கூண்டிற்கு வெளியே

கூண்டிற்குள் அடைக்கபட்ட விலங்குகளை ஏன் வேடிக்கை பார்க்கிறோம். அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் அங்கே வரும் மனிதர்களின் விசித்திரமான செயல்களை, நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். விலங்குகளை விட மேம்பட்டவனாக கருதப்படும் மனிதன் தான் உண்மையில் வேடிக்கை பார்க்கப்பட வேண்டியவன்.

வீட்டு விலங்குகள் அவனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. காட்டுவிலங்குகளோ அவனை பொருட்டாக கருதுவதேயில்லை. ஆகவே தன் அதிகாரத்திற்குள் விலங்குகளை அடக்கி ஒடுக்கச் செய்யும் முயற்சியே மிருகக்காட்சி சாலைகள். இயற்கையான வாழ்விடத்தில் மிருகங்களைக் காணுவதும் மிருகக் காட்சி சாலையில் காணுவதும் வேறுவகையான அனுபவம்.

பெர்ட் ஹான்ஸ்ட்ரா 1962ம் ஆண்டு இயக்கிய குறும்படமான ZOO மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். கேரளாவில் நடைபெற்ற ஆவணப்பட விழாவில் ஒன்றில் இந்தப் படத்தை 1990ம் வருஷம் முதன்முறையாகப் பார்த்தேன். மறக்கமுடியாத படம்.

திரைப்படப் பயிற்சி முகாம்களில் தவறாமல் திரையிடப்படும் குறும்படமிது. நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்ட் ஹான்ஸ்ட்ரா ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பின்னணியில் மனிதர்களின் நடவடிக்கைகள் எவ்விதம் மாறுகின்றன என்பதை அடையாளப்படுத்தவே இந்தக் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இணையத்தில் இதன் நல்ல பிரதியைக் காண முடிகிறது.

மறைக்கப்பட்ட கேமிராக்கள் மூலம் மிருகக்காட்சிசாலையின் பல்வேறு இடங்களை, நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். கோணங்களை மாற்றுவதன் மூலமும் எடிட்டிங் மூலமும் எப்படி மாறுபட்ட இரண்டு காட்சித்துண்டுகளை இணைத்து புதிய கருத்தினை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் நடைபெறும் இந்தப் படம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பல்வேறு வெளிப்பாடுகளை வேடிக்கையாகச் சித்தரிக்கிறது.

உண்மையில் யார் யாரை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அது தான் பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் நோக்கம்.

வெவ்வேறு கோணங்களில் தொலைவுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் மூலம் பார்வையாளராக நாமும் கூடவே மிருகக்காட்சி சாலையினுள் செல்வது போலவே இருக்கிறது.

வெவ்வேறு வகையான விலங்கினங்கள் போலவே வெவ்வேறு வயதில் உள்ள மனிதர்கள். அவர்களின் பல்வேறு செயல்பாடுகள். உணர்ச்சிகள், ஆர்வம் மற்றும் குரூரத்தைப் படம் பதிவு செய்திருக்கிறது. அந்தவகையில் தொடர்பில்லாத தருணங்களைத் துண்டித்து லயத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் புதியதொரு அனுபவத்தை உருவாக்குகிறார் .

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட விலங்குகளைப் போலவே தான் மனிதர்களும் மிருகக்காட்சி சாலையினுள் நடந்து கொள்கிறார்கள். பசி தான் இருவரையும் வழிநடத்துகிறது. மனிதர்களின் அபத்தமான சில செயல்பாடுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன விலங்குகள். அல்லது விலங்குகளின் செயல்களை நகலெடுப்பது போலவே மனிதன் நடந்து கொள்கிறான். சில காட்சிகளில் வெளிப்படும் நகைச்சுவை அசலானது.

11 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படத்தினைக் காணும் போது நாமே நாள் முழுவதும் மிருகக்காட்சி சாலையினுள் சுற்றியலைவது போலவே இருக்கிறது.

மிருகக் காட்சி சாலையைப் பார்ப்பதற்காக நுழைந்த பள்ளி குழந்தைகள் மிருகங்களை வேடிக்கை பார்ப்பதை இடைவெட்டி ஒட்டகச்சிவிங்கி மற்றும் நெருப்புக்கோழி அவர்களை வேடிக்கை பார்க்கும் காட்சியோடு இணைக்கிறார். யார் யாரை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற வியப்பு உருவாகிறது. இது போலவே குழந்தைகள், வயதான பெண்கள், ஒரு இளம் ஜோடி, ஒரு வயதான தம்பதியினர் நடைப்பயிற்சி செய்யும் காட்சியைக் காணுகிறோம், அதை அடுத்து பெங்குவின்களின் அணிவகுப்பு நடை அதற்கு நிகராகவே உள்ளது.

ஒரு தந்தை தனது மகனைத் தோளில் சுமந்து செல்லும் ஒரு ஷாட் உள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு குரங்கு குட்டி தன் பெற்றோரின் தோளில் அமர்ந்திருக்கும் ஷாட் வருகிறது.

பிம் ஜேக்கப்பின் ஜாஸ் இசையே படத்தின் சிறப்பிற்கு முக்கியத் துணை. பெரியவர்களுடன் சிறார்கள் அவசியம் காண வேண்டிய குறும்படமிது

••

0Shares
0