இணையாத தண்டவாளங்கள்

எகிப்திய இயக்குனரான யூசுப் சாஹின் இயக்கிய Cairo Station 1958ல் வெளியான திரைப்படம். முழுப்படமும் கெய்ரோ சென்ட்ரல் ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளில் கதை நடைபெறுகிறது

ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். பயணிகள் அதை முழுமையாக உணர்வதில்லை. நான் பல நாட்களை ரயில் நிலையத்தில் கழித்தவன் என்ற முறையில் இப்படம் சித்தரிக்கும் உலகை நன்றாக அறிவேன்.

கெய்ரோ சென்ட்ரல் ரயில் நிலையம், தலைநகரின் இதயம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு ரயில் புறப்படும் பரபரப்பான ரயில் நிலையமது. நூற்றுக்கணக்கில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நெரிசலான அந்த ரயில் நிலையத்தின் அதிகாரி. சிறுவணிகர்கள். காவலர்கள். போர்ட்டர்கள். மோசடி பேர்வழிகள். திருடர்கள். பெண்பித்தர்கள் என ரயில் நிலையம் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டிக்கெட் இல்லாத பயணத்தில் கெய்ரோ வந்து சேரும் ஏழையான கினாவி பசிமயக்கத்தில் ரயில் நிலையத்தில் கிடக்கிறான். அவனுக்கு உதவி செய்யும் நியூஸ்ஸ்டாண்ட் உரிமையாளர் மட்பௌலி செய்தி தாள் விற்பனை செய்பவனாக நியமிக்கிறான். அப்பாவியான கினாவி கால்களை இழுத்து இழுத்து நடக்கக் கூடியவன். சிறுவர்கள் கூட அவனைக் கேலி செய்கிறார்கள். கினாவி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறான். சம்பாதித்துத் திருமணம் செய்து கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி போய்விட வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறான்.

பிளாட்பாரத்தை ஒட்டிய ஒரு தகரகொட்டகை. அங்கே கினாவி உறங்கிக் கொள்கிறான். அவன் செய்தி தாளில் வரும் அழகிகளின் புகைப்படத்தை வெட்டி தனது அறை முழுவதும் ஒட்டி வைத்துக் கொள்கிறான். அழகான பெண்களைப் பற்றிக் கனவு கண்டபடி இருக்கிறான்

ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குச் சம வாய்ப்பு மற்றும் சம ஊதியம் கிடைப்பதில்லை. ஒரு சுமைதூக்கும் தொழிலாளி விபத்திற்குள்ளாகிறான். அவனுக்கு நஷ்ட ஈடு தர மறுக்கிறார்கள். ஆகவே அபு செரிஹ் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ரயில் நிலையத்தினைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபு கேமல் தனது ஆட்களை வைத்து அவர்களை ஒடுக்குகிறான். இந்நிலையில் கினாவிக்கு அதே ரயில் நிலையத்தில் குளிர்பானங்கள் விற்கும் இளம்பெண் ஹன்னோ மீது காதல். அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவள் அபு செரிஹை காதலிக்கிறாள். அவனும் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான். இதை அறிந்த போதும் கினாவி ஹன்னோவிடம் நெருங்கிப் பழக முயலுகிறான்.

தனது அன்னையின் நகையை அவளுக்குப் பரிசாக அளிக்கிறான். ஹன்னோ அவனைக் கேலி செய்கிறாள். துரத்திவிடுகிறாள். அவளை அடைவதற்காகக் கினாவி எதையும் செய்ய முயற்சிக்கிறான். நிராகரிப்பை எதிர்கொள்ளும், கினாவியின் ஆவேசம் ஆபத்தானது. இணையாத இரண்டு தண்டவாளங்களைப் போல அவர்கள் உறவு நீளுகிறது. இக்கதையில் தனது காதலனுக்காக காத்திருக்கும் இளம்பெண்ணின் கதை கிளையாக விரிகிறது. அதுவும் முதன்மை கதையும் ஒரே நிகழ்வின் இருவேறுவடிவங்களாக மாறுகின்றன.

இதற்கிடையில் இந்த ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரேதம் தலையற்ற நிலையில் கிடக்கிறது. யார் கொலையாளி எனத் தேடுகிறார்கள்.

அபு தொழிலாளர்களுக்கான சங்கத்தை உருவாக்க முயலுகிறான். அதைக் அபு கேமலின் ஆட்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.

ரயில் நிலையத்திற்கு வரும் பிரபலங்களைக் காண பயணிகள் போட்டி போடுகிறார்கள். ரயில் நிலையத்தினுள் அனுமதி இன்றிக் குளிர்பானங்கள் விற்க கூடாது எனக் காவலர்கள் ஹன்னோவை விரட்டுகிறார்கள். அவள் ரயிலில் தாவி ஏறி விற்பனை செய்யும் விதமும் அவளது நடனமும் அழகானது.

பயணச்சீட்டு வாங்குவதற்கான இடத்தில் கிராமவாசிகள் வேடிக்கையாக நடந்து கொள்வது. கினாவி முறைத்துப் பார்த்துவிட்டதாகப் பெண் போடும் சண்டை. கணவன் மனைவிக்குள் வரும் சண்டை. பெண்கள் குழந்தைகளைத் திட்டுவது, காதலன் காதலி சந்திப்பு. ரயில் நிலையக்காவலர்கள் லஞ்சம் வாங்குவது. என ரயில் நிலைய வாழ்வினை படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தாங்க முடியாத வெப்பத்தில் ரயில் வந்து நிற்பது குளிர்பானம் விற்கும் பெண்கள் தண்டவாளத்தில் ஒடி ரயிலில் உள்ள பயணிகளிடம் குளிர்பானம் விற்பது சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

இத்தாலிய நியோ ரியலிச பாணியில் உருவாக்கபட்ட அழகான திரைப்படம். ஆல்விஸின் ஒளிப்பதிவு அபாரமானது குறிப்பாக இரவுக்காட்சிகள் மற்றும் ரயிலின் வருகை. ரயிலில் நடக்கும் குழு நடனம், அபுவும் ஹன்னோவும் சந்திக்கும் அறை. துடிதுடிக்கும் கண்களின் அதீத நெருக்கமான காட்சிகள் இருண்ட பிளாட்பாரத்தில் நடக்கும் நிகழ்வுகள் எனத் தேர்ந்த ஒளிப்பதிவு படத்திற்குத் தனிச்சிறப்பை உருவாக்குகிறது.

அரபு இலக்கியங்களில் வரும் கதாபாத்திரம் போலவே மட்பௌலியும் கினாவியும் உருவாக்கபட்டிருக்கிறார்கள். எகிப்தின் மாறிவரும் சமூகமாற்றதை ரயில் நிலையத்தின் வழியே படம் அழகாகச் சித்தரித்துள்ளது.

.

0Shares
0