காதலின் துறவி

டி.ஹெச். லாரன்ஸ் ஆங்கில இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை.  தனது எழுத்துகளால் தொடர்ந்த சர்சையும் தணிக்கை கெடுபிடிகளும் எதிர்கொண்டவர். இவரது ரெயின்போ நாவல் தடை செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தபட்டவுடன்  இங்கிலாந்தை விட்டு தப்பி தன்மனைவியுடன் அமெரிக்கா சென்றார்.

பின்பு அங்கிருந்து மெக்சிகோ பயணமானவர். இந்த கொந்தளிப்பான நாட்களைப் பற்றிய திரைப்படமே Priest of Love படத்தை இயக்கியவர் Christopher Miles.

1912 ம் ஆண்டு லாரன்ஸ்  பிரைடா தியோபோனை சந்தித்தார். அவள் ஒரு பேராசிரியரின் மனைவி. அவர்கள் வீட்டிற்கு ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுக்க சென்ற லாரன்ஸ் பிரைடா மீது தீவிரமான காதல் கொண்டுவிட்டார். பிரைடா தன் மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு லாரன்ஸ் உடன் வீட்டை விட்டு வெளியேறவே இருவரும் பவேரியாவிற்குச் சென்றனார்.

பிரைடாவின் காதல் உன்மத்தமானது எனும் லாரன்ஸ் காதலியோடு தான் விரும்பிய நிலப்பரப்புகளில் அலைந்து திரிந்தார். ஒவியம் வரைவதில் ஆர்வமான அவர் ஆங்காங்கே தங்கி ஒவியம் வரைவதும் படிப்பதும் எழுதுவதும் நண்பர்களுடன் ஒன்றாக பயணம் செய்வதுமென நாட்களை கழித்தார். லாரன்ஸின் மனதில் எப்போதுமிருக்கும் பிம்பம் அவரது அம்மா.  அம்மாவின் ஆளுமையில் இருந்து தன்னால் மீறவே முடியாது என்று நம்பினார். அம்மாவிற்கு அவர் பெண்களுடன் பழகுவதில் விருப்பமில்லை. ஆகவே எந்தப்பெண்ணை எதிர் கொள்ளும் போது அவள் அம்மாவின் பிம்பத்தோடு ஒப்பிட்டுப்  பொருந்திய பிறகே அவளை லாரன்ஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்த மனப்போக்கின் சாயலே அவரது சன்ஸ் அண்ட் மதர்ஸ் நாவல். அதில் லாரன்ஸின் சொந்த வாழ்க்கை தான் கதையுருவம் கொண்டிருக்கிறது.

லாரன்ஸ்சும் பிரைடாவும் இரண்டு ஆண்டுகள் அமெரிக்கா இத்தாலி வெனிஸ் பிரான்ஸ் என ஒன்றாகச் சுற்றி வாழ்ந்தபிறகு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் தப்பியோடிய பயணமும் அதைத் தொடர்ந்த லாரன்ஸின் நாட்களுமே இப்படம்.

எழுத்தாளர்களைப் பற்றிய படங்களில் அவரது தோற்றம் கொண்ட நடிகரை அடையாளம் கண்டுபிடிப்பதே முதற்சவால். இப்படத்தில் அது கச்சிதமாக பொருந்தியுள்ளது. Ian McKellen அப்படியே லாரன்ஸின் நகல்உருவம் போன்று நடித்திருக்கிறார். முகபாவம், மற்றும் மனஉணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதம் இரண்டிலும் அது சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.  படத்தில் பிரைடாவாக நடித்திருப்பவர் Janet Suzman.

லாரன்ஸ் பயணம் செய்த அதே நகரங்கள், வசிப்பிடங்கள், நிலக்காட்சிகள் என யதார்த்தம் மீறாமல் படமாக்கபட்டிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. படத்தின் உரையாடல்களும் கூட லாரன்ஸின்  எழுத்துகளில் இருந்தே பெரும்பாலும் எடுத்தாளப்பட்டுள்ளது. பிரைடா லாரன்ஸின் நாட்குறிப்புகள், கடிதங்களை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட Harry T. Moore- A Priest of Love  பிரதியே இந்தபடத்தின் அடிப்படை கதை.

படப்பிடிப்பின் போது லாரன்ஸ் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் படப்பிடிப்பு தளத்திற்கு பார்வையிடுவதற்காக அழைத்து வரப்பட்டார். அவர் இயான் மெக்கெல்லனை நிஜமான லாரன்ஸ் என்று நினைத்து ஒடிவந்து கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டிருக்கிறார். அந்த அளவு படத்தில் லாரன்ஸின் தோற்றம் முழுமையாக உருவாக்கபட்டிருந்தது.

உள்ளுற நோய்மையும் மனஉளைச்சலும் கொண்ட லாரன்ஸ் ஒரு துறவியை போலவே அலைந்து திரிகிறார். காமம் மட்டுமே அவரது ஆறுதல். அது ஒரு கூட ஒரு தவிப்பை அடக்கி கொள்வதற்கான முயற்சியாகவே படத்தில் காட்டப்படுகிறது. லாரன்ஸீன் மெக்சிக பயணமும் அதை தொடர்ந்த காட்சிகளும் அற்புதமாக படமாக்கபட்டிருக்கின்றன.

லாரன்ஸின் முதல்காதலி ஜெசி. அவரை ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொண்டவள். அவளே . லாரன்ஸின் அம்மா அவரை ஒரு பள்ளி ஆசிரியராக மாற்ற முயற்சித்து கொண்டிருந்த நாட்களில் ஜெசி அவரை ஒரு எழுத்தாளராக அடையாளம் காட்டினாள். அவள் மீது லாரன்ஸ் தீவிர காதல் கொண்டிருந்தார். ஆனால் அவள் மீது பாலியல் ஈர்ப்பு உருவாகவில்லை. ஆகவே ஒரு இடைவெளி தானாக உருவானது. ஜெசி லாரன்ஸ் பாலுறவை வெறுக்கிறார் என்று நம்பினாள். ஆகவே அவரை விட்டு தானே விலகி செல்லத் துவங்கினாள். இந்த நிலையில் லாரன்ஸின் அம்மா இறந்துபோகவே மனசிதைவுற்ற அவர் ஜெசியோடு சண்டையிட்டு அவளைப் பிரிந்து போனார்

துக்கம் மனவேதனை என்று சோர்வுற்றிருந்த அவருக்கு  பயணம் மிக அவசியமானதாக இருந்தது. அப்போது தான் அவர் தனது முன்னாள் பேராசிரியர் எர்னெஸ்ட் வீக்லியை சந்தித்தார். எர்னெஸ்ட் தனது மனைவி பிரைடாவை அறிமுகம் செய்து வைத்தார். முதல்சந்திப்பிலே இங்கிலாந்தில் தான் சந்தித்த மிக அழகான பெண் அவளே என்று உருகிப்போனார். பிரைடா  மிகுந்த அறிவாளி. தனித்து வாழ விருப்பம் கொண்ட தைரியமான பெண். அவளுக்குத் திருமணத்திற்கு முன்பு காதலர்கள் இருந்தார்கள். அவள் லாரன்úஸôடு ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினாள். ஆனால் அது திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. லாரன்ஸ் மட்டுமே அதை நோக்கி அவளை இழுத்து வந்தார். லாரன்ஸ் மீதான அபரிமிதமான காதலால் தனது பிள்ளைகளை விட்டு வெளியேறினார் பிரைடா.

வசதியாக வாழ்ந்த அவளுக்கு லாரன்ஸ் உடன் வறுமையில் வாழ்வது கஷ்டமாக இருந்தது. அத்தோடு பிள்ளைகள் மீது எந்தவிதமான உரிமையில் இல்லாமல் போனது அவளை மனக்கஷ்டத்திற்கு உள்ளாக்கியது. அவள் லாரன்ஸ் மீது  அடிக்கடி கோபமாகி சண்டையிட்டாள். லாரன்ஸ் அவளது உடற்கவர்ச்சியின் காரணமாக அவளது அத்தனை வசைகளையும் தாங்கிக் கொண்டார் என்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு இங்கிலாந்தில் திருமணம் செய்து கொண்ட போது இரண்டு நண்பர்கள் மட்டுமே  உடனிருந்தனர்.

லாரன்ஸ் சிறுவயதிலே காசநோயின் அறிகுறி கொண்டிருந்தார். அது வளர்ந்து முற்றவே அவர் நோய்மையில்  அவதிப்படத் துவங்கினார். பிரைடாவோ வளமான எதிர்காலம் பற்றிய கனவில் இருந்தார். இந்த இருமுனைகளில் வாழ்க்கை சிக்கி தவித்து கொண்டிருந்தது  தனது நாற்பத்திநாலாவது வயதில் லாரன்ஸ் இறந்த போது ஒரு பறவை அடிபட்டு இறந்தது போன்று எளிமையாக யாவும் முடிந்துவிட்டது என்றே பிரைடா குறிப்பிடுகிறார்.

டி.ஹெச்.லாரன்ஸின் லேடி சாட்டர்லிஸ் லவர் (Lady Chatterley’s Lover)1928ம் ஆண்டு இத்தாலியில் வெளியானது. மிகவும் ஆபாசமான நாவல் என்று அதை இங்கிலாந்தில் வெளியிட மறுத்துவிட்டார்கள். 1960 ம் ஆண்டு வரை அந்த நாவலின் பிரதிகள் இங்கிலாந்தில் அச்சிட அனுமதிக்கபடவேயில்லை.

1964ம் ஆண்டு இந்தியாவில்  ஆபாசமான நாவல் என்று  லேடி சாட்டர்லி தடை செய்யப்பட்டது. இதைப் பதிப்பித்த ரஞ்சித் உதேசியின் மீது கிரிமினில் வழக்கு தொடர்ந்தது மகாராஷ்டிரா அரசு.  இந்த வழக்கு விசாரணையில் எதை ஆபாசம் என்று முடிவு செய்வது. நாவல்களை எப்படித் தணிக்கை செய்யமுடியும் என்பது பற்றி விரிவான வாதபிரதிவாதங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றன.

ஆபாசம் என்று நாம் கருதுவது ஆங்கிலேயர்களின் சட்டத்தில் பயன்படுத்தபடும் பிரயோகத்தையே, இந்தியாவில் பாலுறவு சிற்பங்களும், பிரதிகளும் அனுமதிக்கபட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் கூட அது சட்டரீதியான குற்றமல்ல மனசாட்சிக்குப் பயந்து கடவுளுக்கு பயந்து விலக்க வேண்டிய குற்றம் மட்டுமே.

எமிலி ஜோலாவும், ஆந்த்ரே ழீடும் அனுமதிக்கபடும் போது ஏன் லாரன்ûஸ மட்டும் தடைவிதிக்கபட வேண்டும். ஆங்கில நாவல்கள் குடும்பங்கள் படிப்பதற்காக எளிய கதையம்சத்திலிருந்து எப்போதோ விலகி வெளிவர துவங்கிவிட்டன. தாமஸ் ஹார்டியின் டெஸ் நாவல் தந்த அதிர்ச்சியே இதற்கான  சாட்சி. அவை எல்லாம் எப்படி இந்தியாவில் அனுமதிக்கபட்டு கல்லூரியில் பாடமாக வைக்கபட்டன. ஆகவே ஆபாசம் என்பதை முதலில் வரையறை செய்து கொண்டுவிட்டு பிறகு நாவலைத் தடை செய்வதை பற்றி பேசலாம் என்ற வாதம் நீதிமன்றத்தில் எழுந்தது.

இந்த விசாரணை முழுமையாக தனித்த ஒரு புத்தகமாகவே வெளியாகி உள்ளது. அதை தமிழ்படுத்தினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும் . லாரன்ஸ் எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே மதவாதிகளுக்குப் பயந்தும் கலாச்சாரத் தணிக்கைகளுக்குடன் போராடியுமே தன் எழுத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவரது குடும்பம் மதக்கட்டுபாடுகள் நிரம்பியது. அத்தோடு அன்றைய இலக்கிய சூழல் சுதந்திரமாக பாலின்பம் பற்றிய ஒரு சொல்லைக் கூட பயன்படுத்த அனுமதிக்கபடவில்லை. ஆகவே அவர் தனது படைப்புகளை வெளியிட ஒவ்வொரு பதிப்பகமாகத் தேடி அலைய வேண்டியிருந்தது. அது போலவே சொந்த வாழ்விலும் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் பாலின்ப வறட்சி மற்றும் ஒடுக்கம், கொந்தளிக்கும் காதல் அனுபவங்கள் அவரை எழுதத் தூண்டின.

பாலுறவை அவர் கொச்சையான ஒன்றாக காணவில்லை. மாறாக அதை ஆன்மவிடுதலையின் அடையாளமாகக் காண்கிறார். உடலும் மனதும் ஒன்றிணையும் தருணமது என்கிறார். லாரன்ஸ்ஸை தடைசெய்வதன் வழியே நாம் பொய்யான கலாச்சாரப் போர்வையால் நம் கண்ணை கட்டிக் கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டும் நாவல் தடை செய்யப்பட்டது. பிறகு சில ஆண்டுகளில் மறுவிசாரணை மற்றும் மறுமதிப்பீடுகளின் படி நாவல் விற்பனை செய்ய அனுமதிக்கபட்டது. காமம் குறித்த பகிரங்க விவாதங்கள், எழுத்துகள் சந்திக்கும் அத்தனை இடையூறுகளையும் லாரன்ஸின் எழுத்துகள் சந்தித்தன.

இந்தப் பரபரப்பின் காரணமாகவே இடைப்பட்ட காலத்தில் அதன் கள்ளபிரதிகள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகின. நேரு போன்ற பிரபலங்கள் துவங்கி சாதாரண வாசகர்கள் வரை அந்த நாவல் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். லேடி சாட்டர்லி லவ்வர் ஹிந்தி, வங்காளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் உடனடியாக வெளியானது. லாரன்ஸின் மற்றபடைப்புகளும் கூட அவசரமாக மொழியாக்கம் செய்யப்பட்டன. பாலுறவு பற்றி திறந்த உரையாடலுக்கான முதற்புள்ளியாக இந்த நாவல் அமைந்திருந்தது. தமிழில் இன்று வரை லாரன்ஸின் முக்கிய நாவல்கள். சிறந்த சிறுகதைகள் த மொழிபெயர்பபாகி வரவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது,

லாரன்ஸ்  பாலுறவை ஒரு கொண்டாட்டமாகக் கருதுகிறார். உடல்கள் ஒன்றையொன்று அறிவதும் புலன்களின் வழியே கிளர்ச்சி கொள்வதும் ஒரு மகிழ்வின் நாடகம். அதை  ஆணும் பெண்ணும் அறிந்து விழிப்புணர்வோடு நடத்தவேண்டும். உடல் உறுப்புகளைக் கொஞ்சி விளையாடி பாலின்பம் பெற வேண்டும் என்று விரிவாக எழுதும் லாரன்ஸ் லேடி சாட்டர்லியின் காமஉணர்வுகளையும் அவளது பாலின்ப வேட்கையும் பற்றி கட்டுபாடற்ற மொழியில் எழுதியிருக்கிறார். அதனால் அதை இரண்டாம்தரமான காமபிரதிகளோடு ஒப்பிட முடியாது.  இது பாலுறவு வேட்கையின் கொந்தளிப்பு நிலையை பற்றிய எழுத்து. அது எல்லா மனிதனுக்கும் இயல்பாக ஏற்படக்கூடியதே.

இப்படம் லாரன்ஸின் வாழ்வின் ஊடாக அவரது எழுத்தின் ஆதாரங்களை அடையாளம் காட்டுகிறது. கலைஞனின் மனப்போக்கு எப்போதும் விசித்திரங்களும் மூர்க்கங்களுமே நிரம்பியது என்பதற்கு இன்னொரு சாட்சியாக உள்ளது இத்திரைப்படம்.

0Shares
0