யூடிவி தனஞ்ஜெயன் தமிழ் சினிமாவை ஆவணப்படுத்துவதில் தீவிர நாட்டம் கொண்டவர். திரைப்படத்துறையில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் இவர் Best of Tamil Cinema: 1931 to 2010 என்ற நூல் ஒன்றினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் எழுதியுள்ள பிரைட் ஆப் தமிழ்சினிமா, கோவா திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலை நேற்றிரவு வாசித்தேன்.
தமிழ் சினிமாவை ஆவணப்படுத்துவதில் நாம் எப்போதுமே அக்கறையின்றி இருக்கிறோம் என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே எனக்கிருக்கிறது. திரைப்படத்துறையும், அரசும், கல்வி நிறுவனங்களும் இதற்கான முன்முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவதேயில்லை.
ஆனால் ஒற்றை ஆளாகத் தனஞ்ஜெயன் 1953 முதல் 2013 வரையான 60 ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற 163 திரைப்படங்களைத் தொகுத்து வகைப்படுத்தியதோடு அவற்றினைக் குறித்த மேலதிகமான தகவல்கள், குறிப்புகளுடன் நூலை உருவாக்கியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
இது போலவே 1931ல் பேசும்படம் தயாரிக்கபட்ட காலம் துவங்கி அதன் ஆரம்பக் கால முயற்சிகள், கவனிக்கபட வேண்டிய திரைப்படங்கள் என விரிவான ஆய்வு மேற்கொண்டு 39 திரைப்படங்களைக் அடையானப்படுத்துகிறார்.
நாம் அறிந்த பல திரைப்படங்கள் குறித்து அரியாத சுவாரஸ்யமான தகவல்களைத் திரட்டித்தந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஹாலிவுட் சினிமா குறித்து ஆங்கிலத்தில் இது போன்ற பல நூல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் தமிழ் சினிமா குறித்து ஆங்கிலத்தில் இப்படியான ஒரு நூல் வெளியாவது இதுவே முதல்முறை.
தமிழில் இந்த நூல் உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்
தீவிர உழைப்பும் அர்ப்பணிப்பும், தமிழ் சினிமா மீதான அக்கறையுமே இந்தத் தொகுப்பினை சாத்தியப்படுத்தியிருக்கிறது
தமிழ் சினிமா குறித்து ஆய்வு செய்பவர்களுக்கும், தீவிர சினிமா ரசிகர்களுக்கும் இந்த நூல் பெரிதும் பயன்படக்கூடியது. . தனஞ்ஜெயன் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
••••
PRIDE OF TAMIL CINEMA
Price: Rs.1,500.00
புத்தகம் வாங்க
Vediyappan Discovery Book Palace
***