வரையப்பட்ட கனிகள்

செசான் வரைந்த ஆப்பிள்களும் ஆரஞ்சு பழங்களும் ஓவியத்தைக் காணும் போது என்ன நடக்கிறது.

நாம் காணுவது பழங்களை மட்டுமல்ல. மௌனத்தை. அதுவும் சிவப்பு வண்ண உருவம் கொண்ட மௌனத்தை. உண்ணுவதற்கான பொருள் என்பதிலிருந்து விலகி பழம் அழகான வடிவத்துடன், ஒளிர்தலுடன். அசையாத நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. ஆப்பிள்களுக்குள் சிறியது பெரியது என வேறுபாடு இருந்தாலும் அவை ஒன்றிணைந்துள்ள விதத்தில் சமநிலை காணப்படுகிறது. மனிதன் உருவாக்கிய குவளையும் இயற்கையின் பரிசான பழங்களைப் போலவே சித்தரிக்கபடுகிறது. குவளைக்கும் பழங்களுக்கும் இடையில் ஒரு உறவுமில்லை. அவற்றைப் பயன்படுத்தும் மனிதனே இணைப்பாக இருக்கிறான். எவர் வருகைக்காகவோ அந்தப் பழங்கள் காத்திருக்கின்றன. வெண்ணிற மேஜை விரிப்பின் கலைந்த நிலை. மேசையின் செவ்வகக் கட்டமைப்பு மற்றும் சுவரின் தெளிவான வண்ணம்.என மொத்த ஓவியமும் மாறுபட்ட வண்ணங்களின் விளையாட்டினைப் போலவே இருக்கிறது.

சிவப்பு மற்றும் மஞ்சள் பூக்களால் குவளை அலங்கரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செசான் ஆரஞ்சுப் பழத்தின் மேற்புறத்தை துல்லியமாக வரைவதற்குப் பதிலாக மென்மையாகத் தோன்றச் செய்கிறார், அதே சமயம் முன்புறத்தில் உள்ள ஆப்பிள்களுக்கு தெளிவான கோடுகளின் மூலம் கடினத்தன்மையை அளிக்கிறார்.

பழங்களை வரையும் ஓவியன் அதனை நித்யமாக்குகிறான். இயற்கை உருவாக்கிய சிற்பம் தான் பழம் என்று புரிய வைக்கிறான். மனிதனின் அறிவு ஒரு ஆப்பிள் பழத்திலிருந்து பெறபட்டது என்ற பைபிளின் எண்ணத்தை நினைவுபடுத்துகிறான். அருகருகே இருக்கும் மனிதர்களை விடவும் அருகருகே இருக்கும் கனிகள் இணக்கமானவை என்று தோன்றச் செய்கிறான்.

எழுத்தாளர் மார்க்ரெட் யூரிசனார் தனது நாவலில் “ஒருவன் ஒரு கனியை புசிப்பதென்பது நமக்கு அந்நியமான ஆனால் நம்மைப் போலவே பூமியால் ஊட்டமளிக்கபட்டுப் பாதுகாப்பட்ட, இனிய பொருளை நமக்குள் வரவேற்பதாகும் “என்கிறார். கனி மனிதனின் புராதன உணவு. கனிகளால் வளர்க்கபட்டவனே மனிதன்.

கனியை அல்ல இயற்கையின் கருணையைத் தான் நாம் புசிக்கிறோம். கனி நமக்குள் விருட்சத்தின் இயல்பை கொண்டுவராமலா போய்விடும்.

ஓவியத்தின் மையமாக மனிதனை மாற்றியது இருபதாம் நூற்றாண்டுக் கலையே. அதன் முன்பு வரை இயற்கையே ஓவியத்தின் மையமாக இருந்தது. அதன் ஒரு பகுதியாகவே மனிதன் சித்தரிக்கபட்டான். அதுவும் மனித ஆசைகளை, இயக்கங்களை. சில அபூர்வ தருணங்களை, உடலின் நடனத்தை, வாழ்க்கை முறைகளை வரையவே முற்பட்டிருக்கிறார்கள். இயற்கையின் பெருங்கிண்ணத்தில் மனித நடவடிக்கைகள் சிறிய நத்தையின் நகர்வை போலவே இருந்தன. அடையாளப்படுத்தபட்டன.

செவ்வியல் டச்சு ஓவியங்களில் காணும் நிலக்காட்சிகளைப் பாருங்கள். அவை காலத்தின் வெகுபின்னால் நம்மை அழைத்துப் போகின்றன. அடிவானம் வரை பரந்து விரிந்த காட்சிகளும், உயர்ந்து நிற்கும் மேகக் கூட்டங்களும் ஆழ்ந்த தியான வெளியைப் போலிருக்கின்றன. தூய காற்று,. மயக்கமூட்டும் பகல் வெளிச்சம், இதனமான மழை, உறையச் செய்யும் குளிர் மற்றும் தன்னை மறந்த விலங்குகள் என அவை கனவுக்காட்சியைப் போலவே தோற்றம் தருகின்றன. இந்த அமைதியை, வசீகரத்தை. வரையவதற்காகப் பயன்படுத்தபட்ட வண்ணங்கள், இழைநயங்கள் வியப்பூட்டுகின்றன.

நிலக்காட்சி ஓவியங்களில் மலையும் மடுவும் மரங்களும் விலங்குகளும் ஒரே நிலையில் ஒரே அமைதியில், ஒரே மயக்கத்தில் இருப்பதைக் காண முடிகிறது. இன்றைய ஓவியங்களில் நாம் காணும் இயற்கை என்பதில் அந்தத் தியானமில்லை. அப்படி இயற்கையை வரையத் தேவையில்லை என்று சொல்பவர்களும் இன்று இருக்கிறார்கள். சந்தை ஓவியங்களின் மதிப்பையும் தரத்தையும் முடிவு செய்யும் காலத்தில் தியானவெளியை யார் கவலைப்படப் போகிறார்கள்.

ஆனால் பழைய டச்சு ஓவியர்களின் நிலக்காட்சிகளைக் காணும் எவரும் சட்டெனத் தனது கண்கள் அகலமாகிவிட்டதையும் மனதிற்குள் மகிழ்ச்சியின் சுனை திறந்து கொள்வதையும் உணர்கிறார்கள். அது தான் கலையின் வெற்றி.

ஜப்பானிய கலைகளில் இயற்கையின் பிரம்மாண்டமல்ல அதன் நுண்மையே முதன்மையானது. குறிப்பாக இயற்கை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமும் அதன் லயங்களும். இசைவும் முரணும் முக்கியமானது. அந்த வகையில் ஐரோப்பியக் கலைகளில் இயற்கை வெளிப்படும் விதம் மாறானது.

ஜப்பானில் இயற்கையின் அசைவுகள், பருவகால நகர்வுகள். நுண்ணிய வெளிப்பாடுகள் அதிகம் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயற்கை புனிதமாக்கபடவில்லை. மாறாக தெய்வாம்சம் கொண்டதாகச் சித்தரிக்கபடுகின்றன. இயற்கையின் எல்லா வடிவங்களும் வசீகரமானதாக ஐப்பானின் கலைமரபு சொல்கிறது. ஆனால் ஐரோப்பாவில் இயற்கை அதன் பிரம்மாண்டத்திற்காக, கட்டுப்பாடற்ற தன்மைக்காகவே கொண்டாடப்படுகிறது. அங்கே இயற்கை ஒரே நேரத்தில் அமைதி நிறைந்ததாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் சித்தரிக்கபடுகிறது. பல நேரங்களில் இயற்கை மனிதர்களை ஆட்டுவைப்பதாகவும் உணர்த்தப்படுகிறது. கடலோடிகளை, கடலில் நடந்த யுத்தகங்களை, வேட்டையை சித்தரிக்கும் ஓவியங்களைப் பாருங்கள். இந்த உண்மை புரியும்.

செசான் ஜப்பானிய மரபிலிருந்து இயற்கை குறித்த புரிதல்களைப் பெற்றிருக்கிறார். அவரது இயற்கை காட்சிகளில் வெளிப்படுவது முழுமையின் ஒளிர்வு. ஆழ்ந்த அமைதியின் வெளிப்பாடு. அகமகிழ்ச்சி.

குளத்து நீரின் மீது விழும் மழைத்துளி ஏற்படுத்தும் விளைவுகள் போன்ற இயற்கையின் தன்னியல்பான மாற்றங்கள். அதிர்வுகள். சித்தரிப்புகளை ஜப்பானிய ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். அதன் மாறுபட்ட வடிவத்தைச் செசானிடம் காண முடிகிறது

செசானின் ஆப்பிள்களும் ஆரஞ்சுபழங்களும் ஓவியத்தை நான் ஒரு கவிதையைப் போலப் படிக்கிறேன்.

ஒவ்வொரு ஆப்பிளும் ஒரு சொல். ஆரஞ்சுப்பழங்கள் உணர்ச்சிகள். அவை அடுக்கபட்ட விதத்தில் இது ஒருவகைக் கவிதை. கவிதையில் நாம் பெறுவது வெறும் அர்த்தம் மட்டுமில்லை. வியப்பு. மகிழ்ச்சி. புதிய அனுபவம். பார்வை மாற்றம்.

அந்த மாயத்தையே செசான் இந்த ஓவியத்தில் உருவாக்கியுள்ளார்.

0Shares
0