புதிய சிறுகதை. ஜுலை 1 2026
சேர்மக்கனி தனது வீட்டிலிருந்த நாய்களின் மீது பொறாமை கொண்டிருந்தான்.
அவற்றைப் பராமரிப்பதற்காகத் தனது சம்பளத்தை விடவும் முதலாளி அதிகம் செலவு செய்கிறாரே என்ற பொறாமையும், நாய்களுக்குக் கிடைப்பது போல அன்றாடம் கறிச்சோறு தனக்குக் கிடைப்பதில்லையே என்ற கோபமும் அவனுக்கிருந்தது.
அந்தப் பங்களா குற்றாலத்திலிருந்தது. நேஷனல் மில் முதலாளியான காசிநாதன் கட்டிய பங்களா . ஆறாயிரம் சதுர அடி கொண்ட வீடு. சீசன் துவங்கியதும் காசிநாதன் குடும்பத்தினர் ஒரு மாத காலம் குற்றாலத்திலே தங்கியிருப்பார்கள். கூடவே நண்பர்களும் வருவதுண்டு.
நாளைக்கு மூன்று முறை அருவிக் குளியல். கறிச்சாப்பாடு, பார்டர் கடை பரோட்டா, பொறித்த கோழி. தென்காசி கிருஷ்ண விலாஸ் அல்வா, கலாபவன் கைசுற்று முறுக்கு. மாலை நேரத்திற்கான வெங்காயப் பக்கோடா என ருசியான உணவு வகைகள். இடையில் நண்பர்களுடன் சீட்டாட்டம் என நாட்களைக் கழிப்பார்கள்.
அந்த பங்களாவைப் பார்த்துக் கொள்ள சேர்மக்கனியும் அவனது மனைவி மஞ்சரியும் இருந்தார்கள். பங்களாவைச் சுற்றிலும் நிறைய மாமரங்கள். இரண்டு பெரிய பலாமரங்களும் பத்து இருபது தென்னைகளும் இருந்தன. அவற்றைப் பராமரிப்பதும் சேர்மக்கனியின் வேலை தான்.

அந்த வீட்டின் காவலுக்காக இரண்டு நாய்கள் இருந்தன. ஒன்றின் பெயர் டேனி. மற்றொன்றின் பெயர் ரோசி. பகலில் கட்டிப் போடப்பட்டிருக்கும் இந்த நாய்களை இரவில் அவிழ்த்து விட்டுவிடுவார்கள்.
வெளிகேட்டில் யாராவது வருவது போல நிழல் தெரிந்தால் கூட டேனி ஆவேசமாகப் பாய்ந்தோடும். ரோசி அப்படியில்லை. அது எவரையும் குரைப்பதற்கு முன்பு வெறித்துப் பார்த்தபடி இருக்கும். அவசியம் என்றால் தான் குரைப்பேன் என்பது போல அதன் பார்வையிருக்கும்.
சிப்பிப்பாறை இன நாய்கள் என்பதால் இரண்டிற்கும் வயிறு ஒட்டிப்போயிருக்கும். அவை வேட்டைக்குக் கொண்டு செல்லும் நாய்கள். ஆனால் இப்போது வீட்டுக்காவலை மட்டுமே செய்து கொண்டிருந்தன. திடீரென வேட்டை ஞாபகம் வந்துவிட்டதைப் போல நாய்கள் வீட்டைச் சுற்றிலும் ஒடுவதும் மைனாவைத் துரத்திப் பாய்வதும் நடப்பதுண்டு.
டேனிக்கும் ஒரு அணிலுக்கும் அப்படியான ஒரு சண்டை நடப்பதை சேர்மக்கனி பார்த்திருக்கிறான். அணிலை துரத்திக் கொண்டு ஆவேசமாக டேனி பாயும். அணில் பயத்தில் தாவி மரத்தில் ஏறி வீட்டின் உச்சிக்குப் போய்விடும். அணிலுடன் என்ன சண்டை நாயிற்கு என அவனுக்குப் புரியாது
அன்றாடம் அந்த இரண்டு நாய்களுக்கும் மோட்டா அரிசிச் சோறு, வேகவைத்த இறைச்சி, அல்லது மீன்கள். நன்கு வேகவைத்து மசித்த சக்கரைவள்ளிகிழங்கு, புரோட்டின் பவுடர் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். சில நாட்கள் வெள்ளை சாதத்தில் அவித்து மசித்த கேரட் கலந்து கொடுப்பதும் உண்டு.
நாய்களுக்கும் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும். அந்த நாட்களில் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காட்ட வேண்டும்.
ஒருமுறை ரோசிக்கு இடது காதில் சீல் வடிந்து கொண்டேயிருந்தது. டாக்டர் அதற்கு மாத்திரைகள் கொடுத்தார். இந்த நாய்களைப் பராமரிப்பதற்காகக் காசிநாதன் மாதம் முப்பதாயிரம் அனுப்பி வைப்பார். அது சேர்மக்கனியின் சம்பளத்தை விடவும் அதிகம். ஆகவே அவன் இயல்பாக நாய்களின் மீது பொறாமை கொண்டிருந்தான்.
காலை எட்டுமணிக்கெல்லாம் நாய்களுக்கு உணவளிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தினை வேண்டுமென்றே தாமதமாக்குவான். அப்போது அவனது வெறுப்பை அறிந்து கொண்டுவிட்டதைப் போல நாயின் கண்கள் மினுமினுக்கும்.
நாய்களுக்கு உணவளிப்பதற்கெனத் தனியே பாத்திரங்கள் இருந்தன. அந்தத் தட்டில் உணவை வைத்துவிட்டு அதன் தலையைத் தடவிவிடுவது போலப் பாசாங்கு செய்தபடி மனதிற்குள் திட்டிக் கொள்வான். சில நேரம் தன்னை அறியாமல் “உனக்கு வந்த வாழ்வை பாரு “ என்று ஏளனமாகச் சொல்வதும் உண்டு.
அந்த இரண்டு நாய்களும் பங்களா காவலுக்காக இருந்தன. அவற்றைத் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல காசிநாதன் நினைத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் இரண்டு நாய்களும் காதை உயர்த்திக் குழைவதுடன் வாலாட்டுவதும் உண்டு.

இருபது வயதில் அந்தப் பங்களா வேலைக்கு வந்த சேர்மக்கனி திருமணமாகி இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்று வளர்த்து இப்போது நாற்பத்தி மூன்று வயதை அடைந்துவிட்டான். இத்தனை வருஷ உழைப்பிற்குப் பின்பும் அவனது மாதசம்பளம் இருபதாயிரத்தைத் தாண்டவில்லை. வீட்டின் தூய்மை பணிகளுக்காக அவனது மனைவி மஞ்சரிக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இந்த வருமானத்தில் பிள்ளைகளைப் படிக்க வைத்து நோய்நொடிகளுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான்.
காசிநாதனால் இப்போது ஒரு மாதகாலம் குற்றாலத்தில் இருக்க முடிவதில்லை. பத்து நாட்கள் இருப்பதே சலித்துவிடுகிறது. அதுவும் குற்றாலத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகமாகிப் போனதால் அவரது நினைவில் உள்ள குற்றாலமும் அதன் அமைதியான சூழலும் மாறிப்போயிருந்தன. குற்றாலத்திற்கே உரித்தான சாரலோடு கூடிய இதமான காற்றும் கூட மாறிவிட்டதாக உணர்ந்தார்.
அவர் பகல்குளியலை விடவும் ராக்குளியலை அதிகம் விரும்புவார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இரவில் குளிப்பவர்கள் அதிகமிருக்கமாட்டார்கள். இரவு பத்துமணி வாக்கில் பழைய குற்றாலத்திற்குப் போய்க் குளித்து வருவார். ஒன்றோ இரண்டோ ஆட்களைத் தவிரக் கூட்டமிருக்காது. இரவில் தண்ணீரின் குளிர்ச்சி அதிகமாகயிருக்கும். சுகமான குளியலை அனுபவிப்பார்.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இரவு இரண்டு மணிக்குப் போனால் கூட நூறு பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் அருவிக்குள் நின்றபடி பிராந்தி பாட்டிலை திறந்து குடிப்பவர்களைக் காணும் போது ஆத்திரமாக வரும். சில சமயம் கோபத்தில் திட்டியும் இருக்கிறார்.
குடிப்பவன் வாயில் பிராந்தியை ஊற்றிக் கொண்டு அருவித்தண்ணீரை வாயில் விட்டுக் குடிப்பதை பார்த்திருக்கிறார். ஒரு நாள் அப்படியொரு குடிகாரன் அருவித் தண்ணீரை வாயில் நிரப்பி அவரைப் பார்த்துப் பீச்சியடித்த போது இனி இரவுக் குளியல் வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார்.
அதற்குப் பின்பு இரவில் அருவிக்குப் போகவேயில்லை. விடிகாலை நாலுமணிக்கு எழுந்து போய்க் குளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எவ்வளவு முறை குளித்தாலும் அருவியைக் காணும் ஆனந்தம் வேறு. குளிக்கும் இன்பம் வேறு. அருவிக்குள் நின்றவுடன் உடல் ஒரு தாவரமாகிவிடுகிறது. தண்ணீரோடு வயதும் கரைந்தோடிவிடுகிறது. ஆனால் எவ்வளவு குளித்தாலும் மனிதனின் வெறுப்பையும் பொறாமையினையும் மனக்கிறுக்குகளையும் அருவியால் போக்கிவிட முடியாது.
காசிநாதனின் வீடு சென்னையில் இருந்தது. அடையாறில் இருந்த தனி பங்களா. எண்பது வருஷங்களுக்கு முன்பாக அவரது அய்யா வாங்கியிருந்த பங்களா. பளிங்குத் தரையும், அலங்காரமான தேக்கு மர மேற்கூரைகளும் வெண்கல குமிழ் வைத்த கதவுகளும் கொண்ட பெரிய வீடு. அந்தக் காலத்திலே வீட்டிற்குள் லிப்ட் இருந்தது. அந்த வீட்டில் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணிக்கு விருந்தளிக்கபட்ட புகைப்படமிருந்தது.
வீட்டின் பின்புறம் பெரிய நீச்சல்குளம். சிறிய டென்னிஸ் கோர்ட். நாலைந்து கார் நிறுத்துவதற்காகப் பெரிய ஷெட். பணியாளர்களுக்கான குடியிருப்பு. பெரிய பூந்தோட்டம். அதனுள் ஒரு நீருற்று. கிழக்குப் பக்கம் சிறியதொரு பிள்ளையார் கோவில்.
ஒரு காலத்தில் பத்துப்பதினைந்து பந்தயக் குதிரைகள் வைத்திருந்தார்கள். அந்தக் குதிரைகள் நிற்பதற்கான குதிரை லாயம் வடக்கு பக்கமிருந்தது.. வீட்டைச் சுற்றிலும் மரங்கள். நாற்பதுகளில் அந்த வீட்டில் வெள்ளைக்கார சமையற்காரர் கூட இருந்தார். தற்போது லட்சுமியம்மா என்ற சமையற்காரப் பெண்ணும் உதவிக்கு முத்து என்ற இளைஞனும் இருந்தார்கள். மேனேஜர், டிரைவர், வீட்டுப் பணியாளர்கள் என ஆறு பேர் வேலைக்கு இருந்தார்கள்.
காசிநாதனுக்குக் குழந்தைகள் இல்லை. உறவில் ஒருவரை தத்து எடுத்துக் கொண்டிருந்தார். லட்சுமணன் என்ற அந்தத் தத்துப்பையன் தான் அவரது தொழில்களைக் கவனித்து வந்தான்.
காசிநாதனும் அவரது மனைவி வள்ளியம்மையும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். தினமும் நான்கு தமிழ் பத்திரிக்கைகளும் இரண்டு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் அந்த வீட்டில் வாங்கப்பட்டன. ஆகவே அவற்றைப் படித்து முடிப்பதற்குள் காசிநாதனின் காலை நேரம் கடந்துவிடும். மதியச் சாப்பாட்டிற்குப் பின்பாகத் தூக்கம். நான்கு மணிக்கு காபி டிபன். அதன்பிறகு மாலை நடை. அதை முடித்துக் கொண்டு போட் கிளப்பிற்குச் சென்றுவிடுவார். இரவு எட்டரை மணிக்கு வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு உறங்கிவிடுவார்.
காசிநாதன் தினமும் காலை ஏழுமணிக்குக் குற்றாலத்திற்குப் போன் செய்வார். அந்தப் போன் வந்தவுடன் சேர்மக்கனி நாய்களின் அருகே செல்வான். அவர் இரண்டு நாய்களையும் பார்க்க வேண்டும் என்பதற்காக வீடியோ காலில் அழைப்பார்.
சேர்மக்கனி அந்த நாய்களைச் செல்போன் கேமிரா வழியாகக் காட்டுவான். பள்ளி செல்லும் பேரன்பேத்திகளுடன் உரையாடுவது போல அந்த நாய்களுடன் பேசுவார். சில நேரம் கேமிராவை அதன்முன்பாக வைத்துவிட்டு போய்விடும்படி சொல்லுவார்.
நாய்களுடன் என்ன பேசுவார் என்று சேர்மக்கனிக்குத் தெரியாது. அவர் மட்டுமில்லை. வள்ளியம்மையும் அந்த நாய்களுடன் வீட்டுக்கதைகளைப் பேசுவார். அப்போதெல்லாம் சேர்மக்கனிக்குப் பொறாமை அதிகமாகும்.
எங்கோ இருப்பவர்களின் பங்களாவையும் சொத்துகளையும் பாதுகாத்து வரும் தன்னைப் பற்றி எதையும் விசாரிக்க மாட்டேன் என்கிறார்கள். தனது பிள்ளைகள் பற்றியோ, மனைவி பற்றியோ ஒரு வார்த்தை கேட்க மறுக்கிறார்கள். ஆனால் நாய்களிடம் பாசம் காட்டுகிறார்கள். கதை கதையாகப் பேசுகிறார்கள். செல்லம் காட்டுகிறார்கள். அப்படி என்றால் தன்னை நாயை விடவும் கீழாக நினைக்கிறார்கள் என்றே சேர்மக்கனி கருதினான்.
நாய்களை வீடியோவில் காண வேண்டும் என்பதற்காகவே சேர்மக்கனிக்கு பெரிய சைசில் சைனா மொபைல் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் காசிநாதன்.
சில நேரம் அதனைக் காணும் போது நாய் தயவில் கிடைத்த போன் என்று எரிச்சலாக இருக்கும்.
நாய்களுக்கு உணவளிக்கக் கொடுத்த பணத்தில் பாதியை அவன் தனக்காக எடுத்துக் கொள்வான். நாய்களுக்கு இறைச்சி வாங்காமல் தனக்கு வாங்கிய ஆட்டுக்கறியில் எலும்புகளை மட்டும் அதற்குப் போடுவான். சில நாட்கள் மருத்துவரை அழைத்து வந்து காட்டியதாக ஆயிரம் இரண்டாயிரம் கணக்கு எழுதிவிடுவான். சென்னையிலிருந்து அவர் கொண்டு வந்து கொடுக்கும் நாய்பிஸ்கட்களை, ஷாம்புவை வெளியே விற்றுவிடுவான். நாய்களை ஏமாற்றுவது அவனுக்குப் பிடித்திருந்தது. நாய்கள் ஒருபோதும் அதைப் பற்றிப் புகார் சொல்லாது. முதலாளியால் அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. நாய்களுக்கு என்ன சொகுசு வாழ்க்கை வேண்டியிருக்கிறது என மனதிற்குள் திட்டிக் கொள்வான்
அவனை விடவும் மஞ்சரி பங்களாவில் இருந்த இரண்டு நாய்களையும் வெறுத்தாள். சில நாட்கள் ஆத்திரத்தில் பாத்திரம் கழுவிய தண்ணீரை அதன் மீது ஊற்றுவாள். அவளுக்குச் சிறுவயது முதலே நாய்களைப் பிடிக்காது. அதுவும் இந்தப் பங்களா நாய்களுக்கு வந்த வாழ்வு அவளை எரிச்சலூட்டியது.
சேர்மக்கனியை கல்யாணம் பண்ணிக் கொண்டு குற்றாலம் வந்தபிறகு அவளது வாழ்க்கை மிகவும் சுருங்கிவிட்டது. வருஷத்தில் ஒருமுறை மட்டும் கோவில் திருவிழாவிற்காக அவளது சொந்த ஊருக்குப் போய் வந்தார்கள். மற்ற நேரங்களில் பங்களா முன்பாக நீண்டு செல்லும் வெறிச்சோடிய சாலையைப் பார்த்துக் கொண்டு அங்கே வசிப்பது அவளுக்குப் பிடிக்கவேயில்லை.
வீட்டை விட்டு வெளியூர் போக முடியாது. மழைக்காலத்தில் வீட்டில் நீர்கசிவு ஏற்படும். அதைச் சரி செய்ய வேண்டும். சுற்றிலும் மரங்கள் இருப்பதால் பாம்பு வந்துவிடும். காலியாக உள்ள வீடு என்றாலும் அறைகளைப் பூட்டியே வைத்திருக்க வேண்டும். மெத்தை, படுக்கைகளைப் பயன்படுத்த முடியாது. பழைய காலக் கடிகாரம் ஒன்று அங்கே இருந்தது. அதற்குத் தினமும் சாவி கொடுக்க வேண்டும்.
அவளது கோபம் முழுவதும் பங்களா மீதே குவிந்திருந்தது. அந்தப் பங்களா பெரிய சிலந்தி வலையைப் போலவும் அதில் தாங்கள் சிக்கிக் கொண்டுவிட்ட பூச்சிகளாகவும் உணருவாள்.
சீசன் இல்லாத நாட்களில் அந்தப் பங்களா இருந்த சாலையில் ஆள் நடமாட்டமேயிருக்காது. குரங்குகள் மட்டுமே அலைந்து கொண்டிருக்கும். பூச்சிகள் மற்றும் வண்டுகளின் தொல்லை அதிகம். சீசனில் நாலு காசு பார்த்தால் மட்டுமே வாழ்க்கை எனப் பலரும் அங்கே குடியிருந்தார்கள்.
அவள் சம்பாதிப்பதற்காகப் பல்வேறு யோசனைகளைச் சேர்மக்கனியிடம் சொல்லியிருக்கிறாள். அவன் எதையும் செய்வதற்குப் பயப்படுவான். முதலாளிக்கு தெரிந்து போய்விட்டால் கிடைக்கிற சம்பளமும் பறிபோய்விடும் எனக் கவலைப்படுவான்.
“என் பேர்ல நான் நடத்துறேன்“ என்று ஒருமுறை வாடகைக்குச் சமையல் பாத்திரங்கள் விடும் கடையை ஆரம்பிக்கலாம் என்று யோசனை சொன்னாள் மஞ்சரி.
“அது சரியா வராது. பக்கத்து பங்களாக்காரனே முதலாளியிடம் போட்டுக் கொடுத்துவிடுவான்“ என்றான் சேர்மக்கனி.
அது உண்மையே. பக்கத்து பங்களா மேனேஜர் சிவபதி எப்போதும் அவர்கள் வீட்டை கவனித்துக் கொண்டேயிருக்கிறார். என்ன நடந்தாலும் உடனே சென்னைக்குப் போன் பண்ணி சொல்லிவிடுவார். அந்தப் பங்களாவின் உரிமையாளர் காசிநாதனின் உறவினர் தான்.
மஞ்சரி சீசனில் கிடைக்கும் மாம்பழங்களைத் திருட்டுதனமாக விற்பனை செய்வதுண்டு. அதைப்பற்றித் தெரிந்த போதும் காசிநாதன் பெரிதாகக் கேட்டுக் கொண்டதில்லை.
இரண்டு நாய்களையும் மஞ்சரி வெறுத்த போதும் அதற்கான இறைச்சியைச் சமைத்து தருவது அவளது வேலையே. நாய்களுக்கான சோறோ, கிழங்கோ, தனியே சமைப்பாள். நாய்களுக்குத் தருவதாக முதலாளி வாங்கிக் கொடுத்திருந்த பிஸ்கட், மாவுப்பவுடரை அவளே அலமாரியில் பூட்டி வைத்திருந்தாள். அவற்றை நாய்களுக்குக் கொடுப்பதும் அவளது வேலையே
நாய்க்குத் தானே சமைக்கிறோம் எனச் சோற்றை வேகாமல் வடிப்பதில்லை. கிழங்கை மசிக்கும் போது கல்லையும் மண்ணையும் அதில் போட்டதில்லை. சமைக்கும் போது அவளை அறியாமல் நாய்களை நேசித்தாள். அக்கறையோடு அதன் உணவைச் சமைத்தாள். நாய்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலிருந்து பார்த்துக் கொண்டுமிருப்பாள். சில வேளை நாய் சாப்பாட்டை விலக்கினால் எதற்காக என அறிந்து கொள்வதுடன் உடனே வேறு செய்து கொடுப்பதும் உண்டு.
சேர்மக்கனி நாய்களைப் பற்றி ஆவலாதி சொல்லும் போது அவள் “அதுகளுக்குக் கொடுத்து வச்சிருக்கு.. நம்ம தான் நாய்பிழைப்பு பிழைக்கிறோம்“என்பாள்.
சேர்மக்கனியின் மூத்தமகள் பத்மாவிற்கு அந்த நாய்களை மிகவும் பிடித்திருந்தது. அவள் பள்ளிவிட்டு வந்தவுடன் நாய்களைக் கொஞ்சுவாள். அவற்றை ஷாம்பு போட்டு குளிக்க வைப்பது அவளது வேலை. அவளுக்காக வாங்கித் தரப்படும் பரோட்டா, சில்லிசிக்கனில் மிச்சம் வைத்து நாய்களுக்குத் தருவதும் உண்டு
ஆனால் இளையமகள் செண்பா டேனியை வெறுத்தாள். ரோசியை மட்டுமே அவளுக்குப் பிடிக்கும். ரோசியோடு விளையாடுவதற்கு ஒரு ரப்பர் பந்து வைத்திருந்தாள். அதை வீசி எறிந்தவுடன் ரோசி ஒடிப்போய் வாயில் கவ்வி கொண்டு வந்து தரும். இந்த விளையாட்டினை ஆசையாக விளையாடியபடியிருப்பாள்.
தோட்டவேலைகளுக்கு வருபவர்கள் அந்த இரண்டு நாய்களையும் கண்டு பயந்தார்கள். அதுவும் எவராவது சிகரெட் பிடித்துவிட்டால் போதும் டேனி சப்தமாகக் குரைக்க ஆரம்பித்துவிடும். சிகரெட்டை அணைக்கும் வரை அந்தக் குரைப்பொலி நிற்காது. டேனி அப்படி நடந்து கொள்வது காசிநாதனை மகிழ்ச்சிப்படுத்தியது
சீசன் நாட்களில் காசிநாதன் இரண்டு நாய்களையும் அருவியைக் காட்ட அழைத்துப் போகச் சொல்வார்.
நாய்கள் ஏன் அருவியைப் பார்க்க வேண்டும் எனச் சேர்மக்கனி கேட்டதேயில்லை. அவன் இரண்டு நாய்களையும் சங்கலியிட்டபடி அழைத்துக் கொண்டு போவான். பொங்கி வழியும் அருவியின் பேரோசையும் சாரலின் நீர்தெளிப்பும் ஜனக்கூட்டத்தின் பரபரப்பும் கண்டு நாய்கள் ஒடுங்கிப் போய்த் தலையைக் கவிழ்ந்தபடியே நிற்கும்.
நாய் அருவியை ஏறிட்டு பார்க்கிறதா எனச் சேர்மக்கனி கவனிப்பான். ஒருபோதும் நாய்கள் அருவியை ஏறிட்டுப் பார்த்ததில்லை. போதும் போகலாம் என விலகியோடும் சிறுவனைப் போலவே நாய்களும் நடந்து கொண்டன. பின்பு எதற்காக அருவியைக் காண அழைத்துப் போகச் சொல்கிறார் எனச் சேர்மக்கனிக்குப் புரியாது.
ஒருமுறை இரண்டு நாய்களும் வானவில்லின் தெறிப்பை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்ததைச் சேர்மக்கனி கவனித்திருக்கிறான்.
இன்னொரு முறை தன்மீது விழுந்த மழைத்துளிகளை நாய் சிலுப்பியதோடு விநோமான குரல் கொடுத்ததைப் பார்த்திருக்கிறான். அருவி மீது மனிதர்கள் கொள்ளும் வியப்பு நாய்களுக்குக் கிடையாது. நாய்களுக்கு அருவி என்னவாகத் தெரியும். எப்படி உணரும் எனத் தெரியவில்லை. நாயின் கண்கள் சாலையோரங்களைக் கவனிப்பதைப் போலச் சாலையைக் கவனிப்பதில்லை. குறிப்பாகச் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளைக் கவனிப்பதேயில்லை.
அந்த நாய்களைப் பங்களாவிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு வரும் போது தெருநாய்கள் அவற்றைச் சீண்டி குரைப்பதுடன் பின்னால் சப்தமிட்டபடி வருவதும் உண்டு. அப்போது டேனி பற்களை இளித்துக் கொண்டு சீறும். ரோசியிடம் அப்படியான கோபமிருக்காது.
நாய்களுக்கு அருவியைக் காட்டுவது காசிநாதனுக்குப் பிடித்திருந்தது என்றால் அந்த நாய்களுக்கு மொட்டைப்பாறை மீது ஏறி நின்று மாலை வெயிலைக் காண்பது பிடித்திருந்தது.
இதற்காகச் சேர்மக்கனி இரண்டு நாய்களையும் மொட்டைபாறைக்குக் கூட்டிக் கொண்டு போவான். அது ஒரு சிறிய குன்று. பாறை மீது தாவி ஏறி நிற்கும் நாய் காற்றில் எதையோ காண்பது போல முகத்தைச் சிலிப்பிக் கொள்ளும். பின்பு கால்களை உயர்த்திச் சூரியனுக்கு வணக்கம் சொல்வது போல மேற்கில் பார்த்துக் கொண்டிருக்கும். இருட்டும் வரை மொட்டைபாறையில் நிற்க வேண்டும். நாம் காணாத எதையோ நாய்கள் காணுகின்றன. உணருகின்றன.
சீசனுக்கு வரும் போதெல்லாம் தனது யாஷிகா கேமிராவால் காசிநாதன் நாய்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அந்தப் புகைப்படங்களைத் தென்காசிக்குக் கொண்டு போய் பிரிண்ட் போட்டு ஆல்பமாக வைத்துக் கொள்ளுவார். அப்படியான ஆல்பங்கள் சென்னையிலுள்ள அவரது வீட்டில் நிறைய இருந்தன. திடீரென ஒரு இரவு அந்த ஆல்பத்தில் ஏதோ ஒன்றை எடுத்துப் புரட்டி அந்த ஆண்டின் அருவிக்காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்வார்
குற்றாலம் வந்து தங்கும் நாட்களில் வள்ளியம்மையிடம் ஒரு மாற்றம் உருவாகும். சென்னையில் நாள் முழுவதும் யாருடனாவது போனிலோ, நேரிலோ பேசிக் கொண்டேயிருக்கும் அவள் குற்றாலம் வந்தவுடன் மௌனமாகிவிடுவாள். அதுவும் சில நாட்கள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனவிரதமிருப்பாள். அந்த நாட்களில் நாய்கள் அவளுடன் மிகவும் நெருக்கமாகிவிடும்.
இரண்டு நாய்களையும் அழைத்துக் கொண்டு மாந்தோப்பிற்குள் சுற்றி வருவாள். நாய்களின் கால உணர்வு விநோமானது. வருவதை முன்னுணர்ந்துவிட்டதைப் போல நாய்கள் நடந்து கொள்வதுண்டு. ரோசியை விடவும் டேனியை அவள் அதிகம் நேசித்தாள். அதன் நெற்றியை தடவிவிட்டுச் செல்லமாகக் கோவித்துக் கொள்வாள்.

திடீரென ஒரு நாள் ரோசிக்கு காது கேட்காமல் போனது. அதற்குக் காது கேட்கவில்லை என்பதையே சேர்மக்கனி தாமதமாகத் தான் கவனித்தான். அது கூடச் செண்பா சொல்லித்தான் அறிந்து கொண்டான்.
காது கேட்கவில்லை என்று கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காட்டினான். அவர் சில மாத்திரைகள், சொட்டு மருந்து எழுதிக் கொடுத்தார். அவற்றைக் கொடுத்த போதும் குணமாகவில்லை. ரோசிக்கு காதுகேட்கவில்லை என்பதைக் காசிநாதன் அறிந்த போது மிகவும் வருத்தப்பட்டார்.
“நாய்க்கு இயரிங் மிஷன் வைக்க முடியுமா“ என்று தனது நண்பர்களிடம் விசாரித்தார். அப்படி வசதியில்லை என்றார்கள்
மதுரையிலிருந்து ஒரு கால்நடை மருத்துவரை வரவழைத்துக் காட்டினார்.
“வயதாகிவிட்டதால் அதற்குக் காது கேட்கவில்லை. ஒரு காதில் லேசாகச் சப்தம் கேட்கிறது. அதுவும் கொஞ்ச நாளில் பறி போய்விடும்“ என்றார் டாக்டர்
“காது கேட்காத நாயை ராக்காவலுக்கு வைக்கமுடியாது. குற்றாலத்தில் வைத்துக் கொள்வதை விடவும் சென்னைக்குக் கொண்டுபோய்விடுவது சௌகரியமாக இருக்கும்“ என்றார் காசிநாதன்.
வள்ளியம்மையும் அதைச் சென்னைக்குக் கொண்டு போய்விட்டால் கவனித்துக் கொள்ள வீட்டு ஆட்கள் இருப்பார்கள் என்றாள்
“காது கேட்காத நாய் என்பது வெறும் நிழல் போன்றது, நாயின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் மட்டுமே அதன் நடமாட்டத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்“ என்றார் டாக்டர்
இரண்டில் ஒரு நாய் சென்னை போகிறது என்பதில் சேர்மக்கனிக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் முதலாளி தரும் முப்பதாயிரத்தில் பாதி வராதே எனக் கவலை கொண்டவனாக “நமக்கு எப்படியும் ரெண்டு நாய் வேணும் முதலாளி“ என்றான்
“அதுக்கு ஏற்பாடு பண்ணுவோம். புதுசா வர்ற நாய் டேனியோட செட் ஆகணும்“ என்றார் காசிநாதன்
“அதெல்லாம் நான் பழக்கிடுவேன்“ என்றான் சேர்மக்கனி
தங்கள் காரிலே ரோசியை அழைத்துக் கொண்டு போவது எனக் காசிநாதன் முடிவு செய்த நாளில் டேனியைத் தனியே மொட்டைபாறைக்கு அழைத்துப் போகும்படி சொன்னார்
ஆனால் டேனி வர மறுத்தது. அத்தோடு சங்கிலியை அறுத்துக் கொண்டு திமிறுவது போலக் குரைத்தது. நோயாளியான சிறுமியை போல ரோசி வள்ளியம்மையோடு காரில் ஏறும் போது டேனி ஊளையிட்டது.
கார் புறப்படும் போது ரோசி அவர்களை வெறித்துப் பார்த்தது. என்ன பார்வையது. எதைச் சொல்ல முயன்றது.
சேர்மக்கனி அன்றிரவு டேனியை காவலுக்கு அவிழ்த்துவிடவில்லை. ஆனால் இரவெல்லாம் அது சங்கிலியை இழுத்துக் கொண்டு குரைத்தபடியே இருந்தது
“ஒண்ணா பழகின நாய்ல. ரோசி போனதுல. சங்கடப்படுது“ என்றாள் மஞ்சரி
செண்பாவிற்கு ரோசி போன வருத்தம் அதிகமாகயிருந்தது. அவள் தனது நோட்டில் ரோசியின் உருவத்தை நினைவிலிருந்து வரைந்து கொண்டிருந்தாள்.
பத்மா டேனிக்கு இரவு உணவை கொண்டு போய் வைத்த போது அவள் மீது பாய்ந்து கடிக்க முயன்றது. அன்றிரவு அவர்கள் கொடுத்த உணவை டேனி சாப்பிடவில்லை. மறுநாள் காலை சென்னையிலிருந்து காசிநாதன் தொலைபேசியில் அழைத்து “ டேனி சாப்பிட்டதா“ என்று கேட்டார்
“சாப்பிட மாட்டேங்குது முதலாளி… ஒரே சப்தம்“ என்றான்
“அதுகிட்ட நான் பேசுறேன்“ என்று சொன்னார்
செல்போனை அருகில் கொண்டு போன போது டேனியின் முகம் மாறியிருந்தது. சிவப்பேறிய கண்கள். வெறி கொண்டது போலக் குரைத்தது. வள்ளியம்மையும் டேனியிடம் ஏதோ பேச முயன்று தோற்றுப் போனாள்.
மறுநாள் ஒரு நாட்டு மருத்துவர் வந்து நாயைப் பார்வையிட்டார். சோற்றில் கலந்து தரும்படியாக ஒரு பொடியை கொடுத்துப் போனார்
“சோத்துல கலந்துவச்சா அது திங்காது டாக்டர்“ என்றாள் மஞ்சரி
“அப்போ தண்ணீல கலந்து வச்சிடுங்க. தாகம் எடுக்கும் போதும் நக்கி குடிக்கட்டும்“ என்றார்
அது போலவே தண்ணீரில் அந்தப் பொடியை கலந்து வைத்தார்கள். அதை டேனி நக்கிக் குடித்த பின்பு மயங்குவது போலச் சுருண்டு கொண்டது. மாலை வரை அப்படியே கிடந்தது. இடையில் லேசாகக் கண்ணைத் திறந்து பார்ப்பதும் மூடிக் கொள்வதுமாக இருந்தது
“ரோசியை நினைச்சி வருத்தப்படுது பாவம்“ என்றாள் மஞ்சரி.
“அதுக ரெண்டும் என்ன புருஷன் பொண்டாட்டியா. வருத்தப்பட, நாய்க போக்கே இப்படிப் புரியாம தான் இருக்கும்“ என்றான் சேர்மக்கனி
“சும்மா நாய்களைக் குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க. வாயில்லாத பிறவிக . இங்க நாம பண்ற எல்லா தப்பையும் அதுக பாத்துகிட்டு தான் இருக்கு.. பாவம் அதுகளால எதையும் வெளியே சொல்ல முடியாது“.
“அதுவும் நிஜம் தான் “என்றான் சேர்மக்கனி.
இரண்டு நாட்களின் பின்பு டேனி இயல்பிற்குத் திரும்பியது. ஆனால் தன்னோடு ரோசி நடப்பது போலத் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டது. ரோசியின் குரல் கேட்டது போல ஒடியது. ரோசி அங்கே இருப்பது போலப் பாவனைச் செய்து கொண்டது.
அதே நேரம் சென்னைக்குக் கொண்டு போகப்பட்ட ரோசி அடுத்த நாளே வேலைக்காரியின் சேலையை பல்லால் இழுத்ததோடு அவளது காலில் ரத்தம் வரக் கடித்து விட்டது. வள்ளியம்மை ரோசியைக் கண்டித்தபோது அவள் மீது கடிப்பதற்குப் பாய்ந்தது. ரோசியின் இயல்பு மாறி விட்டதை உணர்ந்த காசிநாதன் அதனை வீட்டிற்கு வெளியே தனியே கட்டிப் போட்டு வைத்தார். நிலை கொள்ளாமல் ரோசி குரைத்துக் கொண்டிருந்தது.
இது நடந்த ஆறாம் நாளில் காசிநாதனின் மேலாளர் ரோசியைக் குற்றாலத்திற்குக் காரில் திரும்பக் கொண்டு வந்திருந்தார்.
வாசலுக்கு முன்னால் கார் நின்றதும் செண்பா சந்தோஷமாகச் சப்தமிட்டாள்
“ரோசி வந்துருச்சி“
சங்கிலியால் கட்டப்பட்ட டேனி அறுத்துக் கொண்டு வர முற்படுவது போலத் திமிறியது
காரைவிட்டு இறங்கிய ரோசி நேராக டேனி கட்டப்பட்டிருந்த இடத்தின் அருகே போய்ப் படுத்துக் கொண்டது. டேனியின் கண்கள் ரோசியை வெறித்துப் பார்த்தன. இரண்டு நாய்களும் மௌனமாக ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. பின்பு மௌனமாகின. டேனி தனது வாலை லேசாக ஆட்டியது. அதைக் கண்ட ரோசியின் கலங்கிய கண்களில் நீர் வழிந்தது.
“ரோசி பாவம்மா. அதுக்குக் காது கேட்காம போனாலும் நாம தான் காப்பத்தணும்“ என்றாள் செண்பா
“வயசாகிருச்சி.. ரொம்ப நாள் தாங்காது, செத்துப் போயிடும், செத்து போன நாயப் புதைச்சா மாமரம் நல்லா வரும்“ என்றான் சேர்மக்கனி.
அதைக்கேட்கும் போது மஞ்சரிக்கு வேதனையாக இருந்தது.
ரோசி வீடு திரும்பியதற்காக அன்று மஞ்சரி அந்த நாய்களுக்குப் பிடித்தமான முட்டையும் கறியும் கலந்த சோறு சமைத்தாள். எப்போதும் இல்லாமல் அன்றைக்கு அதன் ருசி எப்படியிருக்கிறது எனக் கரண்டியில் எடுத்து ருசி பார்த்துக் கொண்டாள்.
தட்டில் கறிச்சோற்றைப் போட்டு நாய்களின் முன்பாக வைத்த போது அவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
ரோசியும் டேனியும் உதிர்ந்த இலைகள் இரண்டு அருகருகே கிடப்பது போல அசைவற்றிருந்தன. ரோசியை அப்படிக் காணும் போது புருஷனிடம் அடிவாங்கி முகம் வீங்கியபடி நள்ளிரவில் வீடு வந்த அவளது அக்காவின் முகம் மஞ்சரியின் நினைவில் வந்து போனது. அக்காவும் இப்படித் தான் சாப்பிட மறுத்து படுத்துக்கிடந்தாள்.
“என் தங்கமில்லே.. சாப்பிடுங்க“ என் அவள் நாய்களிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்ததைச் சேர்மக்கனி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்
•••