எழுத்தெனும் திசைகாட்டி

காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன்

வாசிப்பனுபவம் .

கடையாணியார் சீ.நே.பி

அப்பாவிற்கும் மகனுக்குமான புரிந்து கொள்ள முடியாத மன வேறுபாடுகள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றிதானே எழுப்பிக் கொள்ளும் பிம்பமும், அந்தப் பிம்பத்திற்கு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவன் தந்தையின் மனதில் இருப்பதையும், அதை உடைக்க அவன் படும் பாட்டினையும் மன உளவியலாகவே இதில் விளக்கியுள்ளார். ( காஃப்கா தன் அப்பாவிற்காக எழுதி ஆனால் கடைசி வரை அவரிடம் சேராத கடிதமது)

இக்கடிதத்திற்கு அவரின் தந்தையின் ஸ்தானத்திலிருந்து பிற்காலத்தில் எழுத்தாளர் நாடின் கோடிமர் பதிலளித்திருப்பதும் சுவாரசியமான விஷயம்.

ஒரு கட்டுக்கோப்பான குடும்பத் தலைவனுக்குக் கீழ் வளரும் பிள்ளையின் மனநிலையை இக்கட்டுரையின் மூலம் காணலாம். இக்கட்டுரையைப் படித்துவிட்டு உண்மையான காஃப்கா வின் கடிதத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது

‘புத்தனோடு நடப்பவர்கள்’ கட்டுரையில் ஆசிரியர் நடக்கும் போது உடம்பிற்கும் மனதிற்கும் ஏற்படும் லயங்களைப் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அகம் தன்னை நடையின் வழியே நிரப்பிக் கொள்கிறது. அதே நேரம் புற உடல் உறுதிப்படுகிறது. புத்தனோடு நடப்பது விழிப்புணர்வின் அடையாளம் ” என்கிறார் எஸ்ரா

மோபிடிக் கதையைப் பற்றிய கட்டுரையில் வாழ்வியலின் இரு துருவங்களை நமக்கு எளிதாக விளக்கி காட்டியிருக்கிறார். இது போலவே ரேமண்ட் கார்வர் கட்டுரையும் முக்கியமானது.

எஸ். ரா அவர்கள் எவ்வாறு இத்தனை எளிதாகவும் நெருக்கமாகவும் ஒரு விஷயத்தைச் சொல்ல முடிகிறது? அதுவும் மிகவும் கடினமான வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களை எழுத்தாளர்களின் வாழ்க்கையின் ஊடாக வைத்து நமக்கு எளிதில் கடத்தி விடுகிறார்.

ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்றொடர்களை அற்புதமான வாழ்வியல் குறிப்புகளாக நாம் உருவாக்க முடியும். அந்தவகையில் எஸ்ராவின் புத்தகங்களை நான் திசைகாட்டி என்றே சொல்வேன்

0Shares
0