ஈழத்தின் நவீன கவிஞர்களில் முக்கியமானவர் சி.சிவசேகரம். அவரது நதிக்கரை மூங்கில், செப்பனிட்ட படிமங்கள்,போரின் முகங்கள், மிக முக்கியமான கவிதை தொகுப்புகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த சிவசேகரத்தின் கவிதை இது. இன்றுள்ள சூழலில் வாசிக்கையில் மனது மிகுந்த துயரமும் குற்றவுணர்ச்சியும் கொள்கிறது.
**
என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒருதாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புக்களை என்றான் ஒரு விநியோகஸ்தன்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுப்பாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைச் சாவடி அதிகாரி
இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்துச் செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை எனக் கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியக்காரத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை எனப் பதறினாள் ஒரு தாய்
பால்க்கான கியூ வரிசையை என்றாள் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வாடகை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என். ஜி.ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்றுக் கிடந்தது
ஒரு அகதியின் பிணம்
– சிவசேகரம்
***
சொற்கள் வலிமையானதொரு ஆயுதங்கள். அதை பயன்படுத்துகின்றவனே அதற்குரிய வலிமையை ஏற்படுத்துகிறான். சொல்லை அடையாளம் காண்பதும் பிரயோகம் செய்வதும் எளிதானதில்லை. சில சொற்களின் உள்ளே புதையுண்டு கிடக்கின்றன மனித நாகரீகத்தின் கடந்த கால சரித்திரம். சொற்களின் நிலப்பரப்பு நாம் அறியாதது. சொல்லின் வேர்கள் ஏதேதோ காலங்களில் புதையுண்டு கிடக்கின்றன.
சமூக அரசியல் நெருக்கடிகளின் போது எழுத்தாளன் சொற்களை மட்டுமே சார்ந்திருக்கிறான். சொற்களால் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். விதை நெல்லை போல சொல்லை காப்பாற்றி வைத்திருக்கிறான். தருப்பை புல் கூட ஆயுதமாகியதை பழங்கதைகள் சொல்கின்றன. அப்படியான சொற்கள் எவ்வளவோ நம்மிடையே இருக்கின்றன என்பதை வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.
***
கவிதை குறித்த இன்னொரு கதை.
ஆப்ரிக்க மக்களின் நம்பிக்கை பற்றிய ஒரு பழங்கதை ஒன்றை முன்பொரு முறை வோலே சோயிங்காவின் தொகுப்பு ஒன்றில் வாசித்திருக்கிருக்கிறேன். யோசிக்கையில் அந்தக் கதை ஏதேதோ தளங்களில் விரிவு கொள்கிறது.
**
ஆப்ரிக்க மக்கள் ஒரு காலத்தில் தங்களுக்கு சிறகுகள் இருந்தன என்றும், அது நாளடைவில் மறைந்து போய்விட்டது என்று நம்பிக்கை கொண்டவர்கள். நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆப்ரிக்க மக்கள் விலங்குகளை போல பிடிக்கபட்டு, கைவிலங்கிடப்பட்டு சந்தைகளில் அடிமையாக விற்கபட்டனர். அப்படி விற்கபட்ட அடிமைகளில் சிலர் ஒன்றாக ஒரு பண்ணையில் வேலை செய்தனர்.
பண்ணை எஜமான் அவர்களை கடுமையான வேலையில் ஈடுபடுத்தி வதைத்தான். பனியில் ஒண்ட இடமில்லை. அரை வயிற்றுபசியில் பெண்களும் வயோதிகர்களும் ஒவ்வொரு நாளும் சாவோடு போராடி வாழ்ந்தனர்.
அந்த அடிமைகளில் ஒரு வயதான கவிஞன் இருந்தான். அவன் அடிமைகள் துயருற்ற நாளில் அவர்களுக்காக பாடுவான். அந்தப் பாடலை கேட்டு அவர்கள் மன ஆறுதல் கொண்டார்கள்.
அப்படி ஒரு நாள் ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்த போது அவளது குழந்தை பசியில் அழுதது. குழந்தையை முதுகில் போட்டுக் கொண்டு அந்த பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். அதை மார்பின் முன்னால் கொண்டு வந்து பால் கொடுப்பதற்கு பண்ணை எஜமானன் அனுமதிக்கவில்லை. சாட்டையால் அடித்தான். அவள் அய்யோ என் பிள்ளைக்கு பால் தர முடியவில்லையே.. இந்த மார்பு அப்படியே பின்னால் போய்விடக்கூடாதா என்று புலம்பினாள்.
அவள் நினைத்தது போல மறுநிமிசம் அவள் மார்பு முன்னாலிருந்து மறைந்து முதுகில் முளைத்தது. குழந்தை தாயின் மார்பை சுவைத்து பால் குடித்தது. இதை பார்த்து கொண்டிருந்த மக்கள் இவ்வளவு கொடுமைக்கு பிறகும் ஏன் உயிர்வாழ வேண்டும் செத்து விடலாமே என்று புலம்பினர். கவிஞன் அதை கண்டு காற்றை நோக்கி ஏதோ முணுமுணுக்க துவங்கினான். அதன் பிறகு மக்களிடம் உங்களில் பறக்க விரும்புகின்றவர்கள் பறந்து போகலாம் என்று சொன்னான்.
மக்கள் எப்படி என்று கேட்டனர். அது ஒரு நம்பிக்கை. உங்களால் முடியும் என்று சொன்னான். உடனே மக்கள் பூமியிலிருந்து தாவி வானில் பறக்க துவங்கினர். காகங்களின் கூட்டம் செல்வது போல அவர்கள் கண்முன்னே பறந்து போயினர்.
அந்த கவிஞன் மட்டுமே பறந்து செல்லவில்லை. அவன் பிடிபட்டு சாகும்வரை வதைக்கபட்டான். ஏதோ வார்த்தைகளை சொல்லி நீ அவர்களை பறக்க வைத்திருக்கிறாய் என்ன வார்த்தைகள் அது என்று அவனை வதைத்து கேட்டார்கள். அவன் பதில் சொல்லவேயில்லை. முடிவில் அவன் கொல்லப்பட்டான்.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஆப்ரிக்காவின் ஒவ்வொரு கவிஞனும், மனிதர்களை துயரிலிருந்து விடுவித்து பறவைகளை போல பறக்க வைக்க முடிந்த அந்த சொற்களை தேடிக் கொண்டிருக்கிறான். என்றோ ஒரு ஆதி கவிக்கு தெரிந்த உயிர்மீட்கும் சொற்களை கண்டு எடுப்பதே இன்றைய நவீன கவியின் பிரதான வேலையாகும்
இது ஆப்ரிக்காவிற்கு மட்டுமில்லை துயருற்ற எல்லா மனிதர்கள் வாழும் நிலப்பரப்பிற்கும் அதன் கவிதை உலகிற்கும் பொதுவானதில்லையா.
****