எனது புத்தகங்கள் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மொத்தம் 27 மில்லயன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அதனால் என்ன ? அவை அனைத்தும் வேகமாக மறைந்துவிடும், ஏனெனில் புதிய புத்தகங்களின் வெள்ளம் எல்லாவற்றையும் மூழ்கடித்து, முன்பே எழுதப்பட்டவற்றை வேகமாக அடித்துச் செல்கிறது. இன்று ஒரு புத்தகக் கடையில் உள்ள ஒரு புத்தகத்திற்கு, சிறிதளவு தூசி படிவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை. நாம் இப்போது நீண்ட காலம் வாழ்கிறோம் என்பது உண்மைதான் – ஆனால் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் ஆயுட்காலமும் மிகவும் குறைந்துவிட்டது. இது வருத்தமளிக்கிறது, ஆனால் இந்தச் செயல்முறையை யாராலும் தடுக்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் மிக வேகமாக அழிந்து கொண்டிருப்பதால், எதற்கும் நம்மால் உண்மையாக இருக்க முடிவதில்லை.
ஸ்டானிஸ்லாவ் லெம்

போலந்து எழுத்தாளரான ஸ்டானிஸ்லாவ் லெம் சோவியத் யூனியனில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். அவரது அறிவியல் புனைகதைகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால் ரஷ்யனில் மொழிபெயர்க்கபட்டுள்ளன. லெம்மின் படைப்புகளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு ஏழு முதல் எட்டு மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அவரை எழுத்தாளர்கள் வரிசையில் மட்டுமின்றித் தத்துவாதிகளின் வரிசையிலும் வைத்துக் கொண்டாடியது ரஷ்யா. .
ரஷ்ய அறிவியல் புனைகதைகளுக்கு லெம் பெரும் ஆதர்சமாக இருந்தார். அதற்குக் காரணம் அவர் தனது கதைகளின் ஊடுபிரதியாக வைத்திருந்த அரசியல் விமர்சனம் மற்றும் வியப்பூட்டும் கற்பனையாகும்.
பிரபஞ்சத்தில் மனிதகுலத்தின் இருப்பும் இடமும் என்னவென்பது குறித்த லெம்மின் புனைவுகள் பிரமிப்பூட்டக்கூடியவை. .
சோவியத்தின் கடுமையான தணிக்கை காரணமாக அயல் மொழிப் படைப்புகள் ரஷ்யாவில் வெளியாவதில் சிரமமிருந்த காலத்தில் கூட லெம் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். கொண்டாடப்பட்டார். லெம் சோவியத் ஒன்றியத்திற்குச் சென்று தனது வாசகர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரே தார்க்கோவெஸ்கி லெம்மின் சோலாரிஸ் நாவலை படமாக்க முன்வந்த போது அவரைச் சந்திக்க ரஷ்யாவிற்குச் சென்றார் லெம். தார்க்கோவெஸ்கி எழுதிய திரைக்கதையை வாசித்தார். அதில் விண்வெளி மற்றும் சோலாரிஸ் கிரகத்தை விடவும், பூமி மற்றும் அதன் தத்துவ விஷயங்களில் தார்க்கோவ்ஸ்கி அதிக ஆர்வம் கொண்டிருந்ததை லெம் விரும்பவில்லை. ஆகவே கருத்துமுரண்பாடு காரணமாகச் சண்டையிட்டுப் பிரிந்தார்..
திரைப்படம் வெளியான போது அப்படம் தனது நாவலை அடிப்படையாகக் கொண்டதில்லை மாறாகக் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் தழுவலில் எழுதப்பட்ட திரைக்கதையைக் கொண்டிருக்கிறது எனக் கேலி செய்தார் லெம்.
தார்க்கோவெஸ்கியின் திரைப்படம் சர்வதேச அளவில் பெரும்புகழ் பெற்றதோடு ரஷ்யாவின் மகத்தான திரைப்படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இன்று ரஷ்யாவில் சோலாரிஸ் விளைவு என்ற புதுச் சொல் உருவாக்கபட்டிருக்கிறது. இறந்து போன உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆவிகளைக் காண்பது மற்றும் அவற்றுடன் உரையாடுவது என்ற நிகழ்வைக் குறிப்பதற்கு அச்சொல் பயன்படுத்தபடுகிறது
தார்கோவெஸ்கியின் படம் ஏற்படுத்திய புகழின் காரணமாக லெம்மின் நாவல்கள் விற்பனையில் பெரிய சாதனை புரிந்தன. 1987-ஆம் ஆண்டின் ‘ சோலாரிஸ் / தி மெகல்லன் நெபுலா’ தொகுப்பு நான்கு லட்சம் பிரதிகளும், 1988-ஆம் ஆண்டின் ‘சோலாரிஸ் / தி இன்வின்சிபிள் / தி ஸ்டார் டைரீஸ்’ தொகுப்பு ஆறு லட்சம் பிரதிகளும் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள்.
சமீபத்தில் ஸ்டானிஸ்லாவ் லெம்மின் முழுமையான படைப்புகள், எழுநூறு பக்கங்கள் கொண்ட இருபது தொகுதிகளாக ரஷ்யமொழியில் வெளியிடப்பட்டுள்ளன . உண்மை என்னவென்றால், போலந்து மொழியை விட ரஷ்ய மொழியில்தான் லெம்மின் படைப்புகள் அதிகம் வாசிக்கபட்டுள்ளன
லெம் என்றொரு எழுத்தாளரே கிடையாது. அது லூனார் எக்ஸ்கர்ஷன் மாட்யூல் (LEM) என்பதன் முதல் எழுத்துக்களைப் பயன்படுத்தும் ஒரு கணினி என்றொரு வதந்தி பரவியிருந்தது. அது குறித்து லெம்மிடம் கேட்டபோது அதைச் சில விமர்சகர்கள் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்று சிரிக்கிறார்.
தனது நேர்காணல் ஒன்றில் லெம் குறிப்பிடும் விஷயங்கள் அவரது ஆளுமையின் சான்றாக உள்ளன
நான் ஒருபோதும் நேரத்தைக் கொல்லப் படிப்பதில்லை. நேரத்தைக் கொல்வது என்பது ஒருவரின் மனைவியையோ அல்லது குழந்தையையோ கொல்வதற்குச் சமம்.எனக்கு நேரத்தை விட விலைமதிப்பற்றது வேறு எதுவும் இல்லை.
நான் என் புத்தகங்களுக்கு விளக்கம் அளிப்பதில்லை – அந்தப் பணியை வாசகரிடமே விட்டுவிடுகிறேன். மேலும், நான் ஒருபோதும் முழுப் புத்தகத்திற்குமான திட்டவரைவுடன் என் எழுதும் மேசையில் அமர்ந்ததில்லை
தொழில்நுட்பத்தின் அற்புதங்களை மக்கள் தங்கள் அருவருப்பான செயல்களுக்கு, தீமைகளுக்குப் பயன்படுத்தும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்களைப் பாருங்கள். இணையம் அறிவுபரிமாற்றத்திற்கும், அறிவியல் தரவுகளை விரைவாகப் பரிமாறிக்கொள்ளவும், மனிதத் தொடர்பினை எளிதாக்கவும் உருவாக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. இன்றோ அது மோசமான பணிகளுக்கான ஆதாரகளமாகச் செயல்படுகிறது
இங்கே பணம் எல்லாவற்றையும் ஆளுகிறது. பொருளாதாரம் கலையின் மதிப்பீட்டை தீர்மானிக்கிறது – சில சமயங்களில் ஒரு புத்தகத்தில் “ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன” போன்ற முத்திரைகளை நீங்கள் காணலாம். அது என்ன வகையான விளம்பரம்? ஒரு மில்லியன் மக்கள் ஒரு புத்தகத்தை வாங்கியதற்காக மட்டும் நான் அதை வாங்க ஒரு புத்தகக் கடைக்கு ஓட வேண்டுமா? எனக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்கவில்லை

சோலாரிஸ் நூலின் கடைசி அத்தியாயம் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு எழுதப்பட்டது. என் கதாபாத்திரத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாததால், அந்த நாவலை நான் ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. இன்று, நாவலில் கடைசியாக ‘ஒட்டப்பட்ட’ அந்த ‘இணைப்பை’ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், இவ்வளவு நீண்ட காலமாக என்னால் ஏன் அதை முடிக்க முடியவில்லை என்பதையும் விளக்க முடியவில்லை.
எனக்கு நினைவிருப்பது எல்லாம், முதல் பகுதி ஒரே மூச்சில், சரளமாகவும் மிகவும் வேகமாகவும் எழுதப்பட்டது என்பதும், பிற்பகுதி சிறிது காலம் கழித்து முடிக்கப்பட்டது என்பதும்தான். நான் எழுதத் தொடங்கும் போது, கதையின் முழுமையான ஒரு வரைவு என்னிடம் இருந்ததில்லை; அதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக, முடிந்தவரை வேகமாக எழுத முயற்சிப்பேன். நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன், இடைவெளியான நாட்களுக்குப் பின்பு கடைசியில் முடிவு தானாகவே நடந்தது.
அறிவியலுக்கும் இலக்கியத்திற்கும் வேறுவேறு நோக்கங்கள் உள்ளன. உலகம் எவ்வாறு இயங்குகிறது. அதன் ஆதார, அடிப்படை கட்டமைப்பு எவ்வாறு உள்ளது. உருவாக்கபடுகிறது என்று காட்ட அறிவியல் முயல்கிறது; மேலும், இந்த விஷயங்களில் அறிவியலிடம் கேட்கப்படும் எந்தக் கேள்விகளும் மாறிக்கொண்டே இருக்கும் பதில்களையே கொண்டிருக்கின்றன.
மறுபுறம், இலக்கியமோ பதிலில்லாத கேள்விகளை எழுப்புகிறது.. அது புரிந்துகொள்ளப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத சிக்கல்களைக் கவனப்படுத்துகிறது. வெறும் கதையை மட்டும் என்னால் எழுத இயலாது. மனித குலம் குறித்த எனது ஆழ்ந்த புரிதல்களை, சந்தேகங்களை, சாத்தியங்களை எழுத்தின் வழியே வெளிப்படுத்துகிறேன். ஆகவே எனது நாவல்கள் பல்வேறு ஊடுஇழைகள் கொண்டிருக்கின்றன
••