நேற்று தேவதச்சன் கவிதையுலகம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. காலை பத்துமணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்வு சற்று தாமதமாகப் பத்தரைக்குத் துவங்கியது. அரங்கில் அப்போது குறைவானர்களே இருந்தார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வரும் மகத்தான கவியைக் கொண்டாட ஆட்களே இல்லையா என ஆதங்கமாக இருந்தது. நல்லவேளை அடுத்த அரைமணி நேரத்தில் அரங்கம் நிரம்பியது. வெளியூரில் இருந்து நிறைய வாசகர்கள் வந்து கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி
காலையிலிருந்து இரவு எட்டரை வரை பார்வையாளர்கள் முழுமையாக அரங்கிலிருந்து தங்கள் அன்பையும் கவிதை மீதான ஈடுபாட்டினையும் வெளிப்படுத்தியது மிகுந்த சந்தோஷம் அளித்தது.
இத்தனை ஆண்டுகள் கவிதைகள் எழுதி வந்த போதும் தேவதச்சன் நூல் எதற்கும் முறையான வெளியிட்டுவிழா நடைபெற்றதில்லை. அதை அவர் விரும்பியதுமில்லை. ஆனால் அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளிவரும் தருணத்தைக் கொண்டாட வேண்டும் என நான் விரும்பிய போது, வேண்டாமே என்று தான் தேவதச்சன் தடுத்தார்.
ஆனால் நண்பர் மனுஷ்யபுத்திரனும் நானும் அவரை வற்புறுத்தியே சம்மதிக்க வைத்தோம். தனிப்பேச்சில் நிறையப் பேசக்கூடிய தேவதச்சனுக்கு மேடையும், அதன் சம்பிரதாயங்களும் விருப்பமானவையில்லை.
தமிழின் மூத்தகவியைக் கொண்டாட வேண்டியது நமது கடமை என்பதால் பெரிய நிகழ்வு ஒன்றைத் திட்டமிட வேண்டும் என விரும்பியே முழுநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தோம்
நிகழ்வைத் துவக்கி வைத்துக் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் தேவதச்சனின் கவிதைகளின் மொழி குறித்துத் தனது கட்டுரையை வாசித்தார். அதைத்தொடர்ந்து கவிஞர் மண்குதிரை, கவிஞர் ஷா அ, கவிஞர் நரன் ஆகியோர் தேவதச்சன் கவிதைகளின் தனித்துவங்களை, கவிதை மொழியின் சவால்களை விரிவாக எடுத்துப் பேசினார்கள்.

அடுத்த அமர்வில் நான் உலகக் கவிதைகளை முன்வைத்து தேவதச்சன் கவிதைகள் குறித்து விரிவான உரைநிகழ்த்தினேன்.
அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாப்பிட்டபிறகு இயல்பாக ஒன்று கூடி விவாதித்துக் கொண்டிருந்தோம். காலையிலிருந்து மேடைநிகழ்வுகளை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தேவதச்சன் தன் கவிதைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துவங்கினார். அரைமணி நேரம் போனதே தெரியவில்லை
மதிய அமர்வில் கவிஞர் அபிலாஷ் தேவதச்சன் கவிதைகள் மீதான தனது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அதைத்தொடர்ந்து தினசரி வாழ்வின் கவித்துவம் என்ற தலைப்பில் கவிஞர் சபரிநாதன் தனது உரையை நிகழ்த்தினார். தேவதச்சன் கவிதைகள் குறித்த வெகுஅற்புதமான உரை. தேவதச்சனை தமிழ்கவிதை மரபில் எங்க வைக்க வேண்டும். அவரது கவிதைகளின் தனித்துவமாக எதைக்கருதுகிறேன் என அவர் முன்வைத்த காரணங்கள் மிகச்சிறப்பானவை. அவரைத்தொடர்ந்து கவிஞர் க.வை. பழனிச்சாமி தேவதச்சன் கவிதைகள் குறித்த தனது வாசிப்பு அனுபவங்களை நுட்பமாகப் பதிவு செய்தார்
எந்த அறிவிப்பும் இல்லாமல் கவிஞர் ராணிதிலக் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணங்களால் வரமுடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதைத் தெரிவிக்க வேண்டியது அடிப்படை பண்பு. அதைக் கூடவா கற்றுதர வேண்டும்.
தேவதச்சன் கவிதைகளில் சமூக மனிதன், அக மனிதன் என இரண்டு எதிர்நிலைகள் காணப்படுகின்றன. எது சமூகமனிதனின் குரல். எது அக மனிதனின் குரல். இந்த இருவரையும் பிரிக்க முடியுமா. இந்த இரண்டின் உருவாக்கம் எவ்வாறு உருவாகிறது. உண்மையில் இது நிழலுக்கும் உருவத்திற்கும் உள்ள தொடர்பு போன்றதா என்பதை விவாதிக்க வேண்டி நான்காவது அமர்வை முதன்மைப்படுத்தியிருந்தேன். அதில் கலந்து கொண்டு தேவதச்சன் கவிதைகளின் குரலை, அதன் சமூகச் சித்தரிப்புகளை, அகமனிதன் முளைக்கும் தருணங்களைக் கவிஞர் வெயில். கவிஞர் மனுஷி, கவிஞர் மையம் ராஜகோபால் ஆகியோர் சிறப்பாக அடையாளம் காட்டினார்கள்.
அதைத்தொடர்ந்து கவிஞர் தேவதச்சன் தனது ஏற்புரையை நிகழ்த்தினார். சுருக்கமான உரை. அவரது கவிதைகளைப் போலவே ஆழமானதாக, உணர்ச்சிபூர்வமானதாகயிருந்தது.
மாலையில் தேவதச்சன் கவிதைகளின் முழுத்தொகுப்பான மர்மநபர் வெளியிட்டுவிழா நடைபெற்றது. நான் அவரது கவிதைத்தொகுப்பை வெளியிட்டேன். கவிஞர் ஆனந்த் பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து கவிஞர் ஆனந்த் தனக்கும் தேவதச்சனுக்குமான 44 ஆண்டுகால நட்பை நினைவுகூர்ந்து நெகிழ்வுடன் பேசினார்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் தேவதச்சன் கவிதைகளில் இருந்து தனது கவிதைக்கான மொழியை உருவாக்கி கொண்ட விதம் குறித்தும். தேவதச்சனின் கவித்துவவுலகம் குறித்தும் சிறப்பாக உரை நிகழ்த்தினார். இயக்குனர் வசந்தபாலன் தனக்கு இலக்கியத்தின் மீதுள்ள விருப்பத்தையும், தனக்குப் பிடித்த தேவதச்சனின் கவிதைகளையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார். நிகழ்வின் இறுதியாகத் திரைக்கலைஞர் சார்லி தான் கோவில்பட்டியில் தேவதச்சனை சந்தித்த முதல்நினைவு பகிரத்துவங்கி அரங்கை சிரிப்பலையில் உருள வைத்தார். நாள் முழுவதும் கவிதைகள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கபட்ட உரைகளைக் கேட்டிருந்த பார்வையாளர்களுக்குச் சார்லியின் பேச்சுத் திடீரெனப் பெய்த கோடைமழையைப் போலிருந்தது.
எட்டரை மணிக்கு நிறைவுபெற்ற போதும் அரங்க வாசலில் நின்றபடியே நிறைய வாசகர்கள் தேவதச்சனுடன் பேசிக் கொண்டும் கையெழுத்து வாங்கிக் கொண்டுமிருந்தார்கள்
முழுநிகழ்வினையும் ஸ்ருதி டிவி படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனம் நிரம்பிய நன்றி
நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்திற்கும். நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் அன்பும் நன்றியும்
**
காணொளிகள்
https://www.youtube.com/watch?v=dZIKBvpeesQ
https://www.youtube.com/watch?v=FhQK0Idm1So
https://www.youtube.com/watch?v=WVetZr62zCk
https://www.youtube.com/watch?v=qj7SrAU8UgM
https://www.youtube.com/watch?v=D4Tkj-MTouo
https://www.youtube.com/watch?v=yp58F3KV1B0
https://www.youtube.com/watch?v=kg6R9yVAmOk
https://www.youtube.com/watch?v=pDIEjikD_B4
நன்றி
புகைப்படங்கள், காணொளி/ஸ்ருதி டிவி