சில நாட்களாகவே பயணம் அலைச்சல், காய்ச்சல், என்று நோய்மையுற்றிருந்தேன். ஆகவே லேசான குளிரின் குதுகுதுப்பு எனக்குள் எப்போதுமிருந்தது.
இரண்டு நாட்களின் முன்பாக காலையில் வீட்டின் வாசலில் கிடக்கும் பிரம்பு நாற்காலி மட்டும் தனியே வெயிலில் கிடப்பதை கண்டேன். . காலைவெயில். மிகுந்த ப்ரகாசமாக இருந்தது.
காலை வெயிலை பார்த்துக் கொண்டேயிருந்தேன். உடைந்த முட்டையிலிருந்து வழிந்தோடும் திரவத்தின் பிசுபிசுப்பை போலான வெயில். வீட்டிலிருந்து எழுந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். சில நிமிசங்களில் உடம்பெங்கும் எறும்பு ஏறுவது போன்ற உணர்ச்சியோடு வெயில் பற்றிக் கொள்ள துவங்கியது.
நகரவாழ்வில் அதிகம் இழந்தது வெயிலை. அநேகமாக வீட்டுச் செடிகளை போல எப்போதுமே நிழலில் கழிகிறது நாட்கள். பயணம் செய்கின்றன நேரங்களில் கூட நிழலும் நிழல் சார்ந்த இடங்களுமே வாய்த்துவிடுகின்றன.
சிறுவயதில் வீட்டுபடியில் உட்கார்ந்தபடியே வெயில் பார்த்துக் கொண்டிருப்பேன். படி சூடாகி உடல் சூடாகி உச்சந்தலை சூடாகி யாராவது வந்து திட்டும் வரை அங்கிருந்து போக மாட்டேன். குளித்துவிட்டு துண்டால் உடலை துவட்டிக் கொள்ளாமல் வெயில் துவட்டிவிடட்டும் என்று கிணற்றின் மீது நின்றிருப்போம்.
இப்படியான வெயிலின் மீதான தீராத ஏக்கம் அடிமனதில் இருந்து கொண்டுதானிருக்கிறது. எழுதி எழுதியும் அந்த தித்திப்பிலிருந்து விடுபட முடியவில்லை. என்வரையில் வெயில் ஒரு மயக்கம். எவ்வளவு முறை சொல்லி அலுத்தாலும் தீராமல் என்னை கவரும் வசீகரம்.
அன்றைக்கு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடியே வெயிலுக்கு என்னை அனுமதித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டேன். ஒரு முதிய தாதியின் கைகள் நம் தலையை கைகளை, கால்களை தடவி விடுவது போன்று வெயில் மெல்ல ஏறி இறங்கியது. பின்பு உடலினுள் வெயில் இறங்கி அதுவரை பதுங்கியிருந்த குளிர் காணாமல் போனது.
உடல் முழுவதும் வெயிலேறும்படியாக விட்டுவிட்டேன். நோயுற்ற பொழுதுகளில் தொடர்ந்து ஏதாவது யோசனை வந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது. காரணமற்ற யோசனைகள். முடிவில்லாத குழப்பங்கள். பாதி விழிப்பு பாதி கனவு இப்படியாக ஊடாடிய நாளின் மிச்சம் என்பதால் மனதில் ஏதோ யோசனைகள் கொப்பளித்து கொண்டிருந்தன. ஆனால் வெயில் ஏற துவங்கிய சில நிமிசங்களில் அந்த யோசனைகள் அப்படியே உலர துவங்கி சில நிமிசங்களில் நினைப்புகள் அடங்கின.
வெயில் உடலில் உறைக்க துவங்கியது. இப்போது தான் உடல் வெயிலை உணர துவங்கியிருக்கிறது என்று பூரணமாக உணர்ந்தேன். எழுந்து உள்ளே போய்விடலாமா என்று மனதில் தோன்றியது. எதற்காக எழுந்து போகவேண்டும். வெயிலில் இருப்பது நன்றாக தானே இருக்கிறது மனது சொல்லியது. கண்களை மூடிக் கொண்டபடியே எழுந்து கொள்ளாமல் இருந்தேன். கண்களை மூடிய போதும் வெயிலின் அதிப்ரகாசத்தை உணர முடிந்தது.
திடீரென எனக்கு, நான் ஒரு தும்பை செடி வெயிலில் இருப்பது போல தான் இருக்கிறேனா என்று தோன்ற ஆரம்பித்தது. அந்த நினைவு வந்த மறுநிமிசம் உலகின் கோடான கோடி தாவரங்கள் நாள் முழுவதும் வெயிலுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தபடி வெக்கை என்றோ, தப்பி ஒட வேண்டும் என்றோ என்ற எத்தனிப்பும் இன்றி இயல்பாக இருப்பது தோன்றி மறைந்தது. வெயிலுக்காக தாவரங்கள் காத்திருக்கின்றன. வெயிலால் வளர்கின்றன. வெயில் குடித்து மயங்கி கிடக்கின்றன
நான் ஒரு சிறு செடி. என் மீது வெயில் படரட்டும். என் சிரசிலிருந்து பாத நுனிவரை வெயில் ஏறி விளையாடட்டும். என்று முணங்கிக் கொண்டிருந்தேன். பித்த நிலை போல அது எனக்கு பிடித்து போனது.
என் வாழ்வில் முதன்முதலாக சூரியன் வானில் நகர்ந்து போய்க்கொண்டிருப்பதை என் உடலின் வழியாகவே உணர துவங்கினேன். பிரம்மாண்டமான கோளம் ஒன்று சப்தமின்றி கடந்து போகும் பேரியக்கம் ஒன்றின் அதிர்வுகள் என் உடலினுள்ளும் அறியப்படுகின்றன. கண்களை திறந்து வெளியே பார்க்கிறேன். மரங்கள் கூட அசைவின்றி நிற்கின்றன. வெளிறிய வானம் எங்கும் விரிந்து கிடக்கிறது.
சிறுவயதில் குப்பைமேட்டில் புதைத்து வைத்த அவரை செடி இரண்டு நாட்களுக்கு பிறகு வந்து பார்க்கையில் குப்பையை கீறி முளைக்க துவங்கி சுருண்ட இலைகளுடன் உலகை காண எத்தனிப்பதை போல எனக்குள் இருந்த ஏதோவொரு உணர்கொம்புகள் விரிந்து வெயிலை ஆசை தீர பருக எத்தனிக்கின்றன.
பார்த்துக் கொண்டிருந்த போதே வெயில் மங்க துவங்கியது. யானையின் காது அசைவதுபோல தான் வெயில் அசைந்து கொண்டிருக்கிறது என்றொரு வரி மனதில் தோன்றி மறைகிறது. வெயில் மங்குவது அதிகமாகியதும் உடல் தன்னியல்பு கொள்ள துவங்கியது.
அப்போது கவனித்தேன். வெயிலில் என்னை ஒப்புக் கொடுத்தபடி நின்ற போது மயிர்கால்கள் உயர்ந்து நின்றிருக்கின்றன. தோல் விரிவு கொண்டிருக்கின்றன. இப்போது அவை சாந்தம் கொள்கின்றன.
வெயிலேறுதலை இன்று தான் உடல் நீண்டநாட்களுக்கு பிறகு முழுமையாக அனுபவித்திருக்கிறது. விரல்களில் இருந்து சொடக்கு விழுவதை போல உடம்பு வெயில் ஏறியதும் சொடக்கு முறிந்து கொண்டது. எழுந்து வீட்டிற்குள் வந்தேன். நீராவியில் குளித்து திரும்பியது போலிருந்தது .
திரும்பவும் வெயில் உக்கிரம் கொள்ள துவங்கியிருந்தது. பிரம்பு நாற்காலியில் வெயில் விழுந்து கொண்டேயிருந்தது.
ஒரு நாளில் சில நிமிசமாவது உடலுக்கு வெயில் பழகுவது அவசியம் இல்லையா? கிரகண நாளை தவிர மற்ற தினங்களில் வானமோ, சூரியனோ நம் கண்ணில் விழுவதேயில்லை. கிரகண நாளில் கூட ஊடகத்தின் வழி தான் நம் கவனம் வானை நோக்கி ஏறிடுகிறது
மழை எப்போதாவது வருவதால் அதிசயம் கொள்கிறோம். சில நிமிசமாவது அதைக் கவனிக்கிறோம். ரசிக்கிறோம். நனைய ஒப்புக் கொடுக்கிறோம்.
வெயில் நம் அன்றாடம். அது தான் நமக்கு எரிச்சல் ஊட்டுகிறது இல்லையா?
**