காலம் வரைந்த காட்சிகள்

காவேரிப்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனப்படும் கே.எஸ். வேங்கடரமணி இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல்கள் தஞ்சை மாவட்ட கிராமிய வாழ்க்கையை விவரிக்கின்றன.

பூம்புகாரைச் சேர்ந்த கா.சி. வேங்கடரமணி வழக்கறிஞராகப் பணியாற்றியவர். .இவரது தந்தை சித்தாந்த ஐயர் சுங்கவரி அதிகாரி. இவரது முன்னோர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களின் அரசவையில் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்..

வேங்கடரமணி ஆரம்பப் பள்ளியினை மாயவரத்திலும் கல்லூரி படிப்பைச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார். சட்டம் படித்து மயிலாப்பூரில் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியிருக்கிறார். ஓவியத்தில் ஆர்வம் கொண்டவரான வேங்கடரமணி ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் ஆற்றவும் கட்டுரைகள் எழுதவும் துவங்கியிருக்கிறார். அதன் அடுத்த கட்டமாக இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.  ‘முருகன் ஓர் உழவன்’ ‘தேசபக்தன் கந்தன்’ என்ற இந்த நாவல்கள் மிகுந்த பாராட்டினை பெற்றிருக்கின்றன.

1928 இல் வேங்கடரமணி சாந்தி நிகேதனுக்குச் சென்றிருந்தார். அங்கே மகாகவி ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தபோது அவர் வேங்கடரமணியின் எழுத்துகளைப் பாராட்டியதுடன் அவர் தமிழில் ஒரு இதழைத் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். அதன்படி தமிழ் உலகு என்ற வார இதழைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது.

வேங்கடரமணி ஏன் இந்த நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.  இவரது ஆங்கிலப் புலமையே முதற்காரணம். நேரடியாக ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதற் தமிழர் இவரே என்கிறார்கள்.  

சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டிருந்த வேங்கடரமணி லண்டனிலிருந்து வெளியாகும் The Times Literary Supplementல் பணியாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால அந்தப் பணியை அவர் ஏற்கவில்லை.

இந்திய ஆங்கில எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், ராஜா ராவ் போன்றவர்களுக்கு முன்பாகவே கிராமிய வாழ்க்கையை முன்வைத்து ஆங்கிலத்தில் வேங்கடரமணி நாவல் எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.

முருகன் ஓர் உழவன் என்ற இவரது நாவலை கிருஷ்ணகுமாரி தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். 1928ல் வெளியாகியிருக்கிறது.

இன்று வாசிக்கும் போது பழைய கறுப்பு வெள்ளை படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது. முருகன் ஓர் உழவன் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும் நாவல் முருகனின் வாழ்க்கையை விவரிக்கவில்லை. ராமச்சந்திரன் எனப்படும் ராமுவின் வாழ்க்கையினையும் கேதாரி என்ற சட்டம் பயிலும் இளைஞனின் வாழ்க்கையினையும் மையமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது

ராமுவின் பண்ணையைக் கவனித்துக் கொண்டு வாழ்ந்து வரும் பண்ணையாள் முருகன். அவனது தாத்தா காலத்திலிருந்து அந்தப் பண்ணையில் தான் வேலை செய்து வருகிறார்கள். பெரிய தென்னந்தோப்பு. ஏழு ஏக்கர் வயல் ராமுவிற்குச் சொந்தமாக உள்ளது. அப்பா அம்மா இறந்துவிட்டார்கள்.

அலவந்தி என்ற தஞ்சை மாவட்ட கிராமம் அறிமுகமாகிறது. காவிரியின் அழகுடன் துவங்கும் நாவல்  ராமு பி.ஏ பரிட்சையில் பெயலாகிப் போன செய்தியிலிருந்து விரிவு கொள்கிறது. தனது மகன் பி.ஏ. பரிட்சையில் பாஸ் செய்ய வேண்டும் என்று அவனது அம்மா கனவு கண்டுவந்தாள் ஆனால் அது அவளது இறப்பின் பின்பும் நிறைவேறவில்லை. அது போலவே மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். அதுவும் நடக்கவில்லை. இதில் ராமு மிகவும் வருத்தமடைகிறான்

பரிட்சையில் தோற்றுப் போன ராமுவை ஆறுதல் படுத்துகிறான் முருகன்.

அம்மாவின் ஆசைக்காக ஆங்கில வழியில் கல்வி கற்று ஒரு பயனுமில்லை. பட்டணத்திற்குப் படிக்கப் போய் நிறையப் பணத்தை வீண் செலவு செய்தது தான் மிச்சம். இனிமேல் பேசாமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிடப்போவதாக ராமு சொல்கிறான். அதுவும் நல்ல யோசனை தான் என்கிறான் முருகன்.

ஆனால் சில நாட்களிலே நண்பன் கேதாரியின் கடிதம் அவனை மீண்டும் பட்டணத்திற்கு வரவழைக்கிறது. கேதார் ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவன். அறிவாளி. முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றுச் சட்டம் படிக்கச் செல்கிறான். அவன் ராமுவின் நீண்டகாலத் தோழன்.

பட்டணத்தில் புதிய அறையை இருபதுரூபாய் வாடகைக்கு எடுத்திருக்கிறான் கேதாரி. அது அன்றைக்கு மிகப்பெரிய தொகை. அந்த அறையில் ராமு தங்கிக் கொள்கிறான். நண்பர்கள் ரயில் போவதை அறையிலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு இடத்தில் சிலோன் போட் மெயில் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது

பாஸாகி சட்டம் படிக்கப் போன கேதாரி பரிட்சையில் தோற்றுப் போன ராமுவோடு முன்பு போல இயல்பாகப் பழகுவதில்லை. அந்த விலகல் ராமுவை தொந்தரவு செய்கிறது. இதைப்பற்றிக் கேதாரியிடம் கேட்டபோது  அந்த இடைவெளி தவிர்க்கமுடியாதது என்கிறான்.

அந்தக் காலப் பிராட்வேயைச் சுற்றிக் கதை நிகழுகிறது. கைரிக்ஷா ஒட்டுகிறவர்கள் எப்படி வாடிக்கையாளர்களைப் பிடிப்பார்கள் என்பதையும் அவர்கள் செல்லும் வேகம் பற்றியும் வேங்கடரமணி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.

பட்டணம் வந்து சேரும் ராமு கிறிஸ்துவக் கல்லூரியில் சேருகிறான். ஊரிலிருந்து முருகன் அனுப்பி வைக்கும் பணத்தைக் கொண்டு வசதியாக வாழுகிறான். முருகனும் அவனது மனைவியும் கஷ்டப்பட்டு உழைத்து பண்ணையைக் காப்பாற்றுகிறார்கள்.

கேதாரியின் அத்தை வீடு அறிமுகமாகிறது. அவனது அத்தை மகள் ஜானகி அழகானவள். பதினைந்து வயது இளம்பெண். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அம்மா மீனாட்சி ஆசைப்படுகிறாள். இந்தச் சூழலில் அவர்களுக்கு ராமு அறிமுகமாகிறான். அவன் ஜானகியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொண்டுவிடுகிறான். இது ஊரில் எவருக்கும் தெரியாது.

கேதாரி சட்டம் பயிலுவதுடன் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பிக்கிறான். அவனது பேச்சும் செயலும் பலருக்கும் பிடித்துப் போகிறது. தன்னை ஆங்கிலக் கனவான் போலவே காட்டிக் கொள்கிறான். கோகிலம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

ராமு மீண்டும் பரிட்சையில் தோற்றுப் போகிறான். ஆகவே பட்டணத்தில் குடியிருக்க விரும்பாமல் மனைவியை அழைத்துக் கொண்டு அலவந்தி கிராமத்திற்கு வருகிறான். முருகன் இதை எதிர்பார்க்கவில்லை.

ராமுவின் புது மனைவி ஜானகி வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடப்பதைப் பற்றி ஊர் பெண்கள் வம்பு பேசுகிறார்கள். காவேரி ஆற்றுக்குக் குளிக்கக் கூட வருவதில்லையே என்று முருகனிடம் கேட்கிறார்கள். அவன் புது மனிதர்களுடன் பழகக் கூச்சப்படுகிறாள் என்று விளக்குகிறாள்.

மறுநாள் ஜானகி ஆற்றங்கரைக்கு வருகிறாள். ஊர் பெண்களுடன் சகஜமாக உரையாடுகிறாள். சீதை என்ற பெண்ணின் நட்பு கிடைக்கிறது. இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறுகிறார்கள்

ஏழு ஏக்கர் நிலமிருந்தாலும் ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. அது நிலத்தை விழுங்கிவிடும் என்று உணரும் ராமு எப்படியாவது நாலு ஆண்டிற்குள் கடனை அடைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறான். ராமுவின் இயலாமையை பற்றி பேசி அவனது மாமியார் குற்றம் சொல்லியபடியே இருக்கிறாள்.

இந்த நிலையில் ஒரு நாள் பெருமழை பெய்து ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. தென்னந்தோப்புப் பாதிக்கப்படுகிறது. வயலில் தண்ணீர் நிரம்புகிறது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தாங்க முடியாது என உணர்ந்த ராமு பண்ணையை முருகன் வசம் ஒப்படைத்துவிட்டுக் கடப்பாவில் கேம்ப் கிளார்க் வேலைக்கு மாதம் 25 ரூபாய் சம்பளத்திற்குப் போய்விடலாம் என்று நினைக்கிறான். இதை முருகன் ஏற்கவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்வோம் , நிச்சயம் நல்ல விளைச்சல் வரும் என்கிறான்.

ஆனால் பிடிவாதமாகத் தனது மனைவி மாமியாருடன் கடப்பா புறப்பட்டுப் போகிறான் ராமு. அங்கே மாவட்ட கலெக்டர் காடெல் துரைக்கு அவனைப் பிடித்துப் போகிறது. மூன்று ஆண்டுகள் கேம்ப் கிளார்க்காக வேலை செய்கிறான். கலெக்டரின் மனைவி அவனது அமைதியான குணத்தைப் பாராட்டுகிறாள். ஆனால் வீட்டில் அவனுக்கு நற்பெயர் கிடைக்கவில்லை.

தாங்க முடியாத உஷ்ணப்பிரதேசத்தில் எப்படி வாழுவது என்று மாமியார் கோவித்துக் கொள்கிறாள். உறவினர்களோ, தோழிகளோ இல்லாமல் எப்படி அன்றாடப்பொழுதை கழிப்பது என ஜானகி வருந்துகிறாள். கேம்ப் கேம்ப் என்று பாதி நாட்கள் வெளியூர் போய்விடுகிறான் ராமு. மற்ற ஊழியர்களைப் போல அவனுக்குப் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை என்று மாமியார் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாள்

ராமு கலெக்டரின் விருப்பத்திற்குரிய ஊழியனாக மாறுகிறான். ஆனாலும் அந்த வேலையில் நிலை கொள்ள முடியவில்லை.

250 ரூபாய் ஆண்டுக் குத்தகைக்கு நிலத்தை எடுத்துக் கொண்ட முருகன் கடினமான உழைத்து நிறையப் பணம் சம்பாதிக்கிறான். தொப்பை என்ற ஒருவனைத் துணைக்கு வைத்துக் கொள்கிறான்.

இந்நிலையில் கடப்பா வாழ்க்கையினை விட்டு விலகி அலவந்தி திரும்புகிறான் ராமு. ஊர்வந்த வேகத்தில் தனது நிலத்தை விற்பனை செய்துவிடுகிறான். இதனால் முருகன் அதிர்ச்சி அடைந்து போகிறான். முருகனுக்கே தென்னந்தோப்பினை கிரயம் பண்ணித் தருவதாகச் சொல்லி அவனிடம் உள்ள பணத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரச் சொல்கிறான் ராமு. தானும் மனைவியும் கடினமாக உழைத்து ஐந்நூறு ரூபாய் சேர்த்து அதை ஒரு கலயத்தில் போட்டுப் புதைத்து வைத்துள்ளதாக முருகன் சொல்கிறான். ராமு அந்தத் தோப்பை முருகனிடம் விற்றுவிட்டு ஊரைவிட்டுப் போகிறான்

கேதாரி சட்டம் படித்து வழக்கறிஞராகி மார்க்கண்டம் ஐயரின் ஜுனியராக பணியாற்றுகிறான். பெயரும் புகழும் உருவாகிறது. ஆனால் பதவி ஆசை கொண்டு வீழ்ச்சியடைகிறான். இந்த இருவரின் வாழ்க்கையும் என்னவாகிறது என்பதையே நாவல் விவரிக்கிறது.

எதற்காக இந்த நாவலுக்கு முருகன் ஓர் உழவன் என்று தலைப்பு வைத்தார் என்று தெரியவில்லை. கதையில் விவசாய வாழ்க்கையைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை. ஆனால் கிராம வாழ்க்கையிலிருந்து பட்டணத்திற்குக் குடியேறியவர்களின் வாழ்க்கை பாடுகளையும், சொந்த ஊர்திரும்பி விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற பொய் கனவினையும் அன்றே யதார்த்தமாக எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அந்த நிலை மாறிவிடவில்லை

ஊரின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் ராமு தனது கடந்தகாலம் தன்னைவிட்டுத் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவே உணருகிறான். அவனால் கிராமத்திலும் வாழ முடியவில்லை. பட்டணத்து வாழ்க்கையும் ஏற்றதாகயில்லை.

காடெல் துரை என்ற கடப்பா மாவட்ட கலெக்டர், அவரது மனைவி அவர்களுக்குள் நடக்கும் உரையாடல், இதன் வழியாக அந்தக் கால நிர்வாகம் மற்றும் அதிகாரத்திலிருப்பவர்களின் நடவடிக்கைகள் பற்றி வேங்கடரமணி சிறப்பாக எழுதியிருக்கிறார்.

மார்க்கண்டம் என்ற அந்த வழக்கறிஞர் அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த ஒருவரின் சாயலில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து ஊர்பெண்கள் ஜானகியைப் பற்றிப் பேசிக் கொள்ளும் காட்சியும் ஜானகிக்கும் சீதாவிற்குமான நட்பும். ஊரைவிட்டுப் போவதற்கு முன்பு ராமுவை சந்தித்துச் சீதா பேசும் உரையாடலும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. நாடகத் தமிழில் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அது அன்றைய வழக்கு

அந்தக் காலச் சென்னை வாழ்க்கையை, குறிப்பாக வக்கீல்களின் உலகை, கல்லூரி படிப்பதற்காக அறை எடுத்துத் தங்கிய மாணவர்களின் வாழ்க்கையை, அந்தக் கால மைலாப்பூர் வீதிகளை வேங்கடரமணி அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

நாவலின் முற்பகுதியிலிருந்த கதைப்போக்குப் பிற்பகுதியில் திசைமாறிப் போய்விடுகிறது.

நீண்டகாலத்தின் பின்பு கேதாரி வீட்டைத் தேடி ராமு மைலாப்பூர் போகும் காட்சி மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. கேதாரியின் மனைவி கோகிலம் அவனை அடையாளம் தெரிந்து கொள்வதும் வீட்டிற்குள் அழைத்துத் தங்கள் கஷ்டகாலத்தைச் சொல்வதும் உணர்ச்சிப்பூர்வமான பகுதி.

“சென்னையில் யாவும் டம்பமே. ஆளுக்கு ஒரு ஆசையைத் துரத்திக் கொண்டு அலைகிறார்கள். இங்கே அமைதியே கிடையாது“ என்கிறாள் கோகிலம். இந்த நிலை இன்றும் மாறவேயில்லை.

“நாம் அனுபவிக்கும் துன்பத்தில் பாதி நாம் உருவாக்கிக் கொண்டதே மனிதன் குயவன் கையில் அகப்பட்ட களிமண் போன்றவன், சகவாசமே எதையும் தீர்மானிக்கிறது“ என்கிறான் ராமு. அது போலவே வழக்கறிஞர் தொழிலில் வெற்றிபெறத் தேவையான சாதுரியமும், உணர்ச்சிவசப்படாத தன்மையும் கேதாரியிடம் இல்லை என்றும் சொல்கிறான் ராமு.

கிராம நிர்வாகம், விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள். அரசு நிர்வாகம். நீதித்துறை எனப் பல்வேறு சிந்தனைகளை வேங்கடரமணி தனது கதாபாத்திரங்களின் மூலமாக விளக்கிப் பேசுகிறார். ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் நிறையவே இருக்கின்றன. அவரது அந்தக் கால மனநிலையின் வெளிப்பாடாக அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

நாவல் முழுவதும் பிறருக்காகவே வாழுகிறான் முருகன். அவன் யாரையும் குற்றம் சொல்வதில்லை. அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கிறான். அவனது வாழ்க்கை பெருமைக்குரியது என்பதற்காக நாவலுக்கு முருகனின் பெயரைத் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்.

பொழுதுபோக்கிற்கான துப்பறியும் கதைகளும், மலிவான காதல்கதைகளும் எழுதப்பட்டு வந்த அந்தக் காலத்தில் இப்படி ஒரு யதார்த்தமான கிராமிய வாழ்க்கையை வேங்கடரமணி நாவலாக எழுதியிருப்பது முன்னோடியான இலக்கியச் செயல்பாடாகும்.

••

0Shares
0