சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஒ.வி. விஜயன் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன்.
சின்னஞ்சிறிய பசுமையான கிராமம். அந்த ஊரினை மையமாகக் கொண்டு தான் விஜயன் தனது புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம் நாவலை எழுதியிருக்கிறார். அந்த நினைவைக் கொண்டாடும் விதத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைச் சிற்பங்களாகவும் ஒவியமாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஊரின் நுழைவாயிலில் வழியம்பலம் என நாவலில் ரவி வந்து இறங்குமிடம் அழகான வளைவு கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது
மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை ஒ.வி.விஜயன். கார்டூனிஸ்டாக டெல்லியில் பணியாற்றியவர். சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றவர். மலையாள இலக்கியத்தின் போக்கினை திசைமாற்றம் கொள்ளச் செய்தவர்.
கோழிக்கோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர் விஜயன். அவரது தந்தை ஓ.வேலுக்குட்டி மலபார் காவல் துறையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றினார், அவரது இளைய சகோதரி ஓ.வி உஷா, ஒரு மலையாள கவிஞரும் ஆவார் விஜயன் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் இளங்கலைபட்டமும், சென்னை மாநில கல்லூரியில் ஆங்கில இலக்கிய முதுகலைபட்டமும் பெற்றார்.
1969ல் வெளியான, “கசாக்கின் இதிகாசம்” (The Legends of Khasak), என்ற நாவல் இவரது முதல் நாவலாகும்
கசாக்கின் இதிகாசம் நாவல் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மலையாள நாவல் வரலாற்றை இந்த நாவலுக்கு முன்பு பின்பு என்று தான் பிரிக்கிறார்கள். விஜயனின் நாவல் அந்தக் கிராமத்தின் நம்பிக்கைகளை, தொன்மங்களை, வெறுமையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது
நாவலின் முக்கியப் பாத்திரம் ரவி. கசாக் கிராமத்திற்குப் பள்ளி ஆசிரியனாகப் பேருந்தில் வந்து ரவி கூமன் காட்டுப்பகுதிக்கு வந்து இறங்குவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. கூமன்காட்டிலிருந்து கசாக்கிற்கு நடந்து தான் செல்ல வேண்டும். அழகான ஓடை, சிதைந்த பள்ளிவாசல், ஓடைக்கு அப்புறம் வயல்கள், தாமரைக்குளம். பள்ளிக்கூடம், . இதுதான் கசாக் பிரதேசத்தின் வரைபடம்..
கசாக்கின் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவர்கள்.: அல்லாப்பிச்சா மொல்லாக்கா , அவர் மனைவி தித்திபி. மகள் மைமூனா. மைமூனாவை மணந்த முங்ஙாங்கோழி. மகள் ஆபிதா. சிவராமன் நாயர், அவரது மனைவி நாராயணியம்மாள், பனையேறி குப்புவச்சன், சாந்தும்மா என மறக்கமுடியாத கதாபாத்திரங்கள். இவர்களைச் சிற்பமாக நாம் நேரில் பார்க்கலாம் என்பதே இந்த நினைவகத்தின் சிறப்பு.
விஜயனின் சகோதரி இந்தக் கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஆகவே விஜயன் அங்கே தங்கி இந்நாவலை எழுதியிருக்கிறார்.
ஒரு எழுத்தாளனைக் கௌரவிப்பது என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்த நினைவகம் ஒரு உதாரணம். எந்த ஒரு நாவலுக்கும் இப்படியான நினைவகம் உலகில் வேறு எங்கும் உருவாக்கபட்டதில்லை என்கிறார்கள்.. நினைவகத்தின் வாசலில் விஜயனின் அற்புதமான உருவச்சிற்பம் நம்மை வரவேற்கிறது.
என்னை அங்கே அழைத்துக் கொண்டு போனவர் மொழிபெயர்ப்பாளர் தினேஷ். அவர் பாலக்காட்டில் வசிக்கிறார். எனது சிறுகதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல மழை நாளில் பயணம் செய்தோம். ஈரம் சொட்ட நனைந்தபடியே தான் விஜயனின் நினைவில்லத்திற்குள் சென்றோம்
இரண்டு அடுக்குக் கொண்ட நினைவகமது. கிழே அவரது புகைப்படங்கள். கார்டூன்கள் அடங்கிய கண்காட்சியுள்ளது. ஒ.வி.விஜயன் பற்றிய ஆவணப்படங்கள். அவரது கதையை மையமாகக் கொண்ட குறும்படங்களைத் திரையிடத் தனி அறை உருவாக்கியிருக்கிறார்கள்
நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைக் கேரளாவின் முன்னணி சிற்பிகள் அழகான சிற்பங்களான உருவாக்கியிருக்கிறார்கள். அதைக் காணும் போது கண்முன்னே நாவல் விரிவு கொள்கிறது
மேல்தளத்தில் ஒ வி விஜயனின் நாவல் வெளியான போது வரையப்பட்ட ஒவியங்கள், அவரது சமகால எழுத்தாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அவர் பெற்ற விருதுகள். அவரது நூல்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
நினைவகத்தினைச் சுற்றிலும் வயல். எங்கும் பசுமை. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உகந்தபடி பெரிய அரங்கு ஒன்றும் இதனோடு உள்ளது. அதில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு, விஜயன் படைப்புகள் குறித்த கருத்தரங்கு, நாவல் முகாம் போன்ற நிகழ்வுகளை அவர்களே ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள்
தற்போது அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி அங்கேயே உறைவிடம் ஒன்றைக் கட்ட முனைந்திருக்கிறது. எந்த மொழி படைப்பாளியாக இருந்தாலும் அங்கே வந்து தங்கி எழுதலாம் என்றார்கள்.
ஒ.வி.விஜயன் நாவலில் வரும் சிறுகுளத்தைக் கூட அப்படியே பாதுகாத்து அழகுற சுற்றுவேலி அமைத்திருக்கிறார்கள். சிறிய குடில் போன்று அமைக்கப்பட்ட பின்புறத்தில் அவரது படைப்பினை உள்வாங்கி வரையப்பட்ட சிறப்பான ஒவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒ.வி.விஜயனைக் கேரள அரசும் மக்களும் எவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த நினைவகம் ஒரு உதாரணம்.
கசாக்கின் இதிகாசம் நாவலைத் தமிழில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இந்த நாவலைச் சிறப்பாக மொழியாக்கம் செய்ததற்காக யூமா வாசுகி மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒ.வி.விஜயன் சென்னையில் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். பின்பு டெல்லியில் வேலை. முதுமையில் பார்க்கின்சன் நோய் தாக்கி ஹைதராபாத்தில் கழித்திருக்கிறார். கசாக்கின் இதிகாசம் நாவலைத் தமிழும் மலையாளமும் கலந்த வட்டார வழக்கில் ஒ.வி.விஜயன் எழுதியிருக்கிறார்.
நினைவகத்தைச் சிறப்பாகப் பராமரிக்கிறார்கள். மழையிலும் பார்வையாளர்கள் வந்து போவதைக் கண்டேன். சின்னஞ்சிறிய ஊரில் இப்படி ஒரு நினைவகத்தை உருவாக்கி அதை மலையாளிகள் தங்கள் பண்பாட்டு அடையாளமாகக் கருதுவது மிகுந்த பாராட்டிற்குரியது
••
ஆகஸ்ட் 23.2019