ஆந்த்ரே வாஜ்தா


 


 


 


 



The best remedy for political and social problems is to show them and to speak truly about them – Andrzej Wajda



ஆந்த்ரே வாஜ்தா ( Andrzej Wajda ) போலந்தின் புகழ் பெற்ற இயக்குனர். சினிமாவை வலிமையானதொரு அரசியல் வடிவமாக மாற்றியவர். இவரது திரைப்படங்கள் போலந்தின் கடந்த கால நினைவுகளுக்குச் சாட்சியாக உள்ளன.  வாஜ்தாவின் படங்களின் வழியே தனது சொந்த அடையாளங்களை இழந்து போன போலந்தையும், உலக யுத்தத்தின் காரணமாக போலந்து மக்களின் உயிரிழப்பையும் காண முடிகிறது. குறிப்பாக ரஷ்ய ஆக்ரமிப்பின் காரணமாக போலந்து மக்கள்  துரயமும், நெருக்கடிகளும் வன்முறைகளும் குறித்தும் தொடர்ந்து தனது திரைப்படங்களில் பதிவு செய்து வருகிறார்.



ஒருவகையில் போலந்தின் சரித்திரம் வாஜ்தாவின் படங்களின் வழியே தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்கிறது என்ற சொல்லவேண்டும்.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவரும் வாஜ்தா தனது 81 வயதில் சென்ற ஆண்டு கதின் (Katyn)என்ற படத்தை இயக்கியுள்ளார்.


அதை தீபாவளியின் வெடிச்சப்தம் நிறைந்த புறச்சூழலை மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிசத்தில் என்னுடைய அறை, புறச்சூழல் யாவும் மறைந்து போய் காலத்தின் பின்நகர்ந்து போலந்தின் குளிரும், ராணுவ வீரர்களின் நடைசப்தமும், ரோந்து சுற்றும் ஜீப்பின் சப்தமும் உடலெங்கும் நிரம்பி விட்டது. 


படம் 1939ம் வருடம் செப்டம்பர் 17 ல் துவங்குகிறது. அந்த நாள் போலந்தில் ரஷ்ய ராணுவம் உள்ளே நுழைந்த தினம்.  போலந்து ராணுவத்தில் பணிபுரியும் தன் கணவனை தேடி  அலையும் அன்னா என்ற பெண்ணின் வழியே படம் துவங்குகிறது. மிக சிறந்த துவக்ககாட்சிகளில் ஒன்றாக இந்த படத்தின் ஆரம்பத்தைச் சொல்வேன்.


படத்தின் முதல் பிரேமில் படம் எதைப் பற்றியது என்று விவரிக்க துவங்கிவிடுகிறது. அந்த பெண் ஒரு பாலத்தில் காத்து கொண்டிருக்கிறாள். ரஷ்ய ஆக்ரமிப்பில் பயந்து போன மக்கள் இடம் பெயர்கிறார்கள். அதில் தன் மகளை கூட்டிக் கொண்டு ஒரு சைக்கிளில் அந்த பெண் கணவனை தேடி போகிறாள். நாய் ஒன்று பாலத்தில் யாருமில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. அன்னாவின் மகள் அந்த நாய் பாவம் என்கிறாள். ஆமாம் எஜமான் இல்லாத  நாய் அது. ஒருவேளை எஜமான் வருவதற்காக அது காத்திருக்க கூடும் என்கிறார். படத்தின் பின்பகுதியில் அந்த நாயை விடவும் கேவலமாக அவர்கள் அலையப்போகிறார்கள் என்பதின் குறியீடாக கூட அதை கொள்ளலாம்.


பாலத்தினை கடந்து செல்லும் மக்களின் திகைப்பான முகங்கள், குழப்பத்தின் எதிரொலி. அதன் ஊடாக அவர்கள்  தேடி செல்கிறார்கள்.


அங்கே ஒரு தேவாலயம் ஒன்றின் வெளியே கொல்லபட்ட வீரர்களுக்காக மருத்துவ முகாம் காணப்படுகிறது. அதில் தன் கணவன் ஆந்த்ரேயைத் தேடுகிறாள். அவள் கணவனின் உடை மூடப்பட்ட பிரேதம் ஒன்று காணப்படுகிறது. அவள் அந்த பிணத்தின் மீது போர்த்தபட்ட கணவன் உடையை அகற்றுகிறாள். உள்ளே இயேசுநாதரின் உடைக்கபட்ட சிலையொன்று உள்ளது. அதை பாதுகாப்பாக அந்த துணியால் சுற்றி வைத்திருக்கிறார்கள்
கடவுளும் கைவிடப்பட்ட சூழலில் தான் அந்த பெண் பயணம் செய்யப்போகிறாள் என்பதை வாஜ்தா அந்த ஒரே காட்சியில் உணர்த்திவிடுகிறார்.


அவள் கணவன் போன்ற அதிகாரிகள் கைது செய்யபட்டு தனித்து வைக்கபட்டிருப்பதை அன்னா அறிகிறாள். அவனை தேடி போகிறான். அவன் தான் பிடிபட்ட நிமிசத்திலிருந்து தன் கண்முன்னே நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும்  சிறிய குறிப்பு நோட்டில் பதிவு செய்து கொண்டிருக்கிறான். அது தான் கடைசியில் அவர்கள் நடத்தபட்ட விதத்தின் ஒரே சாட்சியாக உள்ளது.


அன்னா அவனை தேடி வந்து சந்திக்கிறாள். ரஷ்ய ராணுவம் ஆந்த்ரேயை போர்கைதியாக பிடித்து செல்கிறது. கணவனை தன்னோடு கூட்டி வந்துவிட முடியும் என்று நம்பிய அந்த பெண்ணும் அவள் மகளும் பார்த்து கொண்டே செயலற்று நிற்கிறார்கள். கண்முன்னே ஆந்த்ரே பிரிந்து போகிறான். சிறுமி அப்பா என்று கூக்குரலிடுகிறாள். அது காற்றில் கரைந்து போகிறது. 


அன்னா யாருமற்ற ஊரில் கணவன் என்றாவது திரும்பி வந்துவிடக்கூடும் என்று தாங்கமுடியாத நெருக்கடிகளுடன் காத்திருக்கிறாள். அந்த பதட்டமான நாட்களை படம் விவரிக்க துவங்குகிறது.


அதே நேரம் ஆந்த்ரேயின் அப்பா பல்கலைகழக பேராசிரியராக இருப்பவர் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது என்று பல்கலைகழகத்திற்கு கிளம்புகிறார். அவரது மனைவி அந்த கூட்டத்திற்கு போக வேண்டாம் என்று தடுக்கிறாள். அதை மீறி அவர் செல்கிறார். அங்கே ஜெர்மனிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவன் பல்கலைகழகம் தான் ஹிட்லருக்கு எதிரான பிரச்சாரத்தை தூண்டிவிடும் முக்கிய இடம். ஆகவே அதை தான் இழுத்து மூடி அங்கிருந்த பேராசிரியர்கள் , கல்வியாளர்கள் அத்தனை பேரையும் வதை முகாமிற்கு இழுத்து செல்லும்படியாக கட்டளை இடுகிறான்.


ஒரே நேரத்தில் ஆந்த்ரே ரஷ்யாவில் கதின் என்ற இடத்தில் உள்ள போர்கைதி முகாமிலும், இன்னொரு பக்கம் அவனது அப்பா ஜெர்மனிய வதை முகாமிலும் அடைக்கபடுகிறார்கள். அன்னா தன் கணவனுக்காக காத்திருப்பது போலவே ஆந்த்ரேயின் அம்மாவும் அவளது கணவனுக்காக காத்திருக்கிறாள்


இந்த படம் யுத்த பின்புலம் கொண்டது என்ற போதும் அது கவனம் கொள்வது போரின் காரணமாக கணவனை சகோதரனை பிள்ளைகளை இழந்த பெண்களின் ஆறாத மனத்துயரையே. இந்த படத்தில் நான்கு பெண்கள் தங்கள் ரத்த உறவுகளை இழக்கிறார்கள். வேறு வேறு சூழல்களில் வாழும் அவர்கள் அரசியல் நெருக்கடிக்காக தங்கள் உறவை பலி கொடுக்கிறார்கள்.


வதை முகாமிற்கு கொண்டு சென்றவர்களுக்காக காத்திருக்கும் பெண்களின் துயரமும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாத கோபமும் இந்த படத்தில் மிக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக இறந்து போனவர்கள் பட்டியலில் ஆந்த்ரேயின் பெயர் இல்லை என்று அவன் மனைவி தெரிந்து கொண்டு சந்தோஷப்படும் காட்சியில் அருகில் இறந்து போன இன்னொரு அதிகாரியின் மனைவி பேய் அறைந்தவள் போல தனியே நடந்து போவது. அது போலவே ஆந்த்ரேயின் அப்பா கொல்லபட்டு அவரது உரிமைகள்  தபாலில் அனுப்பபடுகின்றன.  அதை ஆந்த்ரேயின் அம்மா பெற்றுக் கொண்டு பிரிக்கும் போது அவள் முகத்தில் வெளிப்படும் துக்கமும் விம்மலும் நிஜமானவை.


கடந்த காலத்தின் உண்மையான சம்பவங்கள் படம் முழுதுவம் சரியானபடி ஊடு கோர்க்கபட்டிருக்கின்றன. படத்தில் நாம் காணும் பல காட்சிகள் உண்மையில் பதிவு செய்யபட்ட வரலாற்று ஆவணங்கள்.


கதின் என்ற இடத்தில் இருந்த போர்கைதிகள் முகாமில் இருந்த இருபதாயிரம் பேர்களையும் ரஷ்ய அரசாங்கம் கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டு உலகின் கண்ணிலிருந்து மறைத்துவிட்டது. ஆனால் பல ஆண்டுகள் தங்கள் கணவன்,சகோதரன் தகப்பன் உயிரோடு இருக்கிறான் என்று போலந்தில் நம்பிக் கொண்டிருந்தார்கள் குடும்பத்தினர்.  1943ல் ஜெர்மனிய ராணுவம் கதின் முகாமில் இருந்தவர்கள் கொல்லபட்டதை உறுதி செய்து புதைமேடுகளை தோண்டி உண்மையை வெளிப்படுத்தியது. படத்தில் அந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


ஆனால் அன்றைய ஸ்டாலின் அரசு அதை ஒத்துக் கொள்ள மறுத்ததோடு இதற்கு காரணம் ஜெர்மனியே என்று குற்றம் சாட்டியது. 1994 வரை இந்த பொய்யை போலந்து மக்களை நம்ப வைத்தது ரஷ்ய அரசு. இது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றது. தேச சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆனால் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உண்மைகள் வெளிப்பட துவங்கின. சமீபத்தில் ரஷ்ய அரசு இந்த கொலைக்களுக்கு காரணமாக இருந்தது என்பதற்கான ஆவணங்கள், சாட்சிகள் வெளிப்பட்டன.


அப்படி படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆந்த்ரே வாஜ்தாவின் அப்பா. அவர் ராணுவ அதிகாரியாக இருந்தவர். கதினுக்கு போர்கைதியாக கொண்டு செல்லபட்டு கொல்லபட்டவர். அதனால் சிறுவயதில் இருந்து சகிக்க முடியாத அந்த பொய்யை தாங்கி கொள்ள முடியாமல் வளர்ந்த வாஜ்தா அதை பற்றி படம எடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் போலந்தில் இருந்த கம்யூனிஸ்ட் அதிகாரம் அதை அனுமதிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு 2007 அது சாத்தியமாகியிருக்கிறது


வரலாறு சில பொய்களை திரும்ப திரும்ப சொல்லி உலகை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியான பொய்கள் தோல் உரிக்கபட்டு உண்மை வெளியாக துவங்கியிருக்கிறது. அப்படி வெளியான உண்மை தான் போலந்தின் ராணுவ உயரதிகாரிகள் ரஷ்யாவில் போர் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யபட்டது. யூத படுகொலைகள் பற்றிய பேசும் போது ரஷ்ய முகாமில் நடைபெற்ற கொலைகள் பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லை என்று வாஜ்தா தன் நேர்காணலில் குறிப்பிடுகிறார்.


படத்தில் ஒவியக்கல்லூரியில் சேர விரும்பிய ஒரு இளைஞன் அவன் தகப்பன் கதின் படுகொலையில் கொல்லபட்டவர் என்று சுயவிபர குறிப்பு தந்த காரணத்தால் இடம் மறுக்கபடுகிறான். ஆத்திரமாக சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த ரஷ்ய அரசு விளம்பரம் ஒன்றை கிழித்துவிடுகிறான். அவனை ராணுவ வீரர்கள் துரத்துகிறார்கள். தப்பியோடுகிறான். ஒரு இளம் பெண் அவனை காப்பாற்றி வீட்டின் கூரைகளில் ஏறி தப்ப வைக்கிறாள். இருவரும் பிரியும் நேரம் மறுநாள் சினிமா பார்க்க திட்டமிடுகிறார்கள். அந்த பெண்ணை உரிமையில் முத்தமிடுகிறான் இளைஞன். அவள் போய்விடுகிறாள்.


ஆனால் ராணுவ வீரர்கள் அவனை அடையாளம் கண்டு சுடுவதற்கு துரத்துகிறார்கள். தப்பியோடும் போது ராணுவ ஜீப்பில் அடிபட்டு சாலையிலே செத்து போகிறான். அந்த இளைஞன். அவன் இறந்து போன விபரம் அறியாமல் மறுநாள் அந்த பெண் திரையரங்கின் வெளியே காத்துகிடக்கிறாள். மொத்த படத்தில் பத்து நிமிசங்களே வந்து போகும் ஒரு சம்பவம் அது. ஆனால் நான் சமீபத்தில் பார்த்த படங்களில் மிக சிறந்த காதல் இதுவே என்பேன்.



விதி சாவின் முன்னால் ஒரு பெண்ணை அறிமுகம் செய்து அவளோடு ஒரு உறவை ஏற்படுத்தி அடுத்த நிமிசமே அவனை பலிவாங்கி விடுகிறது. காரணமற்ற அந்த இளைஞனின் மரணம் அதிகாரம் எந்த அளவு கருணையற்றது என்பதை முகத்தில் அறைவது போல சொல்கிறது.


படம் ரஷ்ய வதைமுகாமை சுட்டிக் காட்டும் அதே வேளையில் ரஷ்ய ராணுவத்திடமிடமிருந்து  போலந்து பெண்களை காப்பாற்றி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஒரு ரஷ்ய ராணுவ அதிகாரியின் கதையையும் விவரிக்கிறது. அவர் அன்னாவிற்கு உதவி செய்கிறார்.


அது போலவே ஒரு காட்சியில் யுத்தத்தின் முன்னால் கடவுளும் கூட கொல்லபடுவார் என்று ஒரு பாதிரியார் சொல்கிறார். இறுதி சடங்குகளை நிறை வேற்ற சென்ற அவரையும் ரஷ்ய ராணுவம் சந்தேகத்தில் பிடித்து சென்று கொன்றுவிடுகிறது.


ஜெர்மனியர்களா, ரஷ்யர்களா என்பது பிரச்சனையில்லை. ஏதும் அறியாத பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் ராணுவத்தின்  வன்முறைக்கு பலியாகி உயிர் இழப்பதை தடுக்க முடியவேயில்லை என்று ஒரு பெண் படத்தில் கோபத்தில் கத்துகிறாள்


படத்தில் வாஜ்தாவின் பால்ய காலமும் அவருள் இத்தனை வருடங்களாக புதையுண்டு இருந்த கோபமும் தன்னை மீறி பீறிட்டிருக்கிறது. உலக யுத்த படங்களாக அவர் நான்கு படங்களை முன்பு இயக்கியிருந்த போதும்  இது அவரது சொந்த வாழ்விலிருந்து உருவான படம்  என்பதால் படத்தில் உணர்ச்சி நிலை கொந்தளிப்பாக உள்ளது


நான்குமாத காலத்திற்குள் முழுபடப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார் வாஜ்தா. படத்தில் Pawel Edelman  ஒளிப்பதிவு மிக அற்புதமானது. குறிப்பாக போர்கைதிகள் முகாமில் அவர்கள் ஒன்று சேர்ந்து நிற்கும் போது உயர் அதிகாரி பேசும் காட்சியில் கேமிரா உச்சத்திலிருந்து மெல்ல நகர்ந்து பின்னோக்கி சென்று பின்பு அவர்கள் சேர்ந்து பாடும் போது உயரத்திற்கு போவதும், பனிபடர்ந்த வீதியில் தனியே ஒரு பெண் துயரத்தோடு நிற்பதும், இடிபாடுகளும், போர்கைதிகளை அடைத்து வைத்திருந்த முகாமும் என்று சிறப்பான ஒளிப்பதிவு. அத்தோடு ஆவணக்காப்பகத்திலிருந்து வாங்கி உபயோகிக்கபட்ட காட்சிகளும் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட காட்சிகளும் இடைவெட்டுகளாக வந்து போகின்றன.


அது போலவே படத்தின் இசை குறிப்பிடத்தக்கது. நிராதரவும் துக்கமும் இசையின் வழியாக பீறிடுகின்றன. கலை இயக்கம், ஒலிப்பதிவு என்று நுட்பமான தேர்வு படத்தினை மிகச்சிறப்பாக்கியிருக்கிறது.


இந்தப் படம் ஆந்த்ரே ம்யூலார்சிக் என்ற நாவலாசிரியரின் போஸ்ட்மார்டம் நாவலை மையமாக கொண்டது. 


வாஜ்தா குரலை உயர்த்தாமல் உண்மையை வெளிப்படுத்துவதே தன் நோக்கம் என்பது போலவே படமாக்கியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இறுதி காட்சிகளாக கெதினில் நடைபெற்ற வன்கொலைகளை காட்சிபடுத்தியுள்ள விதம் அவர் சமகாலத்தின் மிக முக்கிய இயக்குனர் என்பதற்கு சான்றாக உள்ளது.


இந்த படம் சென்ற ஆண்டு சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால் விருது பெறவில்லை. போலந்து திரைப்பட விழாவில் நான்கு முக்கிய விருதுகளை பெற்றிருக்கிறது.
இந்த படத்தை கதின் முகாமில் கொல்லபட்ட வீரர்களின் குடும்பத்தினர்


தங்களது மனசாட்சியின் வெளிப்பாடு என்று கொண்டாடுகிறார்கள்.
சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை. அது மனித வாழ்வின் சுகதுக்கங்களை நேர்மையாக  ஆவணப்படுத்தும் ஊடகம் என்பதை வாஜ்தா மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவசியம் காண வேண்டிய படம்.


 ***



 

0Shares
0