இந்த இவள்

தனது 96வது வயதில் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் எழுதியிருக்கும் புதிய குறுநாவல் இந்த இவள்.  காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. புகைப்படக்கலைஞர் இளவேனிலின் அன்பிற்காகவே இக்குறுநாவலை எழுதித் தந்ததாக கிரா குறிப்பிடுகிறார்.

பலருக்கும் முதுமையில் நினைவாற்றல் போய்விடுகிறது. சிலருக்கோ கைநடுக்கம், பார்வைக்குறைவு. படுக்கையிலே கிடக்கும் நிலை. ஆனால் கரிசலின் வேம்பைப் போல உறுதியாக இருப்பவர் கி. ராஜநாராயணன்.

ஜப்பானிய ஒவியர் ஹொகுசாய் தனது ஒவியத்திறமை முதுமையில் தான் முழுமையடைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். கிராவின் குறுநாவலும் அத்தகையதே.

இந்த இவள் என்ற தலைப்பை பாருங்கள். பிரெஞ்சு நாவலின் தலைப்பு போலிருக்கிறது.

கிரா இன்றும் புதுமையை நாடுவதில் நாட்டம் கொண்டவர் என்பதே இத்தலைப்பின் அடையாளம்..

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தக் குறுநாவலின் சிறப்பு கிராவின் கையெழுத்தில் ஒரு பக்கமும் அச்சு வடிவில் மறுபக்கமுமாக நூல் வெளியிடப்பட்டிருப்பது.  கிராவின் கையெழுத்தைப் பார்த்தால் அடித்தல் திருத்தலின்றி எத்தனை அழகாக இருக்கிறது.  அதில் முதுமையில் அடையாளமேயில்லை. கலைஞர்களுக்கு வயதாவதில்லை என்பது இது தானோ.

தூக்கத்தோடு யாராவது சண்டை போடுவார்களா என்று நாவலின் முதல்வரி துவங்குகிறது.

படிப்பவரை கதையின் உள்ளே இழுக்கும் கதை சொல்லியின் சாமர்த்தியமிக்க வரியது. இந்த ஒற்றை வரி இந்த இவளின் அடையாளம்.

பூச்சம்மா என்ற காரிக்கம் சேலை உடுத்திய கைம்பெண்ணின் வாழ்க்கை தான் நாவலின் கதை. மாடக்குழியினுள் எரிந்து கொண்டிருக்கும் அகல்விளக்கின் வெளிச்சத்திற்கு என்று தனித்துவம் உண்டு. அது போன்றதே பூச்சம்மாவின் வாழ்க்கை. அவள் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கான பணிகளைச் செய்வதிலே கழிக்கிறாள். யாரும் கேட்காமலே ஒடியோடி வேலைகள் செய்கிறாள். அவளது சமையல் ருசிக்கு மயங்காதவர்களே இல்லை.

பூச்சம்மாவின் கதை கரிசல் நிலத்தில் தனித்துவிடப்பட்ட கைம்பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரி.  உழைத்து உழைத்து அவர்கள் தங்களை உருக்கிக் கொண்டார்கள்.

பூச்சம்மாவைப் பற்றி வாசிக்க வாசிக்க கிழவனுக்கு வாக்கபட்டு இப்படி இளவயதிலே கைம்பெண்ணாக மாறிய எத்தனையோ பெண்கள் என் நினைவில் வந்து போனார்கள்.

பூச்சம்மா என்ற இந்த இவளை கிரா  எழுத்தில் உருவாக்கிய விதம் அபாரமானது. குறைவான சொற்களைக் கொண்டு அவளது சித்திரத்தை மிக வலிமையாக உருவாக்கியிருக்கிறார்.

இது ஒரு பெண்ணின் கதை மட்டுமில்லை. கரிசல் நிலத்தின் கதை. கரிசல் கிராமத்தின் கதை. இந்தத் தலைமுறை அறியாத மனிதர்களின் வாழ்க்கைப் பாட்டினை, நம்பிக்கைகளைப் பற்றிய கதை.

கடவுளின் பெருமூச்சு போல காற்று வீசும் கரிசல் நிலமும் ஊரும் மனிதர்களும் கிராவின் மனதில் பசுமையாக வாழுகிறார்கள்.

பிகாசோவின் ஸ்கெட்ச் புக் பக்கங்கள் சிலவற்றை ஒரு முறை பத்திரிக்கையில் பார்த்தேன். ஒற்றைக் கோட்டினால் உருவங்களை வரைந்திருப்பார். அந்தக் கோட்டின் வழியாக உருவம் மட்டுமின்றி  உணர்ச்சிகளும் துல்லியமாக வெளிப்பட்டிருக்கும். கிராவின் எழுத்தில் அதே மாயம் செயல்பட்டிருக்கிறது.

தனிமை, காமம், வறுமை, உணவின் ருசி,. கேலி, கிண்டல், நாட்டார் கதைகள், நம்பிக்கைகள், பெண்ணின் துயர வாழ்வு, குழந்தைப்பருவம்.  என்று சின்னஞ்சிறிய குறுநாவலுக்குள் கரிசல் உலகை முழுமையாகப் படைத்திருக்கிறார் கிரா.  எழுதித் தேர்ந்த கைகள் செய்த மாயம் இதுவென்பேன்.

நாவலின் தனிச்சிறப்பு கதை சொல்லும் குரல். அதன் வழியே வெளிப்படும் கொச்சையான கிராமத்துப் பாஷை.  சுட்ட பனம்பழத்திற்கென ருசியிருக்குமே அது போன்ற அசலான ருசியது.

கதைசொல்லியின் குரல் ஒற்றைக் கதையில் துவங்கி பல்வேறு கதைகள், நினைவுகளுக்குள் ஊடுருவிச் செல்கிறது.

உணவைப் பற்றி விவரித்துச் சொல்லும் போது சோற்றின் மணம் கமழுகிறது. கல்பானைகள் கண்ணில் தெரிகின்றன. பருப்புக்கறியை நாமே ருசிப்பது போலிருக்கிறது.

பசுவிற்குப் பிரசவம் பார்க்க முற்படும் பூச்சம்மா மூலிகை பறிக்கப் போகிறாள். அந்த நிகழ்விற்குள் தான் எத்தனை அறியாத விஷயங்கள். நம்பிக்கைகள். கன்று ஈனும் முறை. அதையொட்டி பெண்கள் குலவையிடுவது. வானத்தின் கருணையை வேண்டுவது. கன்று பூமியைச் சேவிப்பது போல் தெரிவது என்று கரிசல்  வாழ்க்கை கண்முன்னே விரிகிறது.

சாப்பாடுகள் விதவிதமாக இருப்பது போலத்தான் சாப்பிடுகிறவர்களும் விதவிதமானவர்கள் என்று ஒரு இடத்தில் சொல்கிறார் கிரா. எளிய வரியின் வழியே  அழுத்தமாக ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறார்.

இனிப்பின் மீது விருப்பம் கொண்ட ஒரு குடும்பத்தின் கதை இந்தக் குறுநாவலில் வருகிறது. வட இந்தியர்கள் இனிப்பை ஆசையாகச் சாப்பிடுவது போலத் தமிழகத்தில் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்தக்கதை அப்படியான தேனொழுகிகள் நம்மிடமும் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.  குறிப்பாக பஞ்சகாலத்தில் வீடு தேடி வந்தவர்களுக்கு மூத்தமகள் கருப்பட்டி பணியாரம் சுட்டுப் போடும் இடம் அபாரம்.

கடந்த காலத்தின் கதையைச் சொல்லிப் போகும் கிரா இடைவெட்டாக இன்றைய நாட்டுநடப்புகளை, சமூகக்கோபத்தைச் சொல்லிப் போகிறார். அது எந்த அளவு சமகால விஷயங்களின் மீது அவர் கவனம் கொண்டிருக்கிறார் என்பதன் சாட்சியம்.

கிராவின் எழுத்தில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.

நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இடம் சாம்பல் நிற பூனைக்குட்டியை அவள் காப்பாற்றுவதும் ,அதன் பசியறிந்து சொட்டுபாலை பஞ்சில் நனைத்துச் சுவைக்கத் தருவதும், உடம்பு சூடு தந்து அதைக் அணைப்பதும் மறக்கமுடியாத காட்சி.

கிராவின் எழுத்தில் குழந்தைகள் அசலாக வெளிப்படுவார்கள். இந்த நாவலிலும் கிராமத்தில் விளையாடும் குழந்தைகள் வருகிறார்கள். குங்கும நிறத்தில் ஒரு தட்டாம்பூச்சி வந்து அவர்களை வா வா என்று அழைக்கிறது.

அதில் ஒரு வரி ஜென் கவிதை போலிருக்கிறது

தட்டாம்பூச்சிகளுக்குத் தண்ணீரில் நீட்டிக்கொண்டிருக்கும் குச்சியின் நுனி மீது ஏன் பிரியமாக இருக்கிறது.

என்னுடைய பால்யகாலத்தில் நானும் தட்டாம்பூச்சிகளை விரட்டிப் போயிருக்கிறேன். கிரா சுட்டும் உண்மை வியப்பானதே.

ராமீ மறக்கமுடியாத தோழியாக நாவலில் இடம்பெறுகிறாள்.

கிராவின் எழுத்தில் வெளிப்படும் அபூர்வமான மனிதர்களுக்கென்ற தனியான ஒரு அகராதியை உருவாக்கலாம். அத்தனை வித்தியாசமான மனிதர்களை எழுத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலிலும் அப்படி மூக்குபொடி நாயக்கர் என்ற மனிதர் வருகிறார். அவர் மூக்குப்பொடி போடும் விதமும், அதைப் பகிர்ந்து தரும் பெரிய மனசும், மூக்குப்பொடியை வைத்து செய்யும் வைத்தியமும், தண்ணீர்ப் பந்தல் வைத்துத் தானம் செய்வது போலப் பொடிப்பந்தல் வைத்து உதவி செய்யலாம் என்று சொல்லும் கேலியும் மறக்கமுடியாதவை.

கிராமத்து மடமும் அதன் மனிதர்களும், அங்கே வந்து போகும் கடுக்கன் அணிந்த ஆளும், அவனுக்குச் சாப்பாடு கொடுத்துவிடும் கெப்பணக் கவுண்டரும், எவனோ ஒருவன் கிராமத்திற்கு வந்து பசியோடு போய்விட்டான் என்று ஊர்மக்கள் வருத்தம் அடைவதும், இந்தத் தலைமுறை அறியாத வாழ்வின் பக்கங்கள்.

மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு

மனத்தைத் திறப்பது போலத்தான் மனித உடம்பைத் திறப்பதும்

என்று நாவலின் இறுதியில் கிரா சொல்கிறார். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை.

தொடுசுகம் பொல்லாதது என்ற வரியே பூச்சம்மாவின் கதையை நிறைவு செய்யும் இறுதிவரியாக அமைந்திருக்கிறது.

தொடு சுகம் அறியாத பெண் என்பதால் தான் பூச்சம்மா இப்படியிருக்கிறாளா. உடலின் ஆசை தான் அவள் கைருசியாக உருமாறுகிறதா.

பூச்சம்மாவின் கதையில் பாதி சொல்லப்படவில்லை. அது வாசகர்கள் தானே உணர்ந்து கொள்ளவேண்டியது.

தமிழ் நிலத்தின் நிகரற்ற கதைசொல்லி கிரா என்பது இந்நாவலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கரிசலின் பெருங்கலைஞனை வணங்குகிறேன்.

••

0Shares
0