காதலின் கரங்கள்

சியென்-ஹங் லியன் இயக்கிய Salli 2023ல் வெளியான தைவான் திரைப்படம்

தைவானின் கிராமப்புறம் ஒன்றில் கோழிப் பண்ணை வைத்திருக்கிறாள் ஹுய்-ஜுன். முப்பத்தியெட்டு வயதான அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆண் நண்பர்கள் எவரும் கிடையாது. வீடு, வேலை என அவளது உலகம் மிகச்சிறியது. கோழிகளுடன் நாட்களைச் செலவிடுகிறாள்.

தைபேயில் உள்ள ஒரு உணவகத்திற்காகக் கோழிகளை விற்பனை செய்து வருகிறாள். கோழிகளைப் பெற்றுப் போக வேனில் வருபவனைத் தவிர வேறு ஆட்களை அவளுக்குத் தெரியாது. அவளது தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நகரிலிருந்து அவளது சகோதரி மகளான சின் ரு என்ற பதின்வயதுப் பெண் வருகை தருகிறாள். அவள் ஒரு நாள் ஹுய்-ஜுன் செல்போனில் ஒரு ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பதிவிறக்கம் செய்து தருகிறாள். அதன் வழியே சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு பிடித்தமான ஆணுடன் பழகலாம் என்பதை அறிமுகப்படுத்துகிறாள்.

நேரில் எவரோடும் பேசத் தயங்கும் ஹுய்-ஜுன் இச் செயலியின் உதவியால் Salli  என்ற பொய்யான பெயருடன், பாரீஸில் வசிக்கும் ஒரு இளைஞனுடன் பழக ஆரம்பிக்கிறாள். செல்போன் அவளது வாழ்க்கையை மாற்றுகிறது.

மார்ட்டின் தன்னுடன் பழகும் இளம்பெண்ணுடன் ஜாலியாக அரட்டை அடிக்கிறான். புகழ்ந்து பாராட்டுகிறான்.  அந்த நட்பு மெல்லக் காதலாகிறது. இதனால் ஹுய்-ஜுனின் அன்றாட வாழ்க்கை திசை மாறுகிறது.

அவனுடன் உரையாடுவதற்காகத் தனது அன்றாடப் பணிகளை உதறித் தள்ளுகிறாள். அவளது உடைகள், ஒப்பனை யாவும் மாறுகின்றன. ஒரு நாள் சேமிப்பிலுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு அவனை நம்பி பாரீஸ் செல்வதற்கு முடிவெடுக்கிறாள்.

அதனை அவளது தம்பியும் உறவினர்களும் எதிர்க்கிறார்கள். அவள் நிச்சயம் ஏமாற்றப்படுவாள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் பிடிவாதமாக ஹுய்-ஜுன் கோழிப்பண்ணையை விட்டு தனது புதிய வாழ்க்கையைத் தேடி பயணம் மேற்கொள்கிறாள். அது அவளது முதல் விமானப்பயணம்.

பாரீஸில் அவள் காணும் வாழ்க்கை வேறுவிதமாக உள்ளது. மார்டினைக் கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. பாரீஸ் நகரம் அவளுக்கு வாழ்வின் உண்மையான முகத்தை அடையாளம் காட்டுகிறது. ஹுய்-ஜுனின் காதல் என்னவானது என்பதைப் படம் விவரிக்கிறது

ஒரு டேட்டிங் செயலியின் வழியே இளம்பெண்ணின் வாழ்க்கை திசைமாறிப் போய்விடுவதைப் படம் நிஜமாகச் சித்தரிக்கிறது. இது தைவானில் நடந்த நிகழ்வு என்றாலும் இந்தியா முழுவதும் இதே கதை வேறுவிதங்களில் நடந்தேறுவதைக் உணர முடிகிறது

ஹுய்-ஜுன் அந்தச் செயலியில் யாருடன் பழக ஆசை என்பதைத் தேர்வு செய்யும் காட்சிகள் வேடிக்கையானவை. நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாத அவளது ஆசைகளைச் செயலியின் வழியே சாத்தியமாக்குகிறாள். அதனைத் தனது புதிய சுதந்திரமாக நினைக்கிறாள். அச் செயலி அவளது இயல்பு வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. எந்த நம்பிக்கையில் மார்டினைக் காதலிக்கிறாள். எப்படி உறுதியாக அவனை நம்புகிறாள் என கேள்விகள் தோன்றினாலும் காதலிப்பதால் அப்படித்தான் நடந்து கொள்வாள் என்று நம் மனதின் மறுகுரல் பதிலும் தருகிறது.

ஹுய்-ஜுன் பாரீஸில் சந்திக்கும் பிரச்சனைகள். ஏமாற்றங்கள் அவளுக்குள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. முடிவில் தன்னைத் தானே கண்டறிந்து கொள்கிறாள். .

ஹுய்-ஜுனின் தம்பியிடம் அவனுக்குத் திருமணத்திற்கு அக்காவை அழைக்கக் கூடாது , அவள் ராசியற்றவள் என்று உறவினர்கள் சொல்கிறார்கள். அவனோ தனக்கு அக்கா தான் எல்லாமும், அவளது தலைமையில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுக்கிறான். இருவரின் பாசத்தையும் படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது

தம்பி வெய் ஹாங் மற்றும் சகோதரி மகளான சின் ரு இருவரும் செல்போன் செயலிகளின் உலகிற்குப் பழகியவர்கள். அவர்களுக்குச் செல்போன் என்பது உரையாடும் கருவியில்லை. ஒரு மாற்று உலகம். அதன் வழியே அவர்களின் ஆசைகள் நீளுகின்றன.

ஆனால் ஹுய்-ஜுன் செல்போனை உரையாடுவதற்கான சாதனமாகவும் குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காகவும் வைத்திருக்கிறாள். டேட்டிங் செயலி அவளுக்குப் புதிய கதவைத் திறந்துவிடுகிறது. புதிய கனவுகளை உருவாக்குகிறது.

ஷாங்காயில் வாழ்ந்து வந்த சின் ரு அவளது தந்தையின் மீதான கோபம் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி சிறிய கிராமத்திலுள்ள ஹுய்-ஜுன் வீட்டிற்குக் குடி வருகிறாள். பதின்வயது பெண்ணின் குழப்பம் மற்றும் நகர வாழ்க்கையிலிருந்து விடுபட முனையும் போது ஏற்படும் சிக்கல்களும் படத்தில் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன

கோழிக்கூண்டு என்பது அவளது கிராமத்து வாழ்க்கையின் அடையாளம். கலைகளின் நகரமான பாரீஸ் விடுதலையின் அடையாளம். இரண்டிற்கும் நடுவே அலைவுறுகிறாள் ஹுய்-ஜுன்

எளிமையான திரையாக்கம். ஹுய்-ஜுனாக எஸ்தர் லியு பின் யான் சிறப்பாக நடித்துள்ளார். கதையின் போக்கும். நிகழ்வுகளும் எளிதில் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும் நாம் ஹுய்-ஜுனிற்கு என்ன ஆகப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம். அவளது புதிய வாழ்க்கையை ரசிக்கிறோம். தைவானில் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதுடன் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது

0Shares
0