கடந்த பத்து ஆண்டுகளாக நோபல் பரிசு அறிக்கப்படும் போது விருது பெற்றவரின் புகைப்படத்திற்குப் பதிலாக ஓவியங்கள் இடம்பெறுகின்றன. அதுவும் பொன்னிறமும் கறுப்பு வெள்ளையும் கலந்த சித்திரங்களாக வெளியிடுகிறார்கள்., இவற்றை வரைபவர் நிக்லஸ் எல்மெஹத். 2012 முதல் நோபல் மீடியாவின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்

நோபல் பரிசு யாருக்கு வழங்கப்போகிறார்கள் என்ற தகவல் இவருக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் ரகசியம் காக்க வேண்டியவராக இருக்கிறார். இதற்காக இவருக்குச் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது
நோபல் கமிட்டி அதுவரை செய்தி நிறுவனங்கள் வழியாகக் கிடைக்கும் புகைப்படங்களையே முதன்மையான பயன்படுத்தி வந்தது. 2012ல் அதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாக இந்தத் தீர்வை நிக்லஸ் முன்மொழிந்தார். 2017-ல், அறிவிப்புகளுக்கான பிரதான நிறமாகப் பொன்னிறம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது; அது இன்று நிரந்தர அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது
நிக்லஸ் எல்மெஹத் வரைந்த நோபல் விருதாளர்களின் ஓவியங்கள் ஒன்றாகக் காட்சிக்கு வைக்கபடுகின்றன. உலகம் முழுவதும் இந்த ஓவியங்கள் அதிகாரப்பூர்வ செய்தியோடு இணைத்து வெளியிடப்படுவதால் பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைகிறது என்கிறார் எல்மெஹெட்
பொன்னிறம் என்பது மேன்மை, மரபு மற்றும் நோபல் பரிசின் ஒளிமயமான அடையாளத்தினைக் குறிப்பதாகவும் கறுப்பு மற்றும் வெள்ளை, அமைதி மற்றும் பிரகாசமான எண்ணத்தின் அடையாளமாகப் பயன்படுத்துவதாகவும் ஒரு நேர்காணலில் தெரிவிக்கிறார்

ஸ்வீடனில் நுண்கலை பயின்ற எல்மெஹெட் டிஜிட்டல் மற்றும் அச்சு வடிவமைப்பில் நிறைய அனுபவம் கொண்டவர். யாருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளதோ அவரது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்டு இந்தச் சித்திரங்களை உருவாக்குகிறார்.
புகைப்படங்களுக்கு மாற்று என்பதைத் தாண்டி நிலைத்த ஓவிய வரிசையாக இதனை நோபல் கமிட்டி கருதுகிறார்கள்.
நோபல் பரிசு பெற்றவருக்கு இந்த ஓவியத்தின் நகல்பிரதியை வழங்குவார்களா எனத் தெரியவில்லை.
இந்த ஓவியங்கள் குறித்து நோபல் பரிசு பெற்றவர்களிடமிருந்து எந்தப் பாராட்டும் இதுவரை கிடைத்ததில்லை என்கிறார் எல்மெஹெட். அது விசித்திரமான உண்மை
••