“பை டிசைன்” திரைப்படத்தில் மூன்று பெண்கள் சலிப்பான ஒரு மதியத்தில், நேரத்தைக் கடத்துவதற்காக மரச்சாமான்கள் விற்கும் கடையைப் பார்வையிடுகிறார்கள். அந்தக் கடையில் கமிலிக்கு ஒரு நாற்காலி பிடித்துப் போகிறது. ஆனால் விலை அதிகம் என்பதால் அதை உடனே வாங்க முடியவில்லை. எப்படியாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தனது சேமிப்பில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு மறுநாள் வாங்க முற்படுவதற்குள் நாற்காலி வேறு ஒருவருக்கு விற்கபட்டு விடுகிறது. அதனைக் கமிலியால் ஏற்க முடியவில்லை.

விற்பனை செய்யப்பட்ட அந்த நாற்காலியை ஆசையாகத் தொட்டுத் தடவுகிறாள். அதைச் சொந்தமாக்கி கொள்ள முடியவில்லையே என ஏங்குகிறாள். அப்போது எதிர்பாராத நிகழ்வு நடந்தேறுகிறது. . அவள் நாற்காலியாகவும் நாற்காலி அவளாகவும் மாறிவிடுகிறார்கள்
நாற்காலியாக மாறிய அவளது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையே படம் விவரிக்கிறது
ஒரு நாற்காலியைப் பாராட்டுவது போல் யார் கமிலை பாராட்டுவார்கள் எனப் படத்தின் துவக்கத்திலே ஒரு குரல் கேட்கிறது.
நாற்காலியின் வடிவமைப்பு மற்றும் அழகில் மயங்கி அதை அடைய விரும்புகிறாள் என்பது ஒரு கோணம். மாற்றமில்லாத அவளது வாழ்க்கையில் புதிய ஒன்றை இடம் பெறச் செய்ய விரும்புகிறாள். அதாவது ஒரு உறவிற்கு ஏங்குகிறாள் என்பது இன்னொரு கோணம். அந்த ஆசை தான் நாற்காலியாக மாறுகிறது. ஆகவே அவள் நாற்காலியாக உருமாறிய போதும் கமிலியாகவே இருக்கிறாள்.
அந்த நாற்காலி ஆலிவர் என்ற இசைக்கலைஞன் வசம் செல்கிறது. அதுவும் காதலியின் பரிசாக.
நாற்காலியாக மாறிய கமிலி தனது பேசும்சக்தியை இழக்கிறாள். நாற்காலி பெண் உருவம் கொண்ட போதும் தனது அசைவற்றிருக்கிறது. ஜடத்தன்மை கொண்ட பெண். ஆசை கொண்ட நாற்காலி என இருநிலைகளை படம் விவரிக்கிறது.
அழகான நாற்காலிக்கு கிடைக்கும் பாராட்டுகள் கூடத் தனக்குக் கிடைப்பதில்லை என்பதைக் கமிலி உணருகிறாள்.
நாற்காலியாக இருப்பது. நாற்காலியாக நடந்து கொள்வது என்பது எளிதில்லை என்பதை கமிலி உணருகிறாள். ஆரம்பத்தில் அவள் நாற்காலி மீது பொறாமை கொள்கிறாள். நாற்காலியாக மாறிய பிறகு அந்தப் பொறாமை மாறுகிறது. அபத்த நாடகங்களைப் போலத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஐயனெஸ்கோவின் நாடகத்தைக் காண்பது போன்ற உணர்வையே படம் உருவாக்குகிறது.

மூன்று பெண்களும் நாற்காலியை பார்வையிடும் காட்சியில் அவர்களின் சலிப்பான கடந்தகாலமும் அதன் மீதான வெளிப்படையான அதிருப்தியும் வெளிப்படுகிறது. நாற்காலியை அடைவதை தனது குறிக்கோளாகக் கொள்ளும் கமிலி அதற்காகத் தனது சேமிப்பு முழுவதையும் செலவளிக்கத் தயாராகிறாள். ஆனால் நாற்காலி அவளுக்குக் கிடைக்கவில்லை.
நாற்காலியாக மாறிய பின்பு அவள் அடையும் மாற்றங்கள் போல நாற்காலிக்கு எதுவும் கிடைப்பதில்லை. அது அசைவற்ற பெண்ணாக இருக்கிறது. சர்ரியலிசக் காட்சிகளாக அவை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
புராணக்கதைகளில் கல்லாக மாறிய பெண். தவளையாக மாறிய பெண்ணைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் இக்கதையில் அந்தப் பெண் நாற்காலியாக மாறுகிறாள். அது சாபத்தால் ஏற்படவில்லை. விருப்பத்தால் ஏற்படுகிறது. அவளது மீட்சியும் அவள் கைவசமேயிருக்கிறது
அடுத்தவர் நம் மீது அமர்ந்திருப்பது என்பது ஒரு குறியீடு. அதை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. நாற்காலியாக மாறிய கமிலி இசைக்கலைஞனால் நேசிக்கபடுகிறாள். அவன் தனது காதலியை இழந்தவன். ஆகவே நாற்காலி அவனது காதலின் அடையாளமாகிறது. அதனை ஆசையோடு அணைத்துக் கொள்கிறான். அது உயிருள்ள நாற்காலி என்பது போல உணருகிறான். அதனை நேசிக்கிறான்.
சில நேரங்களில் உலகம் நம்மை ஒரு நாற்காலியை போல மாற்றுகிறது. நடத்துகிறது என்பதை நன்றாக உணரச் செய்கிறது இப்படம்.
••