நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் எழுத்தாளரான செல்மா லாகர்லாஃப் உடன் சர்.சி.வி.ராமன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன்..

1930ம் ஆண்டு ராமன் நோபல் பரிசு பெறச் சென்ற போது எடுக்கபட்ட புகைப்படமது. நோபல் கமிட்டியின் பதினெட்டு நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராகச் செல்மா லாகர்லாஃப் இருந்தார். ஆகவே விருந்து நிகழ்வின் போது ராமனுடன் அமர்ந்திருக்கிறார்.
செல்மா லாகர்லாஃப்பின் அருகில் அமர்ந்திருப்பது ராமனின் மனைவி லோகசுந்தரி. மதுரையைச் சேர்ந்தவர். தீவிர இலக்கிய ஆர்வலர். மணிக்கொடி இதழுக்குச் சந்தா கட்டியிருக்கிறார். வீணை வாசிப்பதில் தேர்ந்தவர்.
நோபல் பரிசு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என உறுதியாக நம்பிய சி.வி.ராமன் முன்னதாகவே ஸ்டாக்ஹோமிற்குக் கப்பல் பயண டிக்கெட்டுகளைப் பதிவு செய்திருந்தார் என்ற செய்தி வியப்பளிக்கிறது.
புகைப்படத்தில் செல்மா லாகர்லாஃப் ஏதோ உரையாடிக் கொண்டிருக்கிறார். என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.
தமிழில் செல்மா லாகர்லாஃப்பை க.நா.சு மொழியாக்கம் செய்வார் என்றோ, அவர் தமிழ் வாசகப் பரப்பில் விரும்பி வாசிக்கபடுகிறார் என்றோ அன்று செல்மா அறிந்திருக்கவில்லை.
மேற்கு சுவீடனில் உள்ள வார்ம்லாந்தில் பிறந்த செல்மா லாகர்லோஃப், உடல்நலம் குன்றிய குழந்தையாக இருந்தார். தானாக கல்வி கற்றுக் கொள்ளத் துவங்கிய அவர் படிப்பதற்காக குடும்பத்தினரிடம் போராட வேண்டியிருந்தது. சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். திருமணம் செய்து கொள்ளாதவர். நோபல் ஏற்புரையின் போது தனது மறைந்த தந்தையை நினைவு கொள்கிறார். இந்த விருது கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தந்தையில்லையே என்ற ஏக்கம் அதில் முழுமையாக வெளிப்படுகிறது.

ராஜாராம் எழுதிய சர்.சி.வி.ராமன் நினைவுகள் நூலில் நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்டாக்ஹோமிற்கு மேற்கொண்ட பயணம் குறித்து லோகசுந்தரி எழுதிய கட்டுரையுள்ளது. அதில் தங்கள் பயண அனுபவத்தைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.
லோகசுந்தரிக்குத் தமிழ் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகள் தெரியும். கல்கத்தாவில் குடியிருந்த காரணத்தால் அவரால் வங்காளத்தில் சரளமாகப் பேச முடிந்தது காந்தியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். ராட்டை நூற்றிருக்கிறார். காந்தியப் பணிகளுக்கு நிதி திரட்டி கொடுத்திருக்கிறார்.

1931-ல் கல்கத்தா மாநகராட்சி ராமனுக்குப் பாராட்டுவிழா நடத்திய போது, இந்தப் பயணம் குறித்த கட்டுரையை ‘ஸ்டாக்ஹோமில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் லேடி ராமன் எழுதியிருக்கிறார்
“நாங்கள் ஸ்வீடனில் தங்கியிருந்த வாரம் ஒரு பெரிய திருவிழாவாக இருந்தது. இந்தியாவில் இருப்பது போல ஸ்வீடனிலும் மாலை அணிவிப்பது சம்பிரதாயமாக இருந்திருந்தால் நாங்கள் சேகரித்த மாலைகளின் எண்ணிக்கை கணக்கில்லாமல் இருந்திருக்கும். ஆனால், அங்குப் புகைப்படம் எடுப்பது தான் முதன்மையான மகிழ்ச்சி. . நாங்கள் செல்லும் இடமெல்லாம் புகைப்படக்கலைஞர்கள். பத்திரிக்கையாளர்கள் எங்களைத் துரத்திக் கொண்டிருந்தனர்.
உலகின் மற்ற பகுதியில் வசிப்பவர்கள் நோபல் பரிசு பெற்றவர்களை எந்த விதத்தில் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஸ்வீடன் மக்கள் நிச்சயமாக அவர்கள் மீது மிகுந்த மரியாதை செலுத்துகிறார்கள். நோபல் பரிசு பெற்றவர்களைச் சந்திப்பதற்கான விருந்துகளும் கூட்டங்களும் இடைவிடாமல் நடத்தப்படுகின்றன.
டிசம்பர் 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமிற்கு ரயிலில் வந்தடைந்தோம். விருந்தினர்களை வரவேற்கக் காத்திருந்த மக்களால் நடைமேடை நிரம்பி வழிந்தது. அங்கே புகைப்படம் எடுக்கக் குறைந்தது பத்து கேமராக்களாவது தயாராக இருந்தன. குளிர்காலத்தில் வட அட்சரேகைகளில் சூரிய வெளிச்சம் குறைவு. ஆகவே ஆயிரக்கணக்கான மின்விளக்குகளால் பகலும் இரவும் சமமாகப் பிரகாசமாக்கப்படுகின்றன. எங்களிடம் பேசிய ஒவ்வொருவரும், குளிர்காலம் என்பதால் தங்கள் நாடு அதன் சிறந்த தோற்றத்தில் இல்லாமல் இருட்டாகவும் வெறிச்சோடியும் இருப்பதாகவும், வசந்த காலத்தில் அது சூரிய ஒளியில் தகதகவென ஜொலிப்பதை நாங்கள் காண்போம் என்றும் ஆதங்கப்பட்டார்கள். அவர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் இந்திய சூரியனை அனுபவித்திருந்தால், சூரியன் மீதான அவர்களின் பற்றுத் தணிந்திருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன் புகைப்படம் எடுப்பவர்கள் கூடுதல் வெளிச்சத்திற்காக. பட்டாசு வெடிப்பது போன்ற ஒளி தோன்றச் செய்யும் அந்தத் திடீர் சத்தமும் அதனுடன் வரும் ஒளியும் புதியவர்களைத் திடுக்கிடச் செய்யக்கூடியவை, ஆனால் நாங்கள் விரைவில் அதற்குப் பழகிக்கொண்டோம்.
ஸ்காண்டிநேவியர்கள் பெரும் உயரமும் திடகாத்திரமான உருவமும் கொண்டவர்கள், ஆனால் ஒப்பீட்டளவில் எனது குள்ளமான உருவத்தைக் கண்டு நான் சற்றே கூச்சப்பட்டேன்..நோபல் பரிசுகள் வழங்கும் விழா டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. அந்த நிகழ்வு ஒரு கனவில் காண்பது போலிருந்தது.
ஸ்டாக்ஹோமின் மாபெரும் இசை அரங்கம், மலர்களாலும் அலங்கார கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, 4,000-க்கும் மேற்பட்ட மக்களால் நிரம்பியிருந்தது; ஸ்வீடன் மன்னரும் அரசியும் மற்றும் அரச குடும்பத்தினரும் முதல் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். நோபல் பரிசு பெற்றவர்கள் பின்னர் அரங்கத்திற்குள் நுழைந்தனர்; அவர்களில் ஒவ்வொருவரும் தத்தம் துறைப் பேராசிரியருடன் வந்திருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, ஸ்டாக்ஹோமில் இருந்த முந்தைய ஆண்டுகளின் நோபல் பரிசு பெற்றவர்களும் அகாடமியின் உறுப்பினர்களும் வந்து அமர்ந்தார்கள்.
அந்த ஆண்டின் பரிசு பெற்றவர்கள் மேடையின் ஒரு பக்கத்திலும், அவர்களை அறிமுகப்படுத்தியவர்கள் எதிர் பக்கத்திலும் அமர்ந்திருந்தனர்.
ராமன் விளைவு மற்றும் அவரது ஆய்வுகளை எடுத்துச் சொல்லிப் பாராட்டிய அறிவியல் செயலாளர் ‘இப்போது மாட்சிமை பொருந்திய மன்னரின் கரங்களிலிருந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என ராமனை அழைத்தார்.
ராமன் பரிசைப் பெற எழுந்தபோது, மன்னர் உட்படக் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்றனர், மேலும் பிரிட்டிஷ் கொடி உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பின்னர், நோபல் பரிசு பெற்றவர் அரசரின் இருக்கையை அணுகி மன்னருக்கு முன்பாகத் தலைவணங்கினார். மன்னர் அவரது கையைப் பிடித்து, நோபல் பதக்கம், பரிசு மற்றும் பட்டயத்தை அவருக்கு வழங்கினார்
அதைத் தொடர்ந்து சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு இசைக்குழுவின் இசை தொடர்ந்தது. பின்னர், மற்ற நோபல் பரிசு பெற்றவர்களின் பணிகள் குறித்த உரைகளும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் பதக்கம், பரிசு மற்றும் பட்டயம் வழங்கும் நிகழ்வும் அடுத்தடுத்து நடைபெற்றன. இந்த முழு விழாவும் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அதைத் தொடர்ந்து, மலார் ஏரியின் ஓரத்தில் அழகாக அமைந்துள்ள அழகிய கட்டிடத்தில் நோபல் விருந்து நடைபெற்றது.
அந்த விருந்து மண்டபத்தில் சுமார் 400 விருந்தினர்கள் அமரலாம். நோபல் பரிசு பெற்றவர்கள் அரச மேஜையில் அமர்ந்தனர். இரவு உணவு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. மது வகைகள் தாராளமாகப் பரிமாறப்பட்டது.
எங்களுக்காகச் சில சைவ உணவுகள் அக்கறையுடன் வழங்கப்பட்டிருந்தன. எங்கள் கோப்பைகள் தண்ணீரால் நிரப்பப்பட்டன. வாழ்த்துரைக்குப் பதிலளிக்கும் விதமாக, சர் ராமன் பண்டைய இந்தியாவின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். புத்தரின் மாபெரும் துறவு குறித்தும், அனைத்து உயிரினங்களையும் அரவணைத்த அவரது அகிம்சை மற்றும் அன்புச் செய்தி குறித்தும் அவர் பேசினார். விருந்து முடிய இரவு மணி பன்னிரண்டாக இருந்தது.
அடுத்த நாள், பல்கலைக்கழகத்தில் நோபல் விரிவுரைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பரிசு வென்றவரும் தத்தமது படைப்புகள் குறித்துப் பேசினர். இந்த விரிவுரைகள் பின்னர் ஒரு புத்தக வடிவில் தொகுக்கப்பட்டன. மாலையில், அரண்மனையில் மன்னர் மற்றும் ராணியின் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இரவு உணவிற்குப் பிறகு, விருந்தினர்கள் நூலகம் மற்றும் கலைச் சேகரிப்புகளைச் சுற்றிக் காட்டப்பட்டனர், மேலும் அரச குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களுடனான உரையாடலில் நேரம் இனிமையாகக் கழிந்தது.
நாங்கள் அங்கே லியோ டால்ஸ்டாயின் பேரனைச் சந்தித்தோம். அவர் அன்புடன் எங்களைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
டிசம்பர் 12 ஆம் தேதி மிகவும் குளிரான நாளாக இருந்தது. வெளியில் சில்லிடும் காற்று வீசிக்கொண்டிருந்தது.
இரவில், லூசியலைட் என்ற சுவாரஸ்யமான திருவிழாவை நாங்கள் கண்டோம். எரியும் மெழுகுவர்த்திகளால் ஆன கிரீடத்தைத் தலையில் அணிந்த ஒரு இளம் பணிப்பெண் தலைமையில் ஒரு ஊர்வலம் சென்றது. அவள் பனியின் வருகையை அறிவிப்பதாகவும், வரவிருக்கும் இருண்ட குளிர்கால நாட்களுக்கு ஒளியைக் கொண்டு வருவதாகவும் ஒரு நம்பிக்கை இருந்தது.
விசித்திரமாக, அடுத்த நாள் காலை நாங்கள் எழுந்தபோது, . நகரம் முழுவதும் வெண்பனி படர்ந்து காணப்பட்டது.
எங்களுக்கு வேறு சில சமூக நிகழ்வுகள் இல்லாததால், பனிப்பொழிவு காட்சியின் அழகை ரசிப்பதற்காக, அன்று காலை நாங்கள் நகரத்திற்கு வெளியே சிறிது தூரம் நடந்தோம்.
அந்தப் பனி, ஏதோ மாயத்தால் உருவானது என்பது போல, செயற்கையாக ஒளியூட்டப்பட்ட இருண்ட நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் ஒரு தெய்வீக அழகுக் காட்சியாக மாற்றியிருந்தது.“ எனத் தனது பயண அனுபவத்தைச் சுவைபட லோகசுந்தரி எழுதியிருக்கிறார்
நோபல்பரிசிற்காகச் சர்.சி.வி.ராமனுக்கு வழங்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை ராமன் கோபாலராவ் என்பவர் நடத்திய தனியார் வங்கியில் முதலீடு செய்திருந்தார். அந்த வங்கி திடீரெனத் திவாலானதாக அறிவிக்கபடவே அவரது மொத்த பணமும் பறிபோனது. திட்டமிட்டுத் தங்களைக் கோபால ராவ் ஏமாற்றிவிட்டதாக ராமன் கருதினார். வரலாற்றில் இது போலவே நியூட்டனும் 1720 ல் South Sea Company பங்குகளை வாங்கி விற்றதில் ஆயிரக்கணக்கான பவுண்ட்களை இழந்திருக்கிறார்.
“என்னால் விண்ணுலகத்தின் இயக்கத்தைக் கணக்கிட முடியும், ஆனால் மனிதர்களின் பைத்தியக்காரத்தனத்தைக் கணக்கிட முடியாது.” என நியூட்டன் வருந்தியதாகச் சொல்கிறார்கள்.
மைசூர் மகாராஜா சர்.சி.வி.ராமனை கௌரவிக்கும் விதமாக 63 வைரங்கள் பதிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த வைரங்களின் ஒளிரும் பண்புகளை ராமன் ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கிறார். ராமனின் தனிப்பட்ட சேமிப்பில் 600க்கும் மேற்பட்ட வைரங்கள் இருந்தன என்கிறார்கள்.
ராமனின் மறைவுக்குப் பிறகு லோகசுந்தரி பத்து ஆண்டுகள் வாழ்ந்து, 1980 மே மாதம் காலமானார்.
20-குரோனர் பணத்தாளில் செல்மா லாகர்லாஃப் உருவம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை குறித்து எரிக் லெய்ஜோன்போர்க் இயக்கிய தொலைக்காட்சி திரைப்படமும் வெளியாகியுள்ளது.

ஜெர்மானிய-யூத எழுத்தாளரான நெல்லி சாக்ஸின் நீண்டகால நண்பரான செல்மா லாகர்லாஃப் சாக்ஸ் யூத வதை முகாமுக்குக் கடத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சாக்ஸையும் அவரது தாயாரையும் நாஜி ஜெர்மனியிலிருந்து ஸ்வீடனுக்கு வர அனுமதிக்குமாறு ஸ்வீடன் அரச குடும்பத்திடம் தனிப்பட்ட முறையில் வேண்டினார். இதன் காரணமாகச் சாக்ஸிற்குப் புகலிடம் கிடைத்தது. பின்னாளில் நெல்லி சாக்ஸ் தனது எழுத்துகளின் மூலம் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

செல்மா லாகர்லாஃப்பிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் தினமும் வந்து குவிந்தன. . இந்தக் கடிதங்களைக் கையாள ஆன்-மேரி என்ற உதவியாளரை வைத்திருந்தார்.. அன்றாடம் கடிதங்களுக்குப் பதில் அளிப்பதற்காக இரண்டரை மணி நேரம் செலவு செய்தார் என்கிறார் ஆன்மேரி..
1991ம் ஆண்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கபட்ட சிறுகோளிற்குச் செல்மா லாகர்லாஃப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உதவிய நூல்கள்
- CHANDRASEKHARA VENKATA RAMAN– A MEMOIR by A. Jayaraman
- Lady Lokasundari Raman — Reflections of Her Early Life and Times by Uma Parameswaran
- https://www.selmalagerlof.org/