Moscow Does not Believe in Tears சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற சோவியத் திரைப்படம். மனதைத் தொடும் சிறந்த திரைப்படம்

1979ல் வெளியான இப்படத்தை விளாடிமிர் மென்ஷோவ் இயக்கியுள்ளார். மூன்று இளம்பெண்களின் நட்பையும் வாழ்க்கை மாற்றங்களையும் பேசும் இப்படம் மாஸ்கோவிலுள்ள ஒரு தொழிலாளர் வசிப்பிடத்தில் துவங்குகிறது.
அந்தக் கால மாஸ்கோ நகர வாழ்க்கை, குடியிருப்புகள், வணிகவீதிகள். புதிய தொலைக்காட்சி சேனல், தொழிற்சாலை விரிவாக்கம் என உருமாறிக் கொண்டிருந்த சோவியத் வாழ்க்கையைப் படம் பதிவு செய்திருக்கிறது.
கத்ரீனா, லியுட்மிலா, அன்டோனினா என்ற மூன்று இளம் பெண்களும் தொழிலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். கத்ரீனா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தபடியே கல்லூரியில் சேர்ந்து வேதியியல் படிக்க விரும்புகிறாள். அதற்கான நுழைவுத்தேர்வில் அவளால் வெற்றியடைய முடியவில்லை.
லியுட்மிலா ஒரு பேக்கரியில் வேலைசெய்கிறாள். வசதியான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று கனவு காணுகிறாள்.

கட்டுமானத் தொழிலாளியான அன்டோனினா தன்னோடு பணியாற்றும் அமைதியான இளைஞன் நிக்கோலாயுடன் நெருங்கிப் பழகுகிறாள். அவனுக்குச் சொந்த வீடு உள்ளது என்பதாலே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்.
இவர்கள் தங்கியுள்ள விடுதி நிர்வாகி இளம்பெண்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பை கையாளும் விதம் வேடிக்கையானது. லியுட்மிலா தன்னை வசதியானவள் போலக் காட்டிக் கொள்ள நிறையப் பொய் சொல்கிறாள். மோசமாக நடிக்கிறாள். மாஸ்கோவில் தனக்குப் பெரிய அதிர்ஷடம் கிடைக்கப்போகிறது என நம்புகிறாள்.
ஒரு நாள் கத்ரீனாவின் வசதியான மாமா வெளியூர் பயணம் செல்லவே அவரது வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளுடன் லியுட்மிலாவும் சேர்ந்து கொள்கிறாள். அந்த வீட்டில் பணக்காரப் பெண்கள் போல இருவரும் நடிக்கிறார்கள்.
ஒரு இரவு விருந்திற்கு வசதியான, அதிகாரமிக்க ஆண்களை வரவழைக்கிறாள் லியுட்மிலா. அவர்களில் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சகல வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதே அவளது கனவு. அந்த அழைப்பை ஏற்று சிலர் வருகை தருகிறார்கள். அதில் ஒருவன் புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரனான செர்ஜி. மற்றவன் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப்பதிவாளரான ருடால்ஃப் . மூன்றாவது நபர் வயதானவர். அந்த இரவு விருந்தில் பெரிதும் ஏமாற்றமடைபவர் வயதானவரே.
ருடால்ஃப் உடன் நெருங்கிப் பழகும் கத்ரீனா கர்ப்பமாகிறாள். தன்னால் அவளைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆகவே கர்ப்பத்தைக் கலைத்து விடும்படி சொல்கிறான் ருடால்ஃப். அவனது அம்மா கத்ரீனாவைத் தேடி வந்து மிரட்டுகிறாள். அவமானப்படுத்துகிறாள்.
இந்த நெருக்கடிக்கு எதிர்ப்பாகக் கத்ரீனா குழந்தையைப் பெற்று வளர்ப்பதென முடிவு செய்கிறாள். இதற்கு அவளது தோழிகள் உதவி செய்கிறார்கள்.

அன்டோனினா தனது காதலன் நிக்கோலாயினைத் திருமணம் செய்து கொள்கிறாள். விளையாட்டுவீரன் செர்ஜியை லியுட்மிலா மணந்து கொள்கிறாள். கைக்குழந்தையுடன் புதிய வாழ்க்கையைத் துவக்குகிறாள் கத்ரீனா.
காலம் மாறுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு கத்ரீனா ஒரு பெரிய தொழிற்சாலையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறாள் . சொந்தமாகக் கார் வைத்திருக்கிறாள். தனது பதின்வயது மகளுடன் ஒரு நல்ல குடியிருப்பில் வசிக்கிறாள். சிறந்த நிர்வாகியாகச் செயல்படுகிறாள்.
செர்ஜி விளையாட்டில் தோற்று குடிகாரனாகிப் போகிறான். லியுட்மிலாவின் வாழ்க்கையில் எந்தச் சந்தோஷமும் இல்லை. லியுட்மிலா, செர்ஜியை விவாகரத்து செய்துவிடுகிறாள்
அன்டோனினா எளிய வாழ்க்கையை மேற்கொள்கிறாள். அவளது கணவன் கடினமான உழைப்பாளி. மூன்று பதின்வயது பிள்ளைகளுடன் வாழ்கிறாள் . காலம் இளம்பெண்களின் கனவுகளைக் கலைத்து வாழ்க்கை யதார்த்ததைப் புரிய வைக்கிறது. காலம் மாறினாலும் அவர்களுக்குள் நட்பு தொடர்கிறது. அது தான் படத்தின் சிறப்பான பகுதி
மூன்று பெண்களும் தங்களின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள். முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதைப் படம் மிகவும் அழகாக விவரிக்கிறது.
கத்ரீனாவின் மகள் அலெக்ஸாண்ட்ரா தனது அன்னையை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாள். தோற்றுப்போய்க் குடிகாரனான செர்ஜி லியுட்மிலாவை தேடிப்போய்ப் பணம் கேட்டுத் தொந்தரவு தருகிறான். மணஉறவிலிருந்து விலகி வாழும் அவள் கோபம் கொள்கிறாள். சில்லறைகளை வீசி எறிகிறாள். இன்னொரு திருமணம் செய்து கொள்ள லியுட்மிலா ஆசைப்படுகிறாள். ஆனால் சரியான மாப்பிள்ளை கிடைப்பதில்லை.

கத்ரீனா ஒரு நாள் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, நடுத்தர வயது ஆணைச் சந்திக்கிறான். அவனது பெயர் கோஷா. பார்த்த நிமிஷம் அவள் திருமணம் செய்து கொள்ளாதவள் என்று கண்டுபிடித்துவிடுகிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் திருமணமாகாத நடுத்தரவயது பெண்ணின் பார்வை ஒருவிதமான தேடுதலைக் கொண்டிருக்கும். அது பொதுவாகக் காவல்துறையினரிடம் இருக்கும் பார்வை போன்றது என்கிறான்.
அவனது பேச்சும் நடத்தையும் பிடித்துப் போகவே கத்ரீனா தனது வீட்டிற்கு ஒரு விருந்திற்கு அழைக்கிறாள். அடுத்த நாள் வருகை தரும் கோஷா கத்ரீனாவிற்காகச் சமைக்கிறான். அவளது மகளுடன் அன்பாகப் பேசுகிறான். விளையாடுகிறான். கோஷாவைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மகளிடம் சொல்கிறாள் கத்ரீனா. கோஷாவின் முரட்டுதனம். முடிவுகளைத் தானே எடுப்பேன் எனும் அதிகாரம் அவளைச் சற்று அச்சப்படுத்துகிறது.
இந்நிலையில் கத்ரீனாவுடன் பழகி குழந்தையைக் கொடுத்த ஒளிப்பதிவாளரான ருடால்ஃப்யை திரும்பச் சந்திக்கிறாள். அவன் தனது மகளைக் காண வேண்டும் என விரும்புகிறான். அவனை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று கறாராக துரத்தி விடுகிறாள். ஆனால் அவன் கத்ரீனாவின் முகவரியை கண்டறிந்து மகளைக் காண வீடு தேடி வருகிறான். ஒருபுறம் புதிய காதலன். மறுபுறம் தனது மகளின் தந்தை எனத் தடுமாறும் கத்ரீனா உறுதியான முடிவை எடுக்கிறாள்.
இரண்டு வேறுபட்ட காலங்களில் நடக்கும் கதை. கதையின் நாயகன் போல இருப்பது மாஸ்கோ நகரமே. அந்த நகரின் இயல்பு அங்குள்ள ஆண்களிடம் வெளிப்படுகிறது என லியுட்மிலா சொல்கிறாள். கத்ரீனாவின் தொழிற்சாலைக்குத் தொலைக்காட்சியில் இருந்து வரும் குழுவினர் நடந்து கொள்ளும் முறை. அதே தொழிற்சாலையின் தலைமை நிர்வாகியாகக் கத்ரீனா பின்னாளில் நடந்து கொள்ளும் விதம், தனித்து வாழ்பவர்களுக்கான மணஉறவினை ஏற்படுத்தித் தரும் மையத்தில் நடக்கும் உரையாடல். நாற்பது வயது ஆண்களின் நடத்தையைக் கத்ரீனா விமர்சிக்கும் முறை என சிறப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன

கத்ரீனாவின் மகள் அலெக்ஸாண்ட்ரா புதிய தலைமுறையின் அடையாயமாக இருக்கிறாள். நடந்து கொள்கிறாள். அவள் அம்மாவின் புதிய காதலனை வரவேற்கிறாள். அன்புடன் பழகுகிறாள். அம்மாவிற்குச் சந்தோஷம் முக்கியம் என உணருகிறாள். கோஷா சந்தோஷத்தை உருவாக்குபவன். அவனது நண்பர்கள் அவனைப் பற்றிச் சொல்லும் செய்திகளில் அவனது ஆளுமை வெளிப்படுகிறது. தனது பிறந்தநாள் விருந்திற்காக அவன் கத்ரீனாவை அழைத்துச் சென்று நடத்தும் காட்சி சிறப்பானது. அந்த நட்பின் காரணமாகக் கத்ரீனா மனம் மாறுகிறாள்.
வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகிறது. இது கேட்க சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.என்று ஒரு காட்சியில் விருந்தினர் சொல்கிறார். அது கத்ரீனாவின் வாழ்வில் உண்மையாகிறது..
நிக்கோலாயின் வீட்டிற்கு இளம்பெண்கள் காரில் செல்லும் காட்சி . அங்கே பெற்றோர்கள் வரவேற்கும் விதம். அதே குடும்பம் பின்னாளில் உருமாறும் விதம் என நிஜமான நிகழ்வுகளைக் காட்சிகளாகக் கொண்டிருக்கிறது படம்
1950 களில் நடக்கும் கதையில் ருடால்ஃப் சொல்கிறான்“ தொலைக்காட்சி நம் வாழ்க்கையை மாற்றிவிடப்போகிறது. நாம் இனி திரைப்படங்களுக்குச் செல்லவே மாட்டோம், நாடகமும் இலக்கியமும் அழிந்துவிடும். நமக்குத் தொலைக்காட்சியில் மட்டுமே ஆர்வம் இருக்கும். இனி எல்லாமே தொலைகாட்சி தான். “
இது போல இன்னொரு காட்சியில் லியுட்மிலா சொல்கிறாள் “மாஸ்கோ என்பது அதிர்ஷ்ட லாட்டரி போன்றது, அதில் நீங்கள் ஜாக்பாட் அடிக்கலாம். மாஸ்கோ நகரம் தூதர்கள், கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் கவிஞர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் அத்தனை பேரும ஆண்கள். நாமோ பெண்கள். அதை மறந்துவிடாதே“
இது போல ஒரு காட்சியில் கோஷா தனது வாழ்க்கை எப்படிபட்டது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறான்
“ரோமானியப் பேரரசர் டயோக்ளீஷியனைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தனது பேரரசு உச்சத்தில் இருந்தபோது, அவர் அரியணையைத் துறந்துவிட்டு, நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் குடியேறினார். தோட்டங்கள் அமைத்து எளிமையாக வாழ்ந்தார். மீண்டும் ஆட்சிக்கு வருமாறு அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார்: “நான் பயிரிட்ட முட்டைக்கோஸ்களை நீங்கள் ஒருமுறை பார்த்தால், இப்படிக் கேட்பதை நிறுத்திவிடுவீர்கள். “
ரோமானிய வரலாற்றில் தனது ஆட்சியை விரும்பித் துறந்த டயோக்ளீஷ் போலவே தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையைப் போதும் எனச் சொல்லி விலகி வந்தவன் தான் கோஷா. காலம் எந்த இருவரை ஒன்று சேர்த்து வைக்கும் என்றோ, எவரை பிரித்து வைக்கும் என்றோ கண்டறிய முடியாது.
லியுட்மிலா பணத்திற்காக. வசதியான வாழ்க்கைக்காக ஆசைப்படும் பெண், காத்யா படித்து, சுயமாக முன்னேறிய பெண். தைரியமானவள். டோன்யா குடும்பப் பற்றுள்ளவள், எளிய வாழ்க்கையை வாழுகிறாள்.இந்த மூன்று பெண்களும் மூன்று பருவ காலங்களைப் போலவே எனக்குத் தோன்றுகிறார்கள். கத்ரீனாவை விடவும் அன்டோனினா தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறாள். வாழ்வின் மூன்று பாதைகளில் இந்த மூவரும் பயணிக்கிறார்கள்.
கடும் குளிர்காலத்தில், எனக்குள் வெல்ல முடியாத ஒரு கோடைக்காலம் இருப்பதை நான் இறுதியாக உணர்ந்துகொண்டேன் என்கிறார் ஆல்பர்ட் காம்யூ, இப்படத்தில் அதையே கத்ரீனாவும் உணருகிறாள். வெளிப்படுத்துகிறாள்
••