தாய்மொழி.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer) கதை ஒன்றில் ஒரு வீட்டில் திருடு போய்விடுகிறது. இதை அறிந்தவுடன் அந்த வீட்டுக்காரப் பெண் இட்டிஷ் மொழியில் கத்துகிறாள். இட்டிஷ் அவளது தாய்மொழி. ஆனால் அதை அவர்கள் கைவிட்டு ஆங்கிலம் பேச ஆரம்பித்துப் பல காலமாகிறது. திருட்டு போனவுடன் தன்னை அறியாமல் அவள் தாய் மொழியில் புலம்புகிறாள்.

இது போன்ற சம்பவம் ஒன்று ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. அன்னிபெசன்ட் அம்மையாரால் தத்தெடுக்கப்பட்டு ஐரோப்பாவில் வளர்க்கப்பட்ட ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலம் மட்டுமே பேசவும் எழுதவும் செய்து வந்தார்.

ஒரு முறை அவருக்குக் காய்ச்சல் முற்றிய போது அவரை அறியாமல் தெலுங்கு மொழியில் புலம்பியதாகவும் அந்தச் சொற்களின் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை என்றும் குறிப்பு வருகிறது.

தனது தாய்மொழியிலிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்திக் கவனமாகத் தன்னைத் துண்டித்துக் கொண்டார். அவர் ஒரு போதும் தெலுங்கில் தத்துவ உரையாற்றவில்லை.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆங்கிலம் அத்தனை அழகானது. பேச்சிலும் எழுத்திலும் உதாரணங்கள் இன்றி நேரடியாகத் தன் கருத்துகளை முன் வைக்கக்கூடியவர். தெளிந்த சிந்தனை கொண்டவர். ஆனால் ஏன் அவர் தனது தாய்மொழியை, தனது பூர்வீக அடையாளங்களை மறைத்துக் கொண்டார். தன்னை மறந்து புலம்பும் போது எப்படி அவருக்குள்ளிருந்து தெலுங்கு வெளிப்பட்டது.

தென்னாப்பிரிக்க எழுத்தாளரான கூட்ஸி தனது நேர்காணலில் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் ஒரு பிரிவில் இறந்த வீட்டில் யாரும் வேறு மொழிகள் பேசக்கூடாது. தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இதற்குக் காரணம் இறந்தவர்களுக்குச் செலுத்தப்படும் அஞ்சலி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதே.

தாய்மொழி கற்பதிலிருந்து ஒரு தலைமுறை துண்டித்துக் கொண்டாலும் அவர்கள் மனதில் தாய் மொழியின் வேர்கள் இருந்து கொண்டே தானிருக்கும் போலும்.

கிரேக்கத்தில் வாழ்ந்த நிகான்ஸ்கி என்ற மருத்துவர் ஒரு போதும் பாலைவனத்திற்குப் போனதேயில்லை. ஆனால் பாலைவன மக்கள் பேசும் நிறையச் சொற்கள் தனக்குத் தெரிந்திருக்கின்றன அது எப்படி என்று வியந்து அது குறித்து ஆராயத் துவங்கினார். அவரோ, அவரது தந்தையோ யாரும் பாலைவனத்திற்குப் போனதில்லை. ஆனால் அவர்களின் முப்பாட்டன் ஒருவர் வணிகம் செய்வதற்காகப் பாலைவனத்திற்குப் போய் வந்திருக்கிறார். அவரது நினைவுகள் தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்க வேண்டும், இல்லாவிட்டால் தன்னால் பாலைவன மனிதர்கள் பேசும் சொற்களை அறிந்திருக்க முடியாது என்கிறார் நிகான்ஸ்கி.

மனிதர்கள் கைவிட்ட சொற்கள் யாவும் மணல்துகள்களாக உருமாறிவிடுகின்றன. அதனால் தான் மனிதர்களின் கைகால்களில் மணல் அப்பிக் கொள்கிறது என்கிறது அரபு நாட்டார் கதை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூஸ் பேப்பரில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ராஜஸ்தானிலுள்ள கிராமம் ஒன்றில் ஐந்து வயது சிறுமி ஒருத்தி அழகாகப் போர்த்துகீசிய மொழி பேசுகிறாள். அவள் இன்னமும் பள்ளிக்கே போகவில்லை. எப்படி இந்த மொழியை அவள் கற்றுக் கொண்டாள். எவ்வாறு சரளமாகப் பேசுகிறாள் என்பது அவர்கள் யாருக்கும் புரியவில்லை.

இவளை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் சாவந்த் சிண்ட்ரோம் என்ற ஒருவகை அறிவாற்றல் கிடைத்திருக்கிறது. திடீரென ரேடியோவில் அறியாத மொழிப்பாடல் ஒலிபரப்பாகி விடுகிறதில்லையா. அது போன்றதே இச்சம்பவம்.

சாவந்த் சிண்ட்ரோம் (Savant syndrome) உள்ளவர்களால் ஒரே நேரத்தில் பலமொழிகளைப் படிக்கவும் பேசவும் கணிதம். அறிவியல், பொதுஅறிவு, கணிப்பொறியியல் எனப் பல்துறை ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்கள். விசேசமான மனிதர்களாகக் கருதப்படும் அவர்களால் சுயமாக எதையும் உடனே கற்றுக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் நூறு விஷயங்களைச் செய்யவும் முடியும். வயது ஒரு தடையில்லை என்கிறது சாவந்த் சிண்ட்ரோம் பற்றிய ஆய்வு.

இந்த வகை அறிவாற்றல் கொண்ட சிறுவர்களில் ஒருவன் இத்தாலியில் வசிக்கிறான். அவன் 32 மொழிகளில் எழுதுகிறான். அதில் தமிழும் ஒன்று. அவன் எப்படித் தமிழ் கற்றுக் கொண்டான் என்பது விந்தையே.

கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்தைப் போல நம் மனதில் தமிழ்ச் சொற்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அதை நாம் விரும்பினாலும் அகற்றிவிட முடியாது தான்.

0Shares
0