உதறிச் செல்லும் அடையாளம்


தீவிர சினிமாவின் இன்றைய இலக்கு வாழ்வைக் காண் நிலையில் அப்படியே பிரதி பலிப்பது மட்டுமல்ல. மாறாக வாழ்வின் முக்கியப் பிரச்சனை யாகக்  கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும், அதன் அக மற்றும்புறத்தளங்களில் ஏற்படும் சலனங்களைஅவதானித்து வெளிப்படுத்துவதுமேயாகும் .


சமகால உலக சினிமாவில் பெரும்பான்மை குடும்பம் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனைகளையே மையப் பொருளாக  கொண்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தை  உருவாக்குவதிலும் கட்டிக் காப்பதிலும் ஆண் பெண் இருவரும் என்ன பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமான பால் இச்சைகளின் வெளிப்பாடு எப்படி உள்ளது. குடும்பம் சிதைவுறுதற்கான காரணிகள் என்ன? பிளவுண்ட குடும்பங்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்ற பாதிப்புகள் எத்தகையது என்பதை பற்றியதுமேயாகும்


பரபரப்பான பெருநகர வாழ்வில் குடும்பம் இது நாள் வரை தன் அஸ்திவாரமாக நினைத்து கொண்டிருந்த மதிப்பீடுகளையும் அனுசரணை களையும் இழந்து ஆண் பெண் இருவரும் தங்கள் விருப்பங்கள் சார்ந்தும் சுய மதிப்பீடுகள் சார்ந்தும் வாழ்வதற்கான கூட்டுவெளியாக மட்டுமே உள்ளது.
குடும்ப அமைப்பு உருவாக்கும் வன்முறை காரணமாக ஆண் பெண் இருவரும் எப்படி வேறுவேறு அளவுகளில் மனச்சிதைவை சந்திக்கிறார்கள். பிறழ்வு நிலைகள் எப்படி உருவாகின்றன என்பதையும் மிக கவனமாக ஆராய்கிறது நவீன சினிமா


பெட்ரோ அல்மதோவாரின் திரைப்படங்களும் இது போன்ற வகைப்பாட்டினை சார்ந்ததேயாகும். பெட்ரோ அல்மதோவர் (Pedro Almodovar)  சமகால ஸ்பானிய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். பத்திற்கும் அதிகமான படங்களைத் தயாரித் திருக்கிறார். சிறந்த அயல் மொழிப் படத்திற்கான ஆஸ்கார் விருது. பிரான்ஸ் தேசத்தின் கலைக்கான உயரிய விருது. ஐரோப்பிய திரைப்பட விழா விருது, கான்ஸ் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.


இவரது திரைப்படங்கள் ஸ்பானியக் குடும்ப வாழ்வின் இன்றைய இருப்பு மற்றும் அதன் சிதைவு இரண்டையும் பற்றிய மிக நுட்பமான ஆய்வாகவே உள்ளது.


பெட்ரோ அல்மதோவரின் முக்கியப் பிரச்சனைகள் அவர் திரைப்படங்களில் நான்கு காரணிகள் வெளிப்படுகின்றன. 1) குழந்தை பருவத்தில் ஏற்படும் உளப்பாதிப்புகள். குறிப்பாக பாலியல் சார்ந்து பள்ளிவயதில் அடையும் திகைப்பு மற்றும் பயம். அதன் தொடர்ந்த விளைவுகள் 2) கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எப்படி வாழ்வைச் சந்திக்கிறார்கள். அவர்களை எது ஆறுதல் படுத்துகிறது. குடும்பம் என்ற அமைப்பு எதனால் சிதைந்து போகின்றது என்பது


3) பால் உணர்ச்சிகள் சார்ந்து ஆணும் பெண்ணும் எது போன்ற அகச்சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள். எப்படி தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் தொடர் விளைவுகள் எது போன்ற மனசசிதைவுகளை உருவாக்குகின்றது. 4) மதம் வெறும் நிறுவனமாகி விட்ட சூழலில் கடவுளையும் மதம் சார்ந்து சிறுவயதிலிருந்து கட்டி அமைக்கப்பட்டக் மனக்கூறுகளையும் இப்போது எப்படி கடந்து அல்லது விலகி போவது. கடவுள் இல்லாத உலகில் எது கடவுளின் இடத்தை பூர்த்தி செய்யப்போகின்றது என்பதே. இந்த காரணிகளை அல்மதோவரின் எல்லாப் படங்களிலும் காணமுடியும்.


இந்த பிரச்சனைகளை பெட்ரோ அல்மதோவர் விவாதம் செய்யவில்லை. மாறாக இவற்றை தனது திரைப்படங்களின் அடிநாதமாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்படியாக கதையைத் தேர்வு செய்கிறார். நிகழ்ச்சிகளை உருவாக்குகிறார்கள். கதையின் பிரதான குரலாக இந்த பிரச்சனைகளில் ஒன்று வெளிப்படும் விதமாக கவனித்துக் கொள்கிறார்.


ஆகவே அவரது ஒவ்வொரு திரைப்படமும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி சர்சைக்கு உள்ளாகின்றது. பல நேரங்களில் அவரை ஒரு போர்னோகிராபி இயக்குனர் என்று  புறம் ஒதுக்குவது கூட நடந்திருக்கிறது.  ஆனால் அல்மதோவரின் திரைப்படங்கள் குடும்ப அமைப்பையும் சமகால கலாச்சார சமூக சூழ்நிலைகளையும் மிக நுட்பமாக ஆராய்கின்றது, வாழ்வின் இருள்பகுதிகளையும் அவமானத்துக்கு உரியதாக கருதப்படும் மறைவு வெளிகளையும் எவ்விதமான தயக்கமும் இன்றி வெளிப்படுத்துகின்றது என்பதே உண்மை


பெர்க்மனை போல அல்மதோவரின் பெரும்பான்மை படங்கள் பெண்களை மையமாகக் கொண்டது.  பெண்களின் வழியாக மட்டுமே நான் வாழ்வை  புரிந்து கொள்கிறேன் என்று அவரே ஒரு விமர்சனத்தின் போது கூறியிருக்கிறார். இன்னொரு விதத்தில் அவரது சினிமா ஸ்பானிய கலாச்சாரத்தின் முக்கிய குறியீடுகளாக கருதப்படும் காளை சண்டை,டாங்கோ இசை மற்றும் நடனங்கள் , அதிகார அரசியல், மிக பிரம்மாண்டமான திருச்சபைகள், வழிபாடுகள். விழாக்கள். காதலை முன்னிறுத்தும் பாடும் இசைப்பாடல்கள்  என்று ஸ்பானியர்களுக்கு மட்டுமே உரித்தான தனித்துவங்களையும் வெளிப்படுத்துகிறது.


பெட்ரோ அல்மதோவரின் பிரசித்தி பெற்ற படமான Talk to Her  ஒரு நடன நிகழ்ச்சியிலிருந்து துவங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்ற நடனக்கலைஞரான பினா போஷின் நடன நிகழ்ச்சி ஒன்று ஆரம்பமாகிறது. துக்கத்தில் நடப்பவர்கள் போன்று இரண்டு பெண்கள் மேடையில் தோன்றி தங்களது துயரம் தோய்ந்த முகத்தோடு  தங்களது வலியை. மனத்துயரை நடனமாக ஆடத்துவங்குகிறார்கள்.


பார்வையாளர்கள் வரிசையில் பெனிகோ என்ற ஆண் செவிலியும் மார்கோ என்ற எழுத்தாளரும் அருகருகில் அமர்ந்து நடனத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.  இருவரும் முப்பது வயதை கடந்தவர்கள். ஒருவருக்கொருவர் முன் பரிச்சயம் இல்லாதவர்கள் மேடையில் துயரத்தை வெளிப்படுத்தும் நடனக்காரிகளின் அசைவுகளால்  தன்னை அறியாமல் அழுகிறார் மார்கோ. அதை கவனிக்கிறான் பெனிகோ. ஏன் இப்படி ஒரு ஆள் நடனத்தை பார்த்து அழுகிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லை.


ஆனால் அவனும் அந்த நடனம் உருவாக்கிய பாதிப்பில் அழுதுவிடும் மனநிலையில் தான் இருக்கிறான். பொது இடத்தில் அழுவது அவமானமாகி விடும் என்று அடங்கி கொண்டிருக்கிறான். இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்வில் என்ன நடந்தது. எது இவர்களை இப்படி ஒரு நடன நிகழ்ச்சியை பார்த்து அழச் செய்தது. ஏன் இந்த இரண்டு ஆண்களும் இவ்வளவு துயரத்தோடு வாழ்கிறார்கள் என்பதை முன்பின்னாக நகர்ந்து சொல்கிறது பெட்ரோ அல்மதோவரின் Talk to Her  திரைப்படம். கடந்த பத்தாண்டுகளில் வெளியான சிறந்த படங்களை தர வரிசைப் படுத்திய  அமெரிக்க சினிமா இதழ்  ஒன்றின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது அல்மதோவரின் இப்படம்


இவரது திரைப்படங்கள் காலம் மற்றும் வெளியின் குறுக்கு வெட்டு பாதைகளில் ஊடாடக்கூடியது. பெட்ரோ கதையை துண்டுதுண்டுகளாக மாற்றிக் கொண்டு ஒரு புதிர் விளையாட்டில் சிறு சிறுபகுதிகளை ஒன்று சேர்ந்து மொத்த உருவத்தை நாம் உருவாக்கி கொள்வது போன்ற புதிர் தன்மையை திரைப்படத்தில் ஏற்படுத்துகிறார்.


நான் பார்த்தவரையில் சமகாலத்தின் முக்கிய காதல்படங்களில் ஒன்றாக இத்திரைப்படத்தினை குறிப்பிடுவேன். காதல் திரைப்படங்கள் என்றாலே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி காதல் வசப்படுகிறார்கள். அதில் என்ன பிரச்சனைகள் நேர்கின்றன. அதை எப்படி எதிர் கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பதே மையமாக இருக்கும். ஆனால் Talk to Her  அந்த வகையை சார்ந்த படமல்ல. ஒரு ஆணிற்கு பெண் மீதுள்ள ஆழமான நேசம் பற்றியது


பெனிகோவின் காதலி கோமா நிலையில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். பெனிகோ ஒரு செவிலி  என்பதால் அவளை துடைத்து சுத்தம் செய்து படுக்க வைத்துவைக்கிறான். அத்தோடு தனது வாழ்வில் அன்றாடம் நடக்கும் சிறுசிறு விஷயங்களை கூட அவளிடம் பகிர்ந்து கொள்கிறான்.கோமாவில் மயங்கி கிடக்கும் அவளிடம் சலனமேயில்லை. ஆனால் தான் சொல்வது யாவையும் அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறான் பெனிகோ.


சினிமாவின் பலமே உரையாடல் தான் என்று நம்பும் சமகால திரைப்படங்களுக்கு மத்தியில் உரையாடல்களே அதிகம் இல்லாமல் தனக்கு தானே பேசிக் கொள்வதை போல தனிமொழியாகவே அமைக்கபட்டுள்ளது இப்படம். ஆனால் பார்வையாளன் வழக்கமான உரையாடல்களில் அடைய முடியாத மனநெருக்கத்தை இந்த தனிமொழியின் வழியே அடைகிறான் என்பது தான் இதன் சிறப்பு.


பெனிகோ தான் பினா போஷின் நடனநிகழ்ச்சிக்கு சென்று வந்ததை பற்றியும் அங்கே மேடையில் எது போன்ற நடனம் நடைபெற்றது என்பதையும் கோமாவில் இருக்கும் தனது காதலிக்கு விவரிக்கிறான். பிறகு அவளுக்காக தான் பினா போஷிடமிருந்து ஆட்டோகிராப் வாங்கி வந்த போஸ்டரை காட்டுகிறான். காதலியின்  முகம் மெழுகு போன்று போன்று அசைவற்றிருக்கிறது. அவள் உடலைச் சுத்தப்படுத்தும் போது அவளுக்கு மாதவிடாய் கசிந்து கொண்டிருக்கிறது என்று அந்த ரத்தத்தை கூட பெனிகோ துடைத்துச் சுத்தம் செய்கிறான். இந்த ஒரு சம்பவம் தான் அவள் கோமாவி லிருந்தாலும் கூட உடல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


இந்த மருத்துவமனையில் எதிர்பாரமல் ஒரு நாள் மார்கோவைச் சந்திக்கிறான் பெனிகோ. மார்கோவும்  அவனைப் போலவே கோமாவில் உள்ள தனது காதலி ஒருத்தியைக் காண வந்திருப்பதைத் தெரிந்து கொள்கிறான்


மார்கோவின் காதலி ஒரு காளை சண்டை வீராங்கனை. சிறு வயதிலிருந்தே அவளைக் காளை சண்டைக்கு தயார் செய்கிறார் அவளது அப்பா. அவளும் முக்கிய காளை சண்டை வீராங்கனையாக உருவாகிறாள். ஒரு பத்திரிக்கையில் அவளைப் பற்றிய கட்டுரை எழுதுவற்காக சந்திக்கச் செல்கிறான் மார்கோ. இந்த சந்திப்பின் ஊடாகவே அவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் உண்டாகிவிடுகிறது.


ஒரு காளைச்சண்டையின் போது மார்கோவின் கண் எதிரிலே அவளை காளை துக்கி எறிந்து கொம்பால் குத்தி உடலை கிழிக்கிறது. அவசர சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அதுவரை அவளது பணம் மற்றும் புகழுக்காக அவளைச் சுற்றியிருந்த யாவரும் அவளை மருத்துவமனையில் தனியே விட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.


மார்கோ இப்போது தான் அவளை மிக அதிகமாக நேசிக்கத் துவங்குகிறான். இந்த நேசம் அவனை மருத்துவமனையிலே அவள் அருகிலே இருக்கச் செய்கிறது. அவனும் பெனிகோவைப் போல கோமாவில் இருந்த போதும் தன் காதலியோடு தான் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறான். தனிமையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத துக்கமும், ஏக்கமும், கனவுகளும் , என்றாவது நிறைவேறிவிடும் என நினைக்கும் ஆசைகளுமாக இந்த இரண்டு ஆண்களும் உலகை எதிர் கொள்வதையே அல்மதோவரின் இப்படம் விவரிக்கிறது


காளைச்சண்டை அல்மதோவரின் படங்களில் தொடர்ந்து குறியீட்டுதன்மையில் பயன்படுத்தபட்டு வருவது போன்றே இப்படத்திலும் இடம் பெற்றுள்ளது.  சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கம், சிறந்த திரைப்படம் என பத்திற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று உள்ளது


பெட்ரோ அல்மதோவர் தீவிர கத்தோலிக ஈடுபாடு கொண்ட ஒரு ஸ்பானிய குடும்பத்தில் 1949 ம் ஆண்டு பிறந்தார். இவரது எட்டுவயதில் குடும்பம் அல்மேகரோ என்ற பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தது. ஸ்பானிய நாட்டுபுறப்பகுதியில் வசிக்க துவங்கிய பெட்ரோ கத்தோலிக்க பள்ளி ஒன்றின் விடுதியில் சேர்ந்து படிக்க துவங்கினார். இந்த கத்தோலிக்க பள்ளியில் இருந்த நாட்கள் தன் வாழ்வில் மறக்க முடியாதவை என்றும் அவை தனது படங்களில் தொடர்ந்து ஆங்காங்கே வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்றும் ஒரு  நேர் முகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


கத்தோலிக்க பள்ளியில் மாணவர்கள் கடுமையாக கண்காணிக்கபட்டார்கள். அத்தோடு சிறு குற்றங்களுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கபட்டது. அந்த நாட்களில் பள்ளியில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான விஷயம் ஒரினச்சேர்க்கையாகும். இந்தப் பழக்கத்திற்கு உட்பட்ட சகமாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்டு தான் பயந்து போனதாகவும் பள்ளியின் கட்டுபாடு அதிகமாக அதிகமாக இது போன்ற பாலியல் பிறழ்வுகள் அதிகமாகின என்றும் நினைவு கொள்கிறார். (தனது கத்தோலிக்க பள்ளி வாழ்வை முன்வைத்து அல்மதோவர் இயக்கிய Bad Education படத்திற்கு திருச்சபை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இப்படம் ஒரினச்சேர்கையில் ஈடுபடும் பள்ளி மாணவனைப் பற்றியது )


கத்தோலிக்க பள்ளியின் இந்த சூழ்நிலை கடவுள் உலகில் இல்லை என்பதை துல்லியமாக தன்னை புரிய வைத்தது என்றும்  அன்று முதல் கடவுள் நம்பிக்கையற்றவராக அல்லது  கடவுளின் தேவையற்றவராக தான் வாழ்ந்து வருவதாக பெட்ரோ தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.  இந்த பள்ளி நாட்களில் அவர் மீது திணிக்கபட்ட மத நம்பிக்கைகளும் ஆசிரியர்களின் கடுமையான தண்டனைகளும் படிப்பின்  மீது தீவிர எதிர்ப்பு உணர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.


கடவுளிடமிருந்து தான் தப்பி வெளியே  வருவதற்கு அந்த பள்ளி மிகவும் உதவி செய்தது என்று கேலியாக குறிப்பிடும் பெட்ரோ சினிமாவை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இதற்காகவே அவர் மேட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அன்றைய அரசியல் காரணங்களுக்காக திரைப்படக் கல்லுரியை மூடியிருந்தார் ஜெனரல் பிராங்கோ. ஆகவே அவரால் திரைப்பட கல்லுரியில் சேர்ந்து கற்றுக் கொள்ள முடியவில்லை. தானாக முயன்று சினிமாவை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக அவர் மேட்ரிட் நகரிலிருந்த கலாச்சார குழுக்களுடன் தன்னை ஈடுபத்திக் கொண்டார். சிறு சிறு காமிக்ஸ் புத்தகங்கள் எழுதுவது, குறுநாவல்களை எழுதி வெளியிடுவது என்று எழுத்திலும் ஆர்வம் காட்ட துவங்கினார்


அந்த நாட்களில் அவருக்கு இருந்த ஒரே ஆசை எப்படியாவது ஒரு  சூப்பர் 8 கேமிரா ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்பதே. இதற்காகவே அவர் டெலிபோன் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அந்த பணியை பனிரெண்டு வருடங்கள் தொடர்ந்து செய்தார். வேலையின் நடுவிலே அவர் நாடகங்களிலும் நடிக்க துவங்கினார். வேலையில் கிடைத்த பணத்தை கொண்டு ஒரு சூப்பர் 8 கேமிராவை வாங்கி தனக்கு விருப்பமான விஷயங்களை படம் பண்ண துவங்கினார்.


அந்த நாட்களில் ஸ்பெயினில் இருந்த முக்கிய பிரச்சனை போதை மருந்து கடத்துதல், மற்றும் வன்முறை, வேலையின்மை, பாலியல் பிறழ்வுகள், அடிநிலை மக்களின் ஆவேசம், அதிகார போட்டி. இவை யாவும் ஒன்று கலந்து பெட்ரோவின் படங்களில் வெளிப்பட துவங்கின.


இவரது முதல் படம் Pepi, Luci, Bom and Other Woman on the Heap 1972ல் வெளியாகி திரைப்பட விமர்சகர்களாலும் பார்வையாளர்களாலும் பாராட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் ஆண் பெண் உறவு குறித்த தீவிர தேடுதல்கள் கொண்ட படங்களை இயக்க துவங்கினார். இவரது படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. Dark Habits, Labyrinth of passion, Matador, Women on the Verge of a Nervous Breakdown, Tie Me Up! Tie Me Down, High Heels, Kika, The Flower of My Secret, Live Flesh, All About My Mother, Bad Education, Volver.


அல்மதோவரின் படங்கள் மதம் மற்றும் ஆண் பெண் உறவில் ஏற்படும் சிக்கல்கள்  குறித்து ஆழமான விசாரணை மேற் கொள்கின்றது. ஆண் பெண்ணாக உருமாறும் பால் மாற்று சிகிட்சையும் அது கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகளும் இவரது படங்களில் நுட்பமாக வெளிப்படுத்தபட்டுள்ளது. இதன் காரணமாகவே இவரது படங்களை ஹாலிவுட் மிக ஆபாசமான படங்கள் என்று ஒதுக்கி வைத்து எக்ஸ்  முத்திரையிட்டு போர்னோகிராபி படங்களை போல வெளியிட்டது.


அல்மதோவரின் நான்கு படங்கள் என்னளவில் மிக முக்கியமானவை. அவை Talk to Her, All About My Mother, Tie Me Up! Tie Me Down, Bad Education, லத்தீன் அமெரிக்க நாவல்களில் காணப்படுவது போன்ற அதீத புனைவுகளின் பாதிப்பு அல்மதோவரிடம் மிக அதிகமாக காணப்படுகிறது. சமீபத்தைய இவரது படமான Volver கூட யுவான் ருல்போ எழுதிய பிரபல லத்தீன் அமெரிக்க நாவலான பெட்ரோ பரோமாவின் சாயல்கள் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். தன்னை உருவாக்கியதில் சமகால ஸ்பானிய இலக்கியத்திற்கும் இசைக்கும் முக்கியப் பங்கிருக்கிறது என்கிறார் பெட்ரோ.


இவரது Tie Me Up! Tie Me Down திரைப்படம் தமிழ் சூழலோடு மிகவும் தொடர்புடையது. இந்த படத்தின்  பாதிப்பு தமிழில் குணா, காதல் கொண்டேன், மாயாவி என சில படங்களில் வெளிப்பட்டுள்ளது. இப்படம் பல வருடங்களுக்கு பிறகு  மனநலகாப்பகம் ஒன்றிலிருந்து வெளியேறி இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் ஒரு இளைஞனைப் பற்றியது. இந்த  இளைஞனாக அண்டோனியோ பண்டாரஸ் நடித்திருக்கிறார். காப்பகத்திலிருந்து வெளியே வந்த பண்டாரஸ் தனக்கு விருப்பமான திரைப்பட நடிகை ஒருத்தியை சந்திக்கச் செல்கிறார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் உள்ளே விட மறுக்கிறார்கள். ஆகவே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வேறு ஒப்பனையோடு உள்ளே போய்விடுகிறார்.


அங்கே தான் விரும்பிய நடிகையைப் பார்க்கிறார். அவள் பண்டாரஸை கவனிக்கவேயில்லை.  அவள் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் அவளை கடத்திக் கொண்டு போய் ஒரு அறையில் அடைத்து வைத்துக் கொள்கிறான். அந்த அறையில் அவளை கட்டிப் போட்டுவிட்டு தான் அவளை காதலிப்பதாகவும் அவள் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவளோடு தான் வாழ்ந்து நிறைய குழந்தைகள் பெற்றுக் கொண்டு ஒரு நல்ல தகப்பனாக, ஒரு நல்ல கணவனாக வாழ ஆசைப்படுவதாக கூறுகிறான் பண்டாரஸ்.  ஆரம்பத்தில் அவன் ஒரு பைத்தியம் என நினைத்து கத்தும் நடிகை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அவனை புரிந்து கொள்ள துவங்குகிறாள்.


ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மீது உள்ள அன்பின் காரணமாக அவளையே தருகிறாள். இருவரும் கலவி மேற்கொள்கிறார்கள். இதற்கிடையில காணாமல் போன நடிகையை தேடி காவல்துறையினர் தேடி அலைகிறார்கள். முடிவில் அந்த நடிகை வெளியே வந்து தன்னை கடத்தியவன் யார் என தெரியவில்லை என்று காவல்துறையையும் மற்றவர்களையும் நம்ப வைத்துவிட்டு தன்னை காதலிக்கும் பண்டாரஸோடு  சேர்ந்து எங்கோ கண்காணாத இடத்திற்கு போய் வாழ  தயாராவதோடு படம் முடிவடைகிறது


இப்படத்திலும் சிறுவயதில் சரியான  குடும்ப சூழலும் அன்பும் கிடைக்காத ஒருவன் தனது அன்பை வெளிப்படுத்திக் கொள்ள எத்தனை துரம் வன்முறையை கைக்கொள்வான் என்பதையே அல்மதோவர் வெளிப்படுத்துகிறார். ஹாலிவுட்டின் சாகச திரைப்படங்களின் சாயல் கொண்ட இப்படம்  வெறும் கடத்தல் நாடகத்தை மட்டும் முதன்மை படுத்தாமல் அதன் பின்ணணியில் உள்ள மனபிரச்சனைகளை ஆராய்கிறது.


இது போலவே All About My Mother  திரைப்படமும். மகனை இழந்த  ஒரு தாயின் மனபாதிப்புகளை விவரிக்கிறது. தனது பதின்வயதை சேர்ந்த மகனோடு  நாடகம் பார்க்க செல்கிறாள் நாற்பது வயதான மேனுலா. தாயும் மகனும் மிகவும் ரசித்து நாடகம் பார்க்கிறார்கள். அன்று வரை மேனுலாவின் மகனுக்கு தனது அப்பா யார் என்று தெரியாது. அவளும் தனது கணவனை பற்றி மகனிடம் எதுவும் சொல்வதேயில்லை. நாடகம் முடித்துவிட்டு வெளியே வரும் போது ஒரு நடிகையிடம் தான் ஆட்டோகிராப் வாங்க போவதாக ஒடுகிறான் மேனுலாவின் மகன். வழியில் எதிர்பாராமல் ஒரு சாலை விபத்தில் சிக்கி அவன்  இறந்து போகிறான். இதனால் மேனுலாவின் வாழ்வு வெறுமைக்குள்ளாகிறது. தன் மகன் சாகும் போது அவனது அப்பாவை ஒரு முறையாவது அவன் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட விபரத்தை தெரிந்து கொள்கிறாள் மேனுலா.


இதற்காக பதினெட்டு வருடங்களுக்கு பிறகு தனது கணவனை தேடி பார்சிலோனா புறப்படுகிறாள்.  அங்கு தனது கணவனை சந்திக்கும் மேனுலா அதிர்ச்சியடைகிறாள். காரணம் அவள் கணவன் இப்போது பால் உறுப்பு மாற்று சிகிட்சை செய்து கொண்டு பெண்ணாக உருமாறியிருக்கிறான். இப்போது அவனை எப்படி தனது கணவனாக நடத்துவது என்று தெரியாத சிக்கலுக்கு உள்ளாகிறாள்.


ஆனால் வந்த இடத்தில் அவளுக்கு ஒரு நடிகைக்கு ஒப்பனையாரளாக வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்த வேலையே போதும் என நினைக்கும் போது தனது பழைய தோழி ஒருத்தியை சந்திக்கிறாள். அவளது கஷ்ட நிலையை அறிந்து கொண்டு அவளது வேலையை அந்த தோழிக்கு தந்துவிட்டு தோழியின் சகோதரியும் கன்னியாஸ்திரியுமான ஒரு பெண்ணிற்கு உதவி செய்ய போகிறாள்.


அந்த கன்யா ஸ்திரி எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டிருக்கிறாள். அத்தோடு கர்ப்பிணியாகவும் உள்ளார். அவளுக்கு குழந்தை பிறக்கும்வரை கூடவே இருந்து கவனித்து கொள்கிறாள் மேனுலா. முடிவில் அந்த கன்யாஸ்திரி இறந்து போய்விடவே அக் குழந்தையை தனது மகன் நினைவாக அதே பெயரிட்டு தானே வளர்க்க போவதாக துக்கி கொண்டு செல்கிறாள் மேனுலா.


ஒரு தாயின் மனவேதனையையும் அவளது தேடுதலையும் வாழ்வின் மீது அவள் கொண்டுள்ள பற்றுதலையும் வெளிப்படுத்தும் இந்த திரைப்படம் சிறந்த அயல் மொழி படத்திற்கான ஆஸ்கார் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.


அல்மதோவர் தனது திரைப்படங்களுக்கு முன்னோடியாக லுயி புனுவலை குறிப்பிடுகிறார். தான் புனுவலின் திரைபடங்களின் வழியே தான் ஸ்பானிய வாழ்வை மிக நெருக்கமாக அறிந்து கொண்டதாக கூறும் இவர் புனுவலுக்கு பெண்களின் கால்களை திரையில் காட்டுவதற்கு ரொம்பவும் பிடிக்கும். அழகான, வாளிப்பான இளம் பெண்களின் கால்களை  பல திரைப்படங்களில் காட்டி யிருக்கிறார். அவருக்கு பெண் என்பது காலில் இருந்து துவங்குகிறது. இந்த கூறு தனது படங்களிலும் வெளிபட்டுள்ளது என்று சொல்கிறார்.


இசையும் ஒளிப்பதிவும் சிறந்த திரைப்படம் உருவாவதற்கு முக்கியமான இரண்டு காரணிகள் . ஆகவே படத்தின் ஒளிப்பதிவை பொறுத்த மட்டில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பிரத்யேகமாக கலர் சார்ட் ஒன்றை உருவாக்குவோம். ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த நிறத்தை பிரதி பலிக்கிறது. கதையின் மையம் எந்த நிறத்தில் வெளிப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதை ஒளிப்பதிவாளருடன் விவாதித்து படத்தின் நிறத்தினை முடிவு செய்வோம். அது போலவே தான் இசையும். இசை கதையில் நான் சொல்ல நினைத்து காட்சிகளாகவோ,அல்லது உரையாடல்களாகவோ சொல்லாமல் விட்ட அத்தனையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன் என்றும் அல்மதோவர் குறிப்பிடுகிறார்


ஒவ்வொரு திரைப்படமும் இயக்குனரை பொறுத்தவரை ஒரு பரிசோதனை தான். இயக்குனரின் தனிமை மிகவும் புரிந்து கொள்ள முடியாதது. அது கடவுளின் தனிமையை போன்றது. பல நேரங்களில் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது அவரது மனது கதையின் எங்கோ ஒரு இடத்தில் சிக்கி  கொண்டிருக்கும். படப்பிடிப்பு என்பது ஒரு வீட்டில் நம்மை வைத்துபூட்டி விடுவது போன்றது தான். எப்போது படப்பிடிப்பு முடிகிறதோ அப்போது தான் வெளியே வர அனுமதிக்க படுவோம். ஆனால் அப்படி ஒவ்வொரு துண்டுகளாக படத்தை உருவாக்கி ஒன்று சேர்ந்து பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷமானது அளப்பறியது. அதற்கு இணையாக எதுவுமே இல்லை. என்று தனது சினிமா நினைவுகளை தனது நாட்குறிப்பின் வழியாக பகிர்ந்து  கொள்கிறார் அல்மதோவர்


அல்மதோவரின் பாதிப்பு இன்றைய இளம் ஸ்பானிய இயக்குனர்கள் பலரிடமும் காணப்படுகிறது. கார்லோ சுரா என்ற ஸ்பானிய இயக்குனர் அல்மதோவர் பற்றி குறிப்பிடும் போது அவர் ஒரு சினிமா இயக்குனர் மட்டுமல்ல மாறாக அவர் ஒரு கலாச்சார சக்தி. ஆளுமை. அவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு ஸ்பானிய சினிமாவை உலக அரங்கில் முக்கிய இடம் பெற செய்திருக்கிறது அந்த வகையில் இவர் ஒரு தனித்துவமான கலைஞர் என்கிறார்.


அல்மதோவருக்கோ இந்த புகழுரைகள் யாவிற்கும் அப்பால் அடுத்த படத்திற்கான தயாரிப்பு வேலை காத்திருக்கிறது. அதற்காக தான் சிறுவயதில் சென்று வந்த கல்லறைகள் எது போன்ற துடைப்பங்களால் துடைக்கபட்டது. சிறுவயதில் அவரது அம்மா அணிந்திருந்த சிவப்பு உடையில் எத்தனை பூக்கள இருந்தது என்பது போன்ற விபரங்களை நுட்பமாக தனது சகோதரியிடம் கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார்..


தனது சுயசரிதை கொஞ்சம் கொஞ்சமாக தனது திரைப்படங்களின் வழியாக ரகசியமாக எழுதப்பட்டு வருகிறது என்று கூறும் அல்மதோவர், சினிமா என்பது நிஜமும் கற்பனையும் கலந்தது, ஆனால் அதில் எது நிஜம், எது கற்பனை என்று  எவரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதே அதன் சிறப்பு என்கிறார். இது அல்மதோவரின் திரைப்படங்களுக்கு மட்டுமல்ல சமகால சிறந்த உலக சினிமா யாவற்றிற்கும் பொருந்தகூடியதே.


**


 


 


 


 

0Shares
0