
படத்தின் இயக்குனர் Paweł Pawlikowski. இவர் Dostoevsky’s Travels என்ற படத்தை இயக்கியவர், இப்படம் தஸ்தாயெவ்ஸ்கி பெர்லின், பாரீஸ், லண்டன் நகரங்களுக்குப் பயணம் செய்த அதே வழியில் அவரது கொள்ளுப்பேரன் டிமிட்ரி பயணம் செய்வதை முன்வைத்து உருவாக்கபட்டது. இடா அவரது பத்தாவது படம், இப்படம் லண்டன் திரைப்படவிழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது
1950- 60 களில் நடைபெறும் கதைக்களம்.
கன்னியர் மடத்தில் பயிலும் அன்னா தனது அர்ப்பணிப்பு நிகழ்விற்கு முன்பாகத் தனது குடும்பத்தினரை பார்த்து வர அனுப்பி வைக்கபடுகிறாள், அத்தை வாண்டா வீட்டிற்குப் போகிறாள் அன்னா, அங்கே அத்தை அவள் ஒரு யூதப்பெண் என்பதையும் அவளது உண்மையான பெயர் இடா பெலின்ஸ்டென் என்றும் கூறுகிறாள்
அவளது பெற்றோர் யூதர்கள் என்பதால் இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார்கள் என்ற தகவலை சொல்லி, இடாவின் பெற்றோர்கள் உயிர்தப்பி ஒடிய போது ஒரு கிராமத்தில் ஒளிந்து கொண்டிருந்தார்கள், பின்பு அங்கே காட்டிக் கொடுக்கபட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்கிறாள் இடா
பெற்றோர்களின் உடல் எங்கே புதைக்கபட்டன எனத் தேடத்துவங்கும் இடாவின் பயணமும் அலைக்கழிப்புமே படமாக விரிவு கொள்கிறது, பயணத்தின் ஊடாகத் தன்னைத் தத்து எடுத்து வளர்த்த அத்தைக்கும் அவளுக்குமான உறவும், வழியில் சந்திக்கும் இளைஞனின் உறவும் எனப் படம் கவிதையாக நீள்கிறது. இடாவும் அவளது அத்தை வாண்டாவும் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்.
முழுவதும் கறுப்பு வெள்ளையில் படமாக்கபட்டிருப்பதே இப்படத்தின் தனிச்சிறப்பு. எண்பது நிமிஷங்கள் ஒடக்கூடிய இப்படம் சமகால உலகச் சினிமாவில் ஒரு மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமில்லை, வண்ணம் நீக்கப்பட்ட வெர்மீரின் ஒவியங்கள் போன்ற காட்சிபடிமங்கள் திரையில் தோன்றி மறைவது மெய்சிலிர்க்க வைக்கின்றன

Ryszard Lenczewski தான் இப்படத்திற்குக் கேமிராமேனாகப் பணியாற்ற அழைக்கபட்டார், ஆனால் அவர் முதல்நாள் படப்பிடிப்பிலே ஒத்துழைக்க மறுத்துவிட்டதால் அவரது கேமிரா ஆபரேட்டர் Lukasz Zal, யை ஒளிப்பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
எத்தனையோ படங்களுக்குக் கேமிரா ஆபரேட்டராகப் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த லூகாஸ் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி ஆகச்சிறந்த ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். சர்ரியலிச ஒவியங்கள் போன்ற சாயல் கொண்ட காட்சிபடிமங்கள் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
**