புத்தகம் செல்லும் திசை


சில நாட்களுக்கு முன்பாக பழைய புத்தகக் கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். சென்னை நகரில் உள்ள பெரும்பான்மையான பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். எங்கிருந்து அவர்கள் பழைய புத்தகங்களை வாங்கி வந்தாலும் எனக்கு போன் செய்து சொல்வார்கள். ஆனால் சில மாதங்களாக பழைய புத்தகக் கடை பக்கமே போகவில்லை.



திடீரென மாலையில் அந்த யோசனை தோன்றியதும்  புத்தககடைக்காரனை தேடிச் சென்றேன். குப்பை போல குவித்து போடப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து ஒரு வயதானவர் தமிழ்வாணன் புத்தகமிருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார். நானும் அருகில் அமர்ந்த அந்த குப்பையை கிளறத் துவங்கினேன். இப்படியான குப்பைகளுக்குள் தான் அரிய புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. ஒரு பக்கம் அது சந்தோஷம் தருவதாக இருந்தாலும் பல வருடகாலம் இது போன்ற குப்பைகளைக் கிளறி சுவாச அழற்சி ஏற்பட்டிருக்கிறது என்பதால் கவனமாக  புத்தகங்களை தேடத்துவங்கினேன்.


இரண்டாம் தரமான ஆங்கில மர்ம நாவல்கள், பாடப்புத்தகங்கள், பக்தி பாசுரங்கள், தேவமகிமைசாட்சிகள், எண்பத்திரெண்டாவது வருச பஞ்சாங்கம். துணைபாட நூல்கள். விளம்பர கையேடுகள், இதற்கிடையில் சுருண்டு போய் முதல் பத்து பக்கம் இல்லாத ஜானகிராமனின் நளபாகம், பாரதி படத்தின் திரைக்கதை வசனம், நன்னூல் விளக்கவுரை, ஷேர்மார்க்கெட் பற்றிய புத்தகங்கள் என்று ஏதேதோ கையில் கிடைத்தது.


நான் 1950களுக்கு முன்பு வெளியான புத்தகங்களையே விரும்பித் தேடுகின்றவன். அதிலும் மொழிபெயர்ப்பு புத்தகங்கள், பழந்தமிழ் நூற்கள், வாழ்க்கைவரலாற்று புத்தகங்கள். பழைய அகராதிகள், ஆங்கிலத்தின் வெளியான கிளாசிக் புத்தகங்கள் என்று தேடி வாங்குவேன். அன்றைக்கு ஒரு மணி நேரம் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை.


பல்வேறு நுழைவுதேர்வு புத்தகங்கள் கிழிந்து கறையாகி பக்கம் பக்கமாக பிரிந்து கிடந்தன. அதை தள்ளிவிட்டுப் புரட்டிய போது பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் ஒன்று கையில் பட்டது. அதை  கையில் எடுத்து தூசி தட்டிப் பார்த்தால் அது பியஸ்டா (Fiesta –Hemingway ) என்ற ஹெமிங்வேயின் நாவல் . ஆஹா. நல்ல புத்தகமாயிற்றே என்று அதன் முதல் பக்கத்தை புரட்டிய போது வியப்பாக இருந்தது .அது என்னுடைய புத்தகம். 1991 ல் வாங்கியிருக்கிறேன், முதல் பக்கத்தில் என் கையெழுத்தோடு இருந்தது. என்னால் நம்பவேமுடியவில்லை.


1991ம் வருடம் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். அந்த நாட்களில் வாங்கிய புத்தகம் அது. எப்போது என் கையை விட்டுப் போனது. எப்படி பழைய புத்தக கடைக்கு போனது என்ற வியப்போடு அதை கையில் வைத்து புரட்டிப் புரட்டி பார்த்து கொண்டேயிருந்தேன். பதினேழு வருடங்களுக்கு பிறகு நெருக்கமாக ஒரு நண்பனை சந்தித்தது போன்ற மனஎழுச்சியிருந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.



புத்தகக் கடைக்காரர் அதைக் கவனித்திருக்க கூடும். என்ன புத்தகம் சார் அது என்று கேட்டார். நான் சப்தமாக என் புத்தகம். என் கையிலே திரும்பக் கிடைச்சிருக்கு என்று சொன்னேன். ஆச்சரியத்துடன் அவர் அப்படியா குடுங்க பார்ப்போம் என்று சொல்லி கையில் வாங்கினார். முகப்பை திறந்து காட்டியதும்  அவர் தலையாட்டியபடியே இப்படி எப்பவாது சிக்கும் என்று சொல்லி சிரித்தார்.


அந்த புத்தகத்தை திருவல்லிகேணியில் உள்ள இது போன்ற  ஒரு பழைய புத்தக கடையில் தான் வாங்கினேன். நன்றாக நினைவில் இருக்கிறது. ஞாயிற்றுகிழமைகளில் திருவல்லிகேணியில் பழைய புத்தகங்கள் குவித்துபோடுவார்கள். அப்படி குவிந்து கிடந்த புத்தகத்தில் பைண்டிங் செய்யப்பட்ட ஹெமிங்வே நாவல் கையில் கிடைத்தது.  ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி கொண்டேன்.


ஹெமிங்வே எனக்கு பிடித்தமான எழுத்தாளர். அவரை படித்து முடித்த பல நாட்களுக்கு கனவில் கூட அவரது கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் வந்து கொண்டேயிருக்க கூடியவை. ஹெமிங்வேயின் கதைகள்  பெரிதும் சாகச மனநிலை மிக்க மனிதர்களை பற்றியது.   அந்த புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்டு நண்பனின் அறையை நோக்கி நடந்தேன். இடமில்லாமல் சென்னையில் அலைந்த காலமது. தினம் ஒரு நண்பன் அறை என்று சுற்றியலைந்து கொண்டிருந்தேன். அதனால் எப்போதும் என் தோளில் மாற்றுஉடைகளும் புத்தகங்களும் உள்ள பை தொங்கிக் கொண்டிருக்கும். அன்று ஐம்பஜார் அருகில் இருந்த மேன்சனில் இருந்த நண்பன் அறைக்கு சென்றேன்.


நண்பன் வரவில்லை. அவன் வரும்வரை காத்திருக்க வேண்டியது என்று வராந்தையில் இருந்த மின்விளக்கின் அருகில் அமர்ந்தபடியே ஹெமிங்வேயை வாசிக்க ஆரம்பித்தேன்.


என்னை அறியாமல் படித்துக் கொண்டேயிருந்தேன். சாப்பிட போகவேண்டும் என்று கூட தோன்றவில்லை. சாசகம் தேடி அலையும் நண்பர்களின் முடிவற்ற பயணமும் காளை சண்டையும் புகைபிடித்தலும் மயக்கமான பேச்சும், உல்லாசமும், விதவிதமான போதை தரும் பானங்களும் என ஹெமிங்வேயின் கதையுலகம் இலக்கறது அலைதலில் உள்ள வாலிபர்களை  பதிவு செய்திருந்தது


ஏதோவொரு தருணத்தில் ஹெமிங்வேயின் கதையில் வரும் கதாபாத்திரம் போன்று ஏன் வாழ்கையை நான் கொண்டாட முடியவில்லை. உல்லாசமும் கேளிக்கையும் இல்லாமல் வாழ்வு ஏன் இத்தனை கொடுந்தனிமையும் மீள முடியாத துக்கமும் கொண்டிருக்கிறது என்ற எண்ணங்கள் எனக்குள்ளும் நிரம்பியது.


பின்னிரவில் சினிமா பார்த்துவிட்டு நண்பன் திரும்பி வரும்வரை அந்த புத்தகத்தோடு உட்கார்ந்தேயிருந்தேன். வந்தவன் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. கதவை திறந்து விட்டு உள்ளே போய் படுத்துக் கொண்டான். உள்ளே போய் படுக்க விருப்பமில்லை. ஆனாலும் வழியில்லாமல் உள்ளே போய் சுவர் ஒரமாக படுத்துக் கொண்டேன். மறுநாள் அதிகாலை அவன் விழிப்பதற்கு முன்பாகவே அந்த அறையிலிருந்து கிளம்பி போயிருந்தேன்.


எந்த அறையில் இருந்த போது இந்தப் புத்தகம் கைநழுவிப் போனது என்று தெரியவில்லை. ஆனால் தேடித்தேடி சேகரித்த எத்தனையோ முக்கியமான புத்தகங்கள் எவரது அறையிலோ மாட்டிக் கொண்டும், யாரோ முகம் அறியாதவன் எடுத்து வீசி எறிந்தும், படிக்க கொடுத்து திரும்பி வராமலும் போயிருக்கின்றன


ஒரு முறை ரபேலே என்ற பதினைந்தாம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளரின் புகழ்பெற்ற கரகண்டா என்ற புத்தகத்தை ((The Life of Gargantua  by François Rabelais )     நூறு ரூபாய் கொடுத்து பழைய புத்தக கடையில் வாங்கினேன். அதை படிக்க வேண்டும் என்று பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். வாங்கிவந்து இன்னொரு நண்பன் அறையில் வைத்துவிட்டு மறுநாள் பகலில் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த போது அவன் பழைய பேப்பர்களுடன் அதையும் சேர்த்து எடைக்குபோட்டுவிட்டான் என்று தெரியவந்தது. அவனோடு ஒசியில் தங்கியிருக்கின்றவன் நான். ஆகவே  சண்டையும் போட முடியாது. ஒரு வரி கூட புரட்ட முடியாமல் ரபலே கை நழுவி போனார். இப்படி வாசிக்க விரும்பி இழந்த புத்தகங்கள் எத்தனையோ.


இது போலவே உடல் நலமற்று ஊருக்குபோய் வருகிறேன் என்று துணிகள், புத்தகங்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் அத்தனையும் புறநகர் பகுதியில் வீடு தங்கியிருந்த ஒரு நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு சொந்த ஊர் திரும்பினேன். ஒரு மாத காலத்தின் பின்பு வந்த போது அவர்கள் இருந்த வீடு காலி செய்யப்பட்டு வேறு யாரோ வந்திருந்தார்கள். அங்கிருந்த என் உடைகள் புத்தகங்கள், கையெழுத்து பிரதிகள் என்னவானது என்று தேடி அலைந்து கேட்ட போது அதை எல்லாம் எடுத்து குப்பையில் போட்டுவிட்டோம் என்று பதில் சொன்னான் நண்பன் .


 
குப்பை தொட்டிக்கு போய்விட்ட அந்தக் கதைகளை இன்று வரை திரும்ப எழுத முடியவில்லை. மனதும் வரவில்லை. அது போலவே இழந்து போன புத்தகங்களை நினைத்து பல நாட்கள் மிகவும் வருந்தியிருக்கிறேன். நடைபாதை வாசிகளில் ஒருவன் தன் உடலுக்கு பொருத்தமில்லாமல் என் சட்டையொன்றை அணிந்து கொண்டு பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்ததை சில நாட்களின் பின்பு பார்த்தேன். நானும் அவனைப் போன்றவன் தான் என்று அந்த நிமிசத்தில் தோன்றியது.


பசித்த வேளையில் உணவின்றி அலைந்த நாட்களில் கூட அதற்கான வருத்தம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் தேடித்தேடி வாங்கிய புத்தகங்களை அதன் அருமை தெரியாமல் யாரோ எடுத்து வீசிவிடுவதும், குப்பையில் போடப்படுவதும், அறிந்து எடுத்து ஒளித்து கொள்வதும் தான் தாங்கி கொள்ள முடியாமலிருந்திருக்கிறது. அதற்காகவே ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் இரண்டு பை நிறைய புத்தகங்களை அள்ளி தூக்க முடியாமல் கொண்டு வந்து சேர்வேன்.


புத்தகங்களை காப்பாற்றவே முடியாது என்ற உண்மை தெரிய வந்த பிறகு நானே படித்த  புத்தகங்களை தேவையானவர்களுக்கு தரத் துவங்கினேன். ஒரு முறை ஆயிரம் புத்தகங்களும் மேலாக முதியோர் காப்பகம் மற்றும் கிராம நூலகங்களுக்கு தந்தேன். ஆனாலும் சில புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. ஏன் மனது அப்படி புத்தகங்களின் மீது ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று இன்று வரை புரிந்து கொள்ளவேமுடியவில்லை.


ஹெமிங்வேயின் நாவல் திரும்பக் கிடைத்த போது அது யார் யார் கைகளுக்கு எல்லாம் போய் திரும்பியிருக்கும் என்று மனது யோசிக்க துவங்கியது. இந்த பதினேழு வருடங்களுக்குள் அதை எவர் படித்திருக்க கூடும். அவர் என்னை அறிந்திருப்பாரா? அவர்  ஹெமிங்வே பற்றி என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார். அவரிடமிருந்து எப்படி இது மீண்டும் பழைய புத்தக கடைக்கு வந்து சேர்ந்தது. ஏன் அவர் பழைய  புத்தக கடைக்கு அதை போட்டார். இந்த புத்தகம் எந்த அலமாரியில் இருந்தது. ஏன் இன்னும் அது பைண்டிங் பிரியாமல் பத்திரமாக அப்படியே இருக்கிறது. முதலில் இந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிய அந்த மனிதன் யார். அவன் என்னிடம் அந்த புத்தகம் வந்ததை பற்றி வருத்தம் கொண்டிருப்பானா? ஒரு வேளை எல்லா புத்தகங்களும் இப்படி கைமாறி கைமாறி போய் கொண்டேயிருப்பது தான் அதன் விதியா ?


 
மனது எதை எதையோ யோசித்து கொண்டிருந்தது. இந்த பதினேழு ஆண்டு காலத்திற்குள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. வாசிப்பும் எழுத்தும் என்று விரிந்து சென்றிருக்கிறேன்.


அத்தனையும் மீறி பால்ய நாட்களின் புகைப்படம் ஒன்றை போல அந்த புத்தகம் என் கைகளில் இருந்தது. ஹெமிங்வேயின் புத்தகம் எவ்வளவு என்று பழைய புத்தக கடைக்காரனிடம் கேட்டேன். அவரோ இருக்கட்டும் சார் இது உங்க புத்தகம் தானே உங்க கிட்டயே வந்திருச்சி. இதுக்கு எதுக்கு காசு. பின்னாடி பாத்துகிடலாம் என்று வாங்க மறுத்துவிட்டார்


அது புத்தகம் என்ற வடிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக் கொண்டிருப்பது என் கண் எதிரில் தெரிந்தது.


விருப்பமான புத்தகங்களை தவறவிடுவதும் தொலைப்பது பகிர்ந்து கொள்ள முடியாத வேதனை. அது மொழி வசமற்றது. என்னை போலவே யாரோ ஒரு மனிதன் விரும்பியோ, அறியாமலோ தவறிவிட்ட புத்தகங்களை தானே இத்தனை நாட்களும் நான் பழைய புத்தககடைகளில் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். அப்போது என் மனது ஏன் இவ்வளவு கனம்  கொண்டதேயில்லை.


புத்தகங்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்க படுகிறது. எப்போது வாசிக்க படுகிறது. அவன் அந்த புத்தகத்தை என்ன செய்ய போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு தான் எல்லா புத்தகங்களும் உலகில் பிரவேசிக்கின்றன


கதை கட்டுரைகள் கவிதைகள் என்று புத்தகத்தின் பொருள் வேறுபட்டு இருந்தாலும் எல்லா புத்தகங்களும் ஒரு நினைவை சுமந்து கொண்டு இருக்கின்றன. பள்ளி நாட்களில் சில்லறை சில்லறையாக சேர்ந்து வைத்து வாங்கிய ஆங்கில அகராதி இன்று வெறும் புத்தகமாக மட்டும் தென்படவில்லை. அது என் வளர்ச்சியின், நினைவின் அடையாளம். அதிலிருந்து எனக்கு என்ன கிடைத்தது என்பது நான் ஒரு போதும் வெளிப்படுத்த முடியாத அந்தரங்கம்.


அந்த அந்தரங்கத்தை உருவாக்கும் புத்தகங்களே என் அருகில் எப்போதும் இருக்கின்றன. எல்லா நூலகத்திலும் படிக்கபடாத புத்தங்கள் நிறைய இருக்கின்றன. அவை படிக்க படக்கூடாது என்று ஒதுக்கபட்டவையல்ல. படிக்க பட வேண்டிய நேரமும் ஆளும் வராமல் காத்திருக்கின்றவவை மட்டுமே. நூலகத்தில் அப்படி முப்பது நாற்பது வருசமாக ஒருவரும் எடுத்து செல்லாத எத்தனையோ புத்தகங்களை நான் எடுத்து வந்திருக்கிறேன். யோசிக்கையில் அந்த புத்தகம் அது எழுத பட்ட காலத்திலிருந்து என் கைக்கு வந்த காலம் வரை எவ்வளவு பெரிய மௌனத்தை கொண்டிருக்கிறது. ஏன் அத்தனை புறக்கணிப்பு. அவமானம்.


உண்மையில் தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் என்று வெவ்வேறு மொழிகளில் புத்தகங்கள் எழுதப்பட்ட போதும் இவை யாவும் இல்லாத ஒரு ரகசிய மொழியொன்று புத்தங்களுக்குள் இருக்கிறது. அது தான் படிப்பவனை புத்தகத்தோடு ஒன்று சேர வைக்கிறது. புத்தகத்திற்காக வருத்தப்படவும் அழவும் வைக்கிறது.


ஆப்பிளைக் கடித்து தின்பதை போல ருசியோடும் விருப்பத்தோடும் சில புத்தகங்கள் வாசிக்கபடுவதும் சில புத்தகங்கள் ஔதடம் போல கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போவதற்கும் காரணம் புத்தகத்தின் ரகசிய மொழியே.


வீடு திரும்பி என் அறையில் மீண்டும் ஹெமிங்வேயை வாசிக்க ஆரம்பித்தேன். பதினேழு வருடங்களுக்கு முன்பு படித்த போது இருந்த ஜூரவேகம்  இப்போது இல்லை. ஹெமிங்வேயின் கதை சொல்லும் முறையில் முன்பு தென்படாத நுண்மையான விவரிப்பும், கதாபாத்திரங்களின் சித்திரிப்பும் இப்போது வேறு விதத்தில் கண்ணில் படுகிறது. இதன் முன்பு படிக்காத ஒரு புத்தகம் ஒன்றை வாசிப்பது போலவே படித்துக் கொண்டிருந்தேன்.


படித்து முடித்த போது யாரோ சிலரின் வாழ்க்கையை ஒரு நாவல் விவரிக்கிறது. அது என் என் மனதை இவ்வளவு ஆட்டுவைக்கிறது. ஏன் சொற்களின் வழியே உருவாகும் சித்திரங்கள் நிஜ வாழ்வை விடவும் உக்கிரமாகவும் ஆழ்ந்த மனபாரம் தருவதாகவும் இருக்கின்றன என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன்


ஹெமிங்வேயின் நூலகத்தில் இருந்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அவரும் தேடி தேடி படித்திருக்கிறார். வரிசை படுத்தி வைத்திருக்கிறார். அவரது நூலகத்திலிருந்தும் எவ்வளவோ புத்தகங்கள் வெளியேறி சென்றிருக்கின்றன. அவரது புத்தகங்களை போலவே. புத்தகங்களை இழப்பதும் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக பலருக்கும் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வுதானில்லையா ?


அந்த இரவில் கடந்த போன வருடங்களின் பெருஞ்சுமை ஹெமிங்வேயின் நாவல்வழியாக என் முன்பு பீறிட்டு அமுக்கியது. ஒரு ஆழமான காயத்தின் வடுவை கையில் தொட்டு பார்த்துக் கொண்டிருப்பது போல அந்த புத்தகத்தை என் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.


வலி தான் எழுத வைக்கிறது. வலி தான் படிக்க வைக்கிறது. வலி மிக நிசப்தமானது. வலி பகிர்ந்து கொள்ளப் பட முடியாதது. வலி தவிர்க்க முடியாதது. வலியை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் அவசியம்


புத்தகம் நம் மனதின் அறியாத வலியின் சாட்சியல்லவா .


***


 

0Shares
0