சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும்.


 


 


 


 



நேற்றிரவு சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தைப் பார்த்தேன். சந்திரபாபுவின் நகைச்சுவை எனக்கு விருப்பமானது. அவரது பாடல்களையும் தொடர்ந்து கேட்கக் கூடியவன். சந்திரபாபுவின் குரல்  அலாதியானது.



தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை சில வருசங்களுக்கு முன்பாக ஒரு முறை தொலைக்காட்சியொன்றில் பார்த்திருக்கிறேன். பாதியில் இருந்து பார்க்கத் துவங்கிய போது யார் இதை இயக்கியது என்று வியப்பாக இருந்தது. பிறகு அது சந்திரபாபு இயக்கிய படம் என்று தெரிய வந்ததில் இருந்து படத்தை மறுமுறை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படத்தின் குறுந்தட்டு எனக்குக் கிடைத்தது.


படத்தை சந்திரபாபு இயக்கியுள்ள விதம் சிறப்பானது. ஆனால்  கதை ஆங்கிலப்படத்தின் தழுவல். அத்தோடு பத்து நிமிசத்திற்கு ஒரு முறை தேவையற்ற திருப்பம் கொண்ட திரைக்கதையமைப்பு. சாவித்திரி மற்றும் ஆர்எஸ் மனோகரின் மிதமிஞ்சிய நடிப்பு, என்று சலிப்பூட்டும் பல விஷயங்கள் இருந்த போதும் காட்சிகளை சந்திரபாபு எடுத்துள்ள விதம் அபாரமானது.



குறிப்பாக படத்தின் துவக்கக் காட்சியில் வரும் தேவாலயமும் அதன் உள்ளே மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பாதிரியாரும்.மணியோசையும் ருஷ்ய திரைப்படங்களில் கையாளப்படும் கோணங்களை போன்ற நெருக்கம் கொள்பவை. பாதிரியாராக வரும் ரங்காராவ்வின் உடைகள் மற்றும் அவரது அடங்கிய குரலில் ஆன நடிப்பு யாவும் அவரை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சந்திரபாபுவிற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 


அது போலவே சந்திரபாபுவின் அறிமுக காட்சியும் நன்றாக படமாக்கபட்டிருக்கிறது. எலிக்குஞ்சுகளும் புறாக்களும் போர்வையில் மீது அமர்ந்திருக்க துசி படிந்த அறையில் படுக்கையில் கிடக்கும் சந்திரபாபு எலிக்குஞ்சுகளை விலக்கியபடியே  எழுந்து கொண்டு சிரிக்கிறார். எலிக்குஞ்சு அவரது உடையில் ஊர்ந்து கொண்டிருக்கிறது.


அந்த காட்சியின் துவக்கத்தில் அவரது வீட்டின் பின்புலச் சுவரில் அவரது அப்பாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதை கேமிரா விலக்கி கடந்து செல்கிறது.


அதன்பிறகு சந்திரபாபு எழுந்து அப்பாவை வணங்கும் போது தான் அங்கே தொங்கிக் கொண்டிருந்தது அவரது அப்பாவின் புகைப்படம் என்பது புலப்படுத்தபடுகிறது. இது போலவே சந்திரபாபு குடியிருக்கும் அந்த இடம். அதன் பாதி இருளும் சரியும் ஒளியும் கலந்த படிக்கட்டுகள். அதில் அவர் ஏறி இறங்குவதும் சாவித்திரி அவரை  தேடிவருவதும் அங்கே எப்போதுமே பாதி வெளிச்சம் மட்டுமே இருப்பதும் நன்றாக திட்டமிடப்பட்டு கதாபாத்திரத்தின் மன அமைப்பிற்கு பக்கத்தில்  நெருக்கம் தருகிறது.


படத்தின் கதை நிகழும் களம் பிரதானமாக ஒரு மதுவிடுதி.  அதை  நடத்தி வரும் மனோகரும் கே. ஆர் விஜயாவும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்கிறார்கள். மனோகர் திருமணமானவர் என்பது விஜயாவிற்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர் மீதுள்ள காதலால் வீட்டை விட்டு வந்து அவரோடு சேர்ந்து வாழ்கிறார். அவர்கள் இருவரும் காதலர்களாகவே இருக்கிறார்கள். ஒன்றாக நடனமாடுகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.


கடன் தொல்லை காரணமாக பிரச்சனைக்கு உள்ளாகும் மனோகர் அதை எப்படி சந்திப்பது என்று தெரியாமல் கே.ஆர் விஜயாவிடம் பணம் கேட்கும் காட்சி சிறப்பானது. தன்னுடைய பணம் முழுவதும் அவருக்கு தான் ஆனால் இப்போது தரமாட்டேன் என்று அவள் சொல்லும் காரணமும் அதில் வெளிப்படும் அவளது உள்ளார்ந்த விலகலோடு கூடிய அன்பு ஆச்சரியமளிக்க கூடியது.


படத்தை தொடர்ந்து பின்னுக்கு இழுக்க கூடிய முக்கிய கதாபாத்திரம் சாவித்திரி. தன்னைப்பிரிந்து வந்த கணவனை தேடி அலைந்து சந்திரபாபுவிடம் குழந்தையோடு அடைக்கலம் ஆகிறார். தன்னை போலவே அந்தக் குழந்தையும் அப்பாவின் அன்பிற்காக ஏங்க கூடியது என்பதால் குழந்தையிடம் அதிக நெருக்கம் கொள்கிறார் சந்திரபாபு.


திடீரென கே.ஆர்.விஜயா கொலை செய்யபடுவதில் துவங்கி படம் திசைமாறிப்போகிறது. தன் பெயரில் செய்துள்ள காப்பீட்டு பணத்தைக் கைப்பற்ற மனோகர் போடும் திட்டம் என்று இன்னொரு கதை படத்தில் சொருகப்பட்டு எங்கெங்கோ சுற்றியலைந்து தன் மகளால் சுடப்பட்டு மனோகர் இறந்து போவதில் படம் முடிகிறது.


இந்தப் படத்தை இயக்கிய நாட்களில் இருந்த சந்திரபாபுவின் மனக்குழப்பம் படத்தில் முற்றிலும் பிரதிபலிக்கபடுகிறது. குறிப்பாக தவறு செய்த கணவனை பெண்கள் ஏன் எந்தக் கோபமும் இன்றி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான பத்து நிமிசத்திற்கு வாதபிரதிவாதங்களை பேச செய்துள்ள காட்சியை சொல்லலாம். சந்திரபாபுவின் சொந்தவாழ்வில் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை அவரை ரணப்படுத்தியிருந்தது.


கதை திரைக்கதை நடனம் இயக்கம் என்று நடனத்தை ஒரு இயக்குனரே கையாண்டதில் சந்திரபாபு தான் முதல் ஆள் என்று நினைக்கிறேன். அவர் நடனமாடுவதற்காகவே சிறப்பாக ஒரு காட்சி படத்தில் இணைக்கபட்டிருக்கிறது. தனது கதாபாத்திரத்தின் இயல்பு பற்றிய கவலைகளை தூர எறிந்துவிட்டு அவர் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார். பாடல் இல்லாத தனியிசையும் அதற்கு சந்திரபாபு நடனம் ஆடுவதும் அந்த காட்சி நான்கு நிமிசம் நேரம் ஒடுகிறது.


இப்படத்தில் பாடல்களை படமாக்குவதில் சந்திரபாபு அக்கறையே கொள்ளவில்லை என்பதற்கு மற்ற பாடல்கள் சாட்சி. ஆனால் படத்தில் ஊமையாக வரும் சந்திரபாபு குழந்தைக்காக ஆடிப்பாடும் போது கண்மணி பப்பா என்று தன் குரலில் பாடத்துவங்குகிறார். அதுவரை அந்த குரலை கேட்காத பார்வையாளன் பாடலின் வழியே கொள்ளும் உற்சாகம் மிகப்பெரியது.


சந்திரபாபு வெளிப்படுத்தபட முடியாத துயரத்தில் ஆழ்ந்துகிடந்தவர் என்பதற்கு அவரது பல திரைப்பாடல்கள் சாட்சி. இவரை போல வேறு எந்த நகைச்சுவை நடிகரும் இத்தனை ஆழமாக வாழ்வின் அபத்தம் மற்றும் முரண்கள், வலிகளை பாடியிருக்கவில்லை. அந்தப் பாடல்கள் வழியே அவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதற்கு மேலாக அவரிடம் ஒரு துறவுத்தன்மை இருந்ததே வெளிப்பட்டது.


தோற்றுப்போன ஒரு கலைஞனின் விம்மல் குரல் தான் பல இடங்களில் சந்திரபாபுவிடம் வெளிப்படுகிறது. வாழ்க்கையை அவர் எதிர் கொண்ட விதமும் அதன் உச்சத்திற்கு சென்று தன் விருப்பத்தின் படியே சரிந்து விழுந்ததும் மிதமிஞ்சிய குடி போதை என்று தன்னை அழித்துக் கொண்டு 48 வயதிற்குள் இறந்து போனதும் ஒரு எரிநட்சத்திரம் மிக தனித்து ப்ரகாசித்து மறைந்து விட்டதையே நினைவுபடுத்துகிறது.


தட்டுங்கள் திறக்கபடும் படத்தில் இரண்டுகாட்சிகளில் மட்டுமே எம்.ஆர்.ராதா நடித்துள்ள போதும் அந்த காட்சிகளில் அவர் தேவாலயத்திற்கு அவசரமாக பாவமன்னிப்பு கேட்க வருவதும். கார் தர மறுத்ததால் தன்னை எங்கே பாதிரியார் கடவுளை நெருங்க விடமாட்டாரோ என்று பகடி செய்வதும் வாய்விட்டு சிரிக்ககூடியது.


டெய்சிராணி என்ற சிறுமி  தனது முந்தைய படங்களை போல துளியும் சிறுமியின் தன்மைகள் இல்லாத சிறுமியாக நடித்திருக்கிறார். அநேகமாக சிறுவர்களை நடிப்பை பிழிய வைத்து கண்ணீர் சிந்திய நாட்கள் அவை. நான் பார்த்தவரையில் துடுக்குதனம் என்ற பெயரில் சினிமாவில் சிறுமிகள் மிக அபத்தமாக பயிற்றுவிக்கபட்டதன் முதல் ஆள் டெய்சி ராணி என்று சொல்லலாம். கிளியை பழக்கி பேச வைப்பதை போல இந்த சிறுமியை பல கறுப்பு வெள்ளை படங்களில் ஆட்டு வித்திருக்கிறார்கள்.


படத்தின் இடைவேளையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் மாடிவீட்டு ஏழை என்ற படம் பற்றிய அறிவிப்பு வருகிறது. அதுவும் எம்.ஜி.ஆர் தன் ரசிகர்களுக்கு சொல்வது போன்ற விளம்பர வாசகங்களுடன். அந்தப் படம் தான் சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு பெரிய காரணமாக இருந்தது என்கிறார்கள் திரைவிமர்சகர்கள். சந்திரபாபுவிற்குள் தொடர்ந்து படங்களை இயக்கும் எண்ணமிருந்திருக்கிறது. ஆனால் தட்டுங்கள் திறக்கப்படும் தந்த தோல்வி மற்றும் அடுத்த படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட மிதமிஞ்சிய பொருள் இழப்பு அவரை முடக்கிவிட்டிருக்கிறது


சந்திரபாபு தன்னோடு நடித்த யாவரையும் பெயர் சொல்லியே அழைக்க கூடியவர். அதில் எம்.ஜி.ஆர். சிவாஜி என்ற பேதமில்லை. தன்னை ஒரு காலத்தில் அலையவிட்டவர்கள் தற்போது தன்னை தேடி வரும் போது அவர்கள் உணரும்படியாக அவமதிப்பார், பொய்யான பாவனைகள் அற்றவர், அதுவே அவரது வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று அவரைப்பற்றிய நிறைய தகவல்கள் உலவுகின்றன. அதில் எது நிஜம் எது பொய் என்று பிரித்து அறிய முடியவில்லை.


தட்டுங்கள் திறக்கபடும் சந்திரபாபுவிற்குள் இருந்த தேடலின் ஒரு பகுதி. இதன் தோல்விக்கான முக்கிய காரணம் தயாரிப்பாளர்களின் மிதமிஞ்சிய தலையீடு என்று சந்திரபாபு கூறியிருக்கிறார். இப்போது பார்க்கும்போது படத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாக எனக்கு தோன்றுவது சந்திரபாபு என்றாலே பாடி ஆடி சந்தோஷப்படுத்த கூடியவர் என்ற அவரது பிம்பம் இந்த படத்தில் முற்றிலும் சிதறடிக்கபட்டிருக்கிறது என்பதே.


படத்தில் அவர் ஊமை, கொலை வழக்கில் சிறை சென்று விடுகிறார். அவர் மீது கதையின் மையம் குவியவில்லை. அத்தோடு கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார். பார்வையாளர்கள் சந்திரபாபுவின் பிம்பம் தங்கள் கண்முன்னே உருமாற்றம் கொண்டு பரிதாபமான சித்திரமாவதை ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இது சாப்ளினுக்கும் நடந்தது.


பல படங்களில் சாப்ளின் தனது நாடோடி வேஷத்தின் வழியாக புகழ்பெற்றதால் அதை தாண்டி அவர் தன்னை வயதான ஒரு மனிதனாக எவ்விதமான சேஷ்டைகளும் இல்லாத ஒரு கதாபாத்திரமாக நடித்த அவரது கடைசி படங்கள் ஒடவேயில்லை. மக்கள் சாப்ளினிடம் சாப்ளினிசத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.


கிறிஸ்துவ மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் சந்திரபாபு. அவரது படத்தின் தலைப்பு கூட பைபிளில் இருந்தே எடுக்கபட்டிருக்கிறது. படமும் தேவாலயத்தில் துவங்கி தேவாலயத்திலே முடிவடைகிறது. ஒருவகையில் தன்னை வருத்திக் கொள்வதன் வழியே மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க முடியும் என்பதே பைபிள் காட்டும் நெறிதானே.


நடிகர்கள் திரைப்படங்களை இயக்குவது அதிசயக்ககூடிய ஒன்றில்லை. ஆனால் சந்திரபாபு படத்தை இயக்கிய போது தன்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்துக் கொள்ளவில்லை. அத்தோடு தனக்கு முன்பு இருந்த பிம்பத்தை அழித்து தன்னை ஒரு பரிதாபமான மனிதனாக காட்டிக் கொள்ளும் முயற்சியே முன்னின்று இருக்கிறது. இந்த முடிவு மிக முக்கியமானது.


தன் பிம்பத்தை பெருக்கி கொள்வதற்காக அவர் சினிமாவை பயன்படுத்தவில்லை . மாறாக தனது அக அடையாளத்தை எப்படியாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்று தெரிந்தே இந்த சவாலை செய்து காட்டியிருக்கிறார். வெற்றி தோல்வியை தாண்டி சந்திரபாபு என்ற கலைஞனின் இன்னொரு பக்கத்தை காட்டுகிறது தட்டுங்கள் திறக்கபடும். அந்த வகையில் இது பார்க்கபட வேண்டிய படமே.


**
தட்டுங்கள் திறக்கபடும் பார்த்த நெடுநேரத்திற்கு சந்திரபாபுவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். இரவின் பின்பொழுதில் என் அறையில் உள்ள ம்யுசிக்பிளேயரில் ஒண்ணுமே புரியலை உலகத்திலே என்ற சந்திரபாபுவின் குரல் தனித்து ஒலித்துக் கொண்டிருந்தது. அதை சந்திரபாபு, காமெடியன் என்ற பிம்பங்களை மறந்துவிட்டு கேட்கும் போது பெருமூச்சும் வலியும் வேதனையும் கொண்ட ஒருவனின் ஆழ்ந்த வெளிப்பாடாகவே இருக்கிறது.


 
தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு. அதிலும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாக பாடக்கூடியவர்கள் வேறுஎவருமில்லை.


சந்திரபாபுவின் துள்ளலான பாடல்கள் அளவிற்கு சோகமான பாடல்களும் மனதிற்கு நெருக்கமாகவே இருக்கின்றன. பிறக்கும் போதும் அழுகின்றான், புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றிகாண்பதில்லை, நான் ஒரு முட்டாளுங்க, கண்மணி பப்பா, உனக்காக எல்லாம் உனக்காக , குங்குமபூவே கொஞ்சும் புறாவே என்று அவரது பாடல்கள் ஒவ்வொன்றாக நினைவில் ததும்ப துவங்குகின்றன


சந்திரபாபு தன்னை தவிர்த்தும் சிவாஜி, எஸ் பாலச்சந்தர் போன்றவர்களுக்கும் ஒரு படத்தில் குரல் கொடுத்திருக்கிறார்.


தமிழ் நகைச்சுவை நடிகர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தவர் எம்.ஆர்.ராதா. திரையில் ராதாவின் தோற்றமும் அவர் குரலை ஏற்றி இறக்கி கொள்ளும் பாவமும் சட்டென உணர்ச்சியை மாற்றும் பாங்கும் அலாதியானது.


சந்திரபாபு சாப்ளின் வகையைச் சேர்ந்தவர். எந்த படத்தில் என்ன வேஷமிட்டு நடித்தாலும் அவர் சாப்ளின் என்ற பிம்பத்திலிருந்து நாம் விலக முடியாது. அதே தன்மை தான் சந்திரபாபுவிற்கும். சாப்ளின் வாழ்விற்கும் சந்திரபாபுவிற்கும் கூட பல பொதுத் தன்மைகள் இருக்கின்றன. இருவரும் கசப்பான பால்ய காலத்தைக் கொண்டவர்கள்.


வறுமையில் போராடி தனது கலைத்திறனை வெளிப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டவர்கள். தங்களுக்கான அடையாளம் உருவான பிறகு அதில் தங்களை எந்த அளவு முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று அதிக பிரயாசை கொண்டவர்கள். இருவருக்குள்ளும் வெளிப்படுத்தபடாத துக்கமும் அகநெருக்கடியும் இருந்தது. அவர்களின் சிரிப்பின் பின்னே ஆழமான வலி நிரம்பியிருந்தது.



திரையில் கண்ட சந்திரபாபுவின் மறுபக்ககத்தை ஜெயகாந்தன் அவரது ஒரு இலக்கியவாதியின் திரையுலக அனுபவங்கள் என்ற புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். மேற்கத்திய இசை. ராக் அண்ட் ரோல் நடனம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று தன்னை எப்போதும் ஒரு ஹாலிவுட் நடிகர் போல வெளிப்படுத்திக் கொண்ட சந்திரபாபு, ஜெயகாந்தன்  அவருக்காக எழுதிக் கொடுத்த திரைக்கதையை தனக்கு வாசிக்க தெரியாது என்று திருப்பிக் கொடுத்த சம்பவமும், இருவருக்குள்ளும் ஏற்பட்ட பொதுவான ரசனைகள் மற்றும் ஒருவரையொருவர் நடத்திய விதமும் சந்திரபாபுவின் மீது கூடுதல் அக்கறை கொள்ளச் செய்தது.


சந்திரபாபு தூத்துக்குடியை சேர்ந்தவர். அவரது அப்பா ஜோசப் ரோட்ரிச். அவரது வீட்டில் 13 பிள்ளைகள்.  இதில் ஒருவராக வறுமையான சூழலில் தன் பால்யத்தை கழித்தவர் சந்திரபாபு. அப்பா வேலைக்காக இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். அதனால் சந்திரபாபுவின் பள்ளிவயது முழுவதும் இலங்கையில் கழிந்தது. பிரிட்டீஷ் பத்திரிக்கை ஒன்றில் சந்திரபாபுவின் அப்பா பத்திரிக்கையாளராக பணியாற்றினார். இலங்கையில் படித்த காரணத்தால் சந்திரபாபுவிற்கு சிங்களம் நன்றாக பேச தெரிந்திருந்தது. அவர் சிங்கள பாடல்களை கூட பாடியிருக்கிறார்.


இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பி சென்னைக்கு அவரது குடும்பம் வந்த போது பள்ளிபடிப்பை முடித்துவிட்டு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இசை நடனம் என்று அலைய துவங்கினார் சந்திரபாபு. அப்போது அவர்களது குடும்பம் திருவல்லிகேணியில் இருந்தது. அதனால் கடற்கரை தான் அவரது உலகம்.
சந்திரபாபு சில படங்களில் பேசும் மெட்ராஷ்பாஷை மிக அற்புதமான இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அவர் தனது பதின்வயதில் கடற்கரையை சுற்றியுள்ள மீனவ மக்களோடும் அடித்தட்டு மக்களோடு சுற்றியலைந்து நட்பு கொண்டதே.


சாந்தோம் கடற்கரையில் வேதாசலம் தபேலா ராமு என்ற இரண்டு இளைஞர்கள் தினமும் தங்களது இசை திறனை வெளிப்படுத்திக் கொள்ள பயிற்சிக்காக வருவார்கள். அவர்களோடு சேர்ந்து இசைக்கு ஏற்ப ஆடத்துவங்கினார் சந்திரபாபு. அந்த வேதாசலம் தான் பின்னாளில் மார்டன் தியேட்டர்ஸ் படங்களின் வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கிய வேதா.


சந்திரபாவுவிற்கு இசை, சிற்பம், ஒவியம், நாடகம், எழுத்து நடிப்பு என்று எல்லாவற்றின் மீதும் விருப்பமிருந்திருக்கிறது. பிள்ளையார் உருவத்தை மிக நவீன ஒவியங்களாக தொடர்ந்து  வரைந்து வரும் ஒவியர் கோபாலோடு நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கிறார். கோபாலை ஒரு முறை அவரது இல்லத்தில் சந்தித்தபோது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சந்திரபாபு பற்றிய தன் நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


மேற்கத்திய நடனவகுப்பிற்கு சென்று நடனம் கற்றிருக்கிறார். அந்த நாட்களில் ஆங்கிலம் பேசுவதற்காக சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்த போது ஆங்கிலம் கற்றுதந்த கல்லூரி மாணவியை காதலித்திருக்கிறார். சந்திரபாபுவிற்குள் இருந்த தேடுதல் பன்முகப்பட்டது.


மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையாவோடு ஏற்பட்ட சந்திப்பின் காரணமாக ராமையா தான் இயக்கிய படத்தில் சந்திரபாபுவிற்கு ஒரு வேஷம் தந்திருக்கிறார். ஜெமினி ஸ்டுடியோ படங்களில் வாய்ப்பு கேட்க வேண்டும் என்பதற்காக  துத்தநாகத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். இப்படி சந்திரபாபுவின் வாழ்க்கை சாகசங்களின் தொடர்ச்சியாகவே இருந்திருக்கிறது.


ஜெர்ரி லூயிசை காப்பியடித்தவர் சந்திரபாபு என்ற குற்றசாட்டு அவரை நோக்கி எப்போதுமே முன்வைக்கபடுகிறது. ஒரு வேளை அது உந்துதலாக இருந்திருக்கலாம் ஆனால் சந்திரபாபுவிற்கு எப்போதுமே உந்துதலாக இருந்தது அவர் நிஜ வாழ்வில் சந்தித்த அன்றாட மனிதர்கள். பால்யத்தில் பிரிட்டீஷ் அதிகாரிகளின் வீடுகளில் கேட்ட மேற்கத்திய சங்கீதம், விருந்துகள், அங்கு நடைபெற்ற நடனங்கள், இவையே.


அவரது உடல் அமைப்பிலே நடனமாடுபவர்களுக்கான ஒரு நெகிழ்வுதன்மை அமைந்திருந்திருக்கிறது. குறிப்பாக ஒரு படத்தில் சந்திரபாபு பெண் வேஷமிட்டு வரும் காட்சியில் அவரது நடை கையசைவுகள் மாறுவதை காணும் போது உணரலாம். அது போலவே அவர் தன்னை எப்போதுமே வேடிக்கை செய்யும் முட்டாள் என்ற பிம்பத்திற்குள்ளாகவே வைத்திருந்தார்.


காதல்காட்சிகளில் கூட சந்திரபாபு தன்னை காதலிக்கும் பெண்ணை   கட்டிபிடித்து நடனம் ஆடவே பெரிதும் விரும்புகிறார். அது சாப்ளின் தன்மை. சாப்ளின் பெண்ணோடு நடனமாடுவதற்கும் கைகோர்த்துக்கொள்வதற்குமே தன் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவார்.


அவரது படங்களில் பெண்களே அவர் மார்பில் சாய்ந்து தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொள்வார்கள்.  கண்ணீர் சிந்துவார்கள். அப்போதும் கூட சாப்ளின் அந்த வருத்தங்களை விலக்கி அந்த பெண்ணை எப்படி முத்தமிடுவது என்று யோசனை செய்தபடியே திண்டாடிக் கொண்டிருப்பார். இந்த பரிகாசமும் விலகலும் சந்திரபாபுவிடமிருந்தது.


சந்திரபாபு  சம்பிரதாயமான தமிழ் கலச்சார ஒழுங்களுக்குள் கட்டுபடாத வெளியாள் என்றே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேற்கத்திய இசை, நடனம், காதலின் சுதந்திரம், பெண்களை நடத்த வேண்டிய விதம் என்று அவரது முக்கிய  கருத்துக்கள் யாவும் பொதுஒழுங்கை ஒத்துக் கொள்ள விருப்பமற்ற ஒரு கலைஞனின் எழுச்சியே .


**


கண்ணிலே கண்டதும் கனவாய் தோன்றுது
காதிலே கேட்டதும் கதை போலானது
என்னானு தெரியலை. சொன்னாலும் விளங்கலை
என்னைப் போல ஏமாளி எவனும் இல்லை.
ஒண்ணுமே புரியலை. உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்கு..


**


பாடல் கரைந்து கொண்டிருந்தது இரவில். சந்திரபாபுவின் நினைவுகள் உலகின் விளங்கமுடியாத மர்மத்தில் ஒரு தாமரை போல தனியே பூத்து கொண்டிருந்தது.


***


 

0Shares
0