இரண்டு ரகசியங்கள்

ஆண்வேஷமிட்ட பெண்ணின் கதை ஷேக்ஸ்பியர் நாடக காலம் தொட்டேயிருந்து வருகிறது. ஆல்பர்ட் நோப்ஸ் திரைப்படத்தின் கதையும் அதுவே


ஆல்பர்ட் நோப்ஸ், அயர்லாந்தின் டப்ளின் நகரிலுள்ள மாரிசன் ஹோட்டலில் பணிபுரியும் ஒரு ஆங்கிலேய பட்லர் . பெண்ணாகப் பிறந்த அவர் முப்பது ஆண்டுகளாக ஒரு ஆணாகவே வாழ்ந்து வருகிறார். யாருக்கும் அவரது அடையாளம் தெரியவில்லை.

ஹோட்டலில் வண்ணம் பூசும் பணியில் இருக்கும் ஹூபர்ட் பேஜ், ஆல்பர்ட்டின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறான். பெண்ணாக இருந்த ஆல்பர்ட், தனது 14 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுத் தாக்கப்பட்டுகிறார் அதன் காரணமாகவே ஆண் உடை தரித்து வேலையைத் தேடிக் கொள்கிறார் .

விஷக்காய்ச்சல் அயர்லாந்தை கடுமையாகத் தாக்குகிறது, ஆல்பர்ட் உட்படப் பலர் நோய்வாய்ப்படுகிறார்கள். இறுதியில் ஆல்பர்ட் பெண் உடை அணிந்து ஒரு நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறாள். பின்பு உலகின் கண்களுக்கு ஆணாக மாறி தனது பழைய வேலைக்குத் திரும்புகிறார்

இது போன்ற ஒரு கதையின் பதினேழாம் நூற்றாண்டு வடிவமே ரோஸ்.

2026ல் வெளியாகியுள்ள மார்கஸ் ஷ்லைன்சர் இயக்கிய ஆஸ்திரியத் திரைப்படம். காலத்தின் அடியில் புதையுண்டு போயிருந்த ஒரு நிகழ்வை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது. இப்படத்தை. இரண்டு ரகசியங்களின் கதை என்று சொல்லலாம். கடவுளால் கைவிடப்பட்டது போன்ற நிலவெளி. அங்கே வசிக்கும் உலகம் அறியாத மனிதர்கள். அவர்களின் கடின வாழ்ககை. அதற்குள் வெளிப்படும் ஆசைகள். நீதிபதிகளால் அளிக்கப்படும் குரூரமான தண்டனை எனப் படம் நினைவின் சரடுகளால் பின்னப்பட்டிருக்கிறது

முதல் ரகசியம் ரோஸிற்குரியது.. கதை பதினேழாம் நூற்றாண்டில் நடக்கிறது. ரோஸ் என்ற பெண் சிப்பாயாக ஆண் வேஷமிட்டுக் கொண்டு தனக்குச் சொந்தமான பண்ணையை மீட்பதற்காகத் தொலைதூரக் கிராமம் ஒன்றுக்கு வருகை தருகிறாள். அவளது கையில் நிலத்திற்கான ஆவணமிருக்கிறது. துப்பாக்கிக் காயத்தால் அவளது முகம் சிதைந்து போயிருக்கிறது.

கிராமவாசிகள் ரோஸை ஆண் என்று நம்புகிறார்கள். ஆனால் நில உரிமை குறித்துச் சந்தேகம் கொள்கிறார்கள். விசாரணையின் முடிவில் நிலமும் இடிந்த நிலையில் உள்ள பண்ணை வீடும் அளிக்கப்படுகிறது.

தனிமையில் வசிக்கத் துவங்கும் ரோஸ் எதற்காக அந்த ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறாள் என்பதே ரகசியத்தின் மையம்.

கடின உழைப்பாளியான ரோஸ் தனது பண்ணையில் விவசாயம் செய்கிறாள். வீட்டைப் புதுப்பிக்கிறாள். உதவிக்கு ஆட்களை வைத்துக் கொண்டு பண்ணையைச் சிறப்பாக நடத்துகிறாள். யாருக்கும் அவள் பெண் என்ற சந்தேகம் வரவில்லை. இதற்காக எப்போதும் ஆண் உடையிலே இருக்கிறாள். ஆண் உடையிலே உறங்குகிறாள். ஒரு கரடியைச் சுட்டுக் கொன்றதன் மூலம் தைரியமிக்க ஆண் என்ற அடையாளத்தையும் பெறுகிறாள்.

பண்ணையை விரிவாக்க செய்ய முயலும் ரோஸ் அருகிலுள்ள நிலத்தை விலைக்குக் கேட்கிறாள். அந்த நில உரிமையாளர் தனது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான்

ஆண் வேஷமிட்ட ரோஸ் அதற்கும் சம்மதிக்கிறாள். அந்தத் திருமணம் தேவாலயத்தில் நடக்கிறது

திருமணம் முடிந்து மணமக்கள் திரும்பி வரும் போது மழையில் மாட்டுவண்டி மாட்டிக் கொள்கிறது. அழகான காட்சியது. மனைவிக்குத் தான் ஒரு பெண் எனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகச் செயற்கை ஆண் உறுப்புகளைச் செய்து மாட்டிக் கொள்கிறாள் ரோஸ். அவளது ரகசியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நாள் வரும் போது. ரோஸ் பிடிபடுகிறாள். ரோஸின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் முடிச்சு

இன்னொரு ரகசியம் ரோஸைத் திருமணம் செய்து கொண்ட சுசனாவிற்குரியது. அவள் ஆண் வேஷமிட்ட ரோஸை நம்புகிறாள். ஒரு நாள் ரோஸ் மூலம் தான் கர்ப்பமாகி விட்டதாகச் சொல்கிறாள். குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். யார் அந்தக் குழந்தையின் தந்தை. சுசனாவின் கடந்தகால வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதைச் சுற்றி இரண்டாவது ரகசியம் படர்ந்திருக்கிறது.

ஆண் வேஷமிட்ட ரோஸை விடவும் சுசனா அழுத்தமான கதாபாத்திரம். ரோஸ் சுசனாவின் ரகசியத்தைப் புரிந்து கொள்கிறாள். உதவி செய்கிறாள். அவளது குழந்தையைத் தனது பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் அவர்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியவில்லை

கிராமவாசிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதின் கோபத்தை மோசமாக வெளிப்படுத்துகிறார்கள்.

ஆண் வேஷம் கொண்ட பெண் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வருகிறாள். வெனிஸ் நகர வணிகன் நாடகத்தில் ஆண் வேஷத்தில் வந்து பெண் நீதி சொல்கிறாள். Twelfth Night நாடகத்தில் ஆண் வேஷமிட்ட பெண்ணை இன்னொரு பெண் காதலிக்கிறாள். போரில் ஆண் வேஷத்தில் கலந்து கொண்ட பெண்களைப் பற்றி நிறைய வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. இதில் கசப்பான குழந்தைப் பருவமே ரோஸை ஆணாக மாற்றுகிறது.

மேரி ஆன் எவன்ஸ் தனக்கு ஆண் பெயர் வைத்துக் கொண்டு ஜார்ஜ் எலியட் என்ற பெயரில் நாவல் எழுதிப் புகழ்பெற்றார். சோபியா ஆண் பெயரில் கணிதம் கற்றுக் கொண்டு உயரிய விருதுகளைப் பெற்றார் என்கிறது வரலாறு.

0Shares
0