புதிய சிறுகதை
“நம்ம கோவில் தேரைப் பார்க்க வந்திருக்கிறார். அவரைத் தேரடி முக்கு வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வா“ என்று ஹரியிடம் அப்பா சொன்ன போது அவன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தான்.
அம்மா தோசைக்கல்லை அப்போது தான் அடுப்பில் போட்டிருந்தாள். அம்மா மெதுவாகத் தான் தோசை சுடுவாள். அதுவும் அப்பாவிற்குச் சுடும்போது இடையில் வேறு யாரும் சாப்பிட வந்துவிடக்கூடாது. அப்பா சாப்பிட்டுமுடித்துப் போன பிறகு தான் மற்றவர்களுக்குச் சாப்பாடு
அப்பா ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் நிர்வாகத்தைப் பார்க்கிறவர் என்பதால் அதிகாலையிலே குளித்துத் தயாராகிக் கோவிலுக்குக் கிளம்பிப் போய்விடுவார். ஒன்பது மணிக்கு வீடு திரும்பி வந்து தான் சாப்பிடுவார். அப்பா சாப்பிட்ட பிறகு தான் அவனும் அக்காவும் சாப்பிடுவார்கள். அம்மா எப்போது சாப்பிடுகிறாள் என்று யாருக்கும் தெரியாது
அப்பா எப்போதுமே உத்தரவுகளைத் தான் போடுவார். உதவி கேட்பதைக் கூடக் கட்டளையிடுவதே அவரது இயல்பு
“சாப்பிட்டு போறேன்பா“ என்று தயங்கியபடியே சொன்னான் ஹரி
“அதுவரைக்கு அந்த ஆளை தெருவில் நிக்கச் சொல்லவா“ என்று கோபமாகக் கேட்டார் அப்பா
“யாரைச் சொல்கிறார். யார் வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. “ டம்ளரில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு ஹரி வாசலை நோக்கி நடந்தான்.

நாலு கட்டுகளாக உள்ள பெரிய வீடது. தாத்தா காலத்து வீடு. இப்போதும் அப்படியே வைத்திருக்கிறார்கள். பெரியவீடுகள் வெளியில் இருந்து பார்க்க அழகாக இருக்கும். ஆனால் பராமரிப்பது கடினம். அதுவும் வீட்டினை அன்றாடம் சுத்தம் செய்து துடைத்தெடுப்பது பெரிய வேலை. அந்தக் காலத்து வீடு என்பதால் வசதிகள் குறைவு. மழைநாளில் சுவரில் தண்ணீர் இறங்கும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் அப்பாவிடம் பேச முடியாது. ஒடாத கடிகாரம் கூடச் சுவரில் அப்படியே தானிருக்கிறது. அதைக் கழட்ட அப்பா விடமாட்டார். அவருக்கு வீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
வாசலுக்கு வந்த போது நாராயணன் ஏந்திப்பிடித்திருந்த குடையினுள் ஒரு வெள்ளைக்காரன் நின்றிருந்தான். இருபத்தைந்து வயதிருக்கும்.
ஆறடிக்கும் மேலிருக்கும் உயரம். நீளமான கைகள். இளநீலநிறத்தில் சட்டை, கறுப்புபேண்ட். செம்பட்டை மயிர்கள்.. பெண்மை கலந்த முகம். மெலிதான பிரேம் போட்ட முக்கு கண்ணாடி. அவன் தோளில் ஒரு கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது.. எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று தெரியவில்லை. அவனைப் பார்த்தபோது சரவணா தியேட்டரில் பார்த்த இங்கிலீஷ் படத்தில் வரும் டாக்டர் நினைவிற்கு வந்து போனார்.
நாராயணன் குடையை உயர்த்திப்பிடித்திருந்தான்.
“ஹலோ குட்மார்னிங்“ என்றான் ஹரி.
“ஹாய் ஐ ஆம் லியோன்“ என்றான்.
ஏதாவது பத்திரிக்கையாளராக இருக்க வேண்டும். அவர்கள் கோவிலிலிருந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் புகைப்படம் எடுத்து வெளியிட இப்படி வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்து போயிருக்கிறார்கள். ஆகவே லியோனிடம் எதுவும் கேட்காமல் அவனைத் தேரடிக்கு அழைத்துக் கொண்டு போனான்.
அவர்கள் வீடிருந்த வீதி மிகப்பெரியது. தெருவில் மொத்தம் பனிரெண்டே வீடுகள். அகலமான அந்த வீதியில் ஆள் நடமாட்டமேயில்லை. கோழிகள் வெயிலை கொத்தி மேய்ந்தபடியிருந்தன. . ஹரி முன்னால் நடந்து சென்றான்.
வெள்ளைக்காரன் பழைய காலத்து வீடுகளை விநோதமாகப் பார்த்தபடியே நடந்து வந்தான். தேரடியில் ஒரு வேப்பமரம் மட்டுமே இருந்தது. சுற்றிலும் சிறிய மைதானம் போலக் காலியிடம். மாலைநேரத்தில் பையன்கள் அங்கே கிரிக்கெட் ஆடுவார்கள். சில நேரம் கிரிக்கெட் பந்து தேரை மறைத்திருக்கும் தகரத்தின் மீது அடித்துச் சப்தம் எழுப்பும்.
அந்தச் சப்தம் கேட்டால் கிட்ணா வீட்டிலிருக்கும் ரங்குதாத்தா தன்னுடை கோலை ஊன்றிக் கொண்டு எழுந்து வெளியே வந்து திட்டுவார். பையன்கள் அதைக் கேட்டுக் கொள்வதேயில்லை
அந்தத் தேர் நூறு வருஷங்களுக்கும் மேலாகப் பழமையானது. ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா எட்டு நாட்கள் நடைபெறும். அதில் ஏழாம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்
அன்று சுற்றியுள்ள பத்து கிராமத்து மக்களும் திரண்டுவிடுவார்கள். கூடை கூடையாகப் பூக்களை மாலையாக்கி புதுப்பெண்ணைப் போலத் தேரை அலங்கரித்திருப்பார்கள், தேரின் அழகு அதன் பிரம்மாண்டமான சக்கரங்கள். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே உருளும் அந்தச் சக்கரங்கள் கம்பீரமானவை.
ஊர்மக்கள் தேரின் பெரிய வடங்களைத் தொட்டு வணங்குவார்கள். தேர் ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைவதற்கு முன்பு சந்தனமடத்தின் எதிரில் தேரை நிறுத்திவிடுவார்கள். அங்கே விசேச பூஜை நடக்கும். அங்கே வாணவேடிக்கைகள் போடுவார்கள்.
தேரோட்டம் காண வெளியூரில் இருந்து உறவினர்கள் வருவதுண்டு. கோவில் முன்னால் துவங்கி பஜனை மடம் வரை பந்தல் போட்டிருப்பார்கள். கண்ணாடி வளையல்கள் விற்பவர்கள். ராட்டினம், பலூன்விற்பவன், குரங்காட்டி, பஞ்சுமிட்டாய் விற்பவன். இளநீர் விற்பவன். பத்து ரூபாய் போட்டோ ஸ்டுடியோ, நீர்மோர் தருகிறவர்கள், கருப்பட்டி மிட்டாய்கடைகள். இனிப்பு பால்பன்விற்பவர்கள். முறுக்கு அதிரசக்கடைகள். தள்ளுவண்டி சிப்ஸ் கடைகள் என்று ஊரெல்லாம் கொண்டாட்டம் நிரம்பிவழியும்.
தேரோட்டம் முடிந்த மறுநாள் தேரை நிலைக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். அடுத்து ஒரு ஆண்டிற்கு அதை யாரும் காணமுடியாது. சுற்றிலும் தகரம் அடித்துப் பூட்டியிருப்பார்கள். அதன் சாவி அப்பாவிடம் தானிருக்கும். எப்போதாது அறங்காவல்துறை அதிகாரிகள் வரும்போது இப்படித் தேரை திறந்து காட்டுவது உண்டு.

தேரின் முன்னால் போய் நின்றபோது நாராயணன் சாவியை எடுத்து நீட்டினான். தகரக்கதவைப் பூட்டியிருந்த இரும்புப்பூட்டினை திறந்தபோது லியோன் “இந்தத் தேர் ஆணா பெண்ணா “என்று ஆங்கிலத்தில் கேட்டான்
இது என்ன கேள்வி தேரில் ஆண் பெண் என்று இருக்குமா என்ன என்ற குழப்பத்துடன் தெரியவில்லை என்று பதில் சொன்னான் ஹரி
.தகரக்கதவைத் திறந்தவுடன் தேரைச்சுற்றிப் பார்க்குமளவு இடைவெளியிருந்தது. லியோன் அந்தத் தேரிலுள்ள சிற்பங்களைக் கவனமாகப் பார்த்தபடியே வந்தான். அந்தத் தேரில் நானூறுக்கும் மேற்பட்ட சிற்பங்களுமிருந்தன.அதன் சக்கரத்தின் உயரம் ஆறரை அடி, தேர் இலுப்பை மரத்தில் செய்யப்பட்டது என்ற தகவல்களைக் கடகடவென ஹரி சொல்லிக் கொண்டே சென்றான்
லியோன் அதைக் கேட்டது போலவே தெரியவில்லை. அவன் நீண்ட பிரிவிற்குப் பிறகு காதலியைக் காணும் காதலன் போல அந்தத் தேரைப் பார்த்து கொண்டிருந்தான். பிறகு பெருமூச்சிட்டபடியே மார்வலஸ் என்றான்.
போட்டோ எடுத்தவுடன் திரும்பத் தகரக்கதவை பூட்ட வேண்டும் என்பதற்காக ஹரி நின்று கொண்டிருந்தான்.
“நான் தேரை தனியாகப் பார்க்கவிரும்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம் “என்று ரகசியம் பேசுவது போல லியோன் சொன்னான்
அப்படி இதில் என்ன பார்க்கப்போகிறான் என்று நினைத்த ஹரி சரியெனத் தலையாட்டிவிட்டு நாராயணனிடம் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு வந்துவிடுவதாகச் சொன்னான். நாராயணன் வேப்பமரத்தடியில் போய் நின்று கொண்டான்.
அவர்கள் போனபிறகு லியோன் அந்தத் தேரின் சிற்பங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். குனிந்தும் தரையில் அமர்ந்தும் அந்தத் தேரைப் பார்த்தான். எப்படி இத்தனை நுணுக்கமான சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள் என்ற வியப்பு அடங்கவேயில்லை. இவ்வளவு பெரிய கலைத்தொகுப்பை எதற்காக இப்படித் தகரமடித்து மூடிவைத்திருக்கிறார்கள்.

ஹரி வீட்டிற்கு வந்தபோது தேவகி அக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் ஒரு தோசையைச் சாப்பிட்டு முடிக்க அரைமணி நேரமாகும். வாயில் தோசையை வைத்தபடியே ஏதோ நினைப்பில் மூழ்கிவிடுவாள். சாப்பிடும் போதும் என்ன யோசனை என்று தெரியாது. பசியில் தன் தட்டை எடுத்துக் கொண்டுவந்து அம்மாவின் முன்னால் நின்றான் ஹரி
“அவ சாப்பிட்டு முடிக்கட்டும்டா“ என்றாள் அம்மா
“அதுக்கு ராத்திரியாகிடும். நீ தோசையை எனக்குப் போடு“ என்று அம்மாவிடம் கோபமாகச் சொன்னான் ஹரி
அம்மா தோசையை அவனது தட்டில் போட்டாள். நின்றபடியே பசியில் அவன் வேகவேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்து தேவகி அக்கா சிரித்தபடியே கேட்டாள்
“எள்ளுப்பொடி போட்டுக்கிடலையா “
ஹரி பதில் சொல்லவில்லை. அக்கா நிதானமாகத் தோசையைப் பிய்த்து சக்கரையைத் தொட்டுச் சாப்பிட்டாள். அதைப் பார்க்கவே ஹரிக்கு எரிச்சலாக வந்தது. இன்னும் சின்னப்பிள்ளையா இவள்.
அக்கா தேவகி கல்லூரி படிப்பை முதல் ஆண்டுடன் நிறுத்திக் கொண்டுவிட்டாள். அவளுக்கு ஹாஸ்டல் பிடிக்கவில்லை. அதைவிடவும் “படிபபு மனசில நிற்க மாட்டேங்குது“ என்றாள். அப்பா கோவித்துக் கொண்டார்.
“அவளுக்கு இஷ்டம் இல்லேன்னா விட வேண்டியது தான். நல்ல இடத்துல மாப்பிள்ளை பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்“ என்றாள் அம்மா.
அதற்கும் அப்பா கோவித்துக் கொண்டார்
“நல்ல இடம் கிடைக்கிறது லேசா. அவ ஜாதகப்படி வரன் அமைய இன்னும் ரெண்டு வருஷமாகும்“
“அதுவரைக்கும் வீட்ல சும்மா உட்கார்ந்து கிடந்தா உடம்பு பெருத்துபோயிடும். “ என்றாள் அம்மா
“எனக்கு ஒரு டைப்ரைட்டிங் மெஷின் வாங்கிக் குடுங்க. உங்க ஆபீஸ் வேலை எல்லாம் நான் வீட்ல இருந்தே செய்றேன்“ என்றாள் அக்கா
அப்பாவிற்கு அந்த யோசனை ஏற்புடையதாக இருந்தது. புதிய டைப்ரைட்டர் மிஷினை வாங்காமல் டவுனிலிருந்து பழைய மிஷின் ஒன்றை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார். அன்றிலிருந்து அப்பாவின் கோவில் சார்ந்த வேலைகளை அவள் வீட்டில் டைப் அடித்துக் கொடுப்பாள். மீதமுள்ள பகலில் தொடர்கதைகள் படிப்பாள். பூத்தையல் செய்வாள். சில நாட்கள் பழைய துணிகளை வைத்துப் பொம்மை செய்வாள்.
தேவகி அக்கா அடுப்படி பக்கமே போக மாட்டாள். கேட்டால் என் கைபட்டா எல்லாம் கசந்து போயிரும். அன்னைக்கு அம்மா சொன்னானு ரசம் வச்சேன். அப்பாகிட்ட ஒரே திட்டு. எனக்குச் சமைக்க வராது என்பாள்
“கல்யாணம் ஆகிப்போன சாப்பாட்டு என்னடி பண்ணுவே“ என்று அம்மா கோவித்துக் கொள்வாள்
“அவன் தலையெழுத்து. நான் பொங்கி போடுறதை சாப்பிட வேண்டியது தான்“ என்று சிரித்துக் கொள்வாள். எந்த நெருக்கடியிலும் அக்கா அழுதது கிடையாது. கோபத்தைக் காட்டிக் கொண்டதும் கிடையாது. எப்போதும் சாந்தமாக இருப்பாள். மாலையானதும் தலையை வாறி பூச்சூடிக் கொள்வாள். குளிக்கும் போது மெல்லிய குரலில் பாடுவாள். சிலநேரம் அம்மா பக்கத்துவிட்டு மங்களத்திடம் “எதுக்கும் ஆசைப்படாத பொண்ணு“ என்று ஆதங்கப்படுவதை ஹரி கேட்டிருக்கிறான்.
அக்கா எப்படி இப்படியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கும். வீடு தான் அவளது உலகம். ஒரு வாரத்திற்கு ஒருமுறை கூட வீட்டுப்படியை தாண்டி வெளியே போக மாட்டாள். கோவிலுக்குப் போகலாம் என்று அம்மா கூப்பிட்டால் கூட மறுத்துவிடுவாள்.
மாடியில் இருந்த சிறிய அறையில் தான் எப்போதுமிருப்பாள். அங்கே பகலிலும் வெளிச்சமிருக்காது. ஒரேயொரு ரேடியா துணையாக இருக்கும். மரமேஜை மீது டைப்ரைட்டர். பக்கத்தில் ஒரு டீப்பாய் அவள் அமர்ந்து டைப் அடிக்க உயரமான முக்காலி. ஒரமாக ஒரு தண்ணீர் கூஜா. பித்தளை டம்ளர். அந்த அறையின் ஜன்னல் மிகச்சிறியதாக இருந்தது. அங்கே நின்றால் தெருவில் போகிறவர்களைக் காணலாம். ஆனால் அக்கா ஒருபோதும் அப்படி நின்று பார்த்தது கிடையாது.
சின்னஞ்சிறிய உலகில் ஒரு சிலந்தி போல ஏன் வாழுகிறாள் என்று வியப்பாக இருக்கும். பெண்கள் சிறிய இடத்திற்குள் பெரிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்களோ என்றும் அவனுக்குத் தோன்றும்.
ஹரி சாப்பிட்டு முடிப்பதற்குள் அம்மா ரைஸ்மில்லில் போய் மிளகாய் பொடி அரைத்துக் கொண்டுவரும்படி தூக்கு வாளியைக் கொடுத்து அனுப்பினாள். என்ன வீடிது. ஆளுக்கு ஆள் வேலை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது.
அவன் மிளகாய் தூள் அரைத்துவிட்டுச் சைக்கிளில் திரும்பி வரும்போதும் லியோன் தேரைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்ணில்பட்டது தேரில் ஏதாவது ஆராய்ச்சி செய்கிறானா. என்ன அப்படி இருக்கிறது. வீட்டிற்குப் போய்த் தூக்குவாளியை கொடுத்துவிட்டு தேரடிக்கு வந்த போது லியோன் சொன்னான்
“இப்படி ஒரு தேரை கண்டதேயில்லை. எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள். இதைச் செய்தவர் யார். சிற்பத்திலுள்ள இந்த வாத்தியக்கருவியின் பெயரென்ன“ என்று ஏதேதோ கேட்டான்
“அதெல்லாம் எதுவும் தெரியாது“ என்றான் ஹரி
“யாருக்குத் தெரியும்“ என்று லியோன் கேட்டபோது அவனை அப்பாவிடமே அனுப்பி வைப்பது சரியாக இருக்கும் எனக் கோவிலுக்குப் போகும்படி ஹரி சொல்லி அனுப்பினான். அவன் கோவில்வரை கூடப்போகவில்லை. நாராயணன் தான் கூட்டிச் சென்றான்
அன்றிரவு அப்பா சொன்னார்
“அந்த வெள்ளைக்காரன் பிரான்சிலே இருந்து வந்திருக்கான். அவன் நம்ம கோவில் தேரைப்பற்றி அவ்வளவு பெருமையாகச் சொல்றான். இந்தியா பூரா போயி தேரைப்பற்றி ஆராய்ச்சி பண்ணுறானாம். இதுக்கு அவங்க அரசாங்கம் உதவிதொகை கொடுத்திருக்காம். ஒரு வாரம் நம்ம ஊர்ல தங்க இடம் கேட்குறான்“
“திருட்டுப்பயலா இருக்கப்போறான். ஜாக்கிரதை“ என்றாள் அம்மா
“திருடவருகிறவன் சாவிகேட்டு திறந்து போட்டோ எடுப்பானா.. என்னடி பேசுறே “என்று அப்பா கோவித்துக் கொண்டார்.
சாரதி வீட்டின் மாடியில் அவன் தங்கிக் கொள்வதற்காக அப்பா ஏற்பாடு செய்தார்.

மறுநாள் லியோன் அந்தத்தேரை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுப்பதைச் சிறார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் தேரின் மீது ஏறி நின்று போட்டோ எடுப்பதை ரங்குதாத்தா கண்டிப்பது போலக் கத்திக் கொண்டிருந்தார். பசியை மறந்து அவன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். உச்சிவேளையில் கோவிலுக்கு வந்து பிரசாதம் விற்கும் கடையில் புளியோதரை வாங்கி அவன் சாப்பிடுவதைக் கோவில் பணியாளர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
லியோன் அப்படித் தேரில் என்ன பார்க்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காகவே மூன்றாம் நாள் அவனைத் தேடிப் போனான் ஹரி
“இந்த தேர் போல இன்னொரு தேர் செய்யப்பட்டிருக்கும். அதாவது ஜோடித்தேர். அது எந்த ஊர்ல இருக்கும்னு விசாரிக்கணும்“ என்றான் லியோன்
“எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது“ என்று கேட்டான் ஹரி
“அதுக்கு ஒரு அடையாளம் இருக்கு. பறவையோட ரெண்டு சிறகு மாதிரி இது ரெட்டை தேர்ல ஒணணு“ என்றான்
அப்படி ஹரிக்கு எதுவும் தெரியவில்லை
“இந்த தேர்ல ஆண்களை விடப் பெண்களின் சிற்பம் அதிகமிருக்கு. அதுவும் ஒரே முகம் கொண்ட ஏழு பெண்சிற்பங்கள் இருக்கு. ஒருவேளை ஒரே பெண்ணாவும் இருக்கலாம் “என்று தேரின் நிலைகளைச் சுட்டிக்காட்டினான்
அவன் காட்டியபிறகே அந்தப் பெண்சிற்பத்தின் முகம் ஒன்று போல இருப்பது தெரிந்தது
“இதில் முப்பத்திரெண்டு கிளிகள் இருக்கு. ஆனா எந்த ரெண்டு கிளியும் ஒண்ணு போல இல்லை. மேல இருக்கிற சிற்பத்தை பாருங்க. அந்த பொண்ட உதடுல சிரிப்பு ஒட்டிகிட்டு இருக்கு.“
“அப்படியா “என ஒன்றும் அறியாமல் கேட்டான் ஹரி
தேரை எப்படிச் செய்வார்கள் என்ற ரதச் சாஸ்திரம் பற்றி லியோன் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தான். எங்கோ பிரான்சில் பிறந்து வளர்ந்த ஒருவன் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தேர் செய்வதை அறிந்து வைத்திருக்கிறான் என்று வியப்பாகவே இருந்தது
“வேற ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க“ என்று சொன்னான் ஹரி
“ எனக்கு இந்த தேரோட்டத்தைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு“ என்றான் லியோன்
“அதுக்குப் பங்குனி மாசம் வரை காத்துகிட்டு இருக்கணும்“
“யாராவது தேரோட்டத்தை வீடியோ எடுத்து இருப்பாங்களா“
“சுந்தர் வீடியோல கேட்டு பாக்குறேன்“
“இருந்தா நான் பணம் தர்றேன் எனக்கு ஒரு சிடி வேணும்“
“கேட்டுபார்த்து சொல்றேன்“
“இந்த தேரை பற்றி ஏதாவது பாட்டு இருக்கா. நடந்த சம்பவம் ஏதாவது “என்று கேட்டான் லியோன்
“ரங்குதாத்தா கிட்ட பேசினா தெரியும்“ என்று கிட்ணா வீட்டினை காட்டினான் ஹரி
“அவர் என்னை வீட்டுக்குள்ளே விட மாட்டேனு சொல்லிட்டார் “என்று சிரித்தான் லியோன்.
கோவிலில் இருந்து வெளியிட்ட பழைய மலரில் இருந்த புகைப்படங்களைக் காட்டுவதற்காக அன்று மாலை அவனை அப்பா அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அம்மா கொடுத்த காபியை மிகவும் நன்றாக இருக்கிறது என்று லியோன் பாராட்டினான். அம்மாவிற்கு அப்படி யாரும் முகத்திற்கு நேராகப் புகழ்ந்து சொன்னதில்லை என்று சந்தோஷப்பட்டாள்.
ஒரு வாரம் முடிந்தபோதும் லியோன் தேரை பற்றிய ஆராய்ச்சியை முடிக்கவில்லை. ஊரிலே ஒரு மாதகாலம் தங்கியிருந்தான். சுந்தர் வீடியோவில் வாங்கி வந்த தேரோட்டத்தைக் கிட்ணா வீட்டிலிருந்த டெக்கில் போட்டுத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நேரம் அந்தத் தேர் செல்வதைக் காணும் போது அவனது கண்கள் பனித்தன
யார் சொன்னார்கள் என்று தெரியாது ஒருநாள் லியோன் ஒரு வேஷ்டி கட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்தபோது அப்பாவிற்கு வியப்பாக இருந்தது. “என்ன வேஷமிது“ என்று கேட்டார். அவன் சிரித்தபடியே “ஐ லைக் வேஷ்டி “என்றான்.
அப்பா கோவில் நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்களை அவன் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். அந்தப் புத்தகங்களைத் தன் அறைக்கு எடுத்துக் கொண்டுபோவதாகச் சொல்லி ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.
பின்பு ஒரு நாள் அப்பாவைக் காண பெரிய போட்டோ ஆல்பம் ஒன்றுடன் வந்திருந்தான். கல்யாண வீடுகளில் போடப்படும் ஆல்பம் போல மிகப்பெரியதாக இருந்தது.
“என்ன ஆல்பம்“ என்று அப்பா கேட்டார்
“தேரோட போட்டோஸ்“ என்று விரித்துக் காட்டினான்
தேரின் அத்தனை சிற்பங்களையும் அழகாகப் புகைப்படம் எடுத்திருந்தான். இவ்வளவு அழகான சிற்பங்களா என்று வீடே அதிசயமாகப் பார்த்தது. அது மட்டுமின்றி விடிகாலையில், அந்திமாலை சூரிய வெளிச்சத்தில் தேரை படம்பிடித்திருந்தான். அந்த ஆல்பத்தில் இருந்த புகைப்படங்களைக் கண்டபோது அவன் மிகச்சிறந்த போட்டோகிராபர் என்று தெரிந்தது. அப்பா அந்த ஆல்பம் தன்னிடம் இருக்கட்டும் என்று கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்
“இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் “என்று சொல்லி தன் அறைக்குக் கிளம்பிப் போனான்
அவர்கள் வீதியில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அம்மா அந்த ஆல்பத்தைக் கொண்டு போய்க் காட்டினாள். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தபிறகு தேரை ஆசையாகக் கிட்டத்தில் போய்த் தொட்டுபார்த்தவர்களும் உண்டு
லியோன் அந்தப் புகைப்படங்களின் வழியே அனைவரது மனதிலும் இடம்பிடித்துவிட்டான். உள்ளூர் இளைஞர்களுடன் ஒன்றாகச் சீட்டு விளையாடவும் கால்வாயிற்குக் குளிக்கப் போய்வரவும், தனியே சைக்கிள் ஒட்டிப் போய் டூரிங் தியேட்டரில் சினிமா பார்க்கவும் பழகியிருந்தான். பெட்டிக்கடைகளில் கணக்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவன் உள்ளூரில் ஒருவனாகியிருந்தான்.
ஒருமுறை லியோன் சொன்னான்
“ஒவ்வொரு தேரும் ஒரு ரகசியம். இந்தத் தேருக்குள் நிறைய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. “
“என்ன ரகசியம்“
“அதைச் சொன்னால் புரியாது“ என்று சிரித்தான் லியோன். பின்பு ஒரு நாள் அப்பாவைத் தேடி வந்து அவன் வெள்ளிகிழமை தான் ஒரிசா புறப்படப்போவதாகச் சொன்னான்
“வந்த வேலை முடிஞ்சது இல்லியா“
“ஓரளவு முடிஞ்சது. பூரி ஜெகனாதர் கோவில் தேரைப் பார்க்கப்போறேன்“
“எப்போ உன் நாட்டுக்கு கிளம்புறே“ என்று அப்பா கேட்டார்
“டிசம்பர்ல“ என்று சொன்னான் லியோன்
வீட்டிலிருந்த பழைய தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை கழட்டி அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் அப்பா. லியோன மிகப் பணிவோடு அதை வாங்கிக் கொண்டு நன்றி சொன்னான்

அன்றிரவு அம்மா சமையல் கட்டில் இரவு உணவிற்காகச் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்த போது தேவகி கலங்கிய கண்களுடன் அம்மாவிடம் சொன்னாள்
“நான் லியோனை கல்யாணம் பண்ணிக்கிடப் போறேன்“
“என்னடி சொல்றே“
“நான் அவரைக் காதலிக்கிறேன். அவரைத் தான் கட்டுகிடுவேன்“
அம்மாவால் அதை நம்பமுடியவேயில்லை. வீட்டைவிட்டு வெளியே போகவே போகாத தேவகி எப்படி லியோனை காதலித்திருக்க முடியும். அம்மா சப்பாத்தி மாவு பிசைவதை அப்படியே வைத்துவிட்டு எழுந்து தேவகி அருகில் வந்த போது அவள் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்
“நிஜமாவாடீ சொல்றே“ என்று அம்மா கேட்டாள்
தேவகி அக்கா தன் கையில் ஒரு புகைப்படத்தைக் காட்டினாள்
அதில் தேர் சக்கரத்தை ஒட்டி தேவகி நிற்பது போல ஒரு புகைப்படத்தை லியோன் எடுத்திருந்தான். அந்தப் புகைப்படத்தில் தேவகி அத்தனை அழகாக இருந்தாள்.
“இது எப்போ எடுத்தது“
“ஒரு மாசமிருக்கும்“
“அவனோl எப்படிப் பழக்கமாச்சி“
“அடிக்கடி போய் நான் பார்ப்பேன். பேசுவேன்“
“இது எப்போ நடந்துச்சி“
“துணி துவைக்க வாய்காலுக்குப் போயிட்டு வரும்போது “என்று அமைதியாகச் சொன்னாள் அக்கா
அம்மாவால் நம்பமுடியவில்லை. வீட்டை தவிர வேறு எதுவும் தெரியாத பெண்ணா இப்படித் தேடிப் போய் ஒருவனைக் காதலித்திருக்கிறாள். எப்படிப் பயமேயில்லாமல் இப்படி நடந்து கொண்டாள்.
“அவன் உன்னை லவ் பண்ணுறானா “என்று அம்மா கேட்டாள்
“தெரியாது. ஆனா நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிகிடுவேன்“
“என்னடி லூசு மாதிரி பேசுறே. “
“நான் அவருக்கு லவ் லெட்டர் எழுதியிருக்கிறேன். அதை வாங்கிக்கொண்டார். என்னை நிறையப் போட்டோ எடுத்திருக்கிறார். அப்படின்னா என் மேல ஆசை இருக்குனு தானே அர்த்தம்“
“குடியை கெடுத்தே. உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா நம்மளை கொன்னே போட்ருவார்“
“நீ தான் அப்பா கிட்ட பேசணும்“
“நான் மாட்டேன். நீயே சொல்லு“ என்றாள்
அக்கா சப்தமாக அழத் துவங்கினாள். அம்மா அதன்பிறகு அவளைச் சமாதானம் செய்தாள் இரவு அப்பா திரும்பி வந்த போது ஹரி தான் இதை அப்பாவிடம் சொன்னான்
“எங்க அவ.. கூப்பிடு அந்த நாயை.. லவ் பண்ணுறாலோ லவ்வு. அவளைச் செருப்பாலே அடிப்பேன். “ என்று கத்தினார்
“அந்த பையனும் லவ் பண்ணுறானாம்“ என்ற அம்மா மென்றுவிழுங்கிச் சொன்னாள்
“இவ்வளவு நடந்திருக்கு. வீட்ல நீ என்னடி பண்ணுறே. “. என்று அப்பாவின் கோபம் அம்மா மீது திரும்பியது. அவர் கத்திக் கொண்டேயிருந்தார். தேவகி அக்கா ஒடிவந்து அப்பா காலில் விழுந்தாள். அப்பா அவள் முதுகில் அடிப்பதை ஹரி தடுக்க முயன்றான். அவனுக்கும் திட்டு விழுந்தது
லியோனைத் தேடி அழைத்து வருவதற்காக ஹரி சென்றபோது அவன் தங்கியிருந்த அறை திறந்து கிடந்தது. அவன் மாலையே கிளம்பிப் போய்விட்டான் என்று கிட்ணா வீட்டில் சொன்னார்கள். கிளம்புவதற்கு முன்பு அவர்களுக்குப் பரிசாகப் பட்டுபுடவையும் பட்டுவேஷ்டியும் கொடுத்தான் என்றும் கூடவே முந்நூறு ரூபாய் பணம் இருந்தது என்றார் கிட்ணா.
“வேற ஒண்ணும் சொல்லலையா “என்று ஹரி கேட்டான்
“இல்லையே… ஏதாவது பிரச்சனையா“ என்று கேட்டார் கிட்ணா
“அதெல்லாம் இல்ல. அவன் எடுத்த போட்டோ தர்றேன்னு சொல்லியிருந்தான். அதைக் கேட்டு போகலாம்னு வந்தேன்“ என்றான் ஹரி
வீடு திரும்பி லியோன் போய்விட்டதைச் சொன்னபோது தேவகி அய்யா சப்தமாக அழுதாள். அவன் தேவகி அக்காவை காதலிக்கவில்லை. அவள் தான் வலிந்து பழகியிருக்கிறாள். ஆசைப்பட்டிருக்கிறாள் என்று அப்பா திட்டினார். அம்மாவும் சேர்ந்து தேவகி அக்காவை திட்டினாள். அவளது அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அப்பா தேவகிக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரமாகினார். அவள் மாப்பிள்ளை யார் என்று கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. ஆறுமாதங்களுக்குப் பிறகு கல்யாணமாகி அவள் ஸ்ரீரங்கம் சென்றாள். அவளது அறையில் இருந்த டைப்ரைட்டரை அப்பா தன் அலுவலகத்திற்குக் கொண்டு போய்விட்டார். அவளது அலமாரியில் லியோன் எடுத்த அவளது போட்டோ இரண்டாகக் கிழிந்துகிடந்தது
அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும் ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று வியப்பாகவே இருந்தது. லியோன் மீது கோபமாகவும் வந்தது.
திருமணத்திற்குப் பிறகு அக்கா ஊருக்கே வரவில்லை. வருஷாவருஷம் கோவில் தேரோட்டத்திற்கு வரும்படி அப்பா நேரில் போய் அழைத்து வருவார். .அவள் வந்ததேயில்லை.
அவளுக்கு அந்தத் தேரைக் காணப் பிடிக்கவேயில்லை. அம்மாவிடம் ஒரு நாள் போனில் சொன்னாள்
“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன். அந்தத் தேரை பார்க்கமாட்டேன் பாத்துக்கோ“
“தேர் என்னடி பண்ணுச்சி“ என்றாள் அம்மா
“என்ன பண்ணலே“ என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா
அம்மாவிற்கு அப்படித் தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன
••••