நிழல் வேட்டை

23 Paces to Baker Street 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படம். ஹென்றி ஹாத்வே இயக்கியது.

பிலிப் ஹன்னன்  என்ற பார்வையற்ற நாடக ஆசிரியர் ஒருவர் குற்ற நிகழ்வு ஒன்றினைக் கண்டறிவதே இந்த திரைப்படம். Don’t Breathe, ஒப்பம் , ராஜ் தி கிரேட் போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி.

தன்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைத் துல்லியமாக நினைவில் பதிவு செய்து கொள்ளும் திறன் கொண்டவர் பிலிப். நாடக ஆசிரியராக இருப்பதால் கற்பனை ஆற்றலும் அதிகம். அன்றாடம் தான் எழுத வேண்டிய விஷயங்களைத் தன்னுடைய குரலில் பதிவு செய்து கொடுத்துவிடுகிறார். அவரது ஒலிப்பதிவு கூடத்திலிருந்து தான் படம் துவங்குகிறது.

அவருக்கு பாப்  மேத்யூ என்ற  உதவியாளர் இருக்கிறார். அவர் பிலிப் பதிவு செய்து தரும் விஷயங்களை அப்படியே டைப் செய்து அனுப்பிவிடுகிறார். பிலிப்பின் முன்னாள் உதவியாளரும் காதலியுமான ஜீன் ஒரு நாள் அவரைத் தேடி வருகிறாள்.

லண்டனில்  வாட்டர்லூ பிரிட்ஜ் மற்றும் சேரிங் கிராஸ் ஸ்டேஷனுக்கு இடையில் தேம்ஸ் ஆற்றின் கரையில் உள்ள அழகான குடியிருப்பில் வசிக்கிறார் பிலிப். பார்வையற்ற போதும் அவரால் வெளியிலுள்ள இயக்கங்களை துல்லியமாக அறிந்து சொல்ல முடிகிறது.

குறிப்பாகப் படகில் செல்லும் காட்சியில் மாலை நேரத்துச் சூரியனின் பொன்னிற அழகை மிகச்சரியாக விவரிக்கிறார்.  கடந்தகாலத்தில் தவிர்க்க முடியாத சூழலால் அவரால் ஜீனை மணந்து கொள்ள முடியவில்லை. அவளும் விலகிப்போய் விடுகிறாள்

நீண்டகாலத்தின் பிறகு அவள் தன்னைச் சந்திக்க வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவளுக்குத் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து லண்டன் நகரக் காட்சிகளை அறிமுகம்செய்து வைக்கிறார். நலம் விசாரிக்கிறார். அவள் தங்களின் பழைய உறவை நினைவுபடுத்தவே அவளிடமிருந்து தப்பிக்க அருகிலுள்ள மதுவிடுதிக்குப் போகிறார்.

அது பிலிப் ஹன்னன்  வழக்கமாகச் செல்லும் உள்ளூர் பப். அன்று தற்செயலாக ஒரு உரையாடலைக் கேட்கிறார். யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. திரைமறைவின் பின்னால் ஒரு ஆணும்  பெண்ணும் சேர்ந்து  குற்றம் புரிவதற்குத் திட்டமிடுகிறார்கள். என்ன குற்றம். கொலையா, கடத்தலா என எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேச்சில் குறிப்பிட்ட நாளில் அதைச் செய்ய இருப்பதை அறிந்து  கொள்கிறார்

அந்த உரையாடலை அப்படியே மனதில் பதியவைத்துக் கொண்டு தன் வீட்டிற்குத் திரும்புகிறார். ஒரு சொல் மாறாமல் அதைப் பதிவு செய்து அந்த டேப்பை போலீஸ் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டுகிறார்.

யார் அவர்கள். என்ன குற்றம் செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் எப்படித் தடுப்பது. இது ஒருவேளை அவரது கற்பனையாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கிறார் போலீஸ் அதிகாரி.

காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காத பிலிப் ஹன்னன்   தானே அந்த குற்றவாளிகளைக் கண்டறிய முயல்கிறார்.

முதல் புள்ளியாக அந்தப் பெண் யார் என்று தேட ஆரம்பிக்கிறார். அவள் ஒரு வீட்டில் வேலை செய்தவள், அந்த வீட்டு எஜமானி ஒபரா பார்க்கப் போயிருக்கிறாள் என்பதை வைத்துக் கொண்டு எந்த வீட்டில் செய்தாள் என கண்டுபிடிக்க முயல்கிறார் பிலிப்.

இதற்கு உதவியாளர் பாப் மேத்யூஸ் மற்றும்  காதலி ஜீன் உதவி செய்கிறார்கள். தனது புத்திசாலித்தனத்தைக்  கொண்டு அந்தப் பெண் வேலை செய்த வீட்டினை பிலிப் கண்டுபிடிக்கிறார். அந்த வீட்டினைத் தேடிப் போகிறார். ஆனால் அவள் வேலையை விட்டு நின்றுவிட்டதாக தெரிய வருகிறது

அவளை எந்த நிறுவனம் வேலைக்கு அனுப்பியது என விசாரித்து அங்கே போகிறார்கள். அங்கேயும் அவளைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. மதுவிடுதியில் பேசிய பெண் அணிந்திருந்த செண்ட் வாசனையை வைத்து அவளைத் தான் கண்டுபிடித்துவிட முடியும் என உறுதியாகச் சொல்கிறார் பிலிப்

பல்வேறு இடங்களில் விசாரித்தும் அந்தப் பெண்ணை கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. ஆகவே நியூஸ்பேப்பரில் ஒரு விளம்பரம் கொடுக்கிறார். முகம் தெரியாத ஒரு ஆளிடமிருந்து போன் வருகிறது. ஒரு பெண் அவரைத் தேடி அவரது இருப்பிடத்திற்கே வருகை தருகிறாள். அவள் தான் குற்றவாளி  என நினைக்கும் பிலிப் ரகசியமாக அவளைப் பின்தொடரும்படி பாப்பை அனுப்பி வைக்கிறார். பாப் அவளைப் புகைப்படம் எடுக்கச் செய்யும் முயற்சிகள் வேடிக்கையாக இருக்கின்றன. அவளைப் பின்தொடர்ந்து போய் மழையில் நனைந்து வீடு திரும்புகிறார் பாப்.

அந்தப் பெண்ணோடு இருந்த ஆண் யார். அவர்கள் என்ன குற்றம் செய்ய இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் பிலிப் அதைத் தடுத்து நிறுத்த முயல்கிறார். தங்களை பிலிப் ஹன்னன்  பின்தொடர்வதை அறிந்து கொண்ட குற்றவாளி அவரை தந்திரமாக மடக்கிக் கொல்ல  முயல்கிறான். தேடிப்போய் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்.

பிலிப் உண்மையை எப்படிக் கண்டறிந்தார். என்ன குற்றம் நடந்தது. அதை எப்படித் தடுக்க முயன்றார் என்பதை மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்கள்.

பார்வையற்ற ஒருவர் தனது நினைவுத்திறன் மற்றும் வாசனையை அறிவதன் மூலம் எப்படி ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே திரையில் காட்டிவிட்டார்கள். அதுவும் முதற்காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரை பரபரப்பு. வேகம். நம்மால் யூகிக்க முடியாத கதைப்போக்கு.

ஹிட்ச்காக்கின் Rear Window படத்தின் பாதிப்பிலிருந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். ஹிட்ச்காக்கின் படம் பெற்ற பெரும்வெற்றி அந்த பாணி திரைப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. அதில் சக்கர நாற்காலியில் இருக்கும் கதாநாயகன் எதிர்வீட்டில் ஒரு குற்றம் நடக்க இருப்பதை அறிந்து கொள்கிறான். அதைத் தடுக்க காவல்துறையை நாடுகிறான். உதவி கிடைக்காத போது தானே கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால் ஹிட்ச்காக் கதையில் எதிர் வீட்டில் நடப்பதைக் கதாநாயகனால் காணமுடிகிறது. இதில் பிலிப்பிற்கு யார் குற்றவாளி என்றே தெரியாது. துப்பறியும் முறையில் அவனது புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

பிலிம் நுவார் படங்களை இயக்கிய  ஹென்றி ஹாத்வே படம் என்பதால் திரைக்கதையைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

சில கதைகள் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டிலும் திரும்பத் திரும்ப மறுவடிவம் பெற்றபடியே இருக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே இத்திரைப்படம். நாளையே இதே கதைக்கருவை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவானாலும் அதுவும் வெற்றிகரமாக ஒடவே செய்யும்.

••

0Shares
0