சிறுநாவல்கள்

நண்பர் வேலூர் லிங்கம் சிறந்த வாசிப்பாளர். தான் வாசித்த நூல்களைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்வார். இன்று காலை பேசிக்கொண்டிருக்கும் தடிதடியாக ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள மொழியாக்க நாவல்களைப் பலராலும் படிக்க முடியவில்லை. நூறு இருநூறு பக்கங்களுக்குள் உள்ள சிறிய வெளிநாட்டு நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள்  விரிவாக கட்டுரைகள் எழுதலாமே எனச் சொன்னார்

மறுவாசிப்பு செய்துவிட்டு அவசியம் எழுதுகிறேன் என்றேன். அதற்கு முன்னதாக வாசிக்க வேண்டிய சிறுநாவல்களின் பட்டியலை வெளியிடுங்கள். அது பலருக்கும் உதவக்கூடும் என்றார். நல்ல யோசனையாகவே பட்டது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நாவல்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவற்றில் பத்தோ இருபதோ தான் அதிகக் கவனத்தையும் வாசிப்பையும் பெற்றிருக்கின்றன. கவனிக்கபடாமல் போன புத்தகங்கள் நிறைய. அதில் பல பொக்கிஷங்கள்.
சிறுநாவல் வரிசையில் எனக்குப் பிடித்தமானவை நிறைய இருக்கின்றன. அதில் முக்கியமான பத்து சிறுநாவல்கள்.
நமக்கு நாமே அந்நியர்கள்.

அக்ஞேயா எழுதிய ஹிந்தி  நாவல். இரண்டே முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களின் மனவோட்டத்தில் வழியாகப் புறச்சூழலின் நெருக்கடியை வெளிப்படுத்தும் அற்புதமான நாவல். அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.
குறுகியவழி

ஆந்த்ரே ழீடு (André Gide). மிகச்சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். Strait is the Gate நாவலின் தமிழாக்கம்.. நிறைவேறாத காதலின் துயரை வெளிப்படுத்தும் அற்புதமான நாவல்.
குள்ளன்
நோபல் பரிசு பெற்ற பேர் லாகர் குவிஸ்டு நாவலின் தமிழாக்கம். மொழிபெயர்த்திருப்பவர் தி. ஜானகிராமன்
ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தனது அறிவால் ஒளிரும் ஒரு குள்ளனே கதையை முன்னெடுக்கிறான். நன்மைக்கும் தீமைக்கும், லட்சியத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்படும் மனப் போராட்டத்தை நாவல் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது.
நிலவு வந்து பாடுமோ
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜான் ஸ்டீன்பெக் எழுதியது. The Moon Is Down யின் தமிழாக்கம். மொழிபெயர்த்தவர் நா. தர்மராஜன். அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடற்கரை நகரம் ஒன்று ராணுவத்தால் கைப்பற்றபடுகிறது. ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள போது வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை நாவல் விவரிக்கிறது.
பட்டு

அச்லெசாண்ட்ரோ பாரிக்கோ (Alessandro Baricco) எழுதிய நாவல்,  பட்டுப் புழு  வியாபாரத்திற்காக ஜப்பானுக்குச் செல்லும் ஹெர்வே ஜான்கரின் பயண அனுபவமும் அங்குச் சந்திக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட உறவுமே நாவலாக விரிவு கொள்கிறது. காதலும் பிரிவும் மரணமும் ஒன்று கலந்த கவித்துவமான நாவல்.  மொழிபெயர்ப்பு கவிஞர் சுகுமாரன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மிக முக்கிய சிறுநாவல். சந்தியாகோ நாஸாரின் கொலையை மையமாக கொண்டு முன்பின்னாக ஊடுபாவும் நிகழ்வுகளை மார்க்வெஸ் சிறப்பாக விவரிக்கிறார். அசதாவும் அருமைச்செல்வமும் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். காலச்சுவடு வெளியீடு.
புலப்படாத நகரங்கள்
இதாலோ கால்வினோ எழுதிய அற்புதமான படைப்பு. தமிழாக்கம் செய்திருப்பவர் சா. தேவதாஸ். மன்னர் குப்ளாய்கானுக்கும் பயணி மார்கோ போலோவிற்கும் நடக்கும் உரையாடல் பாணியில் அமைந்த நாவல். புனைவின் வீச்சில் உருவாகும் கற்பனை நகரங்கள் வியக்கவைக்கின்றன. எதிர் வெளியீடு
ஜமீலா

சிங்கிஸ் ஐத்மாதவின் புகழ்பெற்ற காதல் கதை. திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள். தானியார் ஜமீலா காதல் மறக்கமுடியாதது. தமிழாக்கம் செய்திருப்பவர். பூ. சோமசுந்தரம்
ஹாஜி முராத்

லியோ டால்ஸ்டாயின் கடைசி நாவல். போராளியான தின் கடைசி நாட்களை விவரிக்கிறது. டால்ஸ்டாயின் மறக்கமுடியாத நாயகர்கள் வரிசையில் ஹாஜி முராத் முக்கியமானவர். இந்நாவலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. மெஹர் ப.யூ. அய்யூப் மொழியாக்கம் செய்துள்ளார்.
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்

பெல்ஜிய மொழியில் வெளியான நாவல். எழுத்தாளர் டயான் ப்ரோகோவான், கவிஞர் ஆனந்த் இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். இறந்த கணவரின் உடலோடு ஒரு நாளை கழிக்கும் மனைவியின் நினைவலைகளே நாவல். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தை நினைவுபடுத்தும் அற்புதமான படைப்பு. காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
0Shares
0