
நேற்று Winged Migration என்ற ஆவணப்படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா என்ற கலை எத்தனை வலிமையானது. அதன் உதவியால் இயற்கையை எவ்வளவு நுட்பமாகவும் நெருக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்ற சிலிர்ப்பு உண்டானது.
சில நாட்களுக்கு முன்பாக Winged Migration ஆவணப்படத்தை பார்த்தேன்.
86 நிமிசங்கள் ஒடும் இந்தப் படம் பருவகாலத்தில் இடம் விட்டு இடம் பறக்கும் பறவைகளின் முடிவற்ற பயண வழிகளைப் பற்றியது. உலகின் நிரந்தர யாத்ரீகன் பறவைகளே. படம் துவங்கிய சில நிமிசங்களில் நாமும் கூடவே பறந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதுவரை நான் பார்த்த ஆவணப்படங்களில் இந்தப் படம் போல ஒளிப்பதிவில் மாயம் செய்த படம் வேறு எதுவுமேயில்லை.
பறவைகள் வானின் அதி உயரத்தில் பறக்கின்றன. கேமிரா கூடவே பறக்கிறது. பறந்து சென்ற பறவைகள் ஒரு பாலத்தின் அடியில் நுழைந்து விருட்டென வெளியேறுகிறது. கூடவே கேமிராவும் பறந்து வெளியேறுகிறது. சிறகு முளைத்து ஒளிப்பதிவாளரும் கூடவே பறந்து செல்கிறாரோ எனும் படியாக வியப்பூட்டும் ஒளிப்பதிவு.
இயற்கையைப் பற்றிய ஆவணப்படங்களில் மிகசிறப்பானது இப்படம். எப்படி இந்த படம் உருவாக்கபட்டது. கூடவே பறந்து செல்லும் கேமிராவை கண்டு பறவைகள் ஏன் மிரட்சி கொள்ளவேயில்லை. கடல், மலை, பனி, பாலை என்று உலகின் குறுக்கெங்கும் பறந்து அலைந்து எப்படி இதைப் படமாக்கினார்கள் என்ற ஆச்சரியம் அடங்கவேயில்லை.
இரண்டு நாளில் மூன்று முறை அந்த ஆவணப்படத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறை காணும் போது அளவற்ற சந்தோஷம் மனதில் நிரம்பியது. கூடவே இதை உருவாக்க எவ்வளவு சிரமம் அடைந்திருப்பார்கள். எப்படி அது சாத்தியமானது என்றும் யோசனைகளும் இருந்து கொண்டேயிருந்தது.
இந்தபடத்தின் உருவாக்கம் பற்றி தேடிக் கொண்டிருந்த போது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ஆர்தர் வில்சன் தன்னிடமிருந்த Making of winged Migration பிரதியை தந்து பார்க்கச் சொன்னார். ஐநூறு பேர்களுக்கும் அதிகமான படக்குழுவினர். பதினாலு ஒளிப்பதிவாளர்கள். மூன்று இயக்குனர்கள், இருபது விஞ்ஞானிகள். ஆறு பறவையியல் ஆய்வாளர்கள். பதினேழு விமானிகள், நாற்பது நாடுகளில் நான்கு வருடங்கள் படமாக்கியிருக்கிறார்கள். செலவு நூறு கோடிக்கும் மேல்.
பறவைகளை படம்பிடிப்பது எளிதானதில்லை. அதிலும் கூடவே பறந்து சென்று படம்பிடிப்பது சவாலான செயல். ஆகவே அதற்காக காற்றில் மிதந்து செல்லும் பலூன், கிளைடர், ராணுவ கப்பல், மூங்கில் மிதவை, ஒற்றை சக்கர சைக்கிள், ரோபோவில் கேமிராவை பொருத்தி படம் எடுப்பது என்று பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இந்த படக்குழுவினருக்குள்ள பறவைகள் மீதான ஈடுபாடும் நெருக்கமும் சிறப்பானது. பெலிகன் பறவைகளை முட்டையிலிருந்து வெளிவந்த நாளில் இருந்து படக்குழுவினர்கள் தாங்களே உணவு தந்து மடியில் தூக்கி கொஞ்சி தங்கள் குழந்தைகள் போல வளர்க்கிறார்கள். பறவைகளோடு சேர்ந்து படுத்துக் கொள்கிறார்கள். அதோடு பேசுகிறார்கள். பறவைகள் நோயுற்ற நாளில் மருத்து அரைத்து ஊட்டிவிடுகிறார்கள். தங்களை எளிதில் பறவைகள் அடையாளம் கண்டு கொள்ளும்படியாக மஞ்சள் உடை அணிந்து கொண்டிருக்கிறார்கள்.
பறவைகளும் அவர்களை தங்களது சொந்த தாய் போல நினைத்து பழகுகின்றன. பறக்க பழகும் நாட்களில் கூடவே அவர்களும் ஒடுகிறார்கள். பறவைகளும் அவர்களுக்கும் இடையில் உள்ள பரிவர்த்தனை ஒரு ஒலிப்பான். அந்த ஒசையைக் கேட்டதும் பறவைகள் திரும்புகின்றன. பரந்த வெளியில் அந்த ஒலிப்பானை இசைத்தபடியே ஒரு பெண் ஒடுகிறாள். அவளோடு கூடவே பறவைகள் பறக்கின்றன.
இப்படி பறவைகளோடு சேர்ந்து பழகிப்பழகி அதை தங்களது படக்குழுவினர் போல மாற்றியபிறகு வானில் பறக்க விடுகிறார்கள். உயரத்தில் பறவை பறக்கிறது. அருகில் சிறிய கிளைடர் விமானத்தில் பறந்தபடியே அந்த பறவையோடு பேசியபடியே வருகிறாள் படக்குழுவில் உள்ள பெண். பறவை அவளை திரும்பி பார்த்தபடியே பறக்கிறது.
சில காட்சிகளில் பறவையும் ஒளிப்பதிவாளரும் ஒன்றாக ஒரே அச்சில் பறக்கிறார்கள். இப்படி அந்த பறவைகள் பறந்து செல்லும் தூரம் முழுவதும் கேமிரா கூடவே செல்கிறது.
கொட்டும் பனியிலும், புயல் மழையிலும், அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் கடலின் மீதும் ஆற்றின் மீதும் நகரின் அதிஉயர கட்டிடங்களை கடந்தும் பறவைகளோடு அவர்களும் பறந்திருக்கிறார்கள். இதற்காக நாலு வருசங்கள் உழைத்திருக்கிறார்கள். பலநேரங்களில் கேமிராவை பறவைகள் தங்களோடு சேர்ந்து பறக்கும் துணைபறவைபோலவே நெருங்கி வந்து கொஞ்சுகின்றன.
இமயமலையின் உச்சி, சீனப்பெருஞ்சுவர், சகாரா பாலைவனம், சீனத்துவயல்வெளி, அண்டார்டிக் குளிர்வெளி, ஈபில் கோபுரத்தினை கடந்து போவது என்று பறவைகள் கடந்து செல்லும் காட்சிகள் வியப்பூட்டக்கூடியவை.
பறவை கோணம் என்று ஒளிப்பதிவில் காட்சிகளை பதிவு செய்யும் முறையிருக்கிறது. இந்த படம் பறவையின் கோணத்தில் பறவைகளையே படம்பிடித்திருக்கிறது. சில காட்சிகள் கவித்துவபடிமங்கள் போலிருக்கின்றன. தண்ணீரில் மிதந்து செல்லும் பறவையின் நிழல், சிதறிய தானியங்களை போன்ற பறவைகளின் திரட்சி, மீனை விழுங்கும் பறவையின் நிதானம். கடலில் கால் நனைக்கும் பறவையின் சிலிர்ப்பு, அதிகாலை வெளிச்சத்தில் அவை கடலை காணும் அழகு. மழையின் ஊடே பறவைகள் கொள்ளும் உற்சாகம் என்று காட்சிபடிமங்கள் நிறைய உள்ளன.
பறவையின் கண்களைப் பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதன் வேகமும் கூர்மையும் தனித்துவமானது. இந்த படத்தில் பறவைகளில் கண்கள் கொள்ளும் துடிப்பும், திகைப்பும், சந்தோஷமும் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தரையிறங்கும் பறவையின் கால்கள் எத்தனை அற்புதமானவை. எத்தனை நேர்த்தியாக அது தரையில் கால்களை பதிக்கிறது.
படத்தின் இன்னொரு சிறப்பு, Bruno Coulais யின் பின்ணணி இசை. பறவை போலவே கூடவே மிதந்து போகிறது. தரையிறங்கும் இடங்களில் இசையும் கால்முளைத்து பூமியில் இறங்குகிறது. வேகம் வேகம் என்று பறவைகள் கடந்து செல்லும் போது இசை கூடவே உயர்கிறது. இயற்கையான சப்தங்களுடன் இணைந்த இது போன்ற இசை அற்புதமானது. அதிலும் பறவைகள் நடனமாடும் போது சேர்க்கபட்டுள்ள பின்னணி இசை துள்ளலானது.
பிரெஞ்சு நடிகரும் தயாரிப்பாளருமான ஜேக்கஸ் பெரின் இந்த படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தை தயாரிப்பதில் பறவையியல் விஞ்ஞானம் சார்ந்த துறைகள், காப்பகங்கள் மற்றும் பல்கலைகழக ஆய்வு துறைகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. பறவையியல் விஞ்ஞானிகள் பலர் நான்கு வருடங்கள் இந்த படத்திற்காக பணியாற்றியிருக்கிறார்கள். படமாக்கபடும் போதே பறவைகளின் இயல்புமாற்றம் பற்றிய ஆய்வும் கூடவே நடந்திருக்கிறது.
நூறு கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ள இந்த படம் கடந்த பத்தாண்டுகளில வெளியான ஆவணப்படங்களில் மிக சிறந்தது என்ற விருதை பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான விஞ்ஞான கழகங்கள் இழ்ன் பிரதிகளை வாங்கி சேகரித்து வைத்துள்ளன. திரைப்பட கல்லூரிகள், இயற்கை காப்பகங்கள் இதை தொடர்ந்து திரையிட்டு வருகின்றன.
பல ஆயிரம் கோடி செலவில் கம்ப்யூட்டர் உதவியால் உருவாக்கப்படும் ஹாலிவுட் திரைபிம்பங்களை விடவும் இது போன்று இயற்கையின் வியப்பை நெருக்கமாக படமாக்குவது முக்கியமானது. அந்த சவாலை மிக சிறப்பாக ஜெயித்திருக்கிறார்கள் பெரின் மற்றும் அவரது திரைப்படக்குழுவினர்.
***
படம் முடிந்த பிறகும் இரவில் உறக்கம் கொள்ள முடியவில்லை. மனதெங்கும் பறவைகள் பறந்தபடியே இருக்கின்றன . எந்த பறவையை எப்போது பார்த்தேன் என்று நினைவு பிறிடுகிறது. நான் பார்த்த பறவைகாட்சிகளில் மிக சிறப்பானது கங்கையின் மீது மாலைநேரங்களில் பறந்து செல்லும் பறவைகளை தான்.
காசியின் படித்துறையில் அமர்ந்தபடியே ஒரு நாள் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை நேரங்களில் கங்கையின் கரைகளில் கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து போயின. சாம்பல் நிற குருவிகள் போலிருந்த அவை பரபரப்பும், சடசடப்புமாக விருட் விருட்டென கண்ணிலிருந்து நழுவிப்போனது,
கூட்டம் என்ற சொல் குறிக்கும் அளவு நம் கண் அடங்கியது. ஆனால் நான் கண்ட பறவைகளோ கண்ணில் அடங்காதபடியே மணல்புயல் அடிக்கும் போது எல்லையற்ற மணல்துகள்கள் ஒன்று சேர்ந்து பறந்து செல்வது போல அலைஅலையாக பெருகிவந்து கொண்டேயிருந்தன ஆற்றின் மீது அவை கொள்ளும் அலைவு அற்புதமானது. எங்கே செல்கின்றன இந்த பறவைகள். எங்கே இருந்த பகல் முழுவதும் என்று யோசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்
மாலையடங்கும் வரை இந்த பயணம் தொடர்ந்தது. பின்பு இருள் படர்ந்த ஆற்றின் மீதும் ஒன்றிரண்டு பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன.
பறத்தலை போல ஆனந்தம் தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது.
பறவைகளை கண்ணால் காண்பதால் புரிந்து கொண்டுவிட முடியாது. மனம் ஒன்றிப்போக வேண்டும். சிறகை அவை விரிக்கும் போது நமக்குள் விகாசம் உருவாகவேண்டும். கண் பார்வையில் எல்லா குருவிகளும் ஒன்று போலிருக்கின்றன. எல்லா நாரைகளும் ஒன்றாகவே கண்ணில் படுகின்றன. ஆனால் உலகில் ஒன்று போல மற்றொன்று இருப்பதேயில்லை. ஒவ்வொரு குருவியும் அதன் அளவில் தனித்துவமானது. உற்று கவனிக்கபட வேண்டியது. நுட்பமான புலன்களின் விழிப்பில் மட்டுமே பறவையை உணர்ந்து கொள்ள முடியும்.
பறவைகள் பற்றிய நமது பொது அறிவு மிகவும் பலவீனமானது. பெரும்பான்மை பறவைகளின் பெயர்கள் தெரியாது. அதன் குரல் எப்படியிருக்கும் என்று அறிந்திருக்கவில்லை.
பறவைகள் எப்போதும் மர்மத்தையே சுமந்து கொண்டு செல்கிறது. எங்கோ சைபீரியாவிலிருந்து எப்படி நமது வேடந்தாங்கலுக்கு பறவைகள் வந்து சேர்கின்றன. வீட்டில் வளர்க்கபடும் புறா எப்படி சென்னையிலிருந்து கல்கத்தாவிற்கு எந்த வரைபடமும் இன்றி எளிதாக பறந்து சென்று திரும்பிவருகிறது. எது இந்த முடிவற்ற பயணத்தின் உந்து சக்தி. விஞ்ஞானம் இதை ஆராய்ந்து விளக்குகிறது. ஆனால் மனிதமனமோ எப்போதும் போலவே மயக்கமூட்டும் அந்த புதிரிலே விழுந்து கிடக்கிறது.
எங்கள் ஊரில் ஒரு முறை பருத்திச்செடியில் புழுக்கள் விழுந்தன. உயிர்கொல்லி மருந்துகளை அடித்தால் புழு பெரியதாகி விடுகிறது. அமில கரைசலை தெளியுங்கள் என்று சொன்னார்கள். அமிலத்தில் போட்டால் புழு இரண்டாகிவிடுகிறது. கண்முன்னே ஊரிலிருந்த பருத்தி செடியில் பாதியை தின்று போனது புழு.
விவசாயிகள் இரவும் பகலும் அந்த பெயர் தெரியாத புழுக்களோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் எங்கிருந்தோ கூட்டமாக கொக்குகள் பறந்து வந்தன. தண்ணீர் இல்லாத இடங்களில் கொக்குகள் தரையிறங்குவது கிடையாது. அன்று ஆச்சரியமாக ஊரின் பல்வேறு இடங்களில் கொக்குகள் வந்து தரையிறங்கின.
பருத்திச்செடியில் இருந்த புழுக்களை ருசித்து விழுங்க துவங்கின. சில மணி நேரங்களில் ஒரு புழு கூட இல்லை. முற்றிலும் தின்று முடித்துவிட்டு கொக்குகள் பறந்து போய்விட்டன. திரும்ப அவை சில மாதங்களுக்கு தரை இறங்கவேயில்லை.
என்ன விந்தை அது. பெரிய விருந்து தயாராவது போல அந்த கொக்குகளுக்காக தான் இந்த புழுக்கள் வளர்ந்து கொண்டிருந்ததா? விவசாயிகள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. இயற்கை ஒன்றையொன்று சார்ந்து வாழ்வை பின்னியிருக்கிறது என்பதன் கண்கூடான சாட்சியது.
எனக்கோ அந்த கொக்குகள் எங்கிருந்து எங்கே போகின்றன.
ஒவ்வொரு நாளும் பறக்கும் கொக்குகள் ஒரே கொக்குகளா அல்லது வேறு கொக்குகளா என்று சந்தேகம். வானை பார்த்தபடியே இருப்பேன். கொக்குபறக்கும் உயரம் என்று ஒரு தூரமிருக்கிறது. வானில் பறக்கும் கொக்கு கண்ணில் தெரிகிறது என்றால பார்வை குறையில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் . ஏதோ பூச்சியடிப்பது போல இருக்கிறது என்றால் பார்வை குறைஉள்ளதாக கருதுவார்கள்.
இப்படி வெவ்வேறு ஊர்களில், மலைகளில் காடுகளில் பறவைகள் வந்து நிற்பதை, கடந்து போவதை கண்டிருக்கிறேன். சில நேரங்களில் ஒரு நகரில் பார்த்த அதே பறவை மறு நகரில் தென்படும் போது மனது சந்தோஷம் கொள்ளும்.
பாகிஸ்தானில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து சேர்கின்றன பறவைகள் . சில மாதங்கள் தங்கி குஞ்சுகள் பொறித்து திரும்பி போகின்றன. என்ன உறவு இது. இந்த பறவைகள் வீடுகளின் பின்புறம் உள்ள தென்னைகளில் தங்குகின்றன. பல ஆண்டுகாலமாகவே அந்த பறவைகள் தொடர்ந்து வந்து போய் கொண்டிருப்பதால் பறவை தங்கும் வீடுகளில் உள்ளவர்கள் அதை தூரத்து விருந்தாளியாகவே கருகிறார்கள்.
ஊரில் வயதானவர்கள் சிறார்களை கேலி செய்வதற்காக விடிகாலையில் காக்கா எப்போது குளிக்கிறது என்று பார்த்துவிட்டு வந்து சொல்லு என்று வேலை கொடுப்பார்கள். சிறுவயதில் அதை கண்காணிப்பதற்காக காகம் அடைந்துள்ள மரத்தடியில் படுத்துகிடந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் காகம் விழிப்பதை கண்டதேயில்லை.
**
இந்த படத்தை அவசியம் குழந்தைகளோடு பார்க்க வேண்டும். எனது பையன்கள் இருவரும் பார்த்து வியந்து போனார்கள். சிறார்கள் மனதில் இப்படம் ஆழமான உணர்வுகளை உருவாக்க கூடியது. நாம் செய்ய தவறிய ஒன்றை இப்படம் செய்து காட்டியுள்ளது. ஆகவே படத்தை சிறார்கள் காண்பதன் வழியே அவர்கள் நம்மை சுற்றிய பறவைகளை உன்னிப்பாக கவனிக்க துவங்குவார்கள். அதோடு இயல்பான உறவு கொள்வார்கள்.
நம்மிடம் இல்லாத பெருங்குறை வானத்தை ஏறிட்டு பார்ப்பது. அதை நமது குழந்தைகளாவது இயல்பாக செய்யட்டும்.
கடந்து செல்லும் பறவை வெறும் பொருள் அல்ல. அது ஒரு உயிர்இயக்கம். இடம்விட்டு இடம் செல்வதும், இயற்கையை நெருங்கி வாழ்வதும், எல்லா வலிகளுக்கு அப்பாலும் பறத்தலின் சந்தோஷத்தை கொண்டாடுவதும் பறவைகளுக்கு மட்டும் உரியது அல்ல. நமக்கும் சேர்ந்தது தான்.
**