தி இந்து நாளிதழில் செவ்வாய்கிழமை தோறும் நான் எழுதிவரும் கடவுளின் நாக்கு என்ற பத்தி ஒராண்டினைக் கடந்து செல்கிறது.
இதைச் சாத்தியமாக்கிய தி இந்து ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், மானா பாஸ்கர் ஆகியோருக்கு அன்பும் நன்றியும்.
கல்வி நிலையங்களில் இந்தப் பத்தியை மாணவர்கள் கூடி வாசிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நீதியரசர் துவங்கி சலூன்காரர் வரை பல்தரப்பட்டவர்கள் இதை வாசித்துப் பாராட்டுகளைத் தெரிவித்து வருவது சந்தோஷம் அளிக்கிறது.
பத்தி குறித்து ஒவ்வொரு வாரமும் இருநூறு முதல் முந்நூறு வரை மின்னஞ்சல்கள் வருகின்றன. நான் செல்லுமிடங்களில் எல்லாம் இந்தப் பத்தி குறித்துப் பாராட்டுகளையும் கருத்துக்களையும் தெரிவிக்கிறார்கள்.
துபாயிலிருந்து ஒரு நண்பர் வாரந்தோறும் இதனை வாசித்துவிட்டு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார். சேலம் பொன்.குமார் வாரந்தவறாமல் வாசித்துவிட்டு தி இந்து இதழுக்கு தனது வாசகர் கடிதத்தை எழுதி வருகிறார். அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி.
இத் தொடரின் வழியே நாளிதழில் பத்தி எழுவது மிகப்பரவலான வாசிப்புத் தளத்தை உருவாக்க கூடியது என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.
கடவுளின் நாக்கு தொடரைப் பாராட்டி என்னை உற்சாகப்படுத்தி வரும் பேராசிரியர் சிவசுப்ரமணியன், வேலூர் லிங்கம், எஸ்.ஏ.பெருமாள். டி. லட்சுமணன், பேராசிரியர் பஞ்சு, சமரசம் அமீன், வேணுகோபால் உள்ளிட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி.