பெலின் எஸ்மர் இயக்கி 2019ல் வெளியான Queen Lear ஆவணப்படம் தெற்கு துருக்கியின் மலைப்பகுதியினுள் நாடகம் நிகழ்த்துவதற்காகச் செல்லும் பெண்கள் நாடகக்குழுவின் பயணத்தை விவரிக்கிறது

அர்ஸ்லான்கோய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்களில் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு நாடகக்குழுவை உருவாக்குகிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற கிங் லியர் நாடகத்தை நடத்துகிறார்கள். லியர் அரசனாக நடிப்பது ஒரு பெண். வெளியுலகம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தொலைதூர கிராமங்களை நோக்கி அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். நாடகத்தின் வழியே பாலின சமத்துவத்தை உருவாக்க முனைகிறார்கள்.
ஷேக்ஸ்பியர் நாடகமும் அவர்களின் சொந்த வாழ்வும் வேறில்லை என்பதைப் படம் நன்றாக உணர்த்துகிறது. இந்த நாடகத்தினைக் காண வரும் மலை கிராமவாசிகள். அவர்கள் கேட்கும் கேள்விகள். நாடகக்குழுவினர் சந்திக்கும் பிரச்சனைகளை ஆவணப்படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது

லியராக நடிக்கும் பெண் மீசை வரைந்து ஆணாக உருமாறுகிறாள். அரங்க அமைப்பு, ஒப்பனைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது பெயரை அறிவித்துக் கொண்டு தற்கால உடையில் மேடையில் தோன்றி வசனம் பேசுகிறார்கள். ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சொந்த வரிகளாக மாற்றிக் கொள்கிறார்கள். பெண்கள் நாடகம் நடிப்பதை விரும்புவீர்களா எனக் கிராமவாசிகளிடம் கேட்கிறார்கள். மறுப்பவர்களிடம் விவாதிக்கிறார்கள்
மலைக்கிராமத்தில் வசிக்கும் இரண்டு பதின்பிராயத்துப் பெண்கள் அவர்களை எதிர்கொண்டு உரையாடும் காட்சி சிறப்பானது. இது போல வழிதவறிப்போன பயணத்தின் ஊடே அவர்கள் கொள்ளும் அச்சம் நிஜமானது.
குழந்தைகளுக்கான பொம்மலாட்டம். ஒரு நாடகம். ஒரு ஆவணப்படம் என மூன்றையும் ஒருங்கிணைத்து அவர்கள் நிகழ்த்துகிறார்கள். இதற்காக வாகனத்தில் மலைப்பகுதியினுள் பயணம் செய்து தாங்களே சமைத்து சாப்பிட்டு வீடு வீடாகச் சென்று கிராமவாசிகளை நாடகம் காண அழைக்கிறார்கள். அந்த நிலக்காட்சியும், மலைகிராமத்தின் வாழ்க்கையும் விநோதமாக உள்ளது. வேறு ஏதோ நூற்றாண்டில் வசிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது
அந்தப் பெண்களால் கிங் லியர் நாடகம் புத்துருவாக்கம் பெறுகிறது. தந்தைக்கும் மூன்று பெண்களுக்குமான உறவும் மீட்சியும் என்றைக்குமான கதையாக மாறுகிறது. நாடகத்தைச் சமூக மாற்றத்திற்காக ஊடகமாக மாற்றுகிறார்கள்.
நாடகத்தில் ஏன் நடிக்கிறோம் என்பதற்கு நடிகர்கள் தரும் விளக்கமும், நாடகத்தில் மலைகிராமவாசிகளைப் பங்கேற்க அழைப்பதும் சிறப்பானது.
கடற்கரையில் குளித்து மகிழும் நாடகக் குழுவின் உரையாடலுடன் படம் துவங்குகிறது. இடிபாடுகளுக்கு இடையே உள்ள பழைய ரோமானிய அரங்கு ஒன்றில் அவர்கள் நாடக ஒத்திகை நிகழ்த்துவது பிரமிக்க வைக்கிறது. கூடாரம் அமைத்து வாழும் இடையர்களின் வசிப்பிடத்தில் அவர்கள் சந்திக்கும் இளம்பெண் என்ன நாடகம் என அறிந்து கொள்வதில் காட்டும் ஆர்வம் முக்கியமானது.
ஷேக்ஸ்பியர் இன்றைக்கும் தேவையானவராக இருக்கிறார். லியர் ஒரு அடையாளம். பிள்ளைகள் தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் எனக் கேட்கும் எல்லாத் தந்தையின் மனதிலும் லியரே இருக்கிறார்.

கிங் லியர் நாடகத்தில் அவரது மனைவியைப் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. இந்த ஆவணப்படத்தில் லியர் பாத்திரத்தில் நடிக்கும் ஸெய்னெப், ஒரு செவிலியராக வேண்டும் என்ற தனது இளமைக்காலக் கனவை வெளிப்படுத்துகிறாள்; ஆனால், அவள் ஆடு வளர்ப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்ற தந்தையின் கண்டிப்பதால் அவளது கனவு நிறைவேறவில்லை. நாடகமேடை அவளுக்குப் புதிய அடையாளத்தை, நம்பிக்கையை உருவாக்குகிறது
இசையும் நாடகமும் தங்கள் வயதை மறக்கச் செய்து இளமையாக உணர வைக்கிறது. உடல் உபாதைகளிலிருந்து மீட்சி அளிக்கிறது என ஒரு நடிகர் சொல்கிறார். அந்த மீட்சியை மலைவாசிகள் அனைவருக்கும் அளிப்பதற்காகவே நாடகம் நிகழ்த்துகிறார்கள். தொடர்ந்து பயணிக்கிறார்கள்.
இந்த ஆவணப்படம் ஷேக்ஸ்பியர் வாலா என்ற சசிகபூரின் திரைப்படத்தை நினைவுபடுத்தியது. மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் உருவாக்கபட்ட அந்தப் படம் ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆங்கிலத்தில் நடத்தும் ஒரு நாடகக்குழுவின் பயணத்தை விவரிக்க கூடியது. மிகக்சிறப்பான படம். அதில் காலனிய ஆட்சியின் குறியீடாக ஷேக்ஸ்பியர் இடம்பெறுகிறார்
இதிலோ ஷேக்ஸ்பியர் வழியாக அவர்கள் தங்கள் சொந்த நினைவுகளை, கடந்தகால வாழ்வின் நிஜத்தை உணருகிறார்கள். வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
Speak what we feel, not what we ought to say என லியர் நாடகத்தில் ஒரு வரி உள்ளது. அதையே இந்த ஆவணப்படம் செய்கிறது
..