மரியோ வர்கஸ் லோசா

மரியோ வர்கஸ் லோசாவிற்கு (Mario Vargas Llosa)2010ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், விமர்சன கட்டுரைகள், நாடகங்கள், அரசியல் கட்டுரைகள் என்று விரிந்த தளத்தில் இயங்கியவர் லோசா.

பெருநாட்டு எழுத்தாளரான இவர் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார் . இவரது படைப்புகள் 31 மொழிகளில் வெளியாகி உள்ளன.

74 வயதிலும் பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக  இலக்கிய உரைகள் நிகழ்த்துதல், நேரடியான அரசியல் ஈடுபாடு. சமகால படைப்பாளிகளை கொண்டாடுதல்  என்று லோசாவின் ஆளுமை முக்கியமானது

மனதிற்கு நெருக்கமானஒரு பெரும்படைப்பாளிக்கு விருது கிடைத்திருக்கிறதுஎன்று மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். நீண்ட பல வருசங்களின் பின்பு மீண்டும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் நோபல் பரிசை வென்றிருக்கிறது.

லோசா கடந்த பத்தாண்டுகாலமாகவே தொடர்ந்து நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டுக் கொண்டேயிருந்தார். அவரது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக விருது வழங்குவதில் கருத்துவேறுபாடுகள் உருவாகின.  யாவும் கடந்து இந்த ஆண்டிற்கான நோபல்பரிசினை பெற்றிருக்கிறார்.

நான் அட்சரம் இதழை நடத்திக் கொண்டு வந்த போது அதில் மரிய வர்கஸ் லோசாவின் நாவலில் இருந்து ஒரு பகுதியை வெளியிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நண்பர் அருணன் அதை மொழியாக்கம் செய்திருந்தார்.

லோசாவை எண்பதுகளின் இறுதியில் படிக்கத் துவங்கினேன். அப்போது சென்னையில் அவரது புத்தகங்கள் எதுவும் கையில் கிடைக்கவில்லை. டெல்லிக்கு சென்றிருந்தபோது  சாலையோர புத்தக கடை ஒன்றில் அவரது Aunt Julia and the Scriptwriter என்ற  நாவல் கிடைத்தது. மிக வித்தியாசமான கதை சொல்லும் முறையில் அமைந்த நாவல். பின்நவீனத்துவ கதைசொல்லும் முறையில் இது ஒரு சாதனை படைப்பு, இது பின்பு படமாகவும் வந்தது. அதையும் பார்த்திருக்கிறேன்.

1982ல் மார்க்வெஸிற்கு நோபல் பரிசு கிடைத்தவுடன் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் மீது உலகமே மிகுந்த கவனம் கொண்டது. எனது கல்லூரி நாட்களில் இவற்றை தேடித்தேடி வாசிக்கத் துவங்கினேன் அந்த நாட்களில் கார்லோஸ் ப்யூன்டஸ், லோசா, கார்பெந்தர், மேனுவேல் ப்யூக், கொர்த்தசார், இசபெல் அலண்டே, போர்ஹெஸ், ஜார்ஜ் அமேதோ, பாப்லோ நெருதா,கிமேரேஸ் ரோசா, யுவான் ருல்போ, ஆக்டோவியா பாஸ் என்று விரும்பி வாசித்துக் கொண்டிருந்தேன்.

லத்தீன் அமெரிக்க எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒருவகையில் இது போன்ற நெருக்கத்தை ருஷ்ய இலக்கியங்களில் மட்டுமே அடைந்திருக்கிறேன். ஐரோப்பிய இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்த போது அவை இத்தகைய மன நெருக்கத்தை உருவாக்கவேயில்லை. லத்தீன் அமெரிக்க நிலப்பரப்பும் கதை சொல்லும் முறையும் எனது நிலவியலின் கதைகள் போலவே இருந்தன.  இந்தப்புத்தகங்களை படிக்க தேடியது புனைவை விட சுவாரஸ்யமானது

1990களின் துவக்கத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்த போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை வாசிக்ககூடியவர்கள் யார் என்று தேடி நானாக அறிமுகம் செய்து கொண்டேன். அப்படி தான் தமிழவன்,  எஸ்.சண்முகம், நாகார்ஜூனன், ஸ்ரீரங்கம் கண்ணன், வாசு, சாருநிவேதிதா , எம்.டி. முத்துகுமாரசாமி, போன்றோரின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது.

இவர்கள் அந்த நாட்களில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை மிகவும் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்தாளரைப் பிடிக்கும். அதைப்பற்றி விரிவாக பேசுவார்கள்.

நானும் கோணங்கியும் கோவில்பட்டியில் இருந்து கிளம்பிவந்து மார்க்வெஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஸ்ரீரங்கம் கண்ணன் நிறைய வாசிக்க கூடியவர். அவரும் சாருநிவேதிதாவும் நல்ல நண்பர்கள்.

சாரு டெல்லியில் வசித்தவர் என்பதால் அவரால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியபடைப்பாளிகளை நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. ஒருமுறை அவரைச் சந்திக்க நானும் கண்ணனும் சென்ற போது அவர் தான் வாசித்துக் கொண்டிருந்த  க்யூபா தேசத்தின்  Cabrera Infante வின் நாவலான Three Trapped Tigers பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்த வாரம் கண்ணன் எங்கிருந்தோ தேடி Infante’s Inferno நாவலை கொண்டுவந்திருந்தார். மாறிமாறிப் படித்தோம். ஒரு தேநீரைப் பகிர்ந்து கொண்டு யார் லத்தீன் அமெரிக்காவில் முக்கியபடைப்பாளி என்று நாளெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்.

லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை வாசிப்பது என்ற பொதுப்புள்ளி அன்றைய சிற்றிதழ் இலக்கிய மாற்றங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதவராக இருந்த ஒரே படைப்பாளி சுந்தர ராமசாமி மட்டுமே. அவர் இது குறித்து கேலியும் கிண்டலும் மட்டுமே கொண்டிருந்தார். நேர்பேச்சில் அதை நானே அறிந்திருக்கிறேன். ஆனால் அதே சுந்தர ராமசாமி அமெரிக்க சென்று திரும்பிய பிறகு போர்ஹெஸ் குறித்தும் மார்க்வெஸ் பற்றியும் மிக உயர்வாக பேசியது  ஆச்சரியமாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கப் புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாசித்தும் விவாதித்தும் வந்த நாட்கள் அவை. இதற்கான ஒரே புகலிடமாக நாகார்ஜூனன் வீடு இருந்தது. அவர் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் விற்பன்னராக இருந்தார்.  எதைப் படிக்க வேண்டும். எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி மணிக்கணக்காக பேசுவார்.

அநேகமாக அவர் வீட்டில் காலை ஒன்பது மணிக்குத் துவங்கும் உரையாடல் மதிய உணவிற்கான இடைவெளி கூட இல்லாமல் மாலை ஆறுமணி வரை நீளும். சில நாட்கள் அது இரவு பதினோறு மணி அளவு கூடப் போய்விடும். நாகார்ஜூனன், சில நாட்கள் ஸ்ரீரங்கம் கண்ணன் அறைக்குத் தேடி வருவார். அங்கே இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அந்த உரையாடல்கள் முழுவதும் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை எப்படி வாசிப்பது. ஏன் வாசிப்பது என்பது தொடர்பானது தான்.

அவ்வகையில் நாகார்ஜூனன் தான் எங்களது ஆசான். அவர் தனது நூலகத்தில் அடுக்கி வைத்திருந்த லத்தீன் அமெரிக்க புத்தகங்களைப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கும். அவர் கார்லோஸ் ப்யூன்டஸின் Terra nostra முடித்த கையோடு எங்களைப் போன்செய்து வரச்சொல்லி ஒரு இரவு முழுவதும் ஒரேயொரு பத்தியை மட்டுமே கையில் எடுத்து வாசித்து வாசித்து அதன்மீதான தனது வியப்பை பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது பரிந்துரையால் நிறைய புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது.

இன்னொரு  முக்கிய படிப்பாளி எஸ்.சண்முகம். தனது பணிச்சுமைகளுடன் போராடியபடியே சண்முகம் தீவிரமாக வாசித்து தனது புரிதல்களை வெளிப்படுத்தியவர் . அவர்களது சந்திப்பின் வழியாகவே லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த நாட்களில் கல்குதிரை சார்பாக மார்க்வெஸ் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடுவது என்று முடிவு செய்து அதற்கான ஆரம்ப தயாரிப்புகளில் இருந்தோம். தமிழில் போர்ஹெஸ், மார்க்வெஸ் என்ற இரண்டு படைப்பாளிகள் உள்ளுர் எழுத்தாளர்கள் அளவிற்கு அறிமுகமானதும் வரவேற்பு பெற்றது வேறு இலக்கிய சூழல்களில் நடைபெறாத அதிசயம்.

நாகார்ஜூனனுக்கும் சாருநிவேதிதாவிற்கும் இரண்டு எதிர்நிலையில் விருப்பங்கள் இருந்தன. எந்த புத்தகத்தை நாகார்ஜூனன்,  மிக நன்றாக இருக்கிறது என்று சொல்வாரோ அதை சாரு குப்பை என்று தூக்கி எறிவார். ஆனால் இரண்டு பேரும் அதற்கான காரணத்தை விரிவாகச் சொல்வார்கள். இருவருக்கும் எப்படி படிக்க நேரம் கிடைக்கிறது என்று யோசிப்பேன்.

ஒரு நாள் சாருநிவேதிதாவைத் தேடிப்போன போது அவர் படிப்பதற்காக அலுவலகத்தில் லீவு போட்டிருப்பதாக சொன்னார். நாகார்ஜூனனும் இது போன்று விடுப்பு எடுத்துக் கொண்டு படிப்பவர். அவ்வளவு தீவிரமாக புத்தகம் படிக்க வேண்டும் என்ற வெறியும் ஈடுபாடும் அன்றிருந்தது.  நீண்ட வாசிப்பு அனுபவமும், ஆழ்ந்த புரிதலுமே எழுத்தாளனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று புரிய வைத்தவர்கள் இவர்கள்.

நானும் ஸ்ரீரங்கம் கண்ணனும் தினசரி ஒரு லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை படித்துவிட்டு மாலையில் சந்தித்துபேசிக் கொண்டிருப்போம். அப்போது அவர் திருவல்லிகேணியில் ஒரு மேன்ஷனில் இருந்தார். அந்த அறையில் அவரது கட்டிலின் மீது ஏதாவது ஒரு புத்தகம் திறந்தே கிடக்கும். முக்கியமான புத்தகங்களை கட்டிலின் அடியில் உள்ள பெட்டியில் ஒளித்து வைத்திருப்பார். வேலையற்ற பகல்பொழுகளின் துணையாக இருந்தவர்கள் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களே. அவர்கள் தந்த உற்சாகமும் நம்பிக்கையுமே தொடர்ந்து எழுத காரணமாக அமைந்தது.

லோசாவை கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும். நான் மார்க்வெஸ் பற்றி பேசும் போது அவர் லோசாவைப்பற்றி பேசுவார். சாருவிற்கும் லோசா பிடித்த  எழுத்தாளர். அவர்கள் லோசாவைப்பற்றி உயர்வாக பேசும்போது நான் மார்க்வெஸ் பற்றி உயர்த்திப் பேசுவேன். ஒரு நாள் கண்ணன் லோசாவும் மார்க்வெஸ்சும் நல்ல நண்பர்கள். ஒன்றாக சுற்றியலைந்தவர்கள். தனது நண்பனை பற்றி லோசா எழுதிய Garcia Marquez: Story of a Deicide முக்கியமான புத்தகம். மார்க்வெஸ் பிடல் காஸ்ட்ரோவை தூக்கிபிடிப்பது லோசாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் வாக்குவாதமாகி ஒரு முறை அவர் மூக்கினை உடைத்துவிட்டார் என்றார்.

அதை கேட்ட சாரு தனது சக எழுத்தாளர் ஒருவரை கொண்டாடி லோசா எழுதியது போல ஒரு போதும் மார்க்வெஸ் நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். நான் உடனே லோசாவின் மார்க்வெஸ் பற்றிய புத்தகம் படிக்க வேண்டும் என்று தேடத்துவங்கினேன். இன்று வரை கையில் கிடைக்கவேயில்லை. ஏன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள் என்ற புதிருக்கு இன்றுவரை விடையில்லை.

ஆனால் லோசாவிற்கு நோபல் பரிசு கிடைத்த போது இரண்டு நண்பர்கள் ஒரே பரிசினை வென்றிருக்கிறார்கள் என்ற சந்தோஷமே மேலோங்கியிருந்தது. யாரோ டுவிட்டரில் நாம் இருவரும் இப்போது சமநிலை அடைந்துவிட்டோம் என்று மார்க்வெஸ் பெயரில் ஒருவரி செய்தியை அனுப்பி இணையத்தை பரபரப்பாக்கி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பதினைந்து வருசங்களாக லோசாவின் புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தமிழ் சூழலில் நாம் கொண்டாட வேண்டிய முக்கிய படைப்பாளி லோசா என்பது உறுதியாகிக் கொண்டேயிருக்கிறது.

லோசாவை வாசிப்பது மற்ற லத்தீன் அமெரிக்க நாவல்களை வாசிப்பதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது. அவர் தனது ஆதர்சங்களாக பிளாபெர்ட்டையும், சார்த்தரையும், வில்லியம் பாக்னரையும் கொண்டிருக்கிறார்.  லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளை பாக்னர் பாதித்த விதம் அமெரிக்க இலக்கியங்களின் மீதான அவரது பாதிப்பிலிருந்து வேறுபட்டது. கதைசொல்லுதலின் முடிவற்ற சாத்தியங்களை அவரிடமிருந்தே லத்தீன் அமெரிக்க படைப்பாளிகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவகையில் லோசாவின் எழுத்திற்குள் போர்ஹேயின் பாதிப்பையும், தாந்தேயின் கவித்துவபாதிப்பையும் காண முடிகிறது.  லோசா கதை சொல்வதில் உருவாக்கும் உத்திகள் வியப்பளிப்பவை. அவர் நேரடியாக எந்தக்கதையையும் சொல்பவரில்லை. அதை பல்வேறு தளங்களை கொண்டு பின்னியே கதையை எழுதிப்போகிறார்.

அதே நேரம் அது சமகால லத்தீன் அமெரிக்க அரசியல் சூழலையும் கடந்தகால வரலாற்று மயக்கங்களையும் ஒன்று சேர்ந்து உருவாக்கபடுகின்றன என்பதே அதன் சிறப்பம்சம். துப்பறியும் கதையில் துவங்கி மீமாய கதை சொல்லும் முறை பல்வேறுவகைப்பட்ட கதை எழுத்தை உருவாக்கியதே அவரது சாதனை.

The Time of the Hero, The Green House, Conversation in the Cathedrl, Captain Pantoja and the Special Service,The War of the End of the World,The Real Life of Alejandro Mayta,, Who Killed Palomino Molero போன்றவை அவரது முக்கிய நாவல்கள். இன்று தனது 74 வயதிலும் தொடர்ந்து நாவல்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறார்.

லோசாவின் இடதுசாரிச் சிந்தனைகளும், அரசியல் நிலைபாடுகளும் கேளிக்கைகளுக்காக லத்தீன் அமெரிக்க எழுத்தைப் படிப்பவர்களுக்கு எரிச்சலை உருவாக்கியது. ஆனால் அதை தகர்ந்து எறிந்து அவர் சமகாலத்தின் முக்கிய படைப்பாளியாக உருக்கொண்டார். தத்துவம்,வரலாறு, விஞ்ஞானம்  சமூக அக்கறை, அரசியல் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, என்று ஆழ்ந்த சிந்தனையும், அகதரினசமும் கொண்ட படைப்பாளி லோசா.

லோசா எதைப்பற்றியும்  மேலோட்டமாக கருத்து சொல்வதில்லை. அவரது இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் மிக முக்கியமானவை. பிளாபெர்ட் மற்றும் வில்லியம் பாக்னர் பற்றிய அவரது புரிதல்கள் ஆழ்ந்த இலக்கிய பதிவுகளாகும். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் வரலாற்றை அதன் சமூக மாற்றங்களுடன் இணைந்து வாசிக்கும் இவரது பார்வை தனித்துவமானது.

இதே நேரம் லோசாவின் எழுத்தில் காணப்படும் பகடி அசலானது. அவர் மதத்தையும் அதிகாரத்தையும் தொடர்ந்து கேலி செய்கின்றவர். இதற்காகவே அவரை செர்வான்டிஸின் வாரிசு என்று சொல்லலாம். டான்குவிகாதேயில் இருந்த பகடிக்கு நிகரானது இவரது எழுத்து. நீங்கள் எந்த வகையான எழுத்தாளர் என்ற கேள்விக்கு லோசா சொன்ன பதில் முக்கியமானது

Writing is a way of life.. என்கிறார் Flaubert . எனக்கும் எழுத்து தான் வாழ்க்கைமுறை. எழுத்து அரசியல் மாற்றங்களுக்கு துணை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு நல்ல குடிமகன் அரசியலை இலக்கியங்களின் வழியாகவே அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆகவே எல்லா எழுத்திற்கு பின்பும் ஒரு அரசியல் இருக்கிறது. அதை நாம் எப்படி பார்க்கிறோம்.  எப்படி முன்வைக்கிறோம். புரிந்து கொள்கிறோம் என்பது முக்கியம். நான் லத்தீன் அமெரிக்காவின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். அக்குரல் அதிகாரத்திற்கு எதிரானது. சமூகமாற்றங்களின் மீது அக்கறை கொண்டது.அதே நேரம் நீண்ட இலக்கியபராம்பரியத்தின் தொடர்ச்சியும் மாற்றங்களையும் புரிந்து கொண்ட குரலாகவும் அது இருக்கும் என்றார்.

லோசாவிற்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது இதற்காக தான்.

**

0Shares
0