திரைக்கு முன்னால்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 13. 2026

அந்தப் பெண்கள் இருவரும் கையில் கோன்ஐஸ்கிரீம் வைத்திருந்தார்கள்..

ஆர்கேஎஸ் தியேட்டரில் கோன் ஐஸ்கிரீம் மிகுந்த சுவையாக இருக்கும். வழக்கமாகச் சபாபதியும் அவனது மனைவி தனசங்கரியும் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் தியேட்டருக்குள் செல்வார்கள். அன்றைக்கு அவர்கள் டைட்டானிக் படத்தினைக் காணுவதற்காக வந்திருந்தார்கள்.

கோன்ஐஸை நோக்கித் தனது நாக்கை நீட்டிய ஆரஞ்சு வண்ண சுடிதார் அணிந்த பெண்ணிற்கு முப்பத்தைந்து வயதிருக்கக் கூடும். அருகில் நின்றவளின் வயது பதினைந்து இருக்கலாம். அவள் நீலநிற ஜீன்ஸ் பிளாக் டாப்ஸ் அணிந்திருந்தாள். ஆரஞ்சு சுடிதார் பெண்ணைக் காட்டி தனசங்கரி கேட்டாள்

“இவ யாருனு தெரியுதா “

“தெரியலை. யாரு தெரிஞ்சவங்களா“ எனக் கேட்டான் சபாபதி.

“இல்லை.. இவ தான் கோவில்ல வச்சு என் கழுத்துல கிடந்த ரெட்டவடம் செயினைத் திருடுனவ. “

“இந்தப் பொண்ணா “எனத் திகைப்புடன் கேட்டான் சபாபதி

“இவளே தான். அன்னைக்குச் சேலை கட்டியிருந்தா. இன்னைக்குச் சுடிதார் போட்டிருக்கா. கூட இருக்கிறது அவ மக மாதிரியிருக்குல்லே“

“ஆமா.. ரெண்டு பேர் மூக்கும் ஒண்ணு போல இருக்கு. “

“அவளும் திருடுவாளோ என்னமோ. “

“நமக்கு எப்படித் தெரியும்“

“அவ ஸ்டைலை பாத்தீங்களா.. கைல நகப்பாலீஸ். காதுல பெரிய ரிங். தலைமுடியை வேற சுருட்டி விட்டிருக்கா.. “

“அவ எப்படியும் இருந்துட்டு போறா.. நமக்கென்ன“

“அன்னைக்குப் போலீஸ் மட்டும் இல்லேன்னா. என் நகை அவ்வளவு தான் . வரிசையில் பின்னாடி நின்னுகிட்டு இருந்தவ. சட்டுனு கழுத்துல கிடக்கிறதை அறுத்துட்டு ஒடிட்டா“

“நீ உசாரா இருந்திருக்கணும்“

“உசாரா தான் இருந்தேன். ஆனா இவ முகத்தைப் பாத்து அப்பாவினு நினைச்சி ஏமாந்துட்டேன். இவ கெட்ட கேடுக்கு கோன் ஐஸ் என்ன வேண்டியிருக்கு. எப்படி நக்கி நக்கித் திங்குறா. பாருங்க. வெட்கம்கெட்டவ. “

“அவளை விடு.. நமக்கு ஐஸ் வாங்க வேண்டாமா“

“அந்த கருமத்தை இவளும் திங்குறா.. நாமளும் திங்கணுமா.. எனக்கு வேணாம். உங்களுக்கு வேணும்னா.. வாங்கிக் கோங்க. “

“எனக்கும் வேணாம்.. இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்கிக்கிடுவோம்“ என்றான் சபாபதி

“அவ என்ன கவனிச்ச மாதிரியே தெரியலை. பாத்தாளா.. இல்லை பாக்காத மாதிரி நடிக்கிறாளா“

“பாத்துட்டு தான் தலையத் திருப்பிகிட்டா“

“திமிரு.. அவ நம்மளை பாத்து சிரிக்கிற மாதிரியிருக்குல்லே. “.

“எப்படியும் போகட்டும் நாம உள்ளே போவோம். “ என அரங்கின் உள்ளே தனசங்கரியை அழைத்துக் கொண்டு சென்றான்

“ஜெயில்ல இருந்து எப்போ வந்தளோ.. இங்கே எவ தாலியை அறுக்க வந்திருக்காளோ“

“அவ எதுவும் செய்து தொலையட்டும். நாம படத்தைப் பார்ப்போம்“

“அப்படி இருக்க முடியாதுங்க.. நம்ம கண்ணுமுன்னே நகையை இவ ஆட்டைய போடுறதை எப்படிப் பாத்துகிட்டு இருக்க முடியும். “

“அதுக்கு நாம என்ன செய்றது“

“தியேட்டர்க்குள்ளே போலீஸ் கிடையாதா“

“அதெல்லாம் கிடையாது“

“அப்போ தியேட்டர் மேனேஜர்கிட்ட போயி இந்த மாதிரி திருடி ஒருத்தி உள்ளே வந்திருக்கானு சொல்லிட்டு வர்றீங்களா“

“அது நம்மவேலையில்ல தனா. “.

“இப்படி எல்லோரும் நினைக்கிறது தான் இவளுக்கு இளக்காரமா போச்சு.. எத்தனை பேர் நகையைத் திருடியிருப்பா.. கொஞ்சமாவது மனசுல பயம் இருக்கா பாருங்களேன். “

“அதான் போலீஸ் பிடிச்சி உள்ளே போட்டுட்டாங்களே“

“இப்படி தப்புமேல தப்பு பண்ணிட்டு இவளும் சந்தோஷமாத் தானே இருக்கா. இவளுக்குப் புள்ள குட்டியிருக்கே“

“அதுக்கு என்ன செய்ய.. “

“அங்கே பாருங்க அம்மாவும் மகளும் ஆளுக்கு ஒரு பாப்கார்ன். அனுபவிக்கிறாளுக“

“உனக்கு வேணும்னா சொல்லு.. வாங்கிட்டு வர்றேன்“

“எனக்கு வேணாம்.. இவ எல்லாம் இங்க சினிமா பாக்கத் தான் வந்திருப்பானு நினைக்கிறீங்களா“

“சினிமா தியேட்டர்ல வேற என்ன செய்ய முடியும்“

“அப்படி தான் கோவில்ல நினைச்சேன். ஆனா என் கழுத்துல கிடந்ததை அறுத்துட்டாளே“

அம்மாவும் மகளும் அவர்களின் முன்வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்.

“சப்தமா பேசாதே. கேட்கப்போறாங்க“

“நல்லா கேட்கட்டும்“ என்றாள் தனசங்கரி.

அம்மாவும் மகளும் பாப்கார்ன் தின்றபடியே சப்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டார்கள். ஆரஞ்சு சுடிதார் அணிந்த பெண்ணிற்கு அடுத்து ஒரு இளம்பெண்ணும் அவளது கணவனும் வந்து அமர்ந்தார்கள். அந்தப் பெண் கையில் நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். ஃபேன்ஸி டஸ்ஸார் மல்டி கலர் புடவை, கூந்தலில் மல்லிகைப்பூ.

“ஏங்க. அவ பக்கத்துல யாரோ புதுசா கல்யாணம் ஆனவங்க உக்காந்திருக்காங்க. அந்தப் பொண்ணு கழுத்துல நிறைய நகை இருக்கு. அந்தப் பொண்ணை வேற சீட் மாறி உட்காரச் சொல்லுங்க “என்றாள் தனசங்கரி

“நாம எப்படிம்மா சொல்ல முடியும். “

“அதுக்காக இவ திருடினு தெரிஞ்சிகிட்டு நாம வாயை மூடிட்டு இருக்கணுமா… நீங்க சொல்லாட்டி.. நான் போயி அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டு வரப்போறன்“

“எதுக்கு வம்பு. பேசாம படத்தைப் பாரு.. “

“என் மனசு கேட்கமாட்டேங்குது.. “ எனத் தனசங்கரி எழுந்த போது அந்த வரிசையில் வேறு ஒரு நடுத்தரவயது ஆள் நடந்து வந்து புதுப்பெண் அமர்ந்திருப்பது தனது இருக்கை என டிக்கெட்டைக் காட்டினார். அந்தப் பெண்ணும் பையனும் வேறு இருக்கைக்கு மாறினார்கள்.

“நல்லவேளை சாமியே அந்தப் பொண்ணை இடத்தை மாற்றி உட்கார வச்சிட்டாரு “என்றாள் தனசங்கரி

ஆரஞ்சு சுடிதார் அணிந்த பெண் தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்த நபருக்கு பாப்கார்ன் பாக்கெட்டினை நீட்டி எடுத்துக் கொள்ளும்படி சொன்னாள்

“பாத்தீங்களா. இந்தக் கூத்தை.. அந்த ஆள் பர்ஸை மொள்ளையப் போடப்பாக்குறா“

“அவ எக்கேடும் கெட்டு தொலையட்டும் நாம அவளைப் பாக்குறதுக்கா வந்துருக்கோம்“ என்றான் சபாபதி

“இவ எல்லாம் எந்த வயசில திருடியாகியிருப்பா.. அவங்க அப்பா அம்மா என்ன வேலை செய்திருப்பாங்க“

“அவ கிட்ட தான் கேட்கணும்“

“இவ மகளுக்கு அம்மா திருடினு தெரியுமா.. அதைத் தெரிஞ்சிகிட்டு எப்படி ஜாலியா சினிமா பாக்க கூட வந்திருக்கா“

“திருடிங்கிறதுக்காக அம்மா இல்லேனு ஆகிடுமா“

“என்ன ஜென்மங்களோ.. அவளைப் பாருங்க பக்கத்துச் சீட்டுகாரனைத் தொட்டுத் தொட்டு பேசுறா., அந்த ஆளும் இளிக்கிறான். அவனும் இவ கேஸ் தான் போல“

“யாரையும் அப்படிச் சொல்லக்கூடாது தனா“

“உங்களுக்கு உலகம் தெரியாது. நான் நாலு இடத்துக்குப் போய் வர்றவ.. ஆளு முகரைப் பாத்தவுடன் கண்டுபிடிச்சிருவேன்“

“அதான் நகையைப் பறிகொடுத்தயாக்கும்“ என்றான் சபாபதி.

படம் துவங்குவதற்கான இசை ஒலிக்க ஆரம்பித்தது. திரையில் விளம்பரங்கள் ஒடத்துவங்கின. நகை விளம்பரம் ஒன்றைக் காட்டினார்கள். அம்மாவும் மகளும் அதைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டதை தனசங்கரி கவனித்தாள். படம் துவங்கியபோது மகளைத் தனியே விட்டு அம்மா வெளியே எழுந்து போனாள்

“அவ எதுக்கு வெளியே போறா“ எனக்கேட்டாள் தனசங்கரி

“எனக்கு எப்படிம்மா தெரியும்“

“நான் போயி பாத்துட்டு வரவா “எனக்கேட்டாள்

“பேசாம படத்தைப் பாரு“ என்றான் சபாபதி

வெளியே சென்றவள், இரண்டு குளிர்பானங்களை வாங்கிக் கொண்டு உள்ளே வந்திருந்தாள்

“கூல்ட்ரிங் வாங்கிட்டு வந்திருக்கா. “

“குடிச்சிட்டு போறா“.. எனக் கோபமாகச் சொன்னான் சபாபதி

படத்தில் வரும் காதல்காட்சிகளை அம்மாவும் மகளும் கைதட்டி ரசித்தார்கள். கப்பலின் அடித்தளத்தில் ரோஸ் உடன் ஜாக் நடனமாடும் போது ஆரஞ்சு சுடிதார் அணிந்த பெண் தனது பாப்கார்ன் பாக்கெட்டில் இருந்த சோளத்தைத் திரையை நோக்கி வீசிச் சப்தமிட்டாள். அவர்கள் படத்தை உற்சாகமாக ரசித்துக் கொண்டாடுவதைச் சபாபதி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தனசங்கரியின் கவனம் முழுவதும் அவள் எதையாவது திருடப் போகிறாளா என்பதிலே இருந்தது.

பாதிப் படத்திலே படத்தை மறந்து தனக்கு நடந்த திருட்டைப் பற்றித் தனசங்கரி நினைக்கத் துவங்கினாள்.

••

திருமணமான புதிதில் சபாபதியும் தனசங்கரியும் வாரம் வெள்ளிக்கிழமை மாலை சினிமாவிற்குப் போவார்கள். அந்த ஊரில் நான்கே திரையரங்குகள் இருந்தன. ஆகவே பார்த்தபடத்தையே திரும்பவும் பார்க்க வேண்டியதாகியது. நாளடைவில் சினிமாவிற்குப் போகும் விருப்பம் வடிந்து போனது. அதுவும் திருமணமாகி ஒன்பது வருஷங்களாகக் குழந்தைகள் இல்லாமல் போனபிறகு தனசங்கரியின் கவனம் முழுவதும் கோவில் பக்கம் திரும்பிவிட்டது. அன்றாடம் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய்வந்தாள். வேண்டுதல்கள் போட்டாள். பரிகாரங்கள் செய்து பார்த்தாள். கடவுள் இன்னமும் மனது வைக்கவில்லை என இரவில் படுக்கையில் கண்ணீர் கசியப் புலம்பினாள்.

சபாபதி குழந்தையில்லாததைப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. தங்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டான். அந்தச் சமாதானத்தைத் தனசங்கரியால் ஏற்க முடியவில்லை. அவள் மிகவும் வருந்தினாள். தங்கள் வாழ்க்கை ஆறிப்போன காபியை போலாகிவிட்டதாக உணர்ந்தாள். எதையும் ஆசையாகச் செய்யவோ, சாப்பிடவோ கூட விருப்பம் வடிந்துவிட்டது. தீபாவளி. பொங்கல் போன்ற விசேச நாட்களில் உடனிருந்து சாப்பிட பிள்ளை இல்லையே என வருந்தினாள்.

சபாபதியோ அவளைச் சந்தோஷமாக வைத்துக்கொண்டால் போதும் என நினைத்தான். அதற்காக அவளுக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தான். அந்த ஸ்கூட்டி அவளுக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டது. அலங்கார கற்கள். போலி முத்துகள். மணிகள் வாங்கி வந்து மலிவுவிலை நகைகள் செய்யத் துவங்கினாள். அவற்றை விற்பதற்காகச் சில கடைகளையும் பிடித்திருந்தாள். இதனால் தினமும் மதியம் பஜாருக்குப் போய் வரத் துவங்கினாள். தனக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது மறக்காமல் கோவிலுக்குப் போவதுண்டு

ஒரு செவ்வாய்கிழமை சிவன் கோவிலுக்குப் போயிருந்த போது ஏதோ யாகம் நடக்கிறது என நீண்ட வரிசையாக இருந்தது. தனசங்கரி வரிசையில் நின்று கொண்டாள். திடீரென யாரோ முதுகில் இடிப்பது போலிருந்தது. திரும்பிப் பார்த்தாள். முப்பது வயதிருக்கும். மெலிந்த தோற்றம் கொண்ட பெண். ஊதா நிற சேலை. பள்ளி மாணவிகள் அணிவது போன்ற பாசிமாலை அணிந்திருந்தாள். கையில் ரப்பர் வளையல்.. இடது கையில் ஒரு வயர்கூடை. அதில் தீபம் போடுவதற்கான எண்ணெய் வைத்துள்ள சிறிய தூக்குவாளி. தீப்பெட்டி.

“இடிக்காம நில்லுங்க“ என்றாள் தனசங்கரி

“தலை சுத்துச்சி. அதான்கா“.. என்றாள் அந்தப் பெண்.

தனசங்கரிக்கு அந்தப் பதில் போதுமானதாகயிருந்தது. என்ன வேண்டுதலுக்காக வந்திருக்கிறாளோ பாவம் என நினைத்தபடி வரிசையில் நின்றாள். வரிசை நகரவேயில்லை. வெக்கை அதிகமான நாள் என்பதால் வியர்த்து வழிந்தது. தாகமாகவும் இருந்தது. மறுபடியும் அந்தப் பெண் இடிப்பது போல இருக்கவே முறைத்தபடியே திரும்பினாள்

“உங்க ரூபாயா“ எனக் கிழே கிடந்த ஐந்து ரூபாயைக் காட்டினாள்

அது தன்னுடைய பணமில்லை என அறிந்தபோதும் தனது பர்ஸை திறந்து உள்ளே இருந்த பணத்தைச் சரி பார்த்தாள் தனசங்கரி.

பின்னாடி நின்றவள் அவளைத் தள்ளவே பர்ஸில் இருந்த சில்லறைகள் சிதறியோடின. அவள் குனிந்து அந்தச் சில்லறைகளைப் பொறுக்கிவிட்டு நிமிர்ந்த போது அவள் கழுத்தில் அணிந்திருந்த ரெட்டைவடம் சங்கிலியைக் காணவில்லை. யாரோ திருடியிருந்தார்கள். யாரோயில்லை. பின்னால் நின்றிருந்த பெண் என உணர்ந்து திருடி திருடி எனச் சப்தமிட்டபோது பின்னால் நின்றிருந்த பெண்ணைக் காணவில்லை.

கோவில் வாசலில் நின்றிருந்த காவலர்கள் விரைந்து வந்து விசாரித்தார்கள். தனசங்கரியால் பதில் சொல்லமுடியவில்லை. நாக்கு உறைந்துவிட்டதைப் போலிருந்தது. திருடிய பெண் தேங்காய் கடைய ஒட்டிய சந்திற்குள் போனதாகச் சொன்னார் ஒரு பெரியவர். காவலர்கள் வேகமாக அந்தப் பக்கம் போனார்கள். வரிசையில் தொடர்ந்து செல்ல முடியாமல் கால்நடுங்க ஒதுங்கி நின்று கொண்டாள் தனசங்கரி.

காவலர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டுவந்திருந்தார்கள். அவளது கையில் தனசங்கரியின் ரெட்டைவடம் செயின் இருந்தது

“இது உன் செயின் தானேம்மா“ என்று கேட்டார் காவலர்

ஆமாம் எனத் தலையாட்டினார்

“கிழே கிடந்துச்சி. எடுத்தேன்“ என்றாள் அந்தப் பெண்

“திருட்டுநாயி.. செவுளை பேத்துருவேன்“.. எனக் காவலர் அவளை மிரட்டினார்.

தனசங்கரியை ஸ்டேஷனுக்கு அழைத்தார் காவலர்.

“சார் என் செயினைக் குடுத்துருங்க.. நான் வீட்டுக்குப் போயிடுறேன்“ என்று கைகூப்பி வணங்கினாள் தனசங்கரி

“அப்படி விட முடியாதும்மா.. கையும் களவுமா பிடிச்சிருக்கோம். நீங்க ஸ்டேஷன் வந்து கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு போங்க“

“என் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சா திட்டுவார் சார்.. “

“செயினோட இவ ஒடிப்போயிருந்தா.. என்ன ஆகியிருக்கும்.. இவ மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கு.. நீங்க ஸ்டேஷனுக்கு வந்துருங்க.. தெப்பக்குளம் பக்கத்துல இருக்க ஸ்டேஷன்“ என்றபடி அந்தக் காவலர் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றார்.

தனசங்கரி கோவிலுக்குள் போகவில்லை. பக்கத்துப் பூக்கடையில் இருந்த பெண் அவள் கேட்காமலே தனது வாட்டர்பாட்டிலை எடுத்துத் தனசங்கரியிடம் நீட்டி “குடி தாயி` என்றாள். அந்தத் தண்ணீர் அவளது நடுக்கத்தைக் குறைத்தது.

வீடு திரும்பி தனது கணவனிடம் நடந்தவற்றைச் சொல்லிப் புலம்பினாள். இருவருமாகச் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். அவர்கள் சென்ற நேரம் ஸ்டேஷனில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஒருவேளை லாக்கப்பில் அடைத்து வைத்திருப்பார்களோ என்னவோ.

அந்த ரெட்டைவடம் செயினைத் திரும்பப் பெறுவதற்கு இரண்டு வருஷமாகியது. அத்தோடு கோவிலுக்குப் போகும் நேரத்தையும் மாற்றிக் கொண்டாள். கோவிலுக்குள் புதியவர்களுடன் பேசத் தயங்கினாள். அடிக்கடி தனது கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டாள். அந்த நிகழ்ச்சி ஒரு வடுவைப் போலாகியது.

அத்தனை பேர் மத்தியில் கோவிலில் வைத்து தனது நகையைத் திருடியவள் இன்றைக்கு ஜாலியாகத் தனது கண்முன்னே சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறாளே எனத் தனசங்கரிக்கு ஆதங்கமாக இருந்தது.

இடைவேளையின் போது சபாபதி ஏதாவது வாங்கி வரவா எனத் தனசங்கரியிடம் கேட்டான்

“ஒரே தலைவலியா இருக்கு.. காபி வேணும்“ என்றாள்

காபி வாங்குவதற்காக அவன் வெளியே போன போது அம்மாவும் மகளும் மீண்டும் கோன் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் கேண்டியனில் காபி இல்லை. டீ மட்டும் தானிருந்தது. அதை வாங்கிக் கொண்டு உள்ளே வந்த போது தனசங்கரி குனிந்து அழுது கொண்டிருந்தாள்.

என்ன நடந்தது எனப்புரியாமல் அருகில் போய் “தனா.. என்ன செய்யுது“ எனக்கேட்டான்

“இவ எல்லாம் சந்தோஷமா இருக்கா.. நமக்குத் தான் பிள்ளை இல்லை“ என விசும்பினாள்

என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் “வீட்டுக்கு போவமா“ எனக்கேட்டான்

“இவ முழுசா படம் பாப்பா.. நாம எதுக்குப் பாதிப் படத்துல போகணும். “

“அப்போ இந்த டீயை குடி. “

“அவ வெளியே கோன் ஐஸ் வாங்கியிருப்பாளே“ எனக்கேட்டாள் தனசங்கரி

“ஆமாம்“ எனத் தலையாட்டினான் சபாபதி

“எனக்கு தெரியும். டீ ஆறிப்போயிருக்கு.. எனக்கு வேணாம்“ எனக் கீழே வைத்துவிட்டாள். அதன்பிறகு படம் விடும் வரை தனசங்கரி பேசவேயில்லை. திரையைக் கவனித்தது போலிருந்தாலும் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள். படம்விட்டு வெளியே வந்த போது அம்மாவும் மகளும் ஒரு ஆட்டோவில் ஏறி செல்வதைச் சபாபதி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் உற்சாகம் குறையவேயில்லை.

ஆற்றாமையுடன் தனசங்கரி சொன்னாள்.

“ நாம தான் இப்படியிருக்கோம் “

எதுவும் சொல்லாமல் சபாபதி தலையை ஆட்டிக் கொண்டான்.

பின்பு வழக்கமாக நடக்கும் பாதையை விலக்கி வெளிச்சம் குறைவாக இருந்த வீதி வழியாக இருவரும் வீடு நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.

•••

0Shares
0