மறுபிறவி எடுத்த புத்த துறவியாகக் கருதப்படும் சிறுவனைப் பற்றியது Becoming Who I Was ஆவணப்படம். இந்தக் கொரிய ஆவணப்படத்தை மூன் சாங்-யோங் இயக்கியுள்ளார்.

துறவிகளுக்கு கவலையிருக்குமா. இப்படத்தில் தன்னை வாழும் புத்தனாக அங்கீகரிக்க வேண்டி ஒரு இளந்துறவி கவலைப்படுகிறான். அந்த அங்கீகாரம் கிடைப்பது எளிதாகயில்லை. துறவியின் கண்ணீர் துளியைப் படத்தில் காணுகிறோம்.
திபெத்திய பௌத்த மரபில் மறுபிறவிக்கு முக்கிய இடமிருக்கிறது. லாமாக்களை அப்படித் தான் தேர்வு செய்கிறார்கள். இன்றைய தலாய் லாமா கூடத் தனது முற்பிறவி அடையாளங்ளை நிரூபணம் செய்தே தேர்வு செய்யப்பட்டார் என்கிறார்கள். மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கிய குந்தன் திரைப்படத்தில் இதனை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அது போன்ற உண்மை நிகழ்வையே இந்த ஆவணப்படமும் பதிவு செய்திருக்கிறது.

ஐந்து வயதான பத்மா அங்கிடு, இமயத்தின் அடிவாரத்திலுள்ள சிறிய கிராமத்தில் வசிக்கிறான். அவன் திபெத்திலுள்ள காம் பௌத்த மடாலயத்தில் இறந்து போன லாமாவின் மறுபிறவி என்று கிராமவாசிகள் நம்புகிறார்கள். அந்தச் சிறுவனும் தனது முந்தைய பிறவியை அடிக்கடி நினைவு கொள்கிறான். ஆகவே உள்ளூர் மடாலயத்தால் புதிய ரின்போச்சேவாகத் தேர்வு செய்யப்படுகிறான். ரின்போச்சே என்றால் வாழும் புத்தர் என்று பொருள்.
இதற்கான விழா நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் பலரும் அவனிடம் ஆசி பெறுகிறார்கள். பெற்றோரைப் பிரித்து இளந்துறவியாக வாழும் பத்மா அங்கிடு துறவியின் ஆடை அணிந்து பள்ளிக்குச் செல்கிறான். மற்ற சிறுவர்களுடன் விளையாடுகிறான். மகிழ்ச்சி அடைகிறான்
திபெத்திய லாமாக்களைப் பொறுத்தவரை அவர்களின் சொந்த விருப்பத்தின் மூலம். தங்கள் மறுபிறவிக்கான பெற்றோரையும் இடத்தையும் தேர்வு செய்யலாம். “துல்கஸ்” என்பது மறுபிறவிகளை அங்கீகரிக்கும் செயல்முறையாகும். இது திபெத்தில் 800 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றபட்டு வருகிறது.

தேர்வு செய்யப்படும் ரிம்போச்சே தனது முந்தைய பிறவியில் சொந்தமாக்கி வைத்திருந்த பொருட்களை அடையாளம் காணும்படி கேட்கப்படுகிறார்கள். அந்தச் சோதனையில் வெற்றி பெற்ற பின்பே லாமாவாக அங்கீகரிக்கபடுவது வழக்கம்.
நான்கு ஆண்டுகள் கடந்து போகின்றன. திபெத்திய மடாலயத்திலிருந்து யாரும் பத்மாவை தங்கள் சொந்தம் என்றுஅடையாளம் காட்ட முன் வரவில்லை
ஆகவே அவன் சொன்னது போல மறுபிறவியில்லை. அது ஒரு மோசடியான நடவடிக்கை என மடாலயத்தின் தலைமை நம்புகிறது. ஆகவே அவன் பதவி பறிக்கபட்டுத் துரத்தப்படுகிறான்
இதற்காகப் பத்மா அங்டு மனம் வருந்துகிறான். தன்னை நிரூபிக்கத் திபெத்திய காம் மடாலயத்திற்குப் பயணம் செய்து வர வேண்டும் என விரும்புகிறான். ஆனால் திபெத் சீனாவின் கட்டுபாட்டில் உள்ளதால் அவர்களால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.
பத்மாவை ரின்போச்சோவாக நம்பும் கிராம வைத்தியர் ரிக்ஸின் உர்கெய்ன் அவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். அவனைப் படிக்க வைக்கிறார். தானே பாடம் கற்றுத் தருகிறார். அவனுக்காக உணவு தயாரித்துத் தருகிறார். என்றாவது ஒரு நாள் அவன் ரின்போச்சேவாக ஏற்றுக் கொள்ளப்படுவான் என்று உறுதியாக நம்புகிறார்.

அந்தச் சிறுவன் பேச்சில் செயலிலுள்ள நிதானம், முதிர்ச்சி வியப்பளிக்கிறது. அதே நேரம் சக மாணவர்களுடன் வாட்டர்கேனை வைத்துக் கிரிக்கெட் ஆடும் போதும். பனிக்கட்டியை வீசி விளையாடும் போதும். பிரிவை தாள முடியாமல் கண்ணீர் சிந்தும் போதும் அவன் துறவியில்லை. இயல்பான சிறுவன் என்றே தோன்றுகிறது
அவர்கள் இருவரின் உறவையும் உர்கெய்ன் காட்டும் பேரன்பினையும் படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது.
வாழும் புத்தரைப் போல உர்கெய்ன் நடந்து கொள்கிறார். பத்மா அங்கிடுவிற்காக அவர் சிரமங்களை. அவமானங்களை அமைதியாக ஏற்றுக் கொள்கிறார். பத்மாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள எல்லா வழிகளிலும் முனைகிறார்.
பத்மா 10 வயதை அடைந்தவுடன் உர்க்யனும் அவனும் காம் மடாலயத்தை நோக்கி இரண்டு மாத கால நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள். நிகழ்வுகள் அழகாகப் படமாக்கபட்டிருக்கின்றன.
உர்க்யனும் பத்மாவும் தங்கள் பயணத்தில் போது போதுமான குளிராடைகள் இன்றி அவதிப்படுகிறார்கள். ஒரு இடத்தில், கையுறைகள் மற்றும் குளிராடைகள் விற்கும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்கள். பத்மா தனது உறைந்த கைகளில் அணிய பளிச்சிடும் வண்ணமயமான ஜோடியைத் தேர்வு செய்கிறான். அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்து உபசரிக்கும் அந்தப் பெண்மணி அவர்களின் நோக்கத்தை அறிந்து கொண்டதும் காம் எல்லையில் சீன காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கபடக்கூடும் என்று எச்சரிக்கை செய்கிறாள். ஆனாலும் அவர்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
ரோட்ஸ் பல்கலைக்கழக இதழியல் ஆய்வாளரான ஜின் ஜியோன் 2013 ஆம் ஆண்டில், இந்த உண்மை சம்பவத்தைக் கேள்விபட்டு ஆவணப்படமாக உருவாக்க ஆசைப்பட்டார். அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு 2018ல் இப்படத்தை வெளியிட்டுள்ளார்
இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது

பத்மா அங்கிடுவின் அம்மா தாஷி அவன் பிறப்பை பற்றிச் சொல்லும் நிகழ்வு. உர்கெய்ன் இல்லாத நாட்களில் தனியே பத்மா வாழும் விதம். பயணத்தில் அவன் அடையும் மகிழ்ச்சி, அவனது விளையாட்டுத் தோழர்கள் காட்டும் நட்பு . காம் மடாலயத்திலிருந்து விடை தரும் காட்சி என அழகான தருணங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
லடாக் பகுதியின் அழகினை மட்டுமின்றிப் குளிர்கால வட இந்திய நிலப்பரப்பினையும் படம் கவித்துவமாகப் பதிவுசெய்துள்ளது.