மைக்கேல் கலாசோ
சமகால உலக சினிமாவின் திரை இசையமைப்பாளர்களில் மைக்கேல் கலாசோ (Michael Galasso )தனித்து அறியப்படும் அற்புதமான கலைஞர்.
இவர் இசையமைத்த இன் தி மூட் பார் லவ் திரைப்படம் சினிமாவில் இசையின் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணம்.
வொங் கர் வாயின் இயக்கத்தில் உருவான இந்த படத்தை காட்சியியல் கவிதை என்று சொல்லலாம். ஒளிப்பதிவும் இசையுமே படத்தின் அடித்தளம். மிக மெல்லிய காதல்கதை ஒன்றின் உணர்ச்சி வெளிப்பாடாக அமைந்த ஒளிப்பதிவாலும், இசையாலும் காவியமாக மாற்றியிருக்கிறார் வொங் கர் வாய்.
படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் டாயல். ஒளிப்பதிவில் அக்கறை கொண்ட ஒவ்வொருவம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இன் தி மூட் பார் லவ். (In The Mood For Love)
மைக்கேல் கலாசோ மரபான இசைக்குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று வயதில் வயலின் கற்றுக் கொள்ள துவங்கிய கலாசோ பதினோறு வயதில் விவால்டியின் வயலின் இசையை தனித்து நிகழ்ச்சி நடத்தி காட்டும் அளவு திறன் பெற்றார். முப்பது ஆண்டுகளில் வயலின் இசையின் தனிப்பெரும் சாதனை கலைஞரான மைக்கேல் கலேசா நாடகம், நடனம், சினிமா, தனி இசை என்று இசையின் பரந்த தளங்களில் இயங்குகின்றார்
இவரது இசை மேற்கத்திய செவ்வியல் தன்மைகளுடன் மத்திய ஆசிய இசையை ஊடுகலக்க கூடியது. குறிப்பாக ஈரான் மற்றும் பெர்சிய இசைக்கருவிகளை இவர் கையாளும் விதம் வெகு நேர்த்தியாக அமைந்திருக்கும்.
இன் தி மூட் பார் லவ் படத்தில் நிறைய காட்சிகள் வசனம் அற்றவை. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது மற்றும் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதும். மழையை வேடிக்கை பார்ப்பது, தனிமையில் காத்திருப்பது என்று படிமங்கள் போன்று காட்சிகளாக நீளக்கூடியது. அந்த மௌனத்தை தன்னுடைய இசையின் வழியாக உயர்ந்த மனவெழுச்சி கொள்ள செய்தவர் மைக்கேல் கலாசோ.
1949 ஆண்டு லூசியானவில் பிறந்த இவர் தற்போது ஈரான், ஹாலிவுட் இத்தாலி என்று பல்வேறு நாடுகளின் முக்கிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
1998ல் ஒரு திரைப்பட விழாவில் வொங்கர் வாயை சந்தித்த காலாசோ தனது இசைத்தட்டுகளை அவரிடம் கேட்பதற்காக தந்திருக்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகள் வொங் கர் வாயை அவரை தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால் 2000 ல் தனது புதிய படம் ஒன்றிற்கு இசையமைக்க முடியுமா என்று கேட்டு படமாக்கபட்ட பகுதிகளை பார்வைக்காக அனுப்பியிருக்கிறார். தான் அதன் முன்னால் இப்படியொரு காட்சிபடிமங்களை திரையில் கண்டதில்லை என்று வியந்த மைக்கேல் உடனே கிளம்பி ஹாங்காங் சென்று படத்தின் கதை நடந்த இடங்கள். நடிகர்கள் என்று தேடி பார்த்திருக்கிறார்.
கதை ஆழமான சோகத்தையும் வெளிப்படுத்தபடாத காதலையும் சொல்கிறது என்பதால் படத்தின் மையப்படிமம் போன்ற சிறிய இசை கோர்வை ஒன்றை உருவாக்க முயற்சித்தார். இதற்காக செல்லோ இசைக்கருவியை பிரதானமாக தேர்வு செய்து கொண்டார்.
செல்லோ வயலின் மற்றும் கிதார் மூன்றும் இணைந்து உருவான அந்த இசைக்கோர்வை மனதை மயக்குவதாக அமைந்தது.
ஆகவே காட்சியும் இசையும் அவ்வளவு இணைவாக பொருந்தியிருக்கும். ஒரு வகையில் இசையின் துள்ளலுக்கு ஏற்ப கேமிரா நகர்வதும் ஒளியும் இருளும் இசையின் மொழியாக வெளிப்படுவதும் போன்று இணைந்திருப்பது அற்புதமான அனுபவம்.
இது போலவே படத்தின் இன்னொரு பிரதான இசைத்துண்டு ஆங்கோர்வாட்டில் உள்ள இடிபாடுகளில் தன் மனதின் ரகசியங்களை வெளிப்படுத்தும் கதாநாயகனின் செயல்பாட்டினை விளக்குகிறது.
இதில் இதயம் ஒலிப்பது போன்று மெல்லிய தாள இசையும் செல்லோவும் சேர்ந்து ஒலிக்கிறது. மனிதர்கள் அறியாத தொலைவிற்கு ரகசியங்கள் பயணிக்கின்றன என்று உணர்த்தும் இந்த இசைத்துண்டில் ரகசியம் வெளிப்படும் கணமும் அதிலிருந்து விடுபடும் மனிதனின் அக உணர்ச்சிகளும் பீறிடுகின்றன.
யூமோஜி தீம் எனப்படும் இன்னொரு இசைதுண்டில் வயலோ பயன்படுத்தபட்டுள்ள விதம் அற்புதமானது. இந்த இசை தனிமையில் மனது கொள்ளும் தவிப்பை சிறப்பாக உணர்ந்துகிறது. குறிப்பாக அறையில் உள்ள இருள். தனித்து இருத்தல், புகை பிடித்தல் என்று காட்சிகளின் மீது ஒன்று கலந்து பேரனுபவம் ஒன்றினை தருகிறது.
இந்த படத்திற்கு கூடுதல் பங்களிப்பு செய்திருப்பவர் உமேபயாஷி என்ற ஐப்பானிய இசைக்கலைஞர். அவர் தனித்து இசையமைத்த பகுதிகள் இந்த படத்தின் சில காட்சிகளுக்காக பின்னணி இசையாக சேர்க்கபட்டிருக்கின்றன.
உமேபயாஷி ஜப்பானின் புகழ்பெற்ற ராக் இசைக்கலைஞர். ஐப்பானிய திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவரது பங்களிப்பின் காரணமாக மூட் பார் லவ் படத்தில் ஐப்பானிய இசைமரபும் சேர்ந்து ஒலிக்கிறது. ஷாங் இமுவின் தி ஹவுஸ் ஆப் பிளையிங் டாகர்ஸ் படத்திற்கு இசையமைத்தவர் உமேபயாஷியே.
இன் தி மூட் பார் லவ் திரைப்படம் திரை இசையின் அடுத்த கட்ட வளர்ச்சி. அதை சாத்தியமாக்கியவர் மைக்கேல் கலாசோ. இதன் பாதிப்பு இன்று ஹாலிவுட் திரைப்படங்களில் கலாசோ பாணி இசையமைப்பினை பலரிடம் காண முடிகிறது என்பதே.
உமேபயாஷி கல்லூரி நாட்களில் ராக் இசைக்குழுவை நடத்தியவர். தனது இசைக்கான உந்துதலாக இருந்தவர் எரிக் கிளாப்டன் என்று கூறும் இவர் பீட்டில்ஸ் இசைக்குழுவின் தன்மைகள் தன்னிடம் அதிகம் பாதிப்பை உருவாக்கி உள்ளதாக ஒத்துக் கொள்கிறார்.
வொங் கர் வாய் படத்தில் இசையமைப்பது என்பது இசைக்கலைஞர்களுக்கு பெரிய சவால். அந்த சவால் தான் இன் தி மூட் பார் லவ் படத்தின் அருமையான இசைக்கான மூல காரணம்.
வொங்கர்வாயின் படங்கள் நவீன சினிமாவில் இசையை எவ்வளவு பிரதானமானது என்பதற்கு சான்றாக உள்ளன. அந்த வகையில் மைக்கேல் கலாசோவின் பங்கு வியந்து பாராட்டக்கூடியது.
*