக வானை நோக்கி இரண்டு அடி முன் வைத்தபோது, உடல் விசை கொண்டு கீழ் இறங்க, அந்தரத்தில் துருவேறிய எக்காளம் கையிலேந்தியபடி தரையை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தபோது அவனுக்கு பிடித்தமான இத்தாலிய இயக்குனரான கிரேசியாவின் ‘மிலனில் ஒரு கோடைக்காலம்’ என்ற படத்தில் வரும் தலைகீழாக சுழலும் கட்டிடங்கள், உதிரும் மலர்கள், பாதசாரிகளின் காட்சி நினைவிற்கு வந்தது. அந்தப்படம் மூவிலேண்டில் திரையிடப்பட்ட போது அவனைத் தான் தேடிப் பிடித்திருந்தார்கள்.

அந்தப்படத்தின் முதல் காட்சி துவங்கும்போது ஒரு குடை காற்றில் விடுபட்டு போகும். கவிதையின் சில வரிகள் ஒளிரத் துவங்கும்.
“கோடை ஞாபகத்தின் ஒப்பனைக்கூடம், விதவிதமான கட்டிடங்கள், வாசனைகள், கேளிக்கை, சிரிப்பு, ஒரு கோப்பை மதுவை பகிர்ந்து கொள்ளும் சூரியன்.”
இந்தச் சொற்கள் காற்றில் குமிழ்விட்டன. கோபாலராவ் சாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.
தயங்கி தயங்கி வந்துகொண்டிருந்த சிறுவன் குறுகலான அந்தச் சந்தில் ஒரு வாழை இலைக்காக நாயும் பசுவும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு ஒதுங்கி நின்றான். பசு இலையைத் தாடையால் பறித்து இழுத்தபடி சுவரில் முகத்தை தேய்த்துக் கொண்டு நகர்ந்தது. நாய் அவசரமாக இன்னொரு இலை தேடி ஓடியது. மலபார் கபேயின் பின்புற சந்தது. சிறுவன் சிதறிக்கிடக்கும் எச்சில் உணவில் கால்பட்டு விடாமல் தாவி சந்தின் முனைக்கு வந்தபோது எட்டு வயது சிறுமியொருத்தி வாசலில் நின்று குளித்துக் கொண்டிருந்தாள். அந்த குடித்தனத்தினுள் நடந்தபோது புகைமூட்டமும், தோசை சுடும் வாசமும், கற்பூர ஆராதனையும் கலந்து கொண்டிருந்தது. சிறுவன் மரப்படிகள் வழியாக மேலேறி ஒற்றை மரக்கதவு கொண்ட அறையை ‘டாக்கிராவ்’ டாக்கிராவ்’ என தட்டியபோது உள்ளே கோபாலராவ் தூங்கிக் கொண்டிருந்தான். குரலை உயர்த்தி சிறுவன் கதவைத் தட்டிய பிறகு கோபாலராவ் கதவைத் திறந்துவிட்டபடி திரும்பவும் படுக்கையில் வீழ்ந்து கொண்டான். அறையின் ஜன்னல் மூடப்பட்டிருந்தது. சிறுவன் கட்டிலில் கிடக்கும் புத்தகங்களையும் கிராமபோன் ரிக்கார்டுகளையும் கண்டவனாக, கிராமபோன் பெட்டி அருகே சென்று, கைப்பிடியை சுற்றி ஒரு இசைத்தட்டை சுழல விட்டான்.
“லோபதா… லோபதா…” என புரியாத பாட்டாகயிருந்தது. கோபாலராவ் புரண்டு படுத்துக் கொண்டபடியே சிறுவனிடம் கிராம போனை அணைக்கச் சொன்னான். அறையில் திரும்பவும் நிசப்தமேறியது. சிறுவன் சுவரோரமாக கிடந்த ஒரு பிலிம்கேனை உருட்டி விளையாடினான். கோபாலராவ் ஜன்னலைத் திறக்க சொன்ன போது சிறுவன் கட்டிலுக்கு கீழே ஒரு பூனைக்குட்டி படுத்திருப்பதை பார்த்துச் சிரித்தான். அகலமான இரட்டை ஜன்னலை திறந்ததும் அறை வெளிச்சத்தில் நிரம்பியது. கோவிலின் வடக்கு ரத வீதியில் யானை அசைந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவன் உற்சாகமாக சொன்னான்.
“யானை வருது”
பாயில் படுத்தபடியே கோபாலராவ் கேட்டான்.
“என்ன படம் வந்திருக்கு”
“வெள்ளைக்காரங்க படம்… நாலு ரீல்… உன்னை முதலியார். உடனே கூப்பிட்டு வரச் சொன்னார்.”
கோபாலராவ் யானையை பார்க்க விருப்பமற்று புரண்டு படுத்துக் கொண்டான். வெள்ளிக்கிழமை தான் மூவிலேண்டில் பிக்சர் மாற்றுவார்கள். கோபாலராவ் குளித்து விட்டு வரும் வரை சிறுவன் பூனையோடு விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் மூவிலேண்ட் கொட்டகைக்கு டிராமில் போய் இறங்கியபோது தாத்தையா முதலியார் வந்திருந்தார். கோபாலராவ் புக்கிங் அறைக்குள் போன போது பூஜை நடந்து கொண்டிருந்தது. படப் பெட்டிக்கு சூடம் காட்டிய ஆபரேட்டர் மனோன்மணி முதலியாரிடம் தீபாராதனை காட்டினான். கோபாலராவ் தானும் கண்ணில் ஒற்றிக் கொண்டான். முதலியார் எப்போதும் மாறாத சிடுசிடுப்போடு அவனைப் பார்த்துச் சொன்னார்.

“பிரிட்ஜ் ஆன் த ரிவர்” னு வார்பிக்சர்… நாலுரீல்… பார்த்திடு… ஸ்பெஷல் ஷோ ரெண்டு இன்னிக்கு இருக்குது.”
அவன் பதில் பேசவேயில்லை. மனோன்மணி பெட்டியை எடுத்துக்கொண்டு புரொஜெக்ஷன் அறைக்குப் போனான். அவனும் உடனே நடந்து போனான். படப்பெட்டியை திறந்ததும் உள்ளே சில விளம்பரங்கள், கறுப்பு வெள்ளை ஸ்டில்கள் சில இருந்தன. கோபாலராவ் அதை எடுத்துக் கொண்டு கொட்டகையினுள் வந்து உட்கார்ந்தான். மர இருக்கைகள் உறைந்திருந்தன. அவன் மட்டும் தனியே அமர்ந்திருப்பது பழகிவிட்டது. பெப்கோபிலிம்ஸில் இருந்து பெட்டி கப்பலில் வந்திருக்கிறது. ஒளி திரையில் சிதறி, சிதறி சட்டென படம் ஓடத்துவங்கியது.

அவனுக்குப் பரிச்சயமான இயக்குநர் எல்.மாத்யூ டெல்டன். திரையில் மெளனகாட்சிகள் ஓடத் துவங்கின. ராணுவ லாரிகள் காட்டினுள் சென்று கொண்டிருந்தன. வீரர்களின் இறுகிய முகங்கள், மரத்தில் சாடும் குரங்குகள், வழியில் குறுக்கிடும் சிற்றோடைகள். காட்சிகள் மடிந்து மடிந்து போய்க் கொண்டேயிருந்தன. கோபாலராவின் மனம் வார்த்தைகளை பின்னத் துவங்கியது.
***
முந்நூறு பேர் நிரம்பியிருந்தார்கள். கோபாலராவ் மெலிதான ஜிப்பா அணிந்து கொண்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான். இருக்கைகளில் கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது. மைக்கை எடுத்துக் கொண்டு நடந்து போனபோது வித விதமான முகங்கள். அவன் திரையின் வலது பக்கம் போடப்பட்டிருந்த உயரமான ஸ்டூலின் மீது ஏறி நின்று கொண்டான். மனோன்மணியிடமிருந்து வந்த சிறுவன் கூட்டத்தைக் கண்டு குதூகலம் அடைந்தவனாக கோபாலராவ் அருகில் வந்து சொன்னான்.
“ஒரு ஷோவில் ரெண்டு படம் போடப் போறாங்களாம். இன்னொரு படம் பிரின்ஸ் ஆப் ராஜ்புட்”
சரியாக படப் பெயரை சொல்லிவிட்ட சந்தோஷத்தில் கோபாலராவை பார்த்த போது அவன் ஏதோ யோசனையிலிருந்தான். விளக்குகள் அணைக்கப்பட்டன. நீண்ட நிசப்தம், திரையில் ஒளி காட்சிகளை வரையத் துவங்கியது. ராணுவ வீரர்களின் வாகனங்கள் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தன. கோபாலராவின் குரல் உயர்ந்தது.
“ஜென்டில்மேன்… உலக யுத்தத்தின் போது ராணுவ வீரர்கள் ஷரா ஆற்றுப் பாலத்தை கைப்பற்ற செல்கிறார்கள். அதோ… செதுக்கப்பட்ட மூக்கு, சிற்பம் போல் நிமிர்ந்த உடல், ஊடுருவும் கண்கள், அவர்தான் கேப்டன் ப்யூபர்.”
அக்குரல் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக் கொண்டேயிருக்கிறது. குரலின் வழி ராணுவ வீரர்களின் இரும்புநடை, குரங்குகளின் சண்டை, காதலியின் ஞாபகம், பாலத்தின் பிரம்மாண்டம், ஆற்றின் வெள்ளப்பெருக்கு, குண்டடிபட்டு மரணிக்கும் மனிதனின் கடைசி வார்த்தைகள், இரவின் ஆழ்ந்த தனிமை என மயக்க மூட்டும் சொற்கள் பின்னிப்பின்னி மறைகின்றன. கடைசி இருக்கை வரை நாவின் துடிப்பு பரவுகிறது.
கோபாலராவ் திரையை கவனித்தபடியே இருக்கிறான். முகத்தில் சலனமேயில்லை. குரல் மட்டும் சிரிக்கிறது. துயரமடைகிறது. பரிதவித்து மெலிதாக விம்முகிறது. இருளில் யாவரும் தனது குரலின் மென் நரம்புகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பெருமிதமாக இருக்கிறது. அவன் குரல் துக்கத்தின் குமிழை பரவ விட யாரோ ஒரு பெண் அரங்கில் அழும் ஓசை. கண்ணீரை மீறிய பெருமூச்சு.
அடுத்த படத்திற்கான இடை வெளியில் கோபாலராவ் மேடையைவிட்டு விட்டு இறங்கி போகும் போது, அந்தப் பெண்ணைக் கண்டான். அவளது கண்கள் வீங்கியிருந்தன. கடந்து போய்விட்ட பின்பும் காட்சியின் துயரம் கலையாத முகம். அவளின் இளம் கணவன் கேலி செய்து கொண்டிருந்தான். எலுமிச்சை நிறத்தில் புடவையும், சிவப்பு வெல்வெட் சட்டையும் போட்டிருந்தாள். அவள் திரையை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. வெளியே வந்து நின்று, திரும்பவும் வெற்றிலை போட்டபடியே தான் பலமுறை டாக்கி கொடுத்திருந்த பிரின்ஸ் ஆப் ராஜ்புத் படத்தை பற்றிய நினைவிலிருந்தான் கோபால்ராவ்.
அந்தப்படத்தில் இடம் பெறும் புலிவேட்டைதான் சிறப்பான காட்சி. அது துவங்கியதுமே அவனறியாமல் உடம்பினுள் முறுக்கேறி விடும். புலியை துரத்திச் செல்லும் மனிதனின் தோற்றம் வன்மமாகயிருக்கும். தானே பட்டாளத்துடன் புலியை வேட்டையாடுவது போல அந்தக் காட்சியை கோபாலராவ் விவரிப்பான். சில நிமிஷமே திரையில் ஒளிரும் அப்புலியின் கண்கள் வனத்தின் உக்கிரத்தை உமிழ்வதாகயிருக்கும். இலைகளின் இடை வெளியிலிருந்து அது வேட்டைக்காரனின் நிழலை கண்டபடியிருக்கும். வேட்டையாடுபவனின் முக மூர்க்கம் மிக வன்மையாகி, இருளில் கண்களை துழாவிக் கொண்டிருக்க. புலி இலைகளை அறுத்துக் கொண்டு பின்னங்கால் விசையேற, காற்றில் பாய்ந்து மேல் எழும்பும் போது துப்பாக்கி விசை விடுபட, ரத்த துளியொன்று சிதறி குமிழென வெடித்து தெறிக்கும் போது ஏற்படும் துயரம் கோபாலராவால் தாங்க முடியாதது. ஒரு கனவை விவரிப்பது போலவே திரையில் ஒளிரும் மெளன படக்காட்சிகளை விவரித்துக் கொண்டிருப்பான்.
மணி ஒலிக்க துவங்கி திரும்பியபோது அந்தப் பெண்ணின் இருக்கை காலியாகயிருந்தது. எழுந்து போயிருக்க கூடும். துயரமான அந்தப் பெண் முகம் அவள் இல்லாத போதும் மனதை கலக்கமடைய செய்தது. தனது இருளினுள் அமர்ந்து கொண்டபோது திரையில் குதிரைகள் அணிவகுத்து வரத்துவங்கின.

இரவு அவன் வீடு திரும்பும் போது தெருவில் நடமாட்டமேயில்லை. கோவிலையொட்டிய வீதிகளில் மட்டும் ஏதோ உற்சவத்திற்காக பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யானை அலங்கரிக்கப்பட்டு திருக்குளத்தின் அருகே நின்று கொண்டிருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தனியே யானை நிற்பதை பார்க்கும் போது விநோத காடு புலப்பட்டது. அவன் அதன் அருகில் சென்று பார்த்துக் கொண்டே இருந்தான். யானை தான் வனத்தின் தாழியினுள் காட்டாற்றின் நீரை பீச்சியடித்துக் கொண்டும், தென்னை ஓலைகள், காட்டு கரும்புகளை தின்று அலைந்த தனது பூர்வீகத்தினை நினைவில் கொண்டிருக்குமா? விளக்கை தூக்க வந்த பெண் தலைச் சுமை மீது பெட்ரோமாக்ஸ் ஏறியதும் யானையின் நிழல் குளத்து நீரில் அலைவுறத் துவங்கியது. தேவியின் அலங்காரம் முடிந்திருக்கவில்லை போலும். சப்பரங்கள் சாத்தியிருந்தன. தம்பதி சமேதராக கடவுள் திருவீதி உலாவரப் போகிறார். குளத்துப் படிகளில் அமர்ந்து கொண்டபின். வானில் இன்றைக்கும் எண்ணமுடியாத நட்சத்திரங்கள். யானை தனது துதிக்கையை அசைக்கத் துவங்கியது. பெட்ரோமேக்ஸ் தூக்கிய பெண் ஓரிடத்தில் நில்லாது முன்பின்னாக நடந்து கொண்டேயிருக்கிறாள். யானையின் நிசப்தம் மிகப் பிரம்மாண்டமானது. அது எப்போதாவது கத்தியிருக்கிறதா? நீரைப் பார்த்தபடி யோசித்தான். தனது குரலை மறந்து போயிருக்கும் யானையது. பூச்சரம் சரிய நடந்து வந்த பெண்கள் யானையை வணங்கி போனார்கள். ஆலயத்தினுள் மணிகள் முழங்கின. வாத்திய கருவிகள் புறப்பட்டு விட்டன. அவன் குளத்தின் இருள் படிகளுக்குள் இறங்கி உட்கார்ந்து கொண்டு விட்டான். யானை புறப்படத் துவங்கியது. தெருவின் நிழல் தள்ளாடி ஊர்கிறது. ஏனோ அவனுக்கு கிரிபித்தின் நினைவு வந்தது.
தோமைய்யர் பள்ளியில் கணிதம் கற்பிக்கும் கிரிபித்திற்கு பள்ளி நாட்கள் தவிர மற்ற நேரங்களில் காகங்களை பற்றிய புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆசை அதிகம். அவர் தனது சிறிய புகைப்படக் கருவியோடு சாலையோரங்களில், வேப்ப மரத்தடியில் அலைந்து கொண்டிருப்பதை கோபாலராவ் கண்டிருக்கிறான். அவர் தன்னை எப்படி உதவிக்கு அடையாளம் கண்டு கொண்டார் என இப்போதும் அவனுக்கு புரியவில்லை. கிரிபித் அவனை தான் செல் லுமிடங்களுக்கு எல்லாம் கூட்டிப் போக துவங்கினார். காகங்களை ஏதோ உலகில் இதுவரை பார்த்தேயறியாத பறவையை காண்பதைப் போல வியப்போடுதான் அவர் ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கிறார். விதவிதமான காகங்கள். கிரிபித் அவனுக்கு காகங்கள் பரிச்சயத்துடன் ஆங்கிலத்தையும் பரிச்சயபடுத்தினார். கிரிபித்தின் மூன்று வயது பையன் பேசுவது போல் தன்னால் ஆங்கிலம் பேச முடியவில்லையே என கோபால்ராவ் அழுதிருக்கிறான். அவனிடம் கிரிபித் மணிக்கணக்கில் காகங்களை பற்றி பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் ஒரு இரவில் ஆற்று மணல் திட்டில் படுத்துக் கொண்டபோது கிரிபித் அவனிடம் கேட்டார்,
“உனக்கு சாவைப் பற்றி பயமாக இருக்கிறதா”
அவன் பதில் பேசவேயில்லை. அவர் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். அவன் தயக்கத்துடன் ஆமாம் என்றான். கிரிபித் அது தன்னை சதா நடுக்கமுறச் செய்வதாகவும், சாவின் துர்வாடை தனக்கு நெருக்கமாக வீசுவதாகவும் சொன்னார். கோபலராவ் மெளனமாக கேட்டுக் கொண்டான்.
“ஒவ்வொரு காகமும் தனியானது, ஒன்றுபோல் ஒன்றிருப்பதில்லை, சாவைப்போல’ எனச் சொன்னார்.
என்ன பதில் சொல்வதென தெரியாமல் ஆழ்ந்திருந்தான். அவர் பெரு மூச்சிட்டபடியே சொன்னார்.
“காகங்கள் பறவைகள் தானா என்றே சந்தேகமாகயிருக்கின்றது. அவை இந்த உலகம் கடந்து எங்கோ சென்றுவருகின்றன. காகம் எப்போதும் மனிதர்களைவிட்டு போவதேயில்லை.”
கிரிபித் வீட்டுக்கு அதன்பிறகு அவன் போவதற்கே பயமாக இருந்தது. காகங்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், கோட்டு ஓவியங்கள் வைத்திருந்த அவர் ஒரு நாள் கோபாலராவிடம் சொன்னார்.
“நேற்று எனது கனவில் மழைத்துளிபோல காகங்கள் வானிலிருந்து எண்ணிக்கையற்று உதிர்ந்து பறந்தன. கனவில் அவை கரைச்சல் இடுவதில்லை.”
கிரிபித்தின் ஸ்நேகம் கோபாலராவை படிப்பதிலிருந்து மெல்ல துண்டித்து விட்டது. அவனும் கிரிபித்தைப் போலவே மனதில் அடங்காத ஒரு பயமும் தேற்றமும் கூடிய வானாக சுற்றத் துவங்கினான். கிரிபித் அவனுக்கு தனது ஜெர்மன் கேமிராவை தந்து காகங்களை படம் எடுக்கச் சொன்னபோது, அவன் ஒரு மாட்டுவண்டியை படம் பிடித்தான். கிரிபித் அந்த புகைப்படத்தினை பற்றி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனத்துயரோடு அவன் வீட்டிலே அடங்கி கிடந்தான். பிறகு கிரிபித்தை சந்திக்க விருப்பம் கொள்ளவேயில்லை, ஆனாலும் காகங்கள் எப்போதாவது கூட்டமாக கத்தி கரையும் போது அவனறியாமல் கிரிபித்தின் கனவும், சாவைப் பற்றிய பயமும் அவனுக்குள் எழுந்து பிடித்துக் கொள்ளும்.
மினர்வாவில் நாலு காட்சிகள், மூவிலேண்டில் ஆறு காட்சிகள் டாக்கி கொடுப்பதற்காக வாரம்தோறும் ஒப்புக் கொண்டிருந்தான் கோபாலராவ். யாவும் கறுப்பு – வெள்ளை துண்டுப்படங்கள். எப்போதவது ஒரு மணி நேர சாகச படம் வரக்கூடும். விசேச நாட்களில் புராணப்படங்கள் வருவதுமுண்டு.
கோபாலராவ் பாட்டு கத்திருந்தான். தஞ்சாவூரில் அக்காவீட்டில் இருந்த நாட்களில் கற்றுக் கொண்ட பாடங்கள். மச்சவாதாரம் என்ற படம் திரையிடப்பட்ட போது அவன் தினமும் பதினெட்டு பாடல்களையும் மூன்று ஷோவிலும் பாட வேண்டியதிருக்கும். அவனைப் போல டாக்கிகள் ஒன்றிரண்டு பேர் தானிருந்தார்கள். அதிலும் ஆங்கிலத்தில் டாக்கி தருவதற்கு அவனும் திருலோகமும் தானிருந்தார்கள். அவனை முதலியார் டாக்கிராவ் என்றே கூப்பிடதுவங்கியிருந்தார்.
***
மாதத்தின் இரண்டாவது வெள்ளிதோறும் தவறாமல் கோபால்ராவ் டிராமில் ஏறி பிராட்வேயில் இருக்கும் கல்கத்தா கார்னருக்கு போய் இறங்குவான். அங்கே தான் ஒரியண்டல் கிராமபோன் கம்பெனியிருந்தது. அவனது வருமானத்தில் கால் பாதியை ரெக்காடுகள் வாங்க செலவழித்து விடுவான். ஓரியண்டல் கிராமபோன் கம்பெனியில் அவனை பலருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. கங்குபாய், லட்சுமிபாய் சகோதரிகளின் இசைத்தட்டும், சிம்போனி 13ம் வாங்கிக் கொண்டு, அவன் காத்திருந்த போது மலேயாவிலிருந்து கப்பலில் வந்த இருவர் தனியே பேசிக் கொண்டிருந்தர்கள்.
மலேயா ஜூப்ளி ஹாலில் அவர்கள் பேசும் படம் பார்த்தார்கள் என்றும், அதற்கு டாக்கி தேவையேயில்லை, நடிகர்களே பேசுகிறார்கள், பாடுகிறார்கள் என வியப்பை தூண்டிக் கொண்டிருந்தார்கள். கடைச் சிப்பந்தி ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டிருந்தான். இது வரை ஆறு ஷோதான் நடந்திருந்திருக்கிறது என சொன்னதை கேட்டு சிப்பந்தி ஆச்சிரியமாக பார்த்தான்.
கோபாலராவ் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் மனம் கங்குபாயின் குரலின் ஈரப்பாதைகளில் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.
***

கல்கத்தா மெயிலுக்கு தாத்தையா முதலியார் புறப்பட்ட அன்று மாலை கோபாலராவும், ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தான். முதலியார் இந்த வாரமும் கொட்டகையில் படம் கிடையாது, ஏதோ கட்டிட வேலை நடக்கப் போவதாகச் சொன்னார். இதையே மனோன்மணி ரெண்டு நாளின் முன்பாகவே தனியே அழைத்துப் போய் சொன்னான்.
“முதலியார் ஏதோ புதுமையான கனவில் இருக்கார்… கொட்டகையில் புது மிஷின் வரப்போகுது”.
அவன் ஆர்வம் காட்டவேயில்லை. முதலியார் ரயில் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் வந்து விடுபவர். அவர் கோபாலராவை அருகில் உட்காரச் சொல்லியபடி கேட்டார்.
“மினர்வாவில் என்ன படம் போடுறான்”
“டைம் பார் டைம்”
முதலியார் ஏதோ யோசனைக்குப் பிறகு கேட்டார்.
“உனக்கு ஆபரேட்டர் வேலை தெரியுமா?”
இல்லையென தலையாட்டினான்.
“மனோன்மணி கிட்டே கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும். கல்கத்தாவில் இருந்து பேசும் படம் கொண்டு வரப் போறேன். அதுக்கு டாக்கி வேண்டிருக்காது. அது தானா பேசுற, பாடுற பிக்சர்.”
அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
“இத்தனை நாள் பழகின தோஷத்துக்கு ஆபரேட்டரா கூட இருந்துக்கோ. மாச்சம்பளம் போட்டு தர்றேன்.”
கோபாலராவ் அவரைவிட்டு விலகி வந்து தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மரக்கிளையில் ஒரு காகம் மட்டும் கரைந்து கொண்டிருந்தது. ரயில் வருவதற்கு முன்பே அவன் வெளியேறி போயிருந்தான்.
பேசும் படத்தை பார்ப்பதற்காக கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்தது. மூவிலேண்டை புதுசாக மாற்றியிருந்தார்கள். நடிகர்களின் முகமும் பாட்டும் திரையில் ஒன்றாக தோன்றி மறையும் போது அரங்க இருளில் மயக்கம் பிடித்தது போலதொரு மவுனம். பாடும் நிழல் உருவங்களை திரும்ப திரும்ப பார்ப்பதற்காக வந்து கொண்டேயிருந்தார்கள். கோபாலராவ் தனது அறையை விட்டு வெளியேறவேயில்லை. ஒரு அதிகாலை அவன் வீதியில் யானை நடந்து வந்தது. குளித்து விட்டு திரும்பி வரக்கூடும். கோபால்ராவ் அதன் எதிரே, நேராக நின்றான். யானையின் துதிக்கை அவன் சிரசின் மேல் பட்டு அலையாடியது. யானையின் கண்களின் ஆழத்தினை பார்த்துக் கொண்டிருந்தான். சப்தமாக கத்தி அழ வேண்டும் போலிருந்தது. குடம் ஏந்தியபடி வரும் பெண்கள் யானையை கடந்து போனார்கள். சப்தமற்ற யானை தெருவில் தனது மணியோசையை படர விட்டபடி கோவிலை நோக்கி போனதும், அவன் தனது அறைக்கு ஒடி படுத்துக் கொண்டான். அன்றிரவில் அவனுக்கு சொப்பனங்கள் அறை இடுக்குகளிருந்து அடர்ந்து ஊடுருவின. காகங்கள், வேட்டையாடும் புலி, யானை, பெட்ரோமாக்ஸ், சப்தமான பெய்யும் மழை. அவன் பிதற்றத்துவங்கிய மறுநாள் காய்ச்சல் பீடித்திருந்தது.
***
நீங்கள் யாரென எனக்குத் தெரியாது. என்னிடம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு போதும் உங்களுக்கு தோன்றவேயில்லை. ஒரு வேளை உங்களுக்கு தயக்கமாக இருந்திருக்கலாம். அல்லது விருப்பமற்று போயிருக்கலாம். எனக்கு உங்களைப் பற்றிய அறிமுகம், நீங்கள் பார்வையாளர்கள். அதுவும் ஒரு சலனக்காட்சியை காண வந்தவர்கள். நீங்கள் வருவதற்கு முன்பாக இந்த இருக்கைகள் கொண்டிருந்த நிசப்தம் நீங்கள் அதில் அமர்ந்த பிறகு உங்களிடமும் நிரம்பிவிடுகிறது. உங்கள் கண்கள் எதிரேயிருக்கும் வெண்திரையை பார்த்துக்கொண்டிருக்கிறன. கூச்சத்துடனோ ஆர்வம் மிகுந்தோ ஒன்றிரண்டு ஸ்திரிகள் உட்கார்ந்திருப்பதை பார்த்துக் கொள்கிறீர்கள்.
விளக்கு அணைக்கப்படுகிறது. மௌனக் காட்சிகள் திரையில் ஓடுகின்றன. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நான், உங்களுக்கு அதன் கதையைச் சொல்கிறேன். நீங்கள் எனது குரலை நம்புகிறீர்கள். என் குரலின் வழியே காட்சிகளை குடிக்கிறீர்கள். என் குரல் ஒரு பாவனை. நான் குரலை என் விருப்பப்படி மாற்றி உங்களை ஈர்ப்பு கொள்கிறேன். எனது உருவம் உங்களுக்கு முக்கியமில்லை. நான் இதோ ஒரு கடற்கொள்ளைக்காரனாக உங்கள் முன் குதிக்கிறேன். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் இதயத்தின் முன் எனது வாளின் நுனி சுழிக்கிறேன். நீங்கள் பயப்படுகிறீர்கள். உங்கள் இதயம் படபடக்கிறது, மூச்சு நடுங்கிறது. இதோ நான் இப்போது பிரின்ஸ் ஆப் ராஜ்புத், எனது தங்ககோப்பையை உங்களுக்கு எதிரில் உயர்த்தி குடிக்கிறேன். உங்கள் உதடுகள் சுவைக்கின்றன வெறுமையை.
நான் சர்க்கஸின் கோமாளி, நான் ஸ்ரீகிருஷ்ணன், நானே ஹம்சன், நானே கெளசிகரிஷி, நானே தப்பியலையும் புலி.
நீங்கள் காட்சிகளை இருக்கையிலிருந்து பறித்து உண்ணுங்கள். என் குரல் அதில் சுவையின் சாற்றை தடவட்டும். நீங்கள் களைப்படைந்து விடுகிறீர்கள். உங்கள் இதயம் பயத்தாலும், சில வேளை மோகத்தாலும் மினுங்குகிறது. திரை அமைதி கொள்கிறது. அரங்க இருள் கலைய பெருமூச்சிட்டபடியே நீங்கள் வெளியேறுகிறீர்கள்.
திரையில் இதுவரை நடமாடிய ஒளியுருவங்களின் சிறு சுவடு கூட இல்லை. ஒரு சிறுவன் அரங்கைச் சுத்தம் செய்கிறான். சொற்கள் எங்கும் இறைந்து கிடக்கின்றன.”
காய்ச்சல் மிதமிஞ்சிப் போக பிதற்றல் நிற்காத கோபால்ராவ் அறைக்கு கீழ்வீட்டுப் பெண் வந்த போது அவன் தொடர்பற்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.
***
ஒரு மாத காலம் தஞ்சாவூருக்கு போக வேண்டியதாகியது. ஊரைவிட்டு வந்து பல வருஷங்களுக்குப் பிறகு அக்கா வீட்டில் நோயாளியாக படுத்திருப்பது கோபாலராவிற்கு வேதனையாக இருந்தது.
கட்டிலில் வெளுத்த வேஷ்டியை அக்கா விரித்து அவனை தூக்கி படுக்க வைப்பதும், கஞ்சி டம்ளரை அவளே கைகளில் ஏந்திக் கொண்டு, ஒவ்வொரு மடக்காக குடிக்க செய்வதும் தாளாத துக்கமேற்றியது. அவன் படுத்திருந்த அறை ஜன்னலின் வெளியே சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருந்தார்கள். நகரின் தேவாலய மணி சப்தம் எப்போதாவது கேட்கும். இரவில் விநோத பூச்சிகளின் இரைச்சல். நோயுற்ற நாளில் அவன் “லோபதா, லோபதா” என புரியாத பாட்டை புலம்பி கொண்டிருப்பதை கண்ட அக்கா அவனுக்கு சாந்தி வரும்படியாக அந்த அறையில் பகலினுள் இரண்டு விளக்குகளை சுடர் விட்டு எரிய விட்டிருந்தாள்.
திரும்பி நகரம் வந்த போது பூக்கடை சந்தில் தற்செயலாக திருலோகத்தை கண்டான். திருலோகம் கையில் சிறிய துந்தனாவை ஏந்தியபடி உடலெங்கும் அரிதாரம் பூசியவனாக நின்று கொண்டிருந்தான். அவன் கோபாலராவை பார்த்ததும் அருகில் வந்து பேசினான். கோபால்ராவ் பொய்கேசத்துடன் நிற்கும் திருலோகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். திருலோகம் சிரித்தபடியே சொன்னான்.
“ராவணன் தர்பார் படத்தில் நாரதரா நடிக்கிறேன்” கோபாலராவ் ஆங்கிலத்தில் பிரமாதமாக பாக்கி கொடுக்கும் திருலோகம் சிவப்பு அரிதாரத்துடன் நிற்பதை கண்டவனாக எதையும் கேட்டுக் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டான். திருலோகம் அவன் தோளைப் பிடித்தபடி சொன்னான்.
“பிழைக்கணுமில்லையா…”
சக நடிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். திருலோகம் அவசரமாக அவனோடு சேர்ந்து கொண்டான். மனக்கூச்சத்துடன் அறைக்கு திரும்பிய கோபாலராவ் அன்றிரவு சுவரில் தெரியும் நிழல்களை பார்த்தபடி வெகு நேரமிருந்தான்.
***
தன்னிடமிருந்த கிராமபோன் ரிக்காடுகளை விற்பதற்காக ரிச்சி தெருவிற்கு போய் திரும்பி வரும்போது தாத்தையா முதலியார் கோபால்ராவை பார்த்துவிட்டார். புதிதாக வாங்கியிருந்த மோரிஸ் மைனரில் அவனை ஏற்றிக்கொண்டு தனது கொட்டகைக்கு கூட்டிப்போனார். பேசும் படத்தை உள்ளே போய் பார்க்கச் சொன்னார்.
இருளில் அவன் நுழைந்த போது தேவலோகம் மின்னிக் கொண்டிருந்தது. இந்திரன் சபையில் இரு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென இந்திரனே எழுந்து பாடத்துவங்கினான். காட்சிகள் மாறமாற சப்தமும் மாறியது. அந்த குரலின் நடமாட்டம் அரங்கில் எதிரொலித்தது. ஒரு நிழல் மி ருகம் தனது பொய்க் குரலால் யாவரையும் மயக்கி தனது நாவால் ருசிப்பது போல அந்த இயந்திரகுரலைக் கேட்டுக் கொண்டிருந்தான், அந்த இருளில் அவன் எப்போதும் நிற்குமிடம் காலியாகயிருந்தது.
முதலியார் வெளியே வந்த அவனிடம் மிலிட்டரி கேம்பில் ஒரு ரீல் மெளன படம் ஒன்று காட்டபடுவ தாகவும், அதற்கு பாக்கி தர அவனைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கையில் உடனே காசு வாங்கி தந்து விடுவாதாகச் சொன்னார்.
யோசனையின்றி தன்னால் இனி டாக்கி கொடுக்க முடியாது என சொல்லியவனாக அரங்கைவிட்டு வெளியேறினான் கோபாலராவ்.
சில வாரங்கள் வெளியே எங்கும் போகாமல் தனது அறையிலே கிடந்தான். யானையை பார்த்து வருவது மட்டுமே எப்போதாவது நடந்தேறியது. அவனைத் தேடி வருபவர்கள் எவருமேயில்லை. மாலையில் எதிர்வீட்டு துணிகாயும் கம்பிக்கு வரும் குருவிகளைத் தவிர வேறு ஸ்நேகமற்றுப் போனது.
அறையை மூடியபடியே உள்ளேயே இருந்தான். ஒரு பகலில் சிறுவர்கள் இருவர் அவன் அறை சாவித்துவாரம் வழியே பார்த்தபோது அவன் சுவரில் வித விதமான எக்ஸ் ரே படங்களை இரட்டை மெழுகுவர்த்தியின் ஒளியில் சுவரில் பிரதிபலிக்க செய்து, ஒளிரும் எக்ஸ்ரே படங்களுக்கு ஏற்ப தனது குரலை மாற்றி மாற்றி நிகழ்த்திக் கொண்டிருந்தான்.
நாற்பதைம்பது எக்ஸ்ரே படங்கள் அவனருகே கிடந்தன. சிறுவர்கள் அவன் சிரிப்பையும் வேடிக்கையும் கண்டு பயந்தவர்களாக கீழே ஓடி தங்களின் அம்மாவை அழைத்து வந்தார்கள். மூவரும் கதவைத் தள்ளி திறந்த போது அவன் தரையில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு பிரின்ஸ் ஆப் சிட்டி’ என்ற படத்தை தான் காட்டப் போவதாக சொல்லி நோயுற்றவர்களின் எக்ஸ்ரே படங்களை சுவரில் ஒளிரச் செய்தான். விலா எலும்பின் இருள் ஒளியை கண்டு அந்தப் பெண் பயந்தவளாக குழந்தைகளை கூட்டிக் கொண்டு அவசரமாக மாடியை விட்டு இறங்கிய மறுநாள் தான் கோபால்ராவ் திமிங்கலத்தைப் பார்ப்பதற்காக மியுசியம் சென்றான்.