2020ல் வெளியான 200 Meters திரைப்படம் வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படமாகப் பார்வையாளர்களின் விருதைப் பெற்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பிரச்சனையைப் படம் புதிய கோணத்தில் சித்தரிக்கிறது

பாலஸ்தீன நகரமான துல்கர்மிலுள்ள முஸ்தபாவின் வீட்டில் படம் துவங்குகிறது. அவனது மனைவி சல்வா சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஆசையாக அவளை நெருங்கிக் கட்டிப்பிடிக்கிறான். அவளே குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விலக்கிவிடுகிறாள். அவன் தனது முதுகுவலியைப் பற்றிச் சொல்கிறான். இந்த உடல்நிலையோடு கட்டிட வேலை செய்து கஷ்டப்பட வேண்டாம் என்கிறாள் சல்வா. எத்தனை நாள் நீ தரும் பாக்கெட் மணியில் வாழுவது என்று ஆதங்கத்துடன் கேட்கிறான் முஸ்தபா.. அவளிடம் பதில் இல்லை. சல்வாவும் மூன்று குழந்தைகளும் ஒரு காரில் கிளம்புகிறார்கள்
இரவாகிறது. முஸ்தபா தன் வீட்டுப் பால்கனியில் நின்று தூரத்தில் தெரியும் வீடுகளைக் காணுகிறான். அதில் ஒரு வீட்டு ஜன்னலில் வெளிச்சம் காணப்படுகிறது. உடனே தன் வீட்டு விளக்கை எரியவிடுவதும் அணைப்பதுமாக ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறான். என்ன விளையாட்டு இது எனப்புரியாத போது தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அவனது பிள்ளைகள் பேசுகிறார்கள். அவர்களுக்குக் குட்நைட் சொல்கிறான்.
அப்போது தான் தொலைவில் உள்ள வீட்டில் அவனது மனைவி பிள்ளைகள் வசிப்பதை அறிகிறோம். முஸ்தபா இருப்பது பாலஸ்தீனத்தில் அவன் மனைவி பிள்ளைகள் வசிப்பது இஸ்ரேலில். இருவருக்கும் இடையில் இருநூறு மீட்டர் இடைவெளி. ஆனால் பெரிய தடுப்புச் சுவர் பிரித்திருக்கிறது.

சல்வா தனது வேலை காரணமாக இஸ்ரேலின் மேற்கு கரை நகரில் வசிக்கிறாள். ஆனால் முஸ்தபா இஸ்ரேலில் நிரந்தரமாகக் குடியிருக்கத் தேவையான அடையாள அட்டையைப் பெறவில்லை. அதற்கான விருப்பமும் இல்லை என்பதால் பாலஸ்தீனத்தில் குடியிருக்கிறான்.
அவன் தன் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. அவனது அம்மா படத்தின் ஒரே காட்சியில் தான் பேசுகிறாள். மற்றபடி அவள் ஒரு மௌனசாட்சியம் போலவே இருக்கிறாள். பாதுகாப்பு சோதனையின் போது அவன் விரல் ரேகை பொருந்தவில்லை. விரலைத் துடைத்து ஸ்கேன் செய்தாலும் ரேகை பொருந்த மறுக்கிறது. அவனது அகத்தில் உள்ள எதிர்ப்புணர்வின் அடையாளம் போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது
உண்மையில் முஸ்தபா குற்றவுணர்ச்சி கொண்டிருக்கிறான். அரசியல் பிரச்சனையின் காரணமாகத் தனது குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனைவி பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள். தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்ற குற்றவுணர்வு அவனிடம் காணப்படுகிறது.
இஸ்ரேலின் மேற்கு கரையிலுள்ள துல்கர்ம் நகரில் கதை நடக்கிறது. முஸ்தபா போல ஏராளமான பேர் எல்லையை ஒட்டி வசிக்கிறார்கள். அவர்களுக்கு முறையான அனுமதி அட்டை கிடைக்கவில்லை. பெறுவதும் எளிதானதில்லை.
இஸ்ரேலிய மேற்குக் கரை தடுப்புச்சுவர் எனப்படும் இந்தத் தடைச்சுவரை பயங்கரவாதத்திற்கு எதிரான சுவர் என்று இஸ்ரேல் விவரிக்கிறது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அதை இனவெறிச் சுவர் என்று அழைக்கிறார்கள். செப்டம்பர் 2000 இல் இந்தத் தடைச்சுவர் கட்டப்பட்டது. இஸ்ரேலின் மேற்குக் கரையின் பதினோறு மைலில் இந்தச் சுவர் உள்ளது. இந்தச் சுவரால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தடுப்புச் சுவரின் மூலம் ஒரு குடும்பம் பிரிக்கப்படுகிறது. ஆனால் அவர்களைச் செல்போன் இணைத்துவிடுகிறது. படம் முழுவதும் செல்போன் மூலமே முஸ்தபா குடும்பத்துடன் உறவாடுகிறான். அது போலவே வெளிச்சம் அவர்களை ஒன்று சேர்க்கிறது.

மிக நீண்ட அந்தத் தடுப்புச் சுவர் படத்தில் முழுமையாகக் காட்டப்படுவதில்லை. இருளில் காணும் போது அதன் பிரம்மாண்டம் தெரியவில்லை. ஏரியல் வியூ காட்சியின் போது தான் அதன் உயர்ந்த தோற்றத்தைக் காணுகிறோம். அதுவும் ரமி தப்பிச்செல்ல ஏறும் போது தான் அது எவ்வளவு பெரியதாகக் கட்டப்பட்டிருக்கிறது என்பதை நெருக்கமாக உணருகிறோம்.
சுவரைக் காட்டும் போதெல்லாம் வானமும் கூடவே என் கண்ணில் பட்டது. சுவர் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது. வானமோ சேர்த்து வைக்கிறது. ஒரே நிலவை. ஒரே சூரியனை. நட்சத்திரங்களைத் தான் இருவரும் காணுகிறார்கள். ஒரே இரவு தான் இருவருக்கும்.
ஒரு காட்சியில் தன்னுடன் வந்து பாலஸ்தீனத்தில் இருக்கலாமே என்கிறான் முஸ்தபா. தனது வேலை, பிள்ளைகளின் கல்வி இதற்காக இங்கே இருக்க வேண்டியுள்ளது. இதை விட்டுவிட்டு அங்கே வந்தால் நாம் எப்படி வாழுவது என்று கேட்கிறாள் சல்வா. அதற்கு முஸ்தபாவிடம் பதில் இல்லை.
தடுப்புச் சுவரைக் கடந்து இஸ்ரேலுக்குள் கள்ளத்தனமாக அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்கள் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு தந்திரமாக மக்களை அழைத்துப் போகிறார்கள். இதில் மாட்டிக் கொண்டால் சிறைவாசம்.
கட்டிட வேலை ஒன்றுக்காகத் தற்காலிக வேலை உத்தரவு பெற்று முஸ்தபா எல்லையைக் கடந்து போகும்போது பாதுகாப்புச் சோதனை கடுமையாக இருக்கிறது. அந்தக் காட்சியில் முட்டிமோதும் ஆட்களையும் கம்பிவேலியின் இடைவெளியில் ஏறி குதிப்பவர்களையும் காணும் சூழலின் நெருக்கடியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது
பாதுகாப்புச் சோதனையில் அவனது விரல் ரேகை பொருந்த மறுக்கிறது. ஆனால் கையில் வைத்துள்ள உத்தரவு காரணமாக உள்ளே அனுமதிக்கப்படுகிறான்.

கட்டிட வேலையின் போது தேநீர் கொண்டுவருகிறவனின் கனவுகளும் அவர்கள் ஒன்றாக ஆடிப்பாடுவதும் அழகான காட்சி.
நண்பனுடன் கட்டிட வேலையைச் செய்துவிட்டு தன் குடும்பத்தைத் தேடிப்போகிறான் முஸ்தபா. தனது மகன் பள்ளியில் சகமாணவன் ஒருவனால் தாக்கப்பட்டதை அறிந்து வருத்தமடைகிறான். மனைவி இதைப் பெரிது பண்ண வேண்டாம் என்கிறாள். பாலஸ்தீனன் என்ற அடையாளம் காரணமாகவே தன் மகன் தாக்கப்படுகிறான் என்பது முஸ்தபாவிற்கு வேதனை அளிக்கிறது
வேலை முடிந்து எல்லை கடந்து தனது வீடு வந்து சேருகிறான். அடுத்தமுறை பணிக்குச் செல்லும் போது அவனது அடையாள அட்டையைப் புதுப்பிக்க வில்லை என்று இஸ்ரேலில் நுழைய அனுமதி கிடைக்கவில்லை
இந்நிலையில் மனைவி அவசரமாக அவனைத் தொலைபேசியில் அழைத்து மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாள். பதற்றமான முஸ்தபா எப்படியாவது இஸ்ரேலினுள் செல்ல வேண்டும் எனத் துடிக்கிறான்

அவனிடம் முறையான அனுமதிச்சீட்டு கிடையாது. மருத்துவக் காரணங்களுக்கான அனுமதிச் சீட்டு பெறக் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் கள்ளத்தனமாக அழைத்துப் போகிறவர்களின் உதவியை நாடுகிறான். அதிகப் பணம் கொடுக்கிறான்.
இருநூறு மீட்டர் தொலைவைக் கடக்க அவன் இருநூறு மைல்கள் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்தப் பயணத்தில் அவனது காரில் ஜெர்மனியைச் சார்ந்த அன்னா என்ற ஆவணப்பட இயக்குநர் பயணம் செய்கிறாள். அவள் உண்மை நிகழ்வுகளை ரகசியமாகப் படம் எடுக்க முயல்கிறாள். முஸ்தபாவிற்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வரும் என்பதால் அவளுடன் உரையாடுகிறான். தன்னை அவள் படம் எடுக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறான். சக பயணிகளாகக் கிஃபா , பதின்வயதுள்ள ரமி உடன் வருகிறார்கள். ரமி மீது முஸ்தபா காட்டும் அன்பு ஒரு சகோதரனைப் போலவே வெளிப்படுகிறது.
எல்லை கடந்து அழைத்துச் செல்கிறவர்கள் பணத்திற்காக என்னவிதமான வேலைகளைச் செய்கிறார்கள் என்பது திகைப்பூட்டுகிறது. பிரச்சனைக்கு மேல் பிரச்சனையைச் சந்திக்கும் முஸ்தபா எப்படியாவது தன் மகனை காண இஸ்ரேலுக்குள் போய்விட வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருக்கிறான். முடிவில் இந்தப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்கள்.
கடத்தல்காரர்களுடன் காரில் முஸ்தபா பயணம் செய்யும் போது மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம்.

முதற்காட்சியில் முஸ்தபா இயல்பான ஆசை கொண்ட கணவனாக அறிமுகமாகிறான். வேலைக்குச் செல்லும் போது எப்படியாவது தன் குடும்பத்தைத் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். ஆனால் கள்ளத்தனமாக எல்லைகடந்து போக முற்படும் போது அவனது இயல்பு மாறிவிடுகிறது. காரில் அவன் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை.
மனைவியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டே வருகிறான். நெருக்கடியான சூழலைச் சரியாகக் கையாளுகிறான். தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற நிலையில் தான் வெடித்து எழுகிறான்.
அவன் ஒருவன் தான் அன்னாவை நிஜமாகப் புரிந்து கொள்கிறான். அன்னாவிற்காக அவன் பரிந்து பேசும் இடம் சிறப்பானது. சுற்றுலாப் பயணி போல அறிமுகமாகி உண்மையைத் தேடும் ஆவணப்படக்கலைஞரான அன்னாவின் கதாபாத்திரம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அலி சுலிமான் முஸ்தபாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்
இயக்குநர் நைஃபேயின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளிலிருந்து படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இரவில் செல்லும் பயணக்காட்சிகளும். பாதுகாப்புச் சோதனையில் ஏற்படும் நெருக்கடிகளும் வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் முஸ்தபாவின் கூடவே பயணம் செய்கிறோம். அவன் கண்களின் வழியாக இரவைக் கடந்து போகிறோம்.
கடைசிக்காட்சியில் முஸ்தபா வீட்டில் எரியும் வண்ணவிளக்குகளும் அவனது புன்னகையும் அவனது மாறாத நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளமாக மாறுகிறது.
இயக்குநர் நைஃபேயின் முதற்படமிது. இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை குறித்து நிறையப் படங்கள் வந்துள்ளன. ஆனால் இப்படி ஒரு தடுப்புச் சுவரை முன்வைத்து அதிகார அரசியலைப் பேசும் படம் ஒன்றை இயக்கியது மிகுந்த பாராட்டிற்குரிய விஷயம்.