கண்ணகியின் நிழலில்


ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல இயக்குனரான குருதத் சிலப்பதிகாரத்தை படமாக்க விரும்பினார். அந்தக் கதை அவரது சொந்த வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.  கீதா தத் என்ற பாடகியைத் திருமணம் செய்து கொண்ட குருதத் தன் படங்களில் நாயகியாக நடித்த வகிதா ரஹ்மானை காதலித்து கொண்டிருந்தார். இரண்டு பெண்களும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.



கீதா வங்களாத்தை சேர்ந்தவர். ராய் சௌத்ரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இசையில் பாடி மிகுந்த புகழ் பெற்றவர். குருதத்தின் உண்மை பெயர் சிவசங்கர் படுகோன். கர்நாடகத்தை சேர்ந்தவர். இளவயதில் வங்களாத்தில் கழித்தவர் என்பதால் வங்காள சங்கீதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.



குருதத்தின் பியாசா. காகஸ் கே பூல், சாஹிப் பீபி அவர் குலாம், போன்ற வெற்றிப் படங்கள் ஒரு ஆண்  இரண்டு பெண்களின் காதலில் அலைபடுவதை மைய கதையாகக் கொண்டவை. வகிதா ரஹ்மான் மீது கொண்ட காதல் குருதத்தின் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணியது. கீதா மனவெறுமையுற்று குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.



அந்தச் சூழலில் சென்னை வந்திருந்த குருதத்திற்கு யாரோ ஒருவர் சிலப்பதிகாரம் பற்றி சொல்லவே அதை உடனடியாக படமாக்க வேண்டும் என்று குருதத் முடிவு செய்து அதற்கான திரைக்கதையை எழுதுவதற்கான முன்முயற்சிகளை செய்ய துவங்கினார்.



இதை பற்றி அசோகமித்ரன் மற்றும் கோமல் சுவாமிநாதன் இருவருமே தங்களது நினைவுகளை பதிவு செய்திருக்கிறார்கள். குருதத் விரும்பியபடியான திரைக்கதை அமையவில்லை. திராவிட இயக்கசூழல் சிலப்பதிகாரத்தை பற்றி உருவாக்கி  வைத்திருந்த புனிதபிம்பம் காரணமாக அதை மாற்றி அமைத்தால் எதிர்ப்பு உருவாக கூடும் என்று கருதிய குருதத் அதைப் படமாக்காமலே விட்டு விட்டார்.



சிலப்பதிகாரக் கோவலனை போல இளவயதில் இறந்து போனார் குருதத். கண்ணகி போலின்றி கீதா தத் தன்னை அழித்து கொள்ள முடிவு செய்து போதையின் உச்சத்தில்  தன்னை மாய்த்துக் கொண்டார். வஹிதா ரஹ்மானோ குருதத்தின் காதலில் மௌனமாகி அதைப் பற்றி நினைவுகளை தன்னோடு புதைத்து கொண்டுவிட்டார். சிலப்பதிகாரம் நம் காலத்தின் நிஜவாழ்வாக அவர்களிடம் நடந்தேறியது.


பள்ளியில் பாடமாக படித்த சிலப்பதிகாரம் வெறும் பத்துப் பாடல்கள் மட்டுமே. வகுப்பறையில் அதை எந்த ரசனையும் இன்றி ஆசிரியர்கள் கற்று தந்ததின் காரணமாக பழந்தமிழ் இலக்கியங்கள் படிப்பதே வீண் என்ற மனநிலை பெரும்பான்மையோருக்கு வந்துவிடுகிறது. நானும் அப்படிதானிருந்தேன்.


கல்லூரி நாட்களில் ஆங்கில இலக்கியம் படிக்கத் துவங்கிய பிறகே தமிழ் செவ்வியல் இலக்கியத்தின் மீது அதீத விருப்பம் உருவாக ஆரம்பித்தது. சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் ஆழ்ந்து படித்தேன். அந்த நாட்களில் தான் பூம்புகார் படம் பார்த்தேன்.


ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வெளியாகி உள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தை மையமாக கொண்டு ஒளவையார். மலைக்கள்ளன்,நந்தனார், மதுரை வீரன், மந்திரிகுமாரி என்று வெகு சிலவே அந்த நாட்களில் வெளியாகி இருந்தன. அவையும் அதிக அளவில் மூலப்படைப்பிலிருந்து மாறுபட்டவை.


ராமாயணத்திற்கு எதிராக சிலப்பதிகாரத்தை முன்வைத்தது திராவிட இயக்கம். குறிப்பாக ம.பொ.சி சிலப்பதிகாரமே தமிழ்அடையாளம் என்று தொடர்ந்து உரையாற்றினார். கலைஞர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கபட்ட பூம்புகார் படத்தை ப. நீலகண்டன் இயக்கியிருந்தார். எஸ்.எஸ்.ஆர். கோவலனாகவும்,விஜயகுமாரி கண்ணகியாகவும் ராஜஸ்ரீ மாதவியாகவும் நடித்திருந்தார்கள். என்னை முதன்முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் என்று கோவலன் கண்ணகியை சுற்றிவந்து பாடுவார்.


ஈரெட்டு வயது கோவலனாக சிலப்பதிகாரம் வழியாக மனதில் பதிந்திருந்த உருவத்திற்கு எஸ் எஸ் ஆரின் தோற்றம் பொருந்தவேயில்லை. மிகையான நடிப்பும் ஆவேச கொந்தளிப்பும் காவியம் படமாக்கபட்டிருக்கிறது என்பதை மறக்கச் செய்தது. படத்தின் சிறப்பம்சம் வசனங்கள். மற்றும் பூம்புகார் என்ற நகரை மையக்கதாபாத்திரமாக மாற்றியது.


அந்த படம் தந்த உத்வேகத்தில் பி.யூ.சின்னப்பா நடித்த கண்ணகியை ஒரு தடவையாவது பார்த்துவிட வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன். தற்செயலாக அது பழனியில் உள்ள டுரிங் திரையங்கம் ஒன்றில் திரையிடப்படுகிற போஸ்டரை கண்டு பகல் முழுவதும் காத்திருந்து இரவு காட்சிக்கு சென்றேன். அரங்கில் நாற்பது ஐம்பது பேர்களே இருந்தோம்.



அந்த படத்தில் கண்ணகி கோவலன் மாதவி என்ற பெயர்களை தவிர மற்ற எல்லாமே அவர்களாக கற்பனை செய்து கொண்டதாக இருந்தது. சின்னப்பாவின் பாடல்களும், கண்ணாம்பாவின் வீராவேசமான வசனமும் படம் முழுவதும் நிரம்பியருந்தன.


படத்தின் ஒரே ஆறுதல் மார்கஸ் பட்லேயின் ஒளிப்பதிவு. குறிப்பாக மாதவி ஒரு தூணில் நின்றபடியே பேசும் காட்சியில் அவளது நிழலும் இரவும் அறையின் ஒரு பக்கம் எரியும் விளக்குமாக ஒவியம் போல காட்சி படமாக்கபட்டிருக்கும். மற்றபடி அந்த கதை பெரிதும் சினிமாதனமானது.


மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அங்குள்ள துர்கை கோவிலை பூட்டி அதற்கு விளக்கு போடக்கூடாது என்று மூன்று தலைமுறையாக வழிபாட்டை தடுத்து விடுகிறான். ஒருநாள் வான்உலகில் சிவன் தாண்டவம் ஆடுவதைக் கண்டு பொறுக்க முடியாத பார்வதி அவன் மீது கோபம் கொள்ளவே உமையை பரிகாசம் செய்த சிவன், அவள் பூலோகத்தில் உள்ள மதுரையில் பூட்டிகிடந்த கோவிலிள் உள்ள துர்கையாகும்படி சபிக்கிறான்.


அதனால் பார்வதி தேவி மதுரை கோவலின் துர்கை வடிவம் கொள்கிறாள்.  ஒரு நாள் அங்கே வந்து விளக்கு போடுகிறான் வெளியூர் வணிகன், இதனால் அவன் தலையை வெட்டி விடுகிறான் அரசன். அதற்குப் பழி தீர்க்க துர்கை பாண்டிய மன்னன் மகளாக பிறக்கிறாள்.


தலை வெட்டி இறந்து போன செட்டி பூம்பூகாரில் கோவலனாக பிறக்கிறான். பாண்டியமன்னன் மகளாக பிறந்த துர்கையை ஜோசியர்கள் பெட்டியில் வைத்து ஆற்றில்விடச் சொல்லவே அவள் பூம்பூகாருக்கு மிதந்து சென்று கண்ணகியாக வளர்க்கபட்டு கோவலனுக்கு திருமணம் செய்து வைக்கபடுகிறாள்.


மாதவி என்ற தாசி அவனை மயக்கி மாலை அணிவித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறாள். அவள் வசமாகிறான் கோவலன். தாசி எல்லா பொருளையும் பறித்துவிடுகிறாள். முடிவில் கோவலன் மதுரைக்கு மனைவியோடு வந்து படுகொலை செய்யப்படுகிறான்.மன்னனை பழிதீர்க்க கண்ணகி நகரை எரிக்கிறாள்.


இப்படியாக கதையை வளர்த்து போகிறது சின்னப்பாவின் கண்ணகி. அந்தக் காலம் படம் என்பதை தவிர வேறு எந்த விசேசமும் அதில் இல்லை.
இரண்டு சிலப்பதிகாரப்படங்களும் காப்பியம் உருவாக்கிய மனஎழுச்சியின் பகுதியை கூட தரவில்லை. ஆனால் என்றும் சிலப்பதிகாரம் வசீகரமான புத்தகமாக எப்போதும் படிக்க தூண்டியபடியே உள்ளது.


 சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் சுற்றியலைந்த போது இடுக்கிபகுதியில் உள்ள முதுவர்கள் என்ற ஆதிவாசிகளைச் சந்தித்தேன். அவர்கள் தாங்கள் கண்ணகி மதுரையை எரித்த போது அங்கிருந்து வெளியேறி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.


அவர்கள் சடங்குகள் மற்றும் பாடல்களில் கண்ணகி கதையே வேறுவிதமாக சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து கொடுங்கலூரில் உள்ள பகவதியின் சரித்திரத்தை பாடலாக பாடிக் கேட்ட போது அது அப்படியே கண்ணகி கதை என்பதை உணர முடிந்தது


கடந்த நாலு வருசத்தின் முன்பு ஒரு ஆண்டுகாலம் சிலப்பதிகாரம் குறித்த பயணமாகவே அலைந்தேன். பூம்பூகார் துவங்கி கொடுங்கலூர் வரை ஆறு முறை பயணம் செய்து கண்ணகியின் வழித்தடம் மற்றும் சிலப்பதிகார நினைவுகளை ஆராய்ந்தேன்


விசித்திரம் என்னவென்றால் தமிழகத்தில் கண்ணகிக்கு தனிக்கோவிலே கிடையாது. தமிழ் பெண்மையின் அடையாளமாக காட்டப்படும் கண்ணகிக்கு சென்னை கடற்கரையில் உள்ள சிலை தவிர வேறு பெரிய சான்றுகள் எதுவும் இல்லை.


ஒரே விதிவிலக்கு மதுரை சிம்மக்கல்லில் உள்ள செல்லத்தம்மன் கோவிலில் உள்ள கண்ணகி சிலை. அது பிரகாரத்தில் உள்ளது. ஒரு காலத்தில் அது தான் மூல விக்ரகமாக இருந்தது என்கிறார்கள். கண்ணகி கோட்டம் என்று அழைக்கபடும் கேரளாவில் உள்ள மங்களதேவி கோவிலுக்கு சென்றேன். அங்கே உள்ள சிலையில் இடுப்பின் கீழ்மட்டுமே உள்ளது. மேற்பகுதியை யாரோ உடைத்து கொண்டுபோய்விட்டார்கள்.


தமிழ்நாட்டில் கண்ணகிக்கு உள்ள ஒரே சான்று மதுரையில் உள்ள சிலை தான். இலங்கையில் கண்ணகி வழிபாடும் கோவில்களும் இருக்கின்றன. இது பற்றி பத்தினி தெய்வ வழிபாடு என்ற சிறந்த ஆய்வு நூல் வெளியாகி இருக்கிறது. ஏன் தமிழகத்தில் கண்ணகி கோவில்கள் இல்லை என்பது இன்று வரை முழுமையாக ஆராயப்படவில்லை.


ஷியாம்பெனகல் தனது டிஸ்கவர் இந்தியா என்ற தொலைக்காட்சி தொடரில் சிலப்பதிகாரம் பற்றி ஒரு பகுதி இயக்கியிருக்கிறார். பலர் அதை நாட்டிய நாடகமாகவும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை மூலத்தின் உயிர்த்தன்மை சிதையாமல் ஒரு போதும் அது காட்சிமாற்றம் செய்யப்படவில்லை.


குருதத் தான் விரும்பியபடியே சிலப்பதிகாரத்தை படமாக்கியிருந்தால் நிச்சயம் அது மிகசிறந்தபடமாக வெளிவந்திருக்க கூடும்.


சிலப்பதிகாரத்தின் கதை சொல்லும் முறை செவ்வியல் வடிவத்தின் உச்ச சாதனை என்றால் மணிமேகலையின் சொல்முறை மிக நவீனமானது.ஒருவகையில் அது தான் தமிழின் முதல் மேஜிகல் ரியலிச பிரதி.


சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் பூம்புகார்படத்தை சில கிராமங்களில் திரையிட்டு காட்டி மக்களிடம் காப்பியங்களின் மீதான தாக்கம் எப்படியிருக்கிறது என்பதை ஆராய்ந்த போது எண்பது சதவீதம் இளைஞர்கள் பெண்கள் முதன்முறையாக அப்போது தான் கண்ணகி கதையை கேள்விபடுவதாக சொன்னார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்


சலீல் சௌத்ரி இசையில் திங்கள் மாலை வெண்குடையான் என்ற சிலப்பதிகார பாடல் கரும்பு என்ற படத்தில் வெளியாகி உள்ளது. சிலப்பதிகாரம் முழுமையாக இசைக்கபட்டால் எப்படியிருக்கும் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணம்.


நம் நினைவில் கண்ணகி ஒரு படிமமாகவே இருக்கிறாள். அவள் கதையும், அதன்தொன்மையான நினைவுகளும் நம் நிலப்பரப்பில் நீண்டுகிடக்கிறது. முடிவில்லாத ஒரு கனவை போல அது வாசிப்பவரின் மனதில் தொடர்ந்து உருக்கொள்வதும் மறைவதுமாக உள்ளது. அவ்வகையில் சிலப்பதிகாரம் என்றும் படித்து தீராத புத்தகமே.


**
 

0Shares
0