மகிழ்ச்சியின் தூதுவன்

Autumn of the Magician என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் , டொனினோ குவாரா பற்றியது.

இவர் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் நெருக்கமான நண்பர். அன்டோனியோனி, பெலினி பிரான்செஸ்கோ ரோஸி, தியோ ஆஞ்சலோபோலஸ் படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியர். ஓவியர், கவிஞர், சிற்பி. கட்டிடக்கலைஞர், சமையற்கலைஞர். இசைக்கலைஞர், நாடகாசிரியர், தோட்டக்கலை நிபுணர், நாவலாசிரியர், பள்ளி ஆசிரியர், வேட்டைக்காரன், தியானி, நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். லியோனார்டோ டாவின்சியோடு தான் இவரை ஒப்பிட வேண்டும் என்கிறார்கள்.

மண்ணில் செய்து வைத்த பறவை உருவங்கள். ஒரு நாள் சிறகடித்துப் பறந்து சென்றுவிட்டன. இது வெறும் கற்பனையில்லை. மாயம். உங்களால் அன்பு செலுத்த முடியுமென்றால் பறவை பொம்மைகளுக்கும் உயிர் உண்டாகும் என்கிறார் டொனினோ.

தார்க்கோவஸ்கியுடன் நெருங்கிப்பழகிய டொனினோ அவர் இத்தாலியில் படம் இயக்குவதற்கு மிகவும் துணை செய்திருக்கிறார். இந்த நாட்களில் அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு Voyage in Time என்ற படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது

டொனினோ சில காலம் ரஷ்யாவில் வசித்திருந்திருக்கிறார். அப்போது தான் நேரில் கண்ட தார்க்கோவஸ்கி பற்றி ஒரு விஷயத்தை ஒரு நேர்காணலில் டொனினோ குறிப்பிடுகிறார். அதாவது ரஷ்யாவிலிருந்த தனது பூர்வீக நிலத்தில் விவசாயப்பணிகள் செய்வதில் தார்க்கோவஸ்கி மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். விவசாய வேலைகளில் அவருக்கு உதவி செய்வதற்குக் கிராமத்து விவசாயி ஒருவர் வருவது வழக்கம். ஒரு நாள் அவர் வேலைக்கு வரவில்லை. இரண்டு நாளின் பின்பு அந்த விவசாயியை தார்க்கோவஸ்கி நேரில் சந்தித்த போது இதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. விவசாயியும் ஏன் தான் வேலைக்கு வரவில்லை என்று காரணம் சொல்லவில்லை.

இதைப்பற்றி டொனினோ வியப்புடன் கேட்டதற்குத் தார்க்கோவஸ்கி சொன்ன பதில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்வதற்கும் பொருத்தமானது.

“ரஷ்யாவில் இப்படித்தான் ஒருவர் திடீரென மன மாற்றம் கொண்டுவிடுவார். எதனால் அப்படி மனமாற்றம் கொண்டார் என்பதை அவர் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டியதில்லை“

தார்க்கோவஸ்கியின் கதாபாத்திரங்களில் இந்தத் தன்மை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன். அந்த விவசாயி தனது நிலத்தில் வேலைக்கு வரவில்லை என்பதால் அவருடனிருந்த உறவை தார்க்கோவஸ்கி துண்டித்துக் கொள்ளவில்லை. முன்னைப் போலவே அவருடன் அன்பாகவே பழகியிருக்கிறார்.

எமிலியாவில் தானும் தார்க்கோவஸ்கியும் அமர்ந்து பேசிய இருக்கையில் இப்போதும் அவர் அரூபமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் டொனினோ

இந்தப் படத்தில் நாம் டொனினோவின் பன்முகத்தன்மையைக் காணுகிறோம்.

உண்மையில் அவர் ஒரு சிறிய தனித்துவமான கிரகம் ஒன்றைப் போலிருந்தார். சொந்த கிராமமான எமிலியாவில் விசித்திரங்கள் நிரம்பிய தனது உலகைத் தானே உருவாக்கிக் கொண்டார். அவரது நண்பர்கள் உலகின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள். அவரைக் காண தலாய் லாமா வந்திருக்கிறார். ஓய்வான நாட்களில் குழந்தைகளுக்குப் பொம்மைகள். பட்டங்கள் செய்து கொடுத்து விளையாடுகிறவர். இப்படி டொனினோ குவாராவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். உண்மையில் அவர் ஒரு விசித்திரக்கலைஞர் இத்தாலியின் ஹோமர் என்று அழைக்கலாம் என்கிறார் கவிஞர் டேவிட் மிலானி.

டொனியோ பாசிச ஆட்சியை எதிர்த்தவர். இதனால் நாடு கடத்தப்பட்டு 1944 இல் ட்ராய்ஸ்டார்பில் உள்ள ஒரு முகாமில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் அந்த முகாமிலிருந்த நாட்களில் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய திரைக்கதை ஆசிரியர்களில் இவரே முதன்மையானவர். இவர் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் அத்தனை பேரும் உலகப்புகழ் பெற்றவர்கள். சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆர்மீனிய வம்சாவழியில் வந்த லோராவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்த போதும் காதல் அவர்களை ஒன்று சேர்ந்தது.

.1989 ஆம் ஆண்டில், மாண்டெஃபெல்ட்ரோ பகுதியில் உள்ள பழைய மாலடெஸ்டா நகரமான பென்னாபில்லியில், அவர் நீண்ட கோடை விடுமுறையைக் கழித்தார். அங்கே வசித்த நாட்களில் அவர் உருவாக்கிய கலைக்கூடம் விசித்திரமானது.

இது போலவே எமிலியாவில் பெரிய தோட்டத்துடன் உள்ள அவரது வீடு ஒரு திறந்தவெளி கலைக்கூடம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தோட்டத்தில் நிறையச் சிற்பங்கள். அதில் பெலினியும் ஒரு சிற்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறார். தார்க்கோவஸ்கியோடு அமர்ந்து பேசிய இருக்கையில் வெயில் படருகிறது.

இயக்குநர் பரஜினேவ்வின் திரைப்படங்களை மிகவும் விரும்பிய டொனினோ அவர் உருவாக்கியது போலவே காட்டுப்படிமங்களை உருவாக்கக் கூடியவர். இருவரும் சந்தித்துக் கொண்ட போது நீண்டகாலம் பழகிய நண்பர்கள் போலவே உணர்ந்தார்கள். டொனினோ ஆர்மீனியாவில் காலம் வெளியாக மாறியுள்ளது என்கிறார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திரை வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதிய டொனினே மூன்றுமுறை ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்

வெனிஸ் திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார்.

சந்தோஷத்தை உருவாக்குவதே தனது வேலை. சினிமா இலக்கியம் ஓவியம் சிற்பம் விளையாட்டு என எல்லாவிதங்களிலும் மகிழ்ச்சியைத் தான் பகிர்ந்து கொள்கிறேன். எனது விருப்பத்துடன் இணைந்து பயணம் செய்யும் நல்ல நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். அதுவே எனது வெற்றிக்கான காரணம்.

இன்று என் நண்பர்களில் பலர் மறைந்துவிட்டார்கள். பெலினி இப்போது இல்லை. ஆனால் அவருடன் ஒன்றாகப் பேசி நடந்த வீதி அப்படியே இருக்கிறது. அன்டோனியோனி இல்லை ஆனால் அவருடன் பயணம் செய்த படகு அதே கரையில் நிற்கிறது. நானும் தார்க்கோவஸ்கியும் நிறையப் பேசினோம். விவாதித்தோம். அவரும் இப்போது இல்லை. அவருடன் இருந்த போது ஒளிர்ந்த சூரியன் அதே இடத்தில் இன்றும் ஒளிர்கிறது. நானும் ஒரு நாள் இயற்கையின் பகுதியாகி இருப்பேன். அப்போது இந்த வெளிச்சத்துடன் என்னையும் நினைவு கொள்வார்கள் என்கிறார் டொனினோ

அவர் உருவாக்கிய தோட்டமும் கலைக்கூடங்களும் இன்று முக்கியச் சுற்றுலா ஸ்தலங்களாக உருமாறியுள்ளன. டொனினோ கடைசிவரை ஒரு சிறுவனின் கனவுகளுடன் வாழ்ந்து வந்தார். அது தான் அவரது மகிழ்ச்சியின் அடையாளம் என்கிறார் அவரது மனைவி லோரா

டொனினோ பற்றி மூன்று ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவர் தார்க்கோவஸ்கியுடன் செய்த நேர்காணலும் உள்ளது.

படத்தின் வழியே இளமஞ்சள் வெயிலைப் போல இதமான நெருக்கம் தருகிறார் டொனினோ.

**

0Shares
0